Pages

Wednesday, March 25, 2015

ஜேகே எனும் நண்பனின் வதை

ஒரு வழியாக சேரனின் ஜேகே எனும்  நண்பனின் கதை படத்தை பார்த்து முடித்தாயிற்று. அழுத்தமான கதை கருவை அழுத்தமில்லாமல் படைத்திருக்கிறார் இயக்குனர்

மரணம் நோக்கிய ஒருவனது பயணத்தை பற்றிய கதை தான் என்றாலும் அதற்குரிய மெனகிடல்கள் எதுவும் காட்சி படுத்துதலில் தெரியவில்லை

வலசை பறவைகளின் பண்பு,  தனித்து மரணித்தலின் கொள்கையை ஏற்று கொண்டு நாயகன் தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக தொழிலதிபராகி ... பணம் சேர்த்து, குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி ஆகியவை நடப்பதற்குள், எதை நோக்கி இப்பப்படம் நகர்கிறது என்று யோசித்து யோசித்தே பார்வையாளன் குழம்பி போய் விடுகிறான்.

படம் ஆரம்பித்து பத்து நிமிடங்களுக்கு கதை ஆரம்பித்து விட வேண்டும் என்பது சர்வதேச திரைகதை விதி. சரி இது வணிக படமல்ல இலக்கிய படம்,  பரிசோதனை படம் என்று ஜல்லி அடிக்க பட்டாலும் கூட கதை என்ற வஸ்து ஒன்று இருக்க வேண்டுமே.

உண்மைக்கு மிக நெருங்கிய படம் என்று சிலர் சொல்லலாம் (அவை எல்லாம் "லாம்" என்ற வகையிலேயே தான் இருக்கும் என்பதை குறித்துக்கொள்ள வேண்டும்), ஆனால் நிதர்சனத்தில் எங்கு ஒரு வியாபார ஒப்பந்தம் வாடிக்கையாளரை சந்தித்த சில நிமிடங்களில் கையெழுத்து ஆகுகிறது. அம்மாதிரியான லெமுரிய கால வாடிக்கையாளர்கள் இருந்தால் எனக்கு சொல்லவும் நானும் அவர்களை தான் தேடி கொண்டு இருக்கிறேன்

தேடல் என்று சொன்ன உடன் தான் படத்தில் வரும் ஒரு வசனம் (வசனமல்ல, அது வஜனம்) "ஃபேஸ்புக்க ஒப்பன் பண்ணி பாரு, எவ்வளவு பேர் உன்னைய தேடுறாங்கன்னு தெரியும்"... இந்த நவீன காலத்தில் வாழ்வியல் தேடல் என்பது ஃபேஸ்புக்கில் தான் உள்ளது என்பதை தெளிவாக சொன்ன இயக்குனரின் ஞான மேலாண்மையை (இதை ஆண் மேல் ஆமை என்று கூட சொல்லலாம்) நான் மெச்சுகிறேன்

படத்தில் நாயகன் எப்பொழுதும் இடிச்சபுளி மாதிரியே இருக்கிறார். மறைத்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் கூட இப்பட நாயகனை விட நன்றாக நடிப்பார்

கண்டிப்பாக இது ஒரு பரிசோதனை படம் தான், ஆனால் பல பரிசோதனைகளை செய்யும் விஞ்ஞானிகள் கூட வாய் இல்லாத எலிகள் மேல் தான் முதலில் பரிசோதனை செய்வார்கள். அதற்கு எலிகள் எனக்கு தெரிந்து காசு எதுவும் தருவதில்லை. பல பப்படங்களை தயாரித்து தமிழக சினிமாதுறை ஒரு மோசமான நுகர்வு கலச்சாரத்தை நிறுவி கொண்டு இருக்கிறது

சி2எஃச் நல்ல திட்டம் தான், நல்ல படங்கள் மட்டுமே அதில் வெளிவரும் என்று சேரன் உறுதியளித்தால் தொடர்ந்து ஆதரவளிக்கலாமென்று இருக்கிறேன்

Wednesday, March 18, 2015

பேருந்து சக்கர நாற்காலியும் : காக்கி சட்டை திரைபடமும்



சில வருடங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணத்தில் ஏறி இறங்கும் வசதிக்காக அரசு சில பேருந்துகளில் சக்கர நாற்காலியும் அதை ஏற்ற இயந்திரபொறி வசதியையும் அமைத்து கொடுத்தது. 

இந்த இயந்திர பொறியை பேருந்தின் ஓட்டுனரால் மட்டும் இயக்க முடியும். 

இதன் அறிமுக விழாவின் பொழுது அருமையாக இயங்கிய இயந்திரம், அதன் பின் இயங்கி இருக்குமா என்பது சந்தேகமே...

இந்த மாதிரியான வசதி கொண்டு பேருந்துகள் முக்கிய வழிதடங்களில் இயக்க படுவதே இல்லை. 

