Pages

Sunday, December 27, 2015

*கலவை* - {செக்ஸ் ரோபோக்கள், கமல்ஹாசன், Clash of Clans}

இழந்த சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை காப்பாற்றும் நோக்கில் பல்வேறு போர் வியூகங்களை கொண்டு சிறப்பான நான் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்த படையின் துணையுடன் கற்று கொண்ட மொத்த திறமையையும் இறக்கி வைத்து பல பாண்டிய நாடு மற்றும் சேர நாட்டின் கோட்டைகளை  கைப்பற்ற Clash of Clans என்ற ரத்த பூமியில் இறங்கி இருக்கிறேன்.

இது ஒரு பொழப்பு என்று வீட்டம்மணி பார்த்தாலும் அவ்வப்போது தேனீர் தயாரித்து தர சொல்லி இருக்கிறேன்.

புறமுதுகிட்டு படைகள் சில வேளை ஓடி வந்தாலும், மீண்டெழுந்து திரும்ப போய் வெற்றி பெற்று வருகிறேன்.

காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு பண்ணி கொள்ள முடியுமா என்று கேட்கலாம் என்று இருக்கிறேன்.

அலுவலத்தின் தினசரி எட்டு மணி நேர பர்மிஷன் கேட்க போகிறேன். நான் கஷட பட்டு கட்டும் கோட்டையை என் கண்காணிப்பு இல்லாத நேரத்தில் எதிரி படைகள் தாக்கிவிட்டு போகிறார்கள். கண்காணிப்பு எப்பொழுதும் தேவையாய் இருக்கிறது. நான் வெற்றி பெதுவிட்டால், அது நிறுவனத்திற்கு தானே பெருமை. புரிந்து கொண்டு பர்மிஷன் தருவார்கள் என்று நினைக்கிறேன்.

வெற்றி பெற்று விட்டால் நானே ராஜா நானே மந்திரி .

= = = = =
உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் எழுதிய செக்ஸ் ரோபோக்கள் சந்தைக்கு வந்துவிட்டன கவிதையை பெருங்களத்தூர் அரசு நூலகத்தில் அமர்ந்து தெருவில் கட்டபட்டு இருக்கும் ஒலிபெருக்கியின் மூலம் வரும் அய்யப்பன் பாட்டு சத்ததிற்கு இடையில் படித்து கொண்டு இருந்தேன் ... கவிதை நன்றாக இருந்தது.

ஆனால் பிரம்மச்சரியத்தை போற்றும் அய்யப்ப பாடலை காதுகளில் கேட்டு கொண்டே இச்சை தணித்து கொள்ளும் விதங்களை பற்றிய கவிதையை படித்தது வேடிக்கையாக தான் இருந்தது.

யாரோ ஒருவர் முகநூலில் குமுதம் பத்திரிகையில் நர்சிம் எழுதிய நளினியக்கா சிறுகதை பாராட்டி எழுதி இருந்தார். ஆவல்கொண்டு பெருங்களத்தூர் அரிமா சங்க நூலகம் காலையில் திறந்த உடன் முதல் ஆளாக போய், குமுதத்தை தேடி எடுத்து படித்தேன். படித்த பிறகு ஒரே ஒரு கேள்வி தான் மனத்தில் தோன்றியது. இதில் பாராட்டும்படி எதை அவர் கண்டார் ???

நர்சிம் எழுதிய அய்யனார் கமாவில் அருமையாக முத்து முத்தாக மூன்று சிறுகதைகள் படிக்க கிடைக்கும். இந்த நளினியக்கா கதை அய்யனார் கமா கதையின் கால் தூசிக்கு கூட இல்லை. 

= = = = =
கமல்ஹாசன் அவர்களை சுற்றி வரும் பேச்சு இது, எத்தனை பேர் கேள்விபட்டு இருப்பார்களென்று தெரியவில்லை.

அவரது அபூர்வ சகோதரர்கள் படத்தில் ராஜா கைய வைச்சா அது ராங்கா போனது இல்ல என்ற பாடல் அப்பொழுது பெருங்களத்தூரில் இருந்த ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் எடுக்கபட்டது. படம் வெளியான சில வருடங்களிலேயே அந்த நிறுவனத்தை இழுத்து மூடி விட்டார்கள். அப்படி மூடபட்டதற்கு கமல்ஹாசன் பட பாடல் அங்கு எடுக்கபட்டதே காரணம் என்று இன்று வரையில் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் சில.

