Pages

Tuesday, February 18, 2014

**சென்னை ரயில் நிலையங்கள்**


சென்னையில் எனக்கு பிடித்த ரயில் நிலையங்களை பற்றி எழுத வேண்டுமென்று ரொம்ப நாளாய் ஆசை. அப்படி ஆசைபட ஒரு காரணம் இருக்கிறது. பெரும்பாலும் பலரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கிறது சென்னையின் மின்சார ரயில் நிலையங்கள். என் வாழ்விலும்….அப்படியே. 

இயற்கையோடு ஒன்றிணைந்த நிலையங்கள் என்று பார்த்தால், என் வரிசையில் வருவது திரிசூலம் ரயில் நிலையம், பரனூர் ரயில் நிலையம் பிறவு முக்கியமாக செங்கல்பட்டு ரயில் நிலையம். 

திரிசூலம் நிலையத்தில் திரிசூல மலை அடிவாரத்தில் அமைந்திருப்பதால் இயற்கை பிரமாண்டம் முன் சிறிய ஜீவன் போலுணரலாம். இதே போல் தான் பரனூர் நிலையத்திலும். ஆனால் பரனூர் மலை திரிசூல மலை போலில்லாமல் செழிப்பாக இருக்கும். இரண்டு நிலையத்திலும் அமைதியை அதிகமாக உணரலாம். 

ஆனால் செங்கல்பட்டு நிலையத்தில் மலை இல்லை. ஆனால் அதற்கு பதில் மலைகள் சூழ்ந்த கொளவாய் ஏரி இருக்கிறது. இந்த நிலையத்தில் கிடைக்கும் அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் எட்டாவது நடைமேடையில் அமர்ந்து ஏரியையும், அதிலிருந்து வீசும் காற்றை அனுபவிக்க வேண்டும். சொர்கத்தை அனுபவிக்கலாம். 

அப்பொழுது ஓட்டல் வேலையை விட்ட பிறகு அவ்வப்போது சிறு காலமளவுகளில் கிடைத்த வேலையை செய்து கொண்டிருந்தேன். அப்படி ஒரு வேலையில் தான் சேத்துப்பட்டு பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்தில் சேர்ந்திருந்தேன். மார்கெட்டிங் வேலை தான். விற்பனை இரண்டாம்பட்ச முக்கியத்துவத்திலிருக்க, ஒரு நாளில் இத்தனை புது ஆட்களை பார்த்து பேச வேண்டும் என்பது தான் ஆரம்பகால இலக்காக இருந்தது.

நானும் வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் அலுவலகத்தில் அமர்ந்து காலத்தை கடத்தி விட்டேன். இரண்டாம் நாள் வெயிலில் சுற்ற விட்டார்கள். முடியாமல் சுற்றினேன் மூன்று நாட்களாய்.

ஐந்தாம் நாள் சுத்தமாக முடியவில்லை. காலை அலுவலகத்திலிருந்து கிளம்பி எங்கே போவதென்று தெரியாமல் சுற்றி கொஞ்ச நேரத்தில் பாலம் கண்டு, அதில் ஏறி சேத்துப்பட்டு ரயில் நிலையம் கண்டு, அதனுள் முதன் முதலில் நுழைந்தேன் ஒரு பயண சீட்டை வாங்கி கொண்டு.

நிலையம் எதோ நகர சப்தங்களில் இருந்து விடுபட்டு அமைதியாக இருந்தது. மதியம் அங்கே கழிந்தது. உணவும் அங்கேயே உண்டேன். போய் வந்து கொண்டு இருந்த ரயில்களை பார்த்து கொண்டு இருந்தேன். மௌன சாட்சியாய் நான் அதற்கெல்லாம். ஒண்ணும் தோன்றாமல் நேரத்தை கழித்து மாலை அலுவலகம் வந்தேன்.

மாலை மேலாளர் சாடியதற்கு பதிலாய் அவருடன் இரண்டு மூன்று நுகர்வோரை பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பினேன். அப்பொழுது சிறு குழப்பம். ராயப்பேட்டை பெரியம்மா வீட்டுக்கே போவதா இல்லை பெருங்களத்தூர் அறைக்கு போவதாயென்று. மறுநாள் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று அறை செல்ல சேத்துப்பட்டு ரயில் நிலையத்திற்கு போனேன்.

இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது. நிலைய நடைமேடையில் முழுவதும் பிச்சை எடுப்பவர்கள் இரவு தூக்கத்திற்கு தயாராகி பேசிய படி இருந்தனார். எனக்கு எதோ புதிய உலகம் போலிருந்தது.

சிரித்து கொண்டு இருந்த பிச்சைகாரர்களை நான் அன்று தான் பார்த்தேன்.வரிசையாய்படுத்துகொண்டுஇருந்தார்கள்.மேற்கொண்டு கவனிப்பதற்குள் செங்கல்பட்டு ரயில் வந்து விடவே,நான் அதில் ஏறிவிட்டேன்.

பிறகு எத்தனையோ முறை பிச்சைகாரர்களின் உலகத்தில் நான் காட்சி பொருளாய் இருந்திருக்கிறேன்.

அதன் பிறவு சேத்துப்பட்டு ரயில் நிலையத்தோடு தொடர்புடைய முக்கிய நிகழ்வு என்று பார்த்தால் புத்தக கண்காட்சிக்கு போய் புத்தகங்களை வாங்கி கொண்டு அதே வழித்தடத்தில் வந்தது தான்.

