Pages

Saturday, January 16, 2016

சுஜாதா : மூன்று புத்தகங்கள் போதும்

மூன்று புத்தகங்கள் போதும் சுஜாதாவின் ஆளுமையை புரிந்து கொள்ள .....

அவை கணையாழியின் கடைசி பக்கங்கள், ஏன்? எதற்கு? எப்படி?, ஸ்ரீரங்கத்து கதைகள் (தேவதைகள்). 

ஸ்ரீரங்கத்து கதைகள் ..... 2002-2003 வாக்கில் விகடனில் வாராவாரம் ஒரு சிறுகதை வந்துகொண்டு இருந்தது. மெயின்கார்ட்கேட், ஸ்ரீரங்கம் என்று அப்பொழுது நான் பெரிதும் சுற்றி கொண்டு இருந்த பகுதிகளை சார்ந்து கதைகள் இருந்ததால் தொடர்ந்து வாசித்து வந்தேன். அந்த கதைகளில் சொல்லபட்டு இருந்த எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறேன் என்பதால் ஒரு கட்டத்தில் அந்த கதைகள் மூலம் 1940-1950களின் திருச்சியில் வாழ ஆரம்பித்தேன். 

ஒவ்வொரு கதையை படிக்கும் பொழுதும் மனதிற்குள் அத்தனை கோடி பரவசம். எதோ எனக்கு ஏற்பட்டதை எல்லாம் எப்படியோ தெரிந்து கொண்டு சுஜாதா எழுதுகிறார் என்று நினைத்து கொள்வேன். 

பிறகு வேலைக்கு சேர்ந்து வாங்கிய முதல் சம்பளத்தில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. 

சில வருடங்களுக்கு முன்பு விடுமுறைக்கு வந்த அண்ணன் கேட்கவே தந்துவிட்டேன். நேற்று எதோ ஞாபகம் வந்து இந்த புத்தகத்தை தேடினேன்... கிடைக்காமல் போகவே நான் பெரிதும் கலவரமடைந்ததை கண்டு அப்பா அண்ணனது வீட்டில் அதே பெயரில் புத்தகத்தை பார்த்தாக சொன்னார், அண்ணனுக்கு தந்தது ஞாபகம் வந்தது உடனே யார் மூலமாவது அதை கொடுத்து அனுப்ப சொல்லி அண்ணனுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன். 

2011
ஆம் ஆண்டு புத்தக கண்காட்சியில் எல்லோரும் பாராட்டி பேசுகிறார்களே என்று கணையாழியின் கடைசி பக்கங்கள் புத்தகத்தை வாங்கினேன். இதில் ஒவ்வொரு கட்டுரையும் படித்து, பிறகு அதில் சொல்லபட்டு இருக்கும் விஷயங்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கூகிளில் தேடி தேடி படித்தேன். புத்தகத்தை முடித்த பிறகு ஒரே ஒரு கேள்வி தான் மனதிற்குள் எழுந்தது.. எப்படி இத்தனை விஷயங்களை பற்றி தெரிந்து வைத்து இருந்திருக்கார் ???

ஏன்? எதற்கு? எப்படி? .... முதல் பதிப்பு 1992ல் வந்த பொழுதே அப்பா எங்களுக்காக வாங்கி கொடுத்தார். எனக்கும் என் அண்ணனுக்கும் சண்டையே நடக்கும், யார் படிப்பது என்று. அந்த வயதில் அந்த புத்தகத்தை படிக்கும் பொழுது பிரம்மிப்பாக இருக்கும். பள்ளியை விட எனக்கு அறிவியலை சுலபமாக அதிகம் கற்று தந்தது. கால ஓட்டத்தில் அந்த முதல் பதிப்பு எங்கோ தொலைந்து போய் விடவே, கொஞ்ச நாள் முன்பு விகடன் பதிப்பக அலுவலகத்திற்கே போய் வாங்கி வந்தேன். 

1 comment:

Unknown said...

Hello, Im trying to subscribe to your blog. Couldn't find a link to do it.

Related Posts with Thumbnails