ஆனால் உண்மையில் அப்பொழுது முன்னுக்கு வந்து கொண்டு இருந்த பிரபல கார் கம்பெனி ஒன்று தொழிற்சங்க பிரச்சனையை மூட்டிவிட்டு தனது நிறுவன கார்களின் விற்பனையை மேம்படுத்தி கொண்டதாக சொல்கிறவர்களுக்கும் இருக்கிறார்கள்.

பிறகு அந்த நிறுவனம் எந்த வகையான காரின் விற்பனைக்காக அதனை செய்ததோ, அந்த கார் வகையின்  உற்பத்தியை கொஞ்ச வருடங்களுக்கு முன்வு நிறுத்தி கொண்டது.

= = = = =
" மாம் கர்மாணி லிம்பந்தி மே கர்ம- லே ஸ்ப்ருஹா இதி மாம் யோ ()பி ஜானாவதி கர்மபி ர் பத்யதே " - பகவத் கீதை

என்னை பாதிக்கும் செயல் எதுவும் இல்லை; என்னைப் பற்றிய இவ்வுண்மையை அறிபவனும் செயல்களின் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.

படித்ததில் பிடித்தது.

= = = = =
பொழுது போகாமல் பாகிஸ்தான் சிறுகதைகள் வாசிக்க ஆரம்பித்தேன்.

வாசித்த வரையில் ஃப்ரூக் ஸர்வர் எழுதிய ஓநாய் மற்றும் இஸ்மாயில் கௌஹர் எழுதி அப்பா ஆகிய கதைகள் மிகவும் பிடித்து இருந்தது.

ஓநாய் கதையில் பாகிஸ்தானிய  சமூகம் பற்றி கேள்வி கேட்பதாய் இருக்கிறது. மதம், சடங்கு ஆகிய வரையறைகளுக்கு மக்கள் தங்களை அடக்கி வைத்திருப்பதை குறியீடுகள் மூலம் சொல்கிறது.

அதே போல் அப்பா கதையில் பாகிஸ்தான் கிராமிய பஞ்சாயத்தின் கொடூரமான முகத்தை காட்டுகிறது.

வெளியீடு - சாகித்திய அகாதெமி
விலை - 220ரூ.


குறை - ஐம்பது ஆண்டுக்காலத்தில் வெளியான பாகிஸ்தானிய சிறுகதைகளின் தொகுப்பு இது. ஒரு கதையும் எந்த ஆண்டு வெளியானது என்பதையும் போட்டு இருந்தால் அந்நாட்டில் நிகழ்ந்த சமுதாய மாற்றத்தை தெரிந்து கொண்டு இருக்கலாம். 

Saturday, December 26, 2015

இளையராஜா இசை - மயிலிறகு மருந்து

அன்று ஒரு அற்புதமான நாள் ....

மதியம் முக்கிய வேலையாக அலுவலகத்தில் இருந்து, வழியில் இறக்கி விடுவதாக சொன்ன நண்பனோடு பைக்கில் நுங்கம்பாக்கம் சென்று கொண்டு இருந்தேன்.

போகும் வழியில் அவன் இளையராஜா இசையமைத்த தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலே என்ற பாடலை பாடினான். எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் நானும் சேர்ந்து பாடினேன். மதிய வெயில், போக்குவரத்து நெரிசல், வாகன சப்தங்கள் என்று எதுவும் எங்களை பொருட்படுத்தவில்லை. எதோ ஒரு ஞாயிறு காலை சொந்த ஊரில் மார்கழி குளிரில் நடந்தால் கிடைக்கும் இன்பத்தை உணர்ந்தேன்.

"மச்சி உனக்கு இளையராஜா பாட்டுன்ன பிடிக்குமாடா ??" என்று கேட்டேன்.

