Pages

Friday, June 27, 2014

*புறப்பாடு* - ] என் கதை [

அது 2007 ஜனவரி மாதம்.... எந்த நேர்முக தேர்வுக்கு போனாலும் தேர்வாகாமல் வேலையில்லாமல் சும்மா சுற்றி கொண்டு இருந்தேன். அப்பொழுது லேண்ட்மார்க் கடையில் எதோ பத்திரிக்கையில் கன்னத்தில் சதை கொஞ்சம் போட்டு இருந்தால் முகம் நல்ல கவர்கிற மாதிரி இருக்கும் என்பதை படித்த பின் கன்னத்தில் சதை போட என்ன பண்ண வேண்டும் என்று யோசித்த பொழுது, அப்பிள் ஜூஸ் சாப்பிட்டால் கன்னத்தில் சதை போடும் என்று ஒரு நண்பன் சொன்னதை அடுத்து, பெருங்களத்தூர் ஃபிரதர்ஸ் பேக்கரியில் அப்பிள் ஜூஸும் ;சாக்கோ ட்ரஃபில் கேக்கும் சாப்பிட்டதினால்  கன்னத்தில் சதை கொஞ்சம் போட்டது

பிறவு உடற்கட்டை கொஞ்சம் வலிமையானதாக்க .என் பிட்னஸ் செண்டர் சேர்ந்தேன்.

இது இரண்டும் கைவச பட்ட பின்பு ... எனக்கு பெரிய பிரச்சனையாக அமைந்தது ஆங்கிலம் பேசுவது தான். இதற்காக பலரிடம் பல தடவை அசிங்க பட்டு, கஷ்டபட்டு பேச கற்று கொண்டேன். இதில் வேடிக்கை என்னவென்றால் நான் படித்தது எல்லாம் ஆங்கில வழி கல்வியில் தான்.  

பிறவு முக்கியமாக நிறைய தடவை முயற்சி செய்தாலும் எனக்கு முதலீட்டை பற்றி மட்டும் கற்று கொள்ளவே முடியவில்லை. சரி ஆற்றில் குத்திதால் உயிர் பிழைக்க நீச்சல் செய்ய கற்று கொள்வது போல் வந்துவிடும் என்று எண்ணி .... ஒரு பெரிய தனியார் வங்கியில்  எதோ எதோ பேசி வேலைக்கு சேர்ந்து விட்டேன்

பிறவு தான் சோதனை

நான் நினைத்தது போல் முதலீட்டு துறை என்பது ஆறு இல்லை பெரிய கடல் என்று உணர்ந்தேன். இந்த காலகட்டத்தில் தான் மணி கண்ட்ரோல் இணைய தளமும் தமிழ் இணைய உலகமும் அறிமுகமானது


பிறந்ததிலிருந்து என்னுள் இருந்த தாழ்வுமனபான்மை காணாமல் போனதற்கு தமிழ் பதிவுலகம் பெரிய உதவி செய்யது, எப்படியென்றால் எந்த தயக்கமும் இல்லாமல் யார் எழுதியது, எம்மாதிரியான பதிவு என்ற பாகுபாடு இல்லாமல் பின்னூட்டம் போட முடிந்தது. அது மட்டுமில்லாமல் நான் இட்ட பின்னூட்டத்திற்கு அந்த பதிவாளர் பதில் சொல்லும் பொழுது எனக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்படும்

மற்றவர்களுக்கு வேண்டுமானல் இது ரொம்ப சாதாரணமாக இருக்கலாம், ஆனால் சிறு வயதிலிருந்து சமூகத்தில் எவ்வித கவனமும் பெறாமல் வளர்ந்த எனக்கு அந்த பதிவாளார் அளிக்கும் பதில் எல்லாம், பதில் என்ற நிலையை தாண்டி அவரெனக்கு அளிக்கும் அங்கிகாரமாக பார்த்தேன். அப்பொழுது பார்த்து கொள்ளுங்கள் நான் எந்த அளவிற்கு தாழ்வு மனப்பான்மையில் தவித்திருப்பேனென்று. அப்படி பின்னூட்டம் போடுவதின் மூலம் எனக்குள்ளிருந்த பயம் சுத்தமாக இல்லாமல் போனது. அது எந்த மாதிரியான பயம் என்றால், இதை சொன்னால் பிறர் எப்படி எடுத்து கொள்வார்களோ என்ற பயம்

