Pages

Wednesday, September 27, 2017

ஏதுமற்ற காலத்தில் சினிமா

ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள் முத ஷோ போய் ஏறக்குறைய பத்து வருஷமாகி இருக்கும்.

அது ஒரு பித்து நிலை. இத்தனைக்கும் இப்ப புக் பண்ணி இருக்குற மாதிரி ஆன்லைன் ல எல்லாம் புக் பண்ண மாட்டேன். அப்படி பண்ணவும் வசதி இல்லங்குறது வேற விஷயம்.

அப்ப தங்கிட்டு இருந்த பெருங்களத்தூர் ரூம் ல இருந்து கிளம்பி நேர தியேட்டர் போயிடுவேன். அங்க போய் அடிச்சுபிடிச்சு டிக்கெட் வாங்கி எல்லாம் படம் பார்ப்பேன். முக்காவாசி தாம்பரத்துல இருக்குற நேஷனல், வித்யா தியேட்டர் ல பாப்பேன். இதுல நேஷனல் தியேட்டர் ல அப்ப படம் பாக்குறதுங்குறது இட்லி குண்டா ல இருந்துட்டு வர மாதிரி இருக்கும். எதாச்சு பாட்டு வந்தா வெளில போய் காத்து வாங்கிட்டு வருவேன்.

இப்ப தான் எம்ஆர் தியேட்டர் ல ஏசி எல்லாம் போட்டு டக்கரா இருக்கு. அப்ப எல்லாம் அங்கன படம் பாக்குறதுங்குறது கக்கத்துல கொள்ளி கட்டைய வைச்சுகிட்டு ஒம குண்டத்துல உட்கார்ந்து படம் பாக்குற மாதிரி தான்.

குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் அப்பவே சூப்பரா தான் இருக்கும். ஆனா அங்க போற அளவுக்கு பஸ் டிக்கெட் வாங்க அப்ப எல்லாம் காசு இருக்காது.

இதுல இன்னொரு கூத்து என்னன்ன தாம்பாரத்துல படம் பாத்துட்டு, திரும்பி பஸ் ல வர காசு இருக்காது ... அதனால ரயில் தண்டவாளம் வழியா நடந்து வருவேன். டைம் வீணாகுமேங்குற கவலை எல்லாம் இல்ல. ஏன்ன அவ்வளவு வெட்டியா இருந்தேன். சிம்பிளா வெட்டி ஆபீஸர்.

இப்புடி தான் லீந்னு ஒரு படம்... அந்த படத்துல நடிச்சவங்களே படத்த முழுசா பாத்து இருப்பாங்களானு தெரியாது. அப்புடி ஒரு மச மொக்கையான படம். படம் தான் அப்புடின்ன தியேட்டர் ஸ்கிரீனும் செம மொக்கையா இருக்கும். எதோ புட்பால வைச்சு படமுன்னு போயிட்டேன். படத்தோட ஹீரோ சிபிராஜ்ன்னு படம் முடிஞ்சு வெளில வந்து போஸ்டர பாத்து தான் தெரிஞ்சு கிட்டேன்.

இதவிட காவிய சோகம் என்னன்ன படத்த பத்தி பேசுறதுக்கு ஒரு ஆள் கிடைக்க மாட்டாங்க. அப்புடியே கிடைச்சாலும் படம் நல்லா இருக்கான்னு கேட்டுட்டு ...சரி மச்சான் ஞாயித்து கிழம என் ஃபிகரோட போறேன்னு சொல்லி கடுப்படிப்பாங்க.

