Pages

Thursday, December 25, 2014

கே.பாலசந்தர் சாரும் கட்டுடைத்தலும்


திரை மரபு கட்டுடைத்தலில் தீவிரமாக தனது திரை பயணம் முழுக்க இயங்கியவர் கே.பாலசந்தர் ஸார் அவர்கள். 

காலங்காலமாக திரையில் கோவிலுக்கு சென்று விட்டு வரும் பெண் எப்பொழுதும் சமூக அகராதியில் நல்ல குடும்ப பெண் என்ற அடையாளத்தில் காட்டி வந்தது தமிழ் திரையுலகம். ஆனால் தனது தப்பு தாளங்களில் நாயகி கோவில் போய் வந்து வீட்டில் பாலியல் தொழில் செய்வது போல் காட்டி இருப்பார். அதில் அந்த நாயகிக்கு கோவிலுக்கு போவது மனம் சார்ந்த ஒரு விஷயம். 

அதே போல் பிராமண பெண் ஒருவள் சமூகத்தால் வஞ்சிக்கபட்டு வேறு வழியில்லாமல் பாலியல் தொழில் செய்வது போல் காட்டி இருப்பார். குறிபிட்ட ஜாதியினர் மட்டுமல்லாமல் எல்லோருக்கும் எல்லாம் பொதுவானது என்பது போல் மறைபொருளாய் சொல்லி இருப்பார். 

மனதில் உறுதி வேண்டும் படத்தில் விவாகரத்து பெற்று வந்த நாயகி தனது முன்னாள் கணவனின் இரண்டாவது மனைவி உண்டாகி இருப்பதை கண்டு, நாயகி சென்று அவளுக்கு வாழ்த்துக்கள் கூறி பரிசுகள் தருவது போல் காட்டி இருப்பார். 

கதாநாயகன் என்றால் ஒழுக்கசீலன், யோக்கியன், நல்லவன், நாயகியை தவிர்த்து எல்லா பெண்களையும் சகோதரிகள் போல் எண்ணுபவன் என்று காட்டி திரையுலகத்தினர் கல்லா கட்டி வந்த நேரத்தில், அக்காலத்தில் காதல் மன்னன் என்று பெயர் பெற்று வந்த ஜெமினி கணேசனை பெண்களை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து நான் அவன் இல்லை படத்தை எடுத்தார். 

திரையில் கடத்தல் கதையை ஒரு மாதிரியாக எது மாதிரியாகவும் இல்லாமல் எடுத்து கொண்டு இருந்த காலத்தில் இவரது நாணல் ஒரு முன்மாதிரி.

குப்பை தொட்டியில் இன்னும் தேடினால் சோஷியலிசம் கூட கிடைக்கும் என்று வெளிபடையாக பேசி வந்த வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் நாயகிக்கு காம உணர்வு வந்து கற்பனையில் நாயகனோடு இச்சையில் கலவியில் ஈடுபடுவது போல் காட்டி இருப்பார். அது வரை அந்த உணர்வு எல்லாம் நாயகனுக்கானவை என்று திரையுலகத்தினர் வரையறை வைத்து கொண்டு படங்களை சந்தை படுத்தி கொண்டு வந்தனர். 

ஒரு கட்டத்தில் இம்மாதிரியான கட்டுடைத்தலே கே.பாலசந்தர் ஸார் அவர்களது படத்துக்கு தனிபெரும் ரசிகர் சந்தையை உருவாக்கி தந்தது. இந்த கட்டுடைத்தல் தாக்கத்தினால் 1980களில் பல புரட்சி பேசி வெளிவந்து தோல்வி அடைந்தன. முக்கியமாக காம மோகம் கொண்டு அலையும் தந்தையை மடை மாற்றி விடும் மகன் கதாபாத்திரம் கொண்டு வந்த சுமைகள். 

விவாகரத்து பெற்று பிரிந்து போன மனைவிக்கு கணவனே வந்து மாப்பிள்ளை பார்க்கும் படலம் கொண்டு வந்த பார்த்தாலே பரவசம் படம் இவரது கைவண்ணத்தில் வந்தது தான். 

சாகச பிம்பம் எதுவும் இல்லாத பிறரை அண்டி பிழைக்கும் நாயகனை வைத்து எதிர் நீச்சல் படம் பண்ண யாருக்கு அக்காலத்தில் துணிச்சல் வரும். அந்த துணிச்சலின் பெயர் தான் கே.பாலசந்தர் ஸார். 

Wednesday, December 24, 2014

கே.பாலசந்தர் சார் ....வாழ்க்கையில் நான் நானாக இருக்க சில புத்தகங்கள் சில திரைபடங்கள் தான் காரணம்அந்த சில திரைபடங்களை கொடுத்தவர் கேபி ஸார்என்றுமே நான் அவருக்கு கடன் பட்டு இருக்கிறேன்...

