Pages

Tuesday, July 31, 2012

}} கலவை {{ குருதிபூக்கள் - 1

படிக்குற காலத்துல என் கூட படிச்ச முத்துகுமாரை கிளாஸ் போக விடாம, கட் அடிக்க வைச்சு ; என்னை மாதிரியே தற்குறியாகி ஒழுங்கா படிக்க விடாமல் நான் செய்ஞ்சதால் தான் இன்று உலகம் முழுக்க அறிய படும் பெரிய தொழிலதிபராக அவன் இருக்கிறான். இல்லாட்டி ஒழுங்கா படிச்சு எதாவது ஐடி கம்பெனில வேலைக்கு சேர்ந்திருப்பான். 

அவனை மாதிரி தொழிலதிபர்களை இந்த நாட்டிற்கு உருவாக்கி தந்துவிட்டு அமைதியாக இருக்கிறேன், ஆனா சில பயபுள்ளைங்க, முக்கியமா இந்த +கார்த்திகைப் பாண்டியன்  மாதிரியான ஆளுங்க ஏதோ மாணவர்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்துட்டு, பிறவு போடுற சீன தாங்க முடியலப்பா. :))

இப்பவும் எங்கிருந்தாலும், வருடத்தில் ஒரு வாரம் என்னோடு செலவு செய்ய சென்னை வந்துவிடுவான்.... அப்பெல்லாம் அவன் கேக்குற கேள்வி "டேய்  மாப்பிள்ள .. நீங நல்லவனா இல்லை கெட்டவனா"ங்குறது தான். 

= = = 

காலேஜ் படிக்குறப்ப, ஒரு வெள்ளிகிழமை சாயங்காலம், முகத்துல அதிகமா பரு வந்து தழும்பு தழும்பா இருக்குன்னு வருத்தபட்டு என்கிட்டக்க சொன்னான், சரி பயபுள்ள ஆசபடுதேன்னு சோப் பவுடர், நல்லெண்ணெய், பெட்ரோல்ன்னு வாய்க்கு வந்ததை சொல்லிட்டு டவுன்ல இருக்குற பெரியம்மா வீட்டுக்கு போயிட்டேன்.... திங்ககிழமை வந்து  பார்த்த ; அவன் முஞ்சி முழுக்க கருப்பா ; ஷேவிங் பண்ணிவிட்ட கொரில்லா மாதிரியே இருந்தான்...

= = 

இப்புடி பல திருவிளையாடல்களை அவன்கிட்டக்க செய்ஞ்சு இருக்கேன்... அதை எல்லாம் குருதிபூக்கள்ன்னு டக்கோடு எழுதலாம்ன்னு இருக்கேன்.  


= =


அப்ப மார்க்கெட்டிங் வேலைக்கு சேர்ந்த புதுசு. முத இரண்டு மாசம் ஏதோ தெரிஞ்சவங்க கிட்டக்க பேசி, கொஞ்சமா பிசினஸ் பண்ணி காட்டிட்டேன். ஆனா மூணாவது மாசம் ஒண்ணுமே சிக்கல...  அந்த மாசம் முழுக்க ஜீரோலையே இருந்தேன்... ஏற்கனவே இருந்த ப்ரெஷர் இன்னும் ஜாஸ்தியாகிடுச்சு. நட்புகள் / உறவுகள்ன்னு யார்கிட்ட கேட்டும் ஒன்னும் வரல. கடைசியா முத்துகுமார் கிட்ட கேட்டேன்.

அவனும் "செய்றேன்டா ...இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன் ..நானே கால் பண்ணுறேன்"ன்னு மூணு நாளா சொல்லவும், நாலாவது நாள் நான் போன் பண்ணி "ஏண்டா கழுத்து அறுக்குற.... சொன்னா சொன்ன மாதிரி செய்ய மாட்டியா..நீயெல்லாம் என்ன பிரண்ட்டுடா"ன்னு இருந்த வேலை போயிடுமே என்ற கவலையும், பயமும், பிறவு ப்ரெஷராலும் கேட்டுட்டேன். 

அதுக்கு அவன் "டேய் அப்பா இறந்துட்டாருடா"ன்னு அமைதியா சொல்லிட்டு என்னோட பதிலுக்காக காத்திருந்தான். எனக்கு ஒரு மாதிரியா ஆகிடுச்சு. கேவலமா உணர்தேன். "நீயு எல்லாம் என்ன மனுஷன்டா"ன்னு மனசாட்சி கேட்டுச்சு. ஒன்னும் பேசாம போனை வைச்சுட்டேன். அன்னைக்கு கிடைத்த திட்டுக்களும், இருந்த மனநிலைக்கும் செத்து போயிறலாம்ன்னு தோனுச்சு. எப்படியோ திட்டு வாங்கிட்டு நைட்டு ஒரு பதினோரு  மணிக்கு அறை வந்து சேர்ந்தேன். 