வேலை கிடைக்கலையேன்னு சோகம் இருந்தாலும் ஃபிகர் கூட இல்லையேன்னு அழுகாச்சி + கடுப்புஸ் + சோகமா இருக்கும். அப்ப எல்லாம் ஜிலேபி, லட்டு வகையறா ஃபிகர்ஸ் எல்லாம் கனவுல கூட பாக்க முடியாத அளவுக்கு பஞ்சத்துல இருந்தேன். இண்டர்வியூன்ன மட்டும் தான் சிட்டிக்குள்ள போவேன். அதுவும் காசு மிச்சம் பண்ண ஒரே நாள் ல மூணு நாலு இண்டர்வியூ போவேன். தனி தனியா போனா காசு அதிகமாகுமே என்குற கவலை தான்.

அதனால இந்த மாதிரி ஜிலேபி, லட்டு ஃபிகர்ஸ எல்லாம் சினிமாவுல மட்டும் தான் பாக்க முடியும். அந்த மாதிரி லட்டு ஜிலேபிய எல்லாம் இந்த மாதிரி மட்டமான ஸ்கிரீன் ல பாக்குறப்ப தும்ப பூவுல தூக்கு மாட்டிட்டு தொங்கிறலாம் போல இருக்கும்.

ம்ம்ம்ம்ம்

அது எல்லாம் ஒரு காலம்.

Friday, September 22, 2017

மடலேறுதல் - திருவள்ளுவர் - காமம் - திருக்குறள்

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு"

அட அட .... மல்லிகை பூவும் நெய் முந்திரி அல்வாவும் வாங்கிட்டு போன சாயங்கால வேளையில் தான் திருவள்ளுவர் இதைய எழுதி இருக்கணும்.

இன்னொன்னு

நாணுத் துறவுரைத்தல் ல

"காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி"னு ஒரு குறள் வருது.

இதுல மடலேறுதல்னு ஒண்ணு வருது. இந்த மடலேறுதல்ன்ன என்ன ராத்திரி நேர பூஜைக்காக தலைவன் தலைவியிடம் மல்லிகை பூவும் நெய் முந்திரி அல்வாவும் கொடுத்தும் எந்த சிக்னலும் வரலன்ன உடம்பு முழுக்க சாம்பல பூசிகிட்டு யாரும் டச் கூட பண்ணாத flowers மாலைய மாட்டிகிட்டு சின்ன தம்பி படத்துல எனக்கு எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்ன்னு வர மாதிரி தலைவி பெயர தெரு முழுக்க சொல்லிட்டு போறர்தாம். இந்த மாதிரி பண்ணிருவேன்னு தோழி மூலமா தலைவிக்கு தலைவன் தூது விடுறத பத்தி இந்த குறள்.

இந்த மடலேறுதல பத்தி படிச்சவங்க நெட்ல எழுதி இருக்குறத தேடி பாத்தப்ப ... இந்த மடலேறுதல் ரொம்ப indecentயான விஷயமா பாத்து இருக்காங்க ...ஸோ இதைய லேடீஸ் யாரும் பண்ணினது இல்லன்னு போட்டு இருக்காங்க. அப்ப ஆண்டாள் பண்ணினது எல்லாம் என்னவாம் ???

But அது எல்லாம் பக்தி side வரர்தால ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்ல.

ஆனா தாடிகாரன் இதைய இன்னொரு குறள் ல

"கடலன்ன காமம் உழ்ந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல்"ன்னு சொல்லுறாரு.

அதாகபட்டது எவ்வளவு ஃபீலிங்க்ஸ் வந்தாலும் லேடீஸ் யாரும் மல்லிகை பூவும் நெய் முந்திரி அல்வாவும் வாங்க மன்னிச்சூ குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்க போனது இல்லன்னு சொல்லுறாப்ல. 

ஆனா தாடிகாரன் ... திருவள்ளுவ தாத்தா சரியான ஆணாதிக்கவாதியா இருந்திருப்பாரு போலனு தோனுது இந்த குறள படிக்குறப்ப

" இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு "

தலைவி தோழிகிட்டக்க சொல்லுறாங்களாம் தலைவன் என்கிட்ட மேட்டர் பண்ண பண்ண தான் என்மேல ரொம்ப அன்பா இருப்பாப்லன்னு.

