Pages

Thursday, March 6, 2014

சரித்திர நாவல்கள் :: சாண்டில்யன் ஸ்பெஷல்

தினசரி வாழ்விலிருக்கும் அபத்தங்களோடு வாழ்ந்து பழகிய நமக்கே ஒரு கட்டத்தில் அவற்றில் இருந்து விடுபட்டு, கால இயந்திரத்தில் பயணித்து ராஜா காலத்தில் வாழ ஆசைபடுவோம். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை, நான் அப்படி தான் ஆசை படுகிறேன்.

நம் எல்லோருக்கும் அக்காலக்கட்ட ராஜ்ஜிய வாழ்க்கை முறையிலொரு ஈர்ப்பு இருக்கிறது. கட்டுபாடு இல்லாத அதிகாரம், செல்வம் ..... இன்னும் பிற. இதை எல்லாம் நினைத்து பார்க்கவே முடியும், வாழ்ந்து பார்க்க வேண்டுமானால், நமக்கு இருக்கும் ஒரே வழி சரித்திர நாவல் படிப்பது தான்.

சரித்திர நாவல் என்றாலே ராஜதந்திரம் மற்றும் போர் காட்சிகள் தான் சிறப்பு. அவை மகுடத்தில் இருக்கும் மாணிக்கம் போல.

என்னதான் தீவிர இலக்கியத்தை வாசித்தாலும், ராஜதந்திரம் மற்றும் போர் காட்சிகளுக்காகவே இவைகளை வாசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அதிலும் போர் காட்சி என்று வந்தால் கல்கியின் படைப்புகளில் பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளி விட்டு சிவகாமியின் சபதம் முன்னுரிமை பெற்று விடும். வார்த்தைகளின் மூலம் காட்சியின் பிரமாண்டத்தை காட்டி இருப்பார்.

ஆனால் இந்த பகுப்பில் கல்கியை விட சாண்டில்யன் தான் முன்னிலையில் இருக்கிறார். அதற்கு கடல் புறா நாவலே உதாரணம்.

அதிலும் புகாரில் இருந்து இளையபல்லவன், காஞ்சனை, அமீர் அகுதாவின் உதவியோடு தப்பிக்கும் இடத்தை படிப்பவர்களுக்கு மயிர்கூசும்.அதற்கு முன்பாக அநபாயன், காஞ்சனை ஆகியோரின் உதவியோடு புகார் நீதிமன்றத்தில் இருந்து தப்பிக்கும் காட்சி, ரன் படத்தில் மாதவன் சுரங்கபாதையின் ஷட்டரை  இழுத்து மூடும் காட்சிக்கு நிகரானது. அந்த காட்சியை படிக்கும் பொழுது அநபாயன் பக்கத்தில் காஞ்சனை வில்லேந்தி புகார் மன்னனின் நெற்றியை குறி பார்த்து நிற்ப்பது.... நேரில் பார்ப்பது போலிருக்கும்.

அதன் பிறகு கடல் புறாவின் முதல் போரான விஜயசந்திரனோடு இளையபல்லவன் போதும் இடமும் விறுவிறுப்பான கட்டம் தான். அதிலும் சீனத்து வெடி ஆயுதங்களை விஜயசந்திரன் பயன் படுத்தும் பொழுது, இளையபல்லவம் தடுமாறி போவான். நமக்கு பதைபதைக்கும், ஏனென்றால் அந்த நேரத்தில் இளையபல்லவனின் படையில் நாமும் ஒரு மாலுமியாக மாறி இருப்போம்.

அந்த வெடியினால் கடல் புறாவிற்கு ஏற்பட்ட சேதாரம், எதோ நம் வீட்டில் சேதாரம் ஏற்பட்டது போல் பதற்றம் அடைவோம். ஆனால் அந்த நேரத்திலும் நம் தலைவனின் கம்பீரத்தை கண்டு அமைதி கொள்வோம். அப்படி கொள்ள வைப்பதில் தான் சாண்டில்யன் வெற்றி பெறுகிறார்.

கடைசியில் ராஜேந்திர சோழன் காட்டிய அறையினுள் நுழைந்து மஞ்சள் அழகியையும் காஞ்சனையையும் இளையபல்லவன் அணைத்து கொள்ளும் பொழுது கடல் புறாவோடு நாமும் வெட்கபடுவோம்.

கடல் புறாவை மூன்று முறை படித்திருக்கிறேன், ஒவ்வொரு தடவையும் அதே சிலிர்ப்பூட்டும் வாசிப்பு தான்.

அடுத்து போர் வியூகம், ராஜதந்திரம் என்று சாண்டில்யன் எழுத்தில் விஸ்வரூபம் எடுத்தது ராஜ திலகம் நாவலில் தான். மிக பிரமாண்டமான கதைகளம். ஆனால் ஏன் இந்த நாவல் கொண்டாட படவில்லை என்று தான் தெரியவில்லை.

 இதில் கதையின் ஆரம்ப நிலையிலேயே நாயகனும் நாயகியும் கடலில் அடி நீச்சல் அடித்து தப்பிப்பார்கள். அந்த காட்சி தான் நாவலின் அட்டை படத்திலும் இருக்கும்.

இந்த நாவலை ஒரு தடவை தான் படித்தேன், ஆனால் இந்த நாவல் தந்த சுவை உணர்விலிருந்து அடங்க பல காலம் ஆனது. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் இந்த நாவலின் சுவையை சுவைக்க.

அதிலும் நாயகன் எதிரியின் போக்கை அறிந்து, உடனே படையெடுப்பு வியூகத்தை மாற்றுவது எல்லாம், வாசிப்பில் மட்டுமே உணர முடிகிற பிரமாண்டம்.

வேறு சரித்திர நாவல்களும் படித்திருக்கிறேன், ஆனால் போர் வியூகம், ராஜதந்திரம் என்று வரும் பொழுது இந்த இரண்டு நாவல்களை மிஞ்சிய நாவல்கள் எதுவுமில்லை. அப்படி இருக்கிறது என்றால், நான் அவற்றை படித்ததில்லை.

2 comments:

மனோ said...

i like sandilyan more than kalki. that too in yavana raani, pakka masala thriller story . as of now i dint read raaja thilgam, will buy it. tnx for the info.

Unknown said...

சாண்டில்யன் நாவல்கள் ஈகரை தளத்தில் உள்ளது நண்பரே..பதிவிறக்கி படியுங்கள்...நல்லபதிவு..பாரட்டுக்கள்

Related Posts with Thumbnails