பாலசந்தர் சார் அவர்களின் அறிமுகமே எனக்கு அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலமாக தான். அந்த வயதில் ஒன்றும் புரியவில்லை என்றாலும்.. பிற்பாடு மனதை என்னவோ செய்த கையளவு மனசு தொடரை பார்த்த பிறகு கணக்கில்லாமல் அவள் ஒரு தொடர்கதையை பார்த்திருக்கிறேன்.

பதின்ம வயது பருவத்தில் நாயக வழிபாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டு இருந்த வேளையில் இவரது கல்கி படம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அந்த நாயகி செய்தது சரியா இல்லையா என்ற குழப்பம் ரொம்ப நாள் என்னுளிருந்தது. ஒருவனுக்கு குழந்தையை பெற்று தந்துவிட்டு, காதலனோடு வாழ போவது எந்த வகையில் நியாயம். காதலனை ஏமாற்றுவது போல் ஆகிவிடாத என்ற யோசனை. கற்பு என்ற சமூக பண்டத்ததை பற்றி என்னை விவாதிக்க வைத்தது. கற்பு என்பது மனம் சார்ந்ததா இல்லை உடல் சார்ந்ததா ???? என்ற கேள்வி என் முன் வைத்த படம் அது

உண்மையாக வாழ்வதின் மகத்துவத்தை நான் காந்தியடிகளின் வாழ்க்கையை அறியுமுன்னே எனக்கு இவரது புன்னகை படம் தான் காட்டியது. இன்றளவும் உண்மையை பேசியே பல பிரச்சனைகளில் மாட்டி கொண்டாலும் உண்மையை பேசுவதில் ஒரு சுகம் இருக்க தான் செய்கிறது

இவரது தில்லு முள்ளு படத்தை ரஜினி அவர்களது வாழ்க்கையிலொரு மைல் கல் என்றே சொல்லலாம். அது வரை வெளி கொண்டு வர படாத ரஜினியின் திறமைகளை அந்த படம் கொண்டு வந்தது.

இவரது அனுபவி ராஜா அனுபவி படத்தில் வரும் "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்" பாடலை யாரால் தான் மறக்க முடியும்.

மேலும் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடலை கொண்டாடும் பலரும் அந்த பாடலை தேர்ந்தெடுத்த பாலசந்தரின் திறமையை யாரும் பாராட்டுவதில்லை. அவரது இசை அறிவை அவரது பல சீரியல் டைட்டில் பாடல்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். கையளவு மனசு தொடரின் டைட்டில் சாங் எனப்படும் முகப்பு பாடலின் மூலமே மக்களை தொடரின் ஆரம்ப காலத்தில் அத்தொடரோடு கட்டி போட்டவர்

அவள் ஒரு தொடர்கதையிலொரு பாட்டு "அட என்னடி உலகம் இதில் இத்தனை கலகம்...", பிறகு தப்பு தாளங்களில் வரும் "அட என்னடா பொல்லாத வாழ்க்கை" பாடலில் ஒரு ஜென் தன்மை தெரியும். அதுவே சொல்லிவிடும் பாலசந்தர் அவர்களது பாடலறிவை

பாலசந்தர் சார் அவர்களுக்கு பாரதியார் என்றால் உயிர். இதனை அவரது பல படங்களின் காணலாம். பெண்ணுரிமை பற்றி பேசு பொழுது எல்லாம் பாரதியாரின் படத்தை அக்காட்சியில் எப்படியாவது கொண்டு வந்துவிடுவார். மனதில் உறுதி வேண்டும் படத்தில் மீசை வைக்காத பெண் பாரதியாக நாயகியை காட்சி படுத்தி இருப்பார்

திரை மொழி வித்தகர்.... இரு கதைகளை சொல்லி, இரண்டுக்கும் ஒரே முடிவை ஒரு வீடு இரு வாசல் படத்தில் சொல்லிருப்பர்

தமிழில் நாவலை அதன் வடிவம் கெடாமல் திரையில் கொண்டு வந்தவர்கள் சிலர் தான், அந்த சிலரில் பாலசந்தர் சாரும் ஒருவர். அப்படம் 47  நாட்கள். சிவசங்கரி அவர்கள் எழுதிய நாவல். 1990களின் கலொச்சிய அமெரிக்க மாபிள்ளை மோகமும் அதன் மூலம் வரும் ஏமாற்றத்தையும் இப்படத்தில் 1981லையே பேசி இருப்பர்

இவரது தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, மனோ சரித்திரா படமெல்லாம் தமிழ் திரையுலக காவியங்கள்

இன்று பல பெண்கள் குடும்ப கஷ்டத்தை போக்க கார்பரேட் உலகில் கற்ப்பை விலையாய் கொடுத்து கொண்டும் இருக்கும் சோகத்தை அரங்கேற்றம் படத்தில் பேசி இருப்பார். அக்கால கட்டத்தில் தாலி, கற்பு போன்ற விஷயங்களை வைத்து குறுகிய வட்டத்தில் கதை பண்ணி கொண்டு இருந்தார்கள்....

தனி மனித உணர்வு ரீதியிலான படமெண்றால் தப்பு தாளங்களை சொல்லலாம்....

தொடரும் .....
Related Posts with Thumbnails