அந்தகாலத்துல effectiveயான மாதர் சங்கம் இல்லன்னு தெரியுது. இல்லாட்டி வாசுகி பாட்டி திருவள்ளுவர் பொக்குன்னு மூக்குல குத்தி இருக்க மாட்டாங்க போல.

Sunday, September 17, 2017

வில்லேஜ் விஞ்ஞானிஸ்

ஊருக்கு ஊர் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி இருக்க தான் செய்றாங்க....

அதிலும் இந்த மாதிரியான விஞ்ஞானிஸ் கேரளா கம்யூனிஸ்ட் கட்சில இருக்குறது தான் வேடிக்கையா இருக்கு.

கேரளா ஜப்பான் நாட்டு மழை குறித்தான மர்மத்தை உலகிற்கு சொன்ன பி.வி.அன்வர் பற்றிய மீமீக்களை ரத்தம் - தக்காளி சட்னி கோட்பாட்டில் நமது போராளிஸ் விட்டுவிட்டதின் மர்மம் புரியவில்லை.

அதாகபட்டது தோழர் அன்வர் அவர்கள் ஜப்பானில் மழை பெய்ய காரணம் கேரளா நீர் நிலைகள் தான், அதனால் தான் ஜப்பான் கேரளாத்திற்கு நிதி உதவி செய்கிறது என்ற உண்மையை கண்டுபிடித்து சொல்லி இருக்காரு. இதை படிக்குறப்ப நடுராத்திரில நான் ஏண்டா சுடுகாட்டுக்கு போகணும் என்ற காமெடி தான் ஞாபகத்துக்கு வருது.

இப்படியாக நிதி உதவி செய்து கேரளாத்தில் இருக்கும் நீர் நிலைகளின் மூலம் உருவாகும் மேகங்களை ஊதி ஊதி ஜப்பான் பக்கம் அனுப்பி அங்கு மழை பெய்ய வைச்சுறார்களாம் ஜப்பானிய இல்லுமினாட்டிஸ்.

கொஞ்ச முன்னாடி தான் கேரளாவுல cloud seeding முறைய கொண்டு வர போறாங்கனு படிச்சேன். எனக்கு தெரிஞ்சு இந்த cloud seeding முறைய இந்தியாவுல முத முறையா தமிழ் நாட்டுல தான் 1980கள்ல பஞ்ச வரட்சிய போக்கினாங்க. இதைய செயல் படுத்தினதுல எம்.ஜி.ஆர் பங்கு முக்கியமானதூ.

உலகம் முழுக்க இந்த மாதிரியான சுற்றுச்சூழல் விஷயங்களுக்காக ஜப்பானிய லாபமில்லா நிறுவனமான JFGE (JAPAN FUNDING FOR GLOBAL ENVIRONMENT) கொடுக்குது. கேரளாவுல குடிநீர் விநியோகத்துக்காக funding பண்ணி இருக்காங்க.

கொஞ்ச நாள் முன்னாடி சென்னை நன்மங்கலம் காட்டோட ஒரு பக்கத்த அழிச்சு ஆபீஸ் போட்டது இதே நிறுவனத்த சேர்ந்தவங்க தான்னு நினைக்குறேன்.

பிறவு முக்கியமா இப்ப இந்தியாவோட பிரபல நிறுவங்கள்ல தொடர்ந்து முதலீடு பண்ணிட்டு வர SOFT BANK கும் ஜப்பானிய நிறுவனம் தான்.

ஒன்னும் ஒன்னும் இரண்டுங்குற அளவுக்கு எதோ நடக்குதுனு புரியுது.

Wednesday, September 13, 2017

துப்பறிவாளன்

ஒரிஜினல் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் என்பது ஆர்தர் கானன் டயல் எழுதிய 56 சிறுகதைகளும் 4 நாவல்களையும் அடங்கியது. இது தவிர ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் வாட்சன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து பல எழுத்தாளர்கள் பல கதைகள் எழுதி இருக்கிறார்கள்.

