Pages

Saturday, November 17, 2012

**கலவை - 17/11/2012**


இன்னைக்கு பெருசா சீரியஸா எதுவும் படிக்க விருப்பம் இல்லாம ஒரு மாதிரி சோம்பலோட இருந்தப்ப, எப்பவோ வாங்கிருந்த பாக்கியம் ராமசாமி எழுதின "அப்புசாமி படம் எடுக்கிறார்" புஸ்தகம் கண்ணுல பட்டுச்சு, படிக்க ஆரம்பிச்சேன். அப்புசாமி - சீதாபாட்டிய வைச்சு நிறைய கதை எழுதிருக்காரு பாக்கியம் ராமசாமி. வழக்கமா எல்லாத்திலையும் அப்புசாமி தாத்தா எதாவது கோக்கு மாக்கா பண்ணி சீதாப்பாட்டி கிட்டக்க மாட்டிப்பாரு. பிறவு  அதுல இருந்து அவரு தப்பிக்குறதுன்னு தான் பெரும்பாலும் கதை போகும். அதிலையும் பாட்டி இல்லாத நேரத்துல தாத்தா கூட ரசகுண்டுவும், பீமாராவும் சேர்த்து கோஷ்டியா களம் இறங்கிட்ட கதைல காமெடி பிளாக் தான்.

பெரும்பாலும் 6  வயசுல இருந்து 10 வயசு வரைக்கும் உள்ளவங்க தான் படிப்பாங்க, இல்லை இதுல இருந்து தான் படிக்க ஆரம்பிப்பாங்க, ஆனா நான் தமிழ் ல படிக்க ஆரம்பிச்சதே என்னோட 26 வயசுல ராஜேஷ்குமார் குமார் நாவல் ல இருந்து தான் இருந்து தான்...பிறவு அடுத்த கட்டமா அப்புசாமி சீதாபாட்டி கதைகள் தான். பிறவு எஸ்ராவோட துணையெழுத்து / கதாவிலாசம் படிச்ச அப்புடியே வாசிக்குறது எல்லாம் மாறிபோச்சு. 

எனக்கு எப்பவாச்சு அதிகபடியான மன அழுத்தம் / சோர்வு வந்துச்சுன்ன நான் இந்த கதைகளை தான் படிப்பேன். இவை என்னை ரொம்ப யோசிக்க வைக்காம ... மன அழுத்தத்தால் காணாமல் போய்விடுகிற என்னோட சிறுபிள்ளை தனத்தை எப்போதும் அப்புசாமி தாத்தா காப்பாத்தி கிட்டே இருக்காரு.


= = = = 


இந்த மாத கணையாழியில் "தலைமை ஆசிரியர்" என்ற கதையொன்றை  எஸ்.ஏ.ஜோதி அவர்கள் எழுதிருக்கிறார். அதை கதை என்று சொல்வதா இல்லை அனுபவ பகிர்வு என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் அதை கதை என்ற பிரிவில் கணையாழி ஆசிரிய குழுவினரால் பகுக்கபட்டுள்ளதால்  அவ்வாறே எடுத்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் அதை படித்து முடித்த பின் ஒரு மசாலா படம் பார்த்த உணர்வே வருகிறது. இயல்புக்கு மீறிய கதை போக்கு..... 

திசை இலக்கில்லா  போக்கு பறவைக்கு வேண்டுமானால் நல்ல இருக்கும்.... ஆனால் அத்தகைய போக்கு சிறுகதைக்கு சரிபட்டு வருமா என்று தெரியவில்லை. 


= = = = 

மகாபாரதத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பருவம்ன்னு (அதாவது பகுதி) பார்த்த...அது எனக்கு விராட பருவம் தான். அஞ்ஞத வாசத்துல இருக்குற பஞ்ச பாண்டவர்கள்... பாஞ்சாலி கிட்ட ஒரு பண்ணுற இம்சை...போர்ன்னு ஆரம்பம் ல இருந்து முடிவு வரைக்குமே ஒரு epic மாதிரி இருக்கும். மத்த பருவத்தை எல்லாம் விட்டுட்டு இதைய மட்டும் படிச்சாலே செமைய இருக்கும். அதுவும் பாடை பிணத்தோட பாஞ்சாலிய கட்டி வைச்சு கொண்டு போற போது சமையல்காரனா வேஷம் போட்டிருக்குற பீமன் அங்க வந்து போடுற சண்டை என்னோட all time favorite   

= = = =


பெஸ்புக் / டிவிட்டர் / கூகிள் பிளஸ் ஆகியவற்றியில் மக்கள் வெளியீடும் புகைப்படங்கள் எல்லாம் அந்த கம்பெனிக்கு சொந்தமாகிவிடுமாம். அதை அவர்கள் வேறொரு நாட்டில் விளம்பரத்துக்கு பயன்படுத்தி கொள்வார்களாம், இதை  account open பண்ணுற போது வர terms and conditions ல போட்டிருப்பாங்க. அதை படிக்காம மக்கள் பெரும்பாலும் டிக் அடித்து விடுவார்கள். கவனமா இருங்க. 