இந்த சேத்துப்பட்டு ரயில் நிலையம் ஏன் முக்கியமானது என்றால் அது இரவில் பிச்சைகாரர்களின் அடைக்கலமாக இருப்பது தான்.
-       - - - -
எங்களை தவிர எல்லா சொந்தங்களும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே சென்னையில் குடியேறிவிட்டதால், சிறு வயதில் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் சென்னை வந்துவிடுவோம்.

விடுமுறையின் ஆரம்பத்தில் மாமாவோ பெரியப்பாவோ திருச்சி வந்து எங்களை (நான்,அண்ணன், அம்மா) சென்னைக்கு அழைத்து செல்வார்கள். அம்மாவுடன் போவதால் சென்னைக்கு போகும் பயணம் மட்டும் எப்பொழுதும் கண்டிப்பானதாக இருக்கும். ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு, விற்கும் சிற்றுண்டிகளை எதையும் வாங்கி தர சொல்லி கேட்காமல் இருக்க வேன்டும் போன்ற கட்டுப்பாடுகளுடன் ஜன்னல் வேடிக்கையில் நேரம் கொன்று சென்னை வந்து சேர்வோம். 

ஆனால் திருச்சிக்கு திரும்ப போகும் பொழுது நிலை இப்படி இருக்காது, ஏனென்றால் அப்பொழுது எங்களை அழைத்து செல்ல அப்பா சென்னை வருவார். புது துணி, புது காலணிகள், புது வகுப்பறை போன்ற எதிர்பார்ப்புகளோடு அந்த பயணத்தை நாங்கள் திருவிழா கொண்டாட்ட மனநிலையில் தான் பயணிப்போம். 

அந்த கொண்டாட்டம் என்பது ராயப்பேட்டையிலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வாடகை மோட்டார் வண்டியில் கிளம்பும் போதே ஆரம்பித்துவிடும்.

எழும்பூர் நிலைய பழங்கால கட்டடத்திற்குள் நுழையும் போது எதோ எஃச்.ஜி.வெல்ஸ் நாவலில் வரும் கால இயந்திரத்தில் ஏறி பிரிட்டிஷ் காலத்திற்குள் போவது போல் உணர்வேன் அப்பொழுது. 

திருச்சி போகும் ரயில்கள் எல்லாம் அப்பொழுது நுழைந்த உடன் முதலாம் நடைமேடையில் வந்துவிடும். பேட்டிகளையெல்லாம் மேடையில் வைத்து ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்திலிருந்து அப்பாவிடம் சிற்றுண்டி, காமிக்ஸ் எல்லாம் வாங்கி தர சொல்லி கேட்போம். அப்பா வாங்கியும் தருவார். 

முக்கியமான ஆர்வம் தூண்டியான எடை பார்க்கும் இயந்திரத்தில் ஒவ்வொரு தடவையும் மாறக்காமல் எடை பார்ப்போம். எடை எல்லாம் முக்கியமில்லை எனக்கும் அண்ணனுக்கும், அந்த அட்டையின் பின் பகுதியில் என்ன செய்தி இருக்கிறது என்று பார்ப்பது தான் முக்கிய வேலை எங்களுக்கு. ஒவ்வொரு இயந்திரமும் என்ன செய்தி சொல்கிறதென்று பார்ப்போம். நிலையத்திற்கு வரும் வழியிலேயே உயர்தர சிற்றுண்டிகளை அம்மா வாங்கி வைத்திருப்பார். அது பயணிக்கும் பொழுது சாப்பிட.

இருந்தாலும் நிலையத்திலேயே அம்மாவிற்கு தெரியாமல் சாப்பிட முயற்சிப்போம். பெரும்பாலும் தோல்வி தான். அப்பா தலையீட்டால் வெற்றி. 

ரயில் வந்து ஏறிய உடன், எந்த ரயில் முதலில் கிளம்பும் என்று ஆவலுடன் பந்தயம் கட்டுவோம் நானும் அண்ணனும். பந்தயத்தின் முக்கிய நிகழ்வாய் தபால் வண்டி போவதை எதிர் பார்ப்போம் அது தபால் வண்டி என்று தெரியாமலேயே. 

அப்பொழுதெல்லாம் சென்னையின் எல்லை எழும்பூர் நிலையத்தில் தான் இருக்கிறது என்று நான் நம்பி கொண்டு இருந்ததால், டெல்லியிலிருந்து ராஜீவ் காந்தி வந்தால் எழும்பூர் நிலையம் வழியாக தான் நடந்து வருவார் என்று நினைத்து கொள்வேன். 

ரயில் கிளம்பிய உடன் சொந்தங்களுடன் அந்த கோடைகால கொண்டாட்டத்தை அனுபவிக்க ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என்ற ஏமாற்றமும், ஒரு புது வகுப்பில் பழைய நண்பர்களோடு கழிக்க போகிற மகிழும், இரண்டு கலந்த ஒரு வித கலவையான உணர்வில் பயணிக்க ஆரம்பிப்போம்
. 


                                     


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசனையை ரசித்தேன்... அதிக கூட்டம் இல்லாமல் இருக்கும் செங்கல்பட்டு நிலையத்தில் பலமுறை ரசித்துள்ளேன்...

Related Posts with Thumbnails