இது எல்லாம் இப்படி இருக்க

தமிழில் ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் சாயலில் ஒரு படம் என்று சொல்லி இருக்கும்  மிஷ்கின் அதில் எந்த கதையை கள்ள பிரதியெடுத்திருப்பார் என்பதை யூகிக்க முடியவில்லை. இதில் விஷால் வேறு.

இருவரது டிராக் ரெக்கார்ட்டும் அப்படி ஒன்றும் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை.

மிஷ்கினின் முகமூடி படத்தை யாருன் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். படத்திலிருந்து எதையுன் எதிர்பார்க்க வேண்டாம், இது ஒரு எம்.ஜி.ஆர். படம் போலிருக்கும் என்று கடைசி நேரத்தில் பல்டீ அடித்தார்.

ஏற்கனவே ரசனை கோழி இந்த வாரம் தான் ஜாதகம் குறித்து கூவிய புண்ணியத்தில் விக்ரம் வேதாவும், விவேகமும் பார்த்தேன். இனிப்பை தொடர்ந்து கசப்பை உண்டது போல் ஆகிவிட்டது. விக்ரம் வேதாவை மட்டும் பார்த்து இருக்கலாமென்று கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமாய் இப்பொழுது தோன்றுகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே பல்ப் நாவல்கள் மூலம் பல துப்பறியும் நாயகர்கள்  அறிமுகமாகியுள்ளார்கள். அவர்களது சாயம் கொஞ்சம் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்தில் வந்தால் கூட அவ்வளவு தான்.

மேலும் துப்பறியும் இலக்கியம் என்பது தமிழ் நாட்டில் இன்னும் பால்வாடியை கூட தாண்டவில்லை. அதனால் படம் எப்படி வர போகிறது என்று தெரியவில்லை.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் எல்லாம் 140 வருடங்களுக்கு முந்தைய இலண்டனில் நடப்பது போல் எழுத பட்டு இருக்கும். அந்த கதாப்பாத்திரத்தை எவ்வாறு இந்த நவீன யுகத்தில் மிஷ்கின் பொருத்திருப்பார் என்று யோசித்து பார்க்க முடியவில்லை.

Saturday, September 9, 2017

கைரேகை திருட்டு / ஆதார் எண் / அமெரிக்க SSN

ஒரு புகைபடம் போதும் உங்களது கைரேகையை பிரதியெடுக்க. அதுவும் நீங்கள் ஃபேஸ்புக்கில் போடும் செல்ஃபிகளில் கை தெரிந்தால் அதை வைத்தே உங்கள் கைரேகையின் போலியை தயரிக்க முடியும்.

இதை மேலும் எளிமை படுத்த, மேம்படுத்தபட்ட HD கேமராக்கள் கொண்ட மொபைல் போன்கள் எல்லோரிடமும் கிடைக்கிறது.

இதை பற்றி கேள்விபட்ட பொழுது, இது சாத்தியமா என்று சோதித்து பார்க்க எனது கை விரல்களை புகைபடம் எடுத்து பார்த்தேன்.... ரேகைகள் அவ்வளவு துல்லியமாக தெரிந்தன. இதை வைத்து மெழுகில் எனது கைரேகைகள் பிரதி எடுக்க முடியும். அதனை வைத்து தவறான காரியங்களுக்கு பயன் படுத்த முடியும்.

இது போக அதிநவீன பிரிண்டர்களும் இப்பொழுது சந்தையில் கிடைக்கிறது.

இது போன்ற குற்றங்கள் நடைபெற இந்தியா இன்னும் அந்தளவிற்கு முன்னேறவில்லை என்றாலும் ..... இன்றைய நிலவரப்படி எல்லாவற்றுடனும் ஆதார் எண்ணையை இணைக்க வேண்டி இருப்பதால் .... எதிர்காலத்தில் ஒரு மாபெரும் பொருளாதார குற்றம் நடக்க வாய்ப்புள்ளது.