அதிலும் professional photographers ஆக ஆசைபடுற யாரும் சமூக தளங்களில் தங்களது புகைப்பட படைப்புகளை வெளியீட வேண்டாம். 

இந்த மாச READERS DIGEST ல இத பத்தி சின்னதா போட்டிருந்தாங்க. பிறவு சிலபல பத்திரிக்கை / நண்பர்கள் கிட்ட கேட்டும் படித்தும் கொஞ்சோண்டு தெரிஞ்சுகிட்டேன். யாருக்காச்சு தெரிஞ்ச விவரமா சொல்லுங்க. 

உதாரணம் : நீங்க நெட் ல உங்களோட மனைவி போட்டோவை போடுறீங்க, அது அவங்க ஒரு கீழான விளம்பரத்துக்கு பயன்படுத்தின ....என்னவாகும் 


= = = =

சுந்தர ராமசாமி பற்றி சுஜாதா


சுந்தர ராமசாமி வெள்ளிக்கிழமை மதியம் அமெரிக்காவில் இறந்துபோன செய்தி கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய படைப்புகளுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது, டில்லியில் இருந்தபோது.

‘சரஸ்வதி’ இதழில் வெளிவந்த அவரது சிறுகதைகள் மற்றும் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவல் மூலமாக, புதுமைப்பித்தன், ஜானகிராமனிலிருந்து வேறுபட்ட, அவர்கள் அளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய எழுத்தை அடையாளம் காண முடிந்தது. ‘பசுவய்யா’ என்ற பெயரில், ‘எழுத்து’ பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் அவருடையவை என்று தெரிந்ததும், அவரது திறமையின் வீச்சு பரிச்சயமாகி வியப்பளித்தது.

‘நடுநிசி நாய்கள்’ கவிதைத் தொகுப்பில், ஒரு கோயிலில் ஒரு ட்யூப் லைட்டில் அதைக் கொடுத்தவர் பெயர் எழுதியிருப்பதைத் தொடர்ந்து, யார் யாருடைய உபயம் என்று எழுதிய கவிதை நினைவிருக்கிறது. புதுக்கவிதை பற்றி ‘இந்தியா டுடே’யில் நான் எழுதிய விரிவான கட்டுரையின் முடிவில், இக்காலத்து நல்ல கவிதைக்கு உதாரணமாக அவர் கவிதையைத்தான் குறிப்பிடுவது பொருத்தமாக இருந்தது.

சுந்தர ராமசாமியின் ‘காகங்கள்’ தொகுப்பில் பிரசாதம், சீதை மார்க் சீயக்காத்தூள் போன்ற பல சிறுகதைகள் என்னை மிகவும் வசீகரித்தன. ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ பற்றி கணையாழியில் விரிவான விமர்சனம் எழுதியது நினைவிருக்கிறது.

பெங்களூர் அருகே நடந்த ஒரு கருத்தரங்கில் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதிகம் இலக்கியம் சம்பந்தமில்லாமல், பொதுவாக ‘சாப்டாச்சா?’ போன்ற பேச்சுகள்தான். சு.ரா. ஏறக்குறைய மூன்று தலைமுறை எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டு பாராட்டியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஆ.மாதவன், கிருஷ்ணன் நம்பி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், மனுஷ்யபுத்திரன் போன்ற பெயர்கள் உடனே நினைவுக்கு வருகின்றன. மலையாளத்தில் இவரது மூன்று நாவல்களும் (ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள்&பெண்கள்&ஆண்கள்) மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. தகழியின் ‘தோட்டியின் மகன்’ ‘செம்மீன்’ போன்ற நாவல்களை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். அண்மையில், அவர் காலச்சுவடு பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளும், கேள்வி பதில்களும் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டின.

‘ஒரு புளிய மரத்தின் கதை’யை கிருஷ்ணமூர்த்தி (ஆர்ட் டைரக்டர்) திரைக்கதையாக்கி மீடியா ட்ரீம்ஸில் கொடுத்தபோது, அதை திரைப்படமாக்கச் சம்மதம் தெரிவிக்கப்பட்டு, கம்பெனியின் சில ஷரத்துகளில் உடன்பாடில்லாததால் கைவிடப்பட்டது. சு.ரா. எனக்கு கையெழுத்திட்டுக் கொடுத்த ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்னமும் இருக்கிறது.

சு.ரா&வுக்கு கனடாவின் ‘இயல்’ விருது கிடைத்தது. இந்தியாவில் ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைக்கவில்லை. இழப்பு அகாடமியினுடையதே!

சுந்தர ராமசாமி (30.05.1931 - 15.10.2005)க்கு ஓர் உண்மையான ரசிகனின் பாராட்டும், வணக்கங்களும்!

நன்றி ஆனந்தவிகடன்.