அப்படியும் என்னுள் இருந்த மிச்ச சொச்ச தாழ்வு மனப்பான்மையையும் பதிவர் சந்திப்புக்கு போன பொழுது காணாமல் போனது. முரளிகண்ணன் அவர்கள் அங்கு கூடி இருந்த மக்களுக்கு முன் என்னை பற்றி பேச சொன்னார். கால் கைகள் நடுங்க திக்கி திக்கி பேசி முடித்தேன். அங்கு ரயில் பிடித்து என் அறை வந்து சேரும் வரைக்கும் மன மகிழ்ச்சி மிகுதியாக இருந்தது

சிறு வயதில் இருந்து பிறப்பால் வந்த குறைபாடுகளால் (வலது கை கால் செயல்பாட்டு திறன் குறையாக இருக்கும், குரல் சரியாக வராது : ஒரு மாதிரியாக பேசுவேன்) யாரும் என்னை விளையாட்டில் சேர்த்து கொள்ள மாட்டார்கள், என் அண்ணன் சண்டை போட்டு உப்புக்கு சப்பாணியாக விளையாட்டில் சேர்த்து விடுவான், அது எனக்கு பிடிக்காது. இருந்தாலும் விளையாட போவேன், விளையாட வேண்டுமே என்ற ஆசையில். அப்படி போன என்னை மற்றவர்கள் அவர்களது சந்தோஷத்திற்கு என்னை அடிப்பார்கள், வலி தாங்காமல் அழுவேன். அண்ணன் என்னை வீடிற்கு கொண்டு வந்து விட்டுவிடுவான். இந்த கதை அடிக்கடி தொடரும்.

விளையாட வழி இல்லாமல் பத்திரிக்கை, அப்பாவின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். காலம் போக போக எனக்கு விளையாடுவதை விட படிப்பத்தில் நாட்டம் அதிகமானது. ஆனால் வகுப்பறையில் நான் ஒரு கோமாளியாக பார்க்க பட்டேன், ஏன்னென்றால் வாத்தியார் சொல்லி தருவது எதுவும் வேகமாக எனக்கு புரியாது ; அப்படி புரியாததால் தேர்வில் மதிப்பெண் வாங்க முடியவில்லை, இந்த கதை கல்லூரி முடிக்கும் வரை தொடர்ந்தது. ஆதலால் தாழ்வு மனப்பான்மை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்து இருந்தது என்னுள்

பதிவுலகம் இந்த தயக்கங்களை உடைத்தெறிவதில் உதவியாய் இருந்தது. யுவா, அப்பாஸ் என்று சின்ன வட்டத்தில் இருந்த எனக்கு, அந்த வட்டத்தை தாண்டி வரவும் முடிந்தது.

முதல் வேலையில் என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. முதலீட்டு துறை கைவச படாத காலமது. பயிற்சி வகுப்பு மட்டும் எனக்கு போதுமானதாக இல்லை. அது வரை வேலையில் சேர வேண்டும் என்று தான் எண்ணி இருந்தேன். ஆனால் வேலையில் சேர்ந்த பின் அதை எப்படி காப்பாற்றி கொள்வது தெரியவில்லை

நட்சத்திர ஒட்டல் வேலை ஒன்பது மணிக்கு வந்து ஆறு மணிக்கு கிளம்பும் மனத்தை தான் தந்திருந்தது. அதை தாண்டி வங்கியில் வேலை பார்க்க நேர்ந்த பொழுது மனம் ஏன்னோ அமைதியில்லாமலானது.

வாழ்வில் சாதிக்க வேண்டுமென்ற வெறி எல்லாவற்றையும் தாங்கி கொள்ள சொன்னது.

முதலும் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாய், முதல் வேலையில் மன தடையை தாண்டி வந்து வேலை செய்ய முடியவில்லை. நான் ரொம்ப சொகுசாய் வளர்ந்தவன், என்னால் தெரு தெருவாய் எல்லாம் இறங்கி வேலை பார்க்க முடியாது என்று நம்பி கொண்டு இருந்தேன். அதனால் ஒவ்வொரு நாளும் TELE CALLING மூலம் முன்னூறு பேர்களிடம் பேசி நேரில் பார்க்க அனுமதி வாங்கி பிறவு நேரில் பார்த்து விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கும் முறையை கையில் எடுத்தேன்.