ஜெர்மனியில் நடந்த Hackers Conferenceல் சமூக தளத்தில் பகிரபட்ட போட்டோவில் இருந்து கைரேகை / கண் கருவிழி படலத்தின் போலி பிரதிகள் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி எல்லாம் விவாதிக்க பட்டன, இவை அனைத்தும் யூ டியூப்பில் பார்க்க கிடைக்கிறது.

இந்தியாவில் இப்பொழுது தான் கைரேகை மூலம் அடையாளம் காணுதலை நடைமுறை படுத்தி கொண்டு வருகிறார்கள். அதனால் இது போன்ற குற்றங்கள் இந்தியாவில் நடக்க இன்னும் பத்து வருடங்களாவது ஆகும்.

இந்த வாரத்தில் அமெரிக்காவில் எல்லோருக்கும் கொடுக்க படும் Social Security Numberகளை கொண்ட Data Base systemயை திருடி இருக்கிறார்கள். இது மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒன்று என்று நம்ப பட்டொன்று. இந்த நம்பரை வைத்து தான் ஒருவர் வங்கி கடன் பெற முடியும். இது திருடு போய் இருக்கிற பொழுது, திருடிய நபர் இந்த தகவல்களை வைத்து கடன் பெற முடியும். சம்பந்தப்பட்ட நபருக்கும் தெரிய போவதில்லை. என்ன ஒன்று இதில் ஆதார் போல் கைரேகை, கண் கருவிழி படல பதிவு எல்லாம் சேர்க்க படவில்லை. அமெரிக்கா அரசாங்கம் நினைத்தால் அனைத்து SSN சோஷியல் செக்கியூரிட்டி நம்பர்களையும் ரத்து செய்து விட்டு புது எண்களை விநியோகித்துவிட முடியும்.

ஆனால் கைரேகை, கண் கருவிழி படல பதிவுடன் இணைக்க பட்ட AADHAAR DATA BASE  திருடு போனால் என்னவாகும். புது எண்களை கொடுக்க முடியாது இந்திய அரசாங்கத்தால், ஏனென்றால் திருடு போனது மாற்றவே முடியாத கைரேகை, கண் கருவிழி படல பதிவுகள்.

Wednesday, September 6, 2017

தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணன் கோயில்

தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணன் கோயில்.

சோழர் கால கோயில்கள் என்று பார்க்கும் பொழுது நாம் அவசியம் கர்நாடகாவிலுள்ள மைசூர் வரையில் இருக்கிற சோழர்கள் கட்டின கோயில்களை மற்றும் சீரமைத்த கோயில்களை பார்த்தல் வேண்டும்.

ஆதி சோழர்கள் விவாசாயத்திற்கான நீர் பாசனத்திற்காக மைசூர் (காவேரி பிறப்பிடம்) வரை போர் புரிந்துள்ளார்கள். அந்த காலத்தில் அணைகளில்லாத பொழுதும் ஒரு நாட்டை பழி வாங்க வேண்டும் என்றால் நீர் விஷம் கலந்துவிடுவார்கள். ஆதலால் சோழர்களுக்கு மைசூர் தேவை பட்டது. ஹோய்சாலர்களுக்கும் சோழர்களும் போருறவு இருந்ததை அறியலாம்.

இந்த நவநீத கிருஷ்ணன் கோயில் ஆதி சோழர்களின் ஒருவரான ராஜேந்திர சிம்மா அவர்களால் 4ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இங்கு ராமப்ரமேயரும் நவநீத கிருஷ்ணரும் எழுந்தருளி இருக்கிறார்கள். நவநீத கிருஷ்ணன் தவிழ்ந்தபடி கையில் வெண்ணை உடன் காட்சி தரும் அழகே அழகு.