= = = = 


பீட்சா படத்தை தியேட்டரில் தான் பார்க்கணும்ன்னு இருந்தேன்..மொக்கை தியேட்டரா இருந்தாலும் பரவலன்னு தாம்பரம் MR லையே படத்தை பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது. கலக்கி இருக்காரு கார்த்திக் சுப்பராஜ். சில சீன்ஸ் ல டெம்போவை இன்னும் ஏத்தி இருக்கலாமோன்னு தோணுது. 

 படம் முடிஞ்சு வெளில வந்தா வித்யால skyfall  ன்னு போஸ்டர் சொல்லுச்சு. அப்புடியே யூ டர்ன் அடிச்சு அங்க போயி டிக்கெட் வாங்கிட்டேன். மதிய சாப்பாடு சாப்பிடலாமான்னு யோசிச்சா டைம் வேற இல்லை. சரி ஒரு நாள் தானேன்னு சாப்பிடாம படத்தை பார்க்க போயிட்டேன். இயல்புக்கு ரொம்ப நெருக்கமா இருந்தால ரொம்ப பிடிச்சுது. 

ரொம்ப நாள் கழிச்சு அடுத்துஅடுத்து தியேட்டரில் இரண்டு சினிமா பார்த்தேன். 

சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, யாரும் இல்ல. சரின்னு டிவியா போட்டா, கேடிவில வாத்தியார் நடிச்ச குடியிருந்த கோயில். எம்ஜிஆர் பட்டைய கிளப்பின படம். அதிலும் "என்னை தெரியுமா" பாட்டும், "என் வாளும் உன் விழியும்" பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள். கிளைமாக்ஸ் ல அண்ணன் எம்ஜிஆர் சண்டை போட்டுகிட்டே தம்பி எம்ஜிஆர் பார்த்து "இது எப்படி"ன்னு கேட்பாரு. செம ஸ்டைலான சீன் அது. சண்டை காட்சில வாத்தியார் மாதிரி leg lock போடுறதுக்கு யாராலும் முடியாது. செமைய என்ஜாய் பண்ணினேன்.  

= = = =

பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் இருக்கிற செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறைஅமைச்சகத்தின் பப்ளிகேஷன்ஸ் பிரிவுக்கு சென்றிருந்தேன்... அங்கே இந்திய அரசாங்க வெளியீடுகளான பல புத்தகங்களை வைத்திருந்தனர். அவை பெரும்பாலும் துறை சார்ந்தவர்கள் எழுதியதாக இருந்தது. அவற்றின் மத்தியில் சுஜாதா அவர்கள் எழுதின கம்ப்யூட்டர் கற்போம் என்ற புத்தகமும் இருந்தது. அதை பார்த்துடன் நானடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை. நான் பெரிதும் நேசிக்கிற, விரும்பி படிக்கிற எழுத்தாளரின் எழுத்துக்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 

பிறவு திட்டம் என்ற பெயரில் மாத இதழொன்றை (மாத இதழா வருட இதழா என்று தெரியவில்லை)  மத்திய அரசு வெளியீட்டு வருகிறது. அதில் அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் பேசுகிறது. ஆர்வமுள்ளோர் பயனடையலாம். 

= = = = 

**தெளிவுரை**




கணினி முன் நான் கவிதை எழுத 

அமர்ந்த பொழுது ; குளிர்ந்த காற்றாய் 
அருகே நீ. நேற்றிரவெழுதிய பொருளுரைக்கு 
தெளிவுரையின் அவசியத்தை உணர்ந்து ...எழுந்தேன். 

Wednesday, November 7, 2012

**இறந்தவனின் சட்டை**

இறந்து போனவனின் அலமாரியை 
அவனது நினைவுகளிலொரு அங்கமாய் 
பார்த்துக் கொண்டிருக்கையில் 
என்ன செய்வது என்ற குழப்பத்தில்   
நான்,
தானம் ஏழைகளுக்கு 
தானத்தை தவிர்த்து வேறெதுவும் வழியில்லை 
அவனது நினைவுகளின் ஒரு அங்கத்தை 
யாரும் அணிந்து விரும்பவில்லை 
அவன் மேல் அவர்களது பிடித்தமையை 
சந்தேகித்து கொண்டிருக்கையில் 
அலமாரியின் ஓரத்தில் அனாதையாக 
இருந்த டிசைனர் சட்டையின் மீது 
எனக்கு ஆசை வந்தது. 

Monday, November 5, 2012

**விலாசம் இல்லாத மன்னிப்பு**

மேகங்களின் உராய்தலை போல் 
வசவுகளை அவள் மேல் எய்த பின் 
விலாசம் இல்லாத மன்னிப்பு மடலில்
வசவுகளின் மிகுதமையை ஈடு செய்யுமோ
தெரியாமல் என் மன்னிப்புகளை அஞ்சல் பெட்டியில் போட்டுவிட்டேன் 
மனதிற்குள் விலாசங்கள் இல்லாத அந்த மடல் அவளுக்கு கிடைக்கும் 
அல்லது கிடைத்துவிட்டது போல் ஒரு சித்திரத்தை மனதிற்குள் வரைந்து கொண்டுவிட்டேன். 
Related Posts with Thumbnails