பிறகு மறுநாள் ஆபீஸ் போக மனசு இல்லாம கிளம்பி போய், காலை மீட்டிங்ல மேனேஜர் கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கும் போது, எனக்கு வந்ததா சொல்லி ஒரு கொரியர் கவரை ஆபீஸ் பாய் கைல குடுத்துட்டு போனான். பிரிச்சு பார்த்தா முத்துகுமார் கையெழுத்து போட்ட  பிசினஸ் பார்ம் பிறகு டாகுமென்ட்ஸ்.... ஒரு லட்ச ரூபாய்க்கு செக். 

எனக்கு அழுகையே நிப்பாட்ட முடியல. ரெஸ்ட் ரூமுக்கு போயி அழுவ ஆரம்பிச்சேன். 


= = 


கேடிவில பார்த்திபன் கனவு படம். 

பல வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு சனிகிழமை இரவு திநகர் சரவணா பவன்ல சாப்பிட்டுட்டு கை கழுவும் போது, பக்கத்துல கை கழுவி முடிச்ச பொண்ணு என்னை லேசா உரசிட்டு போன. அவ மேல அடிச்ச வாசனை என்னை அப்புடியே கிறங்க அடிச்சுருச்சு. பிறகு வெளில வந்து கார் ல ஏறி போயிட்டா. நான் பைக்ல அந்த கார் பின்னாடியே போயிட்டு இருந்தேன் அவ வீடு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க. 

அண்ணா நகர் டிராபிக் சிக்னல்ல அந்த காரை மிஸ் பண்ணிட்டேன். பிறவு வந்த ஞாயித்து கிழமைல அண்ணா நகர் முழுக்க சுத்தியும் அவளை கண்டுபிடிக்க முடியல. சோகமா கொஞ்ச நாள் இருந்த பிறகு. பரங்கி மலை ரயில் ஸ்டேஷன்ல வைச்சு அவளை பார்த்தேன். கல்லூரி நாட்கள்ல அவ பின்னாடியே தான் சுத்தினேன். பிறகு ஒரு நல்ல நாள்ல அமெரிக்க மாப்பிள்ளைய கட்டிக்கிட்டு போயிட்ட. 


= = 


பதவி உயர்வுக்கு பிறவு புது விசிடிங் கார்டு இன்னைக்கு வந்துச்சு.... சரின்னு எதாச்சு கிளையன்ட்க்கு தந்து பந்தா காட்டுவோமேன்னு காலைல இருந்து போன இடத்துல எல்லாம் கார்டு நீட்டி பார்க்குறேன், எவனுமே வாங்கல ; வெறும் மொபைல் நம்பர் மட்டும் வாங்கினாங்க. ரொம்ப சோகமா போயிருச்சு.... வீட்டுல வர வழில எப்பவும் டி கடைல டி குடிப்பேன்... இன்னைக்கு டி குடிச்சு முடிச்ச பிறவு காசு தரும் போது புது விசிடிங் கார்டையும் தந்துட்டேன். டி மாஸ்டர் என்னைய வினோதமா பார்க்குறதுக்குள்ள ஓடி வந்துட்டேன்.  


= =


சின்ன வயதில் இருந்தே அதிகபடியான தனிமை, தோல்விகள், பயங்கள் என்று இருந்து வந்ததால் புத்தகங்கள் தான் எனக்கு இருந்தே ஒரே நட்பு. தாழ்வு மனப்பான்மையால் அப்பாஸ் யுவா இருவரிடமும் இருந்து தள்ளியே  இருப்பேன். வேலை நேரத்தை தவிர்த்து யாரிடமும் அவ்வளவாக பேச பிடிக்காது. அதுவும் மார்க்கெட்டிங் துறைக்கு வந்த பிறவு மௌன விரும்பியாகவே மாறி விட்டேன். 

எஸ்.ராமகிருஷ்ணன், சுகா, ராஜூ முருகன் ஆகியோர் விகடனில் எழுத ஆரம்பித்த பிறகு... ஒவ்வொரு வியாழனும் பத்திரிக்கை கடைக்காரனிடம் காலை வேளையில் தினமும் நேரில் போயோ அல்லது போன் மூலமாகவோ "அண்ணே விகடன் வந்துருச்சா ?" என்று நான்கைந்து கேட்பது வழக்கமாகி விட்டது. அதே போல் வாங்கிய பிறவு வட்டியும் முதலும் தொடரை தேடுகிறேன். 

அதே போல முன்பெல்லாம் புத்தகங்களை பற்றி யாரவது பேசினால் எனக்கு ரொம்ப பிடிக்கும், இல்லை என்றால் சிலருக்கு போன் பண்ணி "என்ன படிக்குறீங்க ? எதாவது புக்ஸ் பத்தி பேசுங்க"ன்னு கேட்பேன்.... இப்பெல்லாம் வட்டியும் முதலும் தொடரை பத்தி யாரவது பேசுறாங்களான்னு நோட்டம் விடுவது வழக்கமாகி விட்டது இப்பொழுதெல்லாம் ரயிலில் போகும் போது. 

Related Posts with Thumbnails