அதுவும் நாங்கள் போன பொழுது ஒரு பெண்மணி நவநீத கிருஷ்ணன் புகழ் பாடல்களை பாடிகொண்டு இருந்தார். தெய்வீக ராகம் என்றால் அது தானோ என்றெண்ணும் வகையிலிருந்தது.

மேலும் குலோத்துங்கனின் வைணவர்களுக்கு எதிரான செயல்களில் இருந்து தப்பித்த  இராமானுஜர் ஹோய்சாலப் பேரரசின் ஆதரவு தேடி போன பொழுது, வழியில் இந்த கோயிலில் தங்கியதாக சொல்கிறார்கள். முக்கியமாக சூலத்தின் மேல் இராமானுஜர் அமர்ந்திருப்பது இருக்கும் சிலையை குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகவல் பகிர்ந்தால் நலம்.

இந்த கோயிலை குறிந்து சொல்ல படும் Folklore ஒன்று ..... ஒரு அரசனின் குழந்தையை யாரோ கை வேறு கால் வேறாக வெட்டி போட்டு விட்டார்களாம். பிறகு அந்த அரசன் நவநீத கிருஷ்ணனை வேண்டி பாடிய பொழுது இறந்து போன குழந்தை உயிருடன் மண்ணில் இருந்து தோன்றி தவிழ்ந்து வந்ததாம்.

சிற்பங்கள் சொல்லி கொள்ளுமாறு எதுவுமில்லை இக்கோயிலில். பாடல் பெற்ற ஸ்தலமாயென்று தெரியவில்லை. ஆழ்வார்கள் வழிபாடு இருக்கிறது.

மண்ணில் இருந்து குழந்தை தோன்றியதால் மண்ணூர் என்று பெயர் வந்ததாம். பிறகு அது மரலூர் ஆகி ... பின் ஏதெதோ ஆகி இப்பொழுது தொட்டமல்லூர் என்ற பெயரில் வந்திருக்கிறது.

குழந்தைகளின் நோய் தீர்வு, குழந்தை வரம் ஆகியவற்றின் வழிபாட்டுக்கு புகழ்பெற்றது.

இந்த தொட்டமல்லூர், சென்னபட்ணா வட்டத்திற்கு இதையெல்லாம் விட .... புகழ்பெற்ற நித்தியானந்தா பீடம் இந்தனருகில் தான் அமைந்து இருக்கிறது.

பெங்களூர் - பெண்களூர்

ஒரு பியூட்டி ஆண்ட்டி ஆன, அத பாத்து மனசு எவ்வளவு பாடுபடுமோ அவ்வளவு கஷ்டமா போயிருச்சு பெங்களூர பாக்குறப்ப.

முன்னம எல்லாம் பெங்களூர் பக்கம் உள்ள வந்தாலே ரயில் ல இருக்குற எனக்கு பல்லு குளிர்ல அமெரிக்காவுக்கு தந்தி அடிக்க ஆரம்பிச்சுரும். ஆனா இப்ப குளிர் இல்ல. மரங்கள் இல்ல ...பசுமை இல்ல.

ஆனா ஒரு விஷயத்துல பசுமை இருக்கு.

எழுத்தாளர் கண்ட அதே பெண்களூர் தான் இப்ப அதிக படியா இருக்கு. தேங்க்ஸ் டூ ஐடி இண்டஸ்ட்ரி.

கமர்ஷியல் ஸ்ட்ரீட் ல நிக்குறேன் .... அத்தனை கலர்ஸ் ... பியூட்டிஸ். ஆடி தள்ளுபடிங்குறத துணி விலைக்கு தான் தந்து பாத்து இருக்கேன். ஆனா பெண்கள் போட்டு இருக்குற துணிக்கே தள்ளுபடி தந்திருக்காங்க. அழகோ அழகோ. பெங்களூரில் காணாமல் போன பசுமை, குளிர்ச்சி எல்லாத்தையும் அங்கன பாத்தேன்.