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக திட்டங்கள் போடும் அரசு அதை எவ்விதத்தில் செயல் படுத்துகிறது என்பது கேள்வியே. 

உபயோகிக்கும் சதவிகிதம் குறைவு என்பதற்காக இதை பராமரிப்பு இல்லாமல் வைத்து கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. 

பேருந்தில் இதன் அருகே சென்று பார்த்த பொழுது இயந்திரம் இயங்கும் நிலையில் இல்லை என்பது தெரிந்தது. 

ஊடகங்கள் ஏன் இதனை கண்டு கொள்வதில்லை என்றும் புரியவில்லை. ஒருவேளை செய்தியின் வியாபார தன்மை குறைவு என்பதாலா ??? திட்ட அறிமுகத்தின் போது பாராட்டி பேசியது இதே ஊடகங்கள் தான். 

= = = = =

இப்பொழுது தான் வீட்டம்மணியும் நானும் காக்கி சட்டை படம் பார்த்துவிட்டு வந்தோம். 

படம் நல்ல படமா இல்லையா என்ற கேள்வி என்னுள் படம் ஆரம்பித்த முதலே மனதிற்குள் கடல் அலையாய் வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது பக்கத்தில் அமர்ந்து இருந்த சகியின் முகத்தை திரும்பி பார்த்தேன். அவர் படத்தில் வரும் இமாம் அண்ணாச்சியின் நகைச்சுவையில் சிரித்து கொண்டு இருந்தார். படம் முடிந்த பின் தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாக சொன்னார். அவருக்கு பிடித்து விட்டால் அது நல்ல படம் தான். 

சமையல் தெரியாதவன் சமைத்த சமையல் மாதிரி இருக்கிறது படம். 

உலகளவில் உடலுறுப்பு வியாபாரம் செய்யும் ஒருவனை காவல் துறையில் கடைநிலை ஊழியன் ஒருவன் பிடிப்பது தான் படத்தின் மைய கரு. நன்றாக திரைக்கதை அமைக்க தெரிந்த யாருக்காவது இந்த கதை கரு கிடைத்து இருந்தால் புகுந்து விளையாடி இருப்பார்கள். பாவம் இயக்குநர். படத்தில் எந்த வகையிலாவது சுவாரசியத்தை கூட்டி விடலாம் என்று பிரபு, இமாம், விஜய் ராஸ் எல்லாம் நடிக்க வைத்து சற்றும் சுவாரசியமில்லாத படத்தை தந்து இருக்கிறார். 

இடைவேளையின் பொழுது தப்பித்து கொள்ள ஒரு வாய்ப்பை இயக்குனர் தருகிறார். ஆனால் சுஜாதா நாவல்களில் வருவது போல் விதி விதி என்ற வஸ்து எங்கோகொரு ஓரத்தில் நின்று சிரித்திருக்கும் போல. வாங்கி வைத்த நொறுக்குத்தீனிகளெல்லாம் விற்க்க வேண்டுமே திரையரங்கு ஊழியர்கள் கதவுகளை பூட்டி வைத்து விட்டனர். சரி யேசுநாதர் தட்டுகள் திறக்கப்படும் என்று சொல்லி இருக்காரே என்று தட்டிய பொழுது திறக்கவே இல்லை. ஆனால் என்னை ஒரு கரம் தட்டியது. பார்த்தால் வீட்டம்மணி "வந்து உட்காரு பக்கி ..." என்று பதிபக்தியுடன் அழைத்தார்.

இரண்டாம் பாதியில் காலத்தின் கால்களில் அடிபட்டு, காலம் நொண்டி கொண்டு கடந்து கொண்டு இருக்கிறதோ என்று சந்தேகம் கொள்ளும்படி படம் இழுவை. 

விஷால் நடித்து வந்த மலைக்கோட்டை படத்தில் வந்த ஆஷிஷ் வித்யார்த்தி ஊர்வசி ஜோடியின் புகழ்பெற்ற ஃபிளாஷ்பேக் காமெடியை இன்னும் எத்தனை படத்தில் காபி அடிப்பார்களோ தெரியவில்லை. 

பப்படமான இப்படத்தை நல்லதொரு எண்டர்டெயினர் என்று சொன்ன நல்லுள்ளத்தை தேடி கொண்டு இருக்கிறேன்.

இம்மாதிரி படம் தயாரித்து வெளியீடும் தேவதூதர்களுக்கு ஒரு வேண்டுகோள். படத்தின் நுழைவுச்சீட்டு உடன் இலவச இணைப்பாக இஞ்சி மரப்பா தந்தால் நலம். ஏற்கனவே அயல்நாட்டு உணவு வகைகளை சாப்பிட்டு கெட்டு போய் இருக்கும் சினிமா ரசிகனின் ஜீரண சக்தியை மேம்படுத்தி இது போன்ற கதைகள் ஜீரணிக்க உதவும்.

                                                 
                                                     
Related Posts with Thumbnails