Pages

Sunday, November 22, 2015

சினிமா டிக்கெட்


எதாவது திரைப்படத்தை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் கூடவே அந்த படத்திற்கு தியேட்டரில் நின்று டிக்கெட் வாங்கியதும் நினைவிற்கு வருகிறது.

இன்று சேரனின் ஆட்டோகிராப் படத்தை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது அந்த படம் வெளி வந்த அன்று முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டுமென்று திருச்சி ஜங்ஷனில் இருக்கும் சோனா மீனா திரையரங்குக்கு காலை பதினொரு மணிக்கே போய், கவுண்டரில் பட பெயரை சொல்லி டிக்கெட் வாங்க காசு தந்த ; கவுண்டரில் இருந்தவர் "அது மதியானம் தான் ...இப்ப darkness falls ..." என்று சொன்னார்.

அது வரையில் நான் எந்த படத்திற்கும் காத்திருந்து டிக்கெட் வாங்கி படம் பார்த்ததில்லை. அப்பொழுதெல்லாம் பொறுமை என்ற விஷயத்திற்கும் எனக்கும் ரொம்ப தூரம். ஆனால் திருச்சி ராஜா தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஹோலிக்ராஸ் பஸ் ஸ்டாப் வரையிலும் ஒட்ட பட்டு இருந்த வித விதமான போஸ்டர்களை பார்த்து மயங்கியதால் படத்தை பார்த்த ஆக வேண்டும் கவுண்டரிலேயே நின்று கொண்டு இருந்தேன். நல்ல வெயில் அடித்து கொண்டு இருந்தது. சுமார் மதியம் மணி ஒன்றை இருக்கும் பசி எடுக்கவே தியேட்டர் எதிரிலிருந்த டீ கடையில் டீயும் வெங்காய போண்டாவும் சாப்பிட்டு விட்டு மீண்டும் கவுண்டர் வரிசைக்கு வந்த பொழுது பத்து பேர் நின்று கொண்டு இருந்தார்கள்.

ஏன்னோ துக்கம் தொண்டையை அடைக்க, வெறுப்பில் நின்று கொண்டே டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே போனேன்.

கொஞ்ச நேரம் கழித்து நண்பர்கள் வந்தார்கள். வந்த உடன் டிக்கெட் கிடைத்ததை பற்றி அவர்கள் சொன்னதும், நான் மூன்று மணி நேரம் காத்து இருந்து டிக்கெட் வாங்கிய தியாக கதையை சொல்லவில்லை.

அதே போல் இரண்டு வாரம் கழித்து சரத்குமார் நடித்த கம்பீரம் படம் மெகா ஸ்டார் தியேட்டரில் வந்த பொழுது, குடி பழக்கம் இல்லாத என்னையும் செந்தில் என்ற இன்னொரு நண்பனையும் (இவன் இப்பொழுது பிரபல தனியார் மருத்துவமனையில் ஆலோசகராய் இருக்கிறான்) டிக்கெட் வாங்க நிற்க வைத்துவிட்டு மற்றவர்கள் எல்லோரும் திரையரங்கத்தின் எதிரில் கரூர் பைபாஸில் இருந்த அண்ணாமலை வையின் ஷாப்பில் தீர்த்த தாகத்தை தீர்த்துக்கொள்ள போய் விட்டார்கள்.

அப்பொழுது எல்லாம் மெகா ஸ்டார் தியேட்டரில் டிக்கெட் வாங்க போகும் வழி சுரங்கப்பாதைக்கு போகும் குகை போல் இருக்கும். பிற்பாடு மாற்றி அமைத்துவிட்டார்கள் என்று கேள்வி பட்டேன். அந்த குகை போன்ற வழியில் நின்று கொண்டு நானும் அவனும் "மச்சி .. நம்பளைய ஊறுகா ஆக்கிட்டாய்ங்கடா" என்று பேசி கொண்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. இருந்தாலும் அந்த தியேட்டரில் இடைவேளையின் பொழுது விற்க படும் பிரட் பஜ்ஜிக்காக பொறுத்துகொண்டேன்.

இதே போல் கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஸ் சோனா மீனா தியேட்டரில் வந்த பொழுது, படம் பார்க்க துணை வேண்டுமே என்று நண்பனை அழைத்து கொண்டு வந்து வெளியே நிற்க வைத்து விட்டு, முதல் நாள் மதிய காட்சிக்காக அவனுக்கும் சேர்த்து என் காசை போட்டு டிக்கெட் வாங்க போனேன்.

சோனா மீனா தியேட்டரில் சோனா அரங்கிற்கான முதல் வகுப்பு டிக்கெட் தியேட்டரின் இடது பக்கம் இருந்த கம்பி கூண்டு வழியாக போய் டிக்கெட் வாங்க வேண்டும். வரிசையில் பத்தாவது ஆளாக நான் நின்று கொண்டு இருந்தேன். பின்னாடி இருந்து கூட்டம் தள்ள ஒரு அளவிற்கு மேல் சாய முடியாமல், இரண்டு கைகளையும் நீட்டி கம்பிகளை பிடித்து கொண்டு சாயாமல் இருக்க முயற்சி செய்தேன். ஒரு இரண்டு நிமிஷம் நிற்க்கவே கை எல்லாம் பழுத்துவிட்டது. ரொம்ப சோதிக்காமல் சீக்கிரமாக டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

கஷ்ட பட்டு டிக்கெட் வாங்கி நண்பனை கூட்டி கொண்டு படம் பார்க்க போனால், இரண்டாவது காட்சி வருவதற்குள் அவன் தூக்கி விட்டான். படம் முடியும் நேரத்தில் சீனா தானா பாட்டு வரும் பொழுது தான் கண் முழித்தான். இடையில் போட்ட காசு வீணாக போகிறதே என்று அவனை எழுப்ப கெட்ட வார்த்தைகளை சொல்லி முயற்சித்து கொண்டு இருந்தேன்.



அப்பொழுதெல்லாம் சோனா மீனா தியேட்டர் டிக்கெட்டில் சோனா மீனா என்ற பெயரில் இருந்த "னா"வை பழைய மாதிரி கீழ கால் இழுத்து போட்டு இருப்பார்கள் .... பார்க்க நல்லா இருக்கும். 
Related Posts with Thumbnails