ஒரு வெளிநாட்டு அம்மணி தம் பத்த வைச்சுட்டு ஒரு இழுப்பு இழுத்துகிட்டு புகைய விட்டுட்டே போனாங்க.

"நேக்கு சாப்பிட போளி வாங்கிண்டுவா"னு காதுல விழவும். கண்டிப்பா இவங்க ஒரு அக்ரகார பியூட்டியா இருப்பாங்கன்னு திரும்பி பாத்தா தொடை, கை, தோள்பட்டை தெரிய ஒருத்தங்க நின்னுட்டு இருந்தாங்க.

வாலிப வயசுலனொரு கலர பாத்துற மாட்டோமான்னு இருப்போம்.ஆனா பல பட்டினி கிடந்து பசிச்சவனுக்கு பிரியாணி பொட்டலத்துக்கு பதிலா பிரியாணி அண்டாவே கிடைச்சா எப்புடி இருக்குமோ அப்புடி இருந்துச்சு.

உடம்புக்கு மட்டும் வயசாகிடுச்சூ.

சுத்திட்டு அங்கன இருக்குற Woody's உணவகத்துல சாப்பிட போனோம். அங்கன நான் கேட்ட சீரோட்டி & மத்தூர் வடையும் இல்லன்னு சொன்னாங்க. வீட்டம்மணி சரி நாளைக்கு நான் கத்துட்டு செஞ்சு தரேன்னு சொன்னாங்க.

ஏற்கனவே சரியான துணிஸ் நகைஸ் எல்லாம் யானை விலை குதிரை விலை சொல்லுறாங்க கடுப்பூஸ் ல இருந்த வீட்டம்மணிய cool பண்ணுறதுக்காக ஐஸ் வைக்கலாமுன்னு " ஏங்க இங்க இருக்குற எல்லா பொண்ணுங்களையும் விட நீங்க தான் ரொம்ப அழகா இருக்கீங்க"னு சொன்னேன்.

சரி ... கூடுதலா இரண்டு பாயிண்ட் வாங்க போறோமுங்குற சந்தோஷத்துல இருந்தேன்.

ஆனா

"பக்கி ... அப்ப எல்லா பொண்ணுங்களையும் பாத்துட்டே தான் வந்திருக்க..." ன்னு சொன்னாங்க.

இந்த ஏழர நாட்டு சனி ஏழர நாட்டு சனின்னு சொல்லுவாங்க .... அது மொத்தமா என் நாக்குல தான் குத்தகை எடுத்து உட்காந்துட்டு இருக்கு போல.

புருஸ் லீ படமா நாள் முடிய போகுதுன்னு பயத்தோட சாப்பிட்டுட்டு வீடு பாத்து கிளம்பிட்டோம்.

கடைசில இரண்டு புக் வாங்கிக்க கொடுத்த பர்மிஷன கேன்சல் பண்ணிட்டாங்க. ஆனா சொன்ன படி மத்தூர் வடை வீட்டுக்கு வந்து நைட்டே பண்ணி கொடுத்தாங்க. சீரோட்டி மதியம் பண்ணி தரேன்னு சொல்லிட்டாங்க. லட்டு, பாதாம் பால் இரண்டு இப்ப ரெடி ஆகிருச்சூ.

டாக்டர் அனிதா - நீட் தேர்வு - தற்கொலை

அடுத்த வேளை சோற்றுக்கு பிரச்சனை இல்லாத குடும்பத்தில் பிறந்துவிட்டு இந்த வருஷம் இல்லாடி அடுத்த வருஷம் எழுதிக்கலாம் என்று சொல்ல கூடிய நிலைமையில் சகோதரி டாக்டர் அனிதாவின் குடும்பம் இல்லை.