அதற்கு அவன் "மாமாஆ பிடிக்குமா ..... இளையராஜா பாட்டுன்ன உயிரு ... நைட் ரூம்ல இளையராஜா எம்பித்ரீய போட்டுட்டு கேட்டுகிட்டே இருப்பேண்டா .... சில பாட்ட கேக்குறப்ப அழுதுருவேன் ...." என்று சொல்லி கொஞ்சம் நேரம் கழித்து ..." ஏழர வருஷ லவ் மச்சீ .... மறக்க முடியல .... காசு இல்லன்னு சிங்கப்பூர் மாப்பிள்ளைய கட்டிகிட்டு போயிட்டா ..."

அதுக்கு நான் "ஏழர வருஷம் அதான் ஏழராகிருச்சு".

வண்டி நந்தனத்தை கடந்து கொண்டு இருந்தது, அப்பொழுது நான் "மச்சீ உனக்கு இந்த பாட்டு பிடிக்குமா ..." என்று கேட்டுவிட்டு சிட்டுக்குருவி படத்தில் வரும் என் கண்மணி உன் காதலி இள மாங்கனி என்ற பாடலை பாடினேன். உடனே அவனும் சேர்ந்து பாடினான்.

பாடிவிட்டு "மச்சீ அதவிட மௌன ராகத்துல வருமே மன்றம் வந்த தென்றலுக்கு  பாட்ட மட்டும் எத்தன ஆயிரம் வாட்டி கேட்டு இருப்பேன்னு தெரியல ..." என்று சொல்லியபடி அந்த பாடலின் இசை கோர்வையை பாடி காட்டினான்.

பிறகு பைக்கை ஒரு டீ கடை பக்கம் நிறுத்திவிட்டு "மச்சீ ஒரு சிவகுமார் படம் வருமே ... அதுல கூட ஒரு பொண்டாட்டிய இன்னொருத்தன் பைக் தள்ளிகிட்டு போவான் ... அப்ப ஒரு பாட்டு வருமே ...." வாங்கிய சிகரெட்டை பற்ற வைத்து இழுத்து புகைவிட்ட படி ..... "ஆங் ரோசாப்பூ ரவிக்கைக்காரி .....எண்ணுள்ளில எங்கோ ஏங்கும் கீதம் பாட்டு சான்ஸே இல்ல .. அப்படி ஒரு மியூசிக் ...நைட்டு கேட்டுகிட்டே இருப்பேன் ...தூக்கம் வராது ...கேட்டுகிட்டே இருக்க தோணும்"

வாங்கிய தேநீரை சுவைத்தபடி நான் "மச்சி பன்னீர் புஷ்பங்கள் ஒரு பாட்டு பூந்தளிர் ஆடன்னு ...கேக்குறப்ப எல்லாம் ஸ்கூல் லைஃப்ப ரொம்ப மிஸ் பண்ணுவேண்டா ...."

அவன் "நான் என் உயிர ஒரு பாட்டுக்காக கொடுக்கலாமுன்னு இருக்கேன அது ஜானி படத்துல என் வானிலே ஒரே வெண்ணிலா  பாட்டுக்கு தான் மச்சான்.... என்ன மியூசிக்கு ...என்ன வாய்ஸ் ....."

இப்படி பேசி கொண்டு டீ கடையிலிருந்து கிளம்பும் பொழுது மேற்கொண்டு அலுவலக வேலையை திங்கட்கிழமை அன்று பார்த்து கொள்ளலாம் என்று இருவரும் கிளம்பி பெசன்ட் நகரில் அமைதியான ; மரங்கள் சூழ்ந்த இடத்தில் அது தரும் நிழலில் நின்று கொண்டு நண்பனது கைபேசியில் இருந்த இளையராஜா பாடல்களை கேட்டு கொண்டு அதனை பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டோம்.

முப்பது வயது வரையில் ஆரவாரமான இசை, ஆர்ப்பாட்டமான இசை, துள்ளல் இசை போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் முப்பதுகளில் இது தான் வாழ்க்கை என்ற புரிதல் வரும் பொழுது இளையராஜாவின் பாடல்கள் பிடிக்க ஆரம்பிக்கிறது. இளையராஜாவின் இசை தினசரி வாழ்க்கையில் காயம் பட்டு இருக்கும் மனதிற்கு மயிலிறகின் மூலம் தடவ படும் மருந்தாக இருக்கிறது. 

Related Posts with Thumbnails