ஏற்கனவே எனக்கு நிறுவனத்தின் முதலீடு திட்டங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. மேலும் அதற்கு மகுடமாய் முன் பின் தெரியாத மக்களிடம் எப்படி பேசுவது என்ற தயக்கம் வேறு.

கிட்டத்தட்ட பத்து நாட்களில் ஆயிரம் பேர் இடம் பேசிய பின்னரும், என்னால் யாரிடமும் விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க முடியவில்லை. 

பிறகு ஒரு நாள் இரவு ஒன்பது வரைக்கும் எந்த வியாபாரமும் செய்ய முடியாத காரணத்தினால் மேலாளரிடம் திட்டு வாங்கி கொண்ட பின் கிளம்பினேன். அப்பொழுது எனக்கு அது பெரிய அவமானமாக தோன்றியது. ஆனால் இப்பொழுது யோசித்து பார்க்கும் பொழுது எல்லோருக்கும் முதல் வேலையில் சேர்ந்த ஆரம்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனை தான் அது என்று தெரிகிறது எனக்கு. 

அடுத்த நாள் முந்தைய இரவு நான் திட்டு வாங்குவதை பார்த்த வேறு பிரிவின் மேலாளர் என்னை தனியே அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்டு, வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் எப்படி பேசுவது என்று சொல்லி கொடுத்தார். அப்படி அவர் சொல்லி கொடுத்த பிறகும் என்னால் பெரியதாய் வியாபாரம் செய்ய முடியவில்லை. எதோதொன்று என்னை சரியாக வேலை செய்ய விடாமல் பிடித்து இழுப்பது போல் இருந்தது. அது என் கற்பனையாக கூட இருக்கலாம். தோல்வி அடையும் எந்த மனிதனும் தனது தோல்வியின் பாரத்தை வேறு யார் மீதோ அல்லது எதன் மீதோ சுமத்த முயற்சிப்பான். 

பிறகு நண்பனிடம், நெருங்கிய சொந்தங்களிடமும் முதலீட்டு திட்டங்களை விற்று காலத்தை ஓட்டிகொண்டு இருந்த பொழுது ஒரு நல்ல நாளில் மேலாளர் கூப்பிட்டு "விஷ்வா பேசாம வேலைய விட்டு போயிரு .... மாசத்துக்கு ஒன்னு இரண்டு பார்ம் பண்ணுறதுக்கு நீ வேண்டவே வேண்டாம், உனக்கு சேல்ஸும் வராது, அப்புடியே வந்தாலும் உனக்கு இன்வஸ்மெண்ட்ஸ் பத்தி ஒன்னும் தெரியாது..." என்று சொன்னார். அப்படி அவர் சொன்னதும் வந்த கோபத்தில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வலியோடு அறை நோக்கி கிளம்பினேன். மதிய நேர வெயில் தணிந்து கொண்டு மாலை நேரம் ஆரவாரமாக வந்து கொண்டு இருந்தது. துரைப்பாக்கம் பல்லாவரம் ரோட்டில் இருக்கும் அந்த டீ கடையில் பைக்கை நிறுத்திவிட்டு, முகம் கழுவிவிட்டு ஒரு ஸ்பெஷல் டீயும் வாழைக்காய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்த பொழுது செல்பேசி சத்தம் போட்டு யாரோ அழைப்பதாய் சொன்னது. 

அழைத்துக்கொண்டு இருந்தது அம்மா. என்ன பேசுவது என்று தெரியாமல் எடுத்தேன் .... "டேய் விச்சூ .... உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமுன்னு நானும் அப்பாவும் முடிவு பண்ணி இருக்கோம்டா ..என்ன சொல்லுற ?" . 

வேலை விட்ட வருத்தத்தில் என்ன சொல்லுவது என்று தெரியாமல் "சரிம்மா ...." என்று சொன்னேன். 

தொடரும் .....
Related Posts with Thumbnails