டாக்டர் அனிதாவின் பெயர் வழக்கு பதிவேட்டில் இல்லையே என்று சொல்கிறவர்களுக்கு ... எனக்கு தெரிந்து 18வயதிற்குள்ளவர்கள் எந்த சட்டரீதியான விஷயத்தையும் தனிச்சையாக இந்திய சட்டத்தின் படி செயல் பட முடியாது. அவருக்காக அவரது பாதுகாலவர்  தான் வழக்கை நடத்த முடியும்.

காதல் பிரச்சனையாக இருக்கும் என்று சொல்கிறவர்களே .... அந்த குழந்தையின் டிவி பேட்டியை கேட்டு பாருங்கள். அவளது காதல் எல்லாம் டாக்டர் ஆக வேண்டும் என்ற தனது கனவின் மேல் தான்.

இதை எல்லாம் அரசியல் ஆகாதீங்க சொல்கிறவர்களுக்கு.... அப்ப வேற எதை அரசியலாக பார்க்க வேண்டும் ??? ஏதாவது அட்டவணை இருக்கிறதா ??? மாட்டிறைச்சியை வைத்து அரசியல் செய்து ஒரு கொலையை செய்து இருந்தார்களே ... அப்பொழுதெல்லாம் என்ன வாசன் ஐ கேரில் சிகிச்சைக்கு போய் இருந்தீர்களா ???

தற்கொலை ஒரு முடிவில்லை ... ஆமாம் நானும் ஏற்றுகொள்கிறேன். ஆனால் எண்ணம் சுவாசம் எல்லாம் டாக்டர் கனவாக வாழ்ந்த, வெளி உலகம் அறியாத குழந்தைக்கு என்ன தெரியும் ??? இந்த முடிவை எடுக்கும் முன் என்னவெல்லாம் மன கஷ்டத்தை அனுபவித்திருப்பாள். தான் டாக்டரானால் கூலி தொழிலாளியான தந்தையை உட்கார வைத்து நிம்மதியாக இருக்க வைக்க வேண்டும், தாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசைபட்டு இருப்பாளே ???

தன் குடும்பத்தின் மீது விழுந்த அவமானங்களை எல்லாம் தனது டாக்டர் கனவின் மூலம் போக்கி விட முடியும் என்று கனவு கண்டு இருப்பாரே டாக்டர் அனிதா. அந்த கனவு எல்லாம் நிஜத்தில் நடக்காது உணர்ந்த பொழுது .... அவரது மனத்தில் ஆயிரமாயிரம் அணுகுண்டு வெடித்திருக்குமே ???

ரேஷன் கார்ட், ஓட்டுனர் உரிமை போன்றவை எல்லாம் இந்தியா சுதந்திரமடைந்த நாள் முதல் இருக்கிறது. அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதுவும் எல்லா மக்களும் பயன் படுத்துவது.... அதையையே ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியவில்லை அரசால். பிறகு ஏன் எதற்கு நீட் தேர்வு ???

Examination is itself a elimination process only என்பதை நான் அறியாதவன்  இல்லை. ஆனால் அதற்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வியை எல்லோருக்கும் கொடுத்து இருக்க வேண்டும். அதாவது 6வது வகுப்பு முதல் ஒரே மாதிரி பாட திட்டத்தில் பயின்றிருக்க வேண்டும். அதாவது இன்னும் 6ஆண்டுகள் கழித்து தான் நியாய படி நீங்கள் நீட் தேர்வு நடந்தி இருக்க வேண்டும்.

நீட் தேர்வை பலர் எழுதி இருக்காங்களே என்று சொல்கிறவர்களுக்கு ..... அவர்களுக்கு வேற வழியில்லை நீங்கள் சொல்வதை கேட்டு தானாகணும்.

இத்தனை நடந்தும் கல்வி தந்தைகள் யாரும் வாயை திறக்கவில்லை. நீட் தேர்வால் பயன் பெறுவது அவர்களாக தான் இருக்கும்.

டாக்டர் அனிதா .... நீங்கள் படித்து தான் டாக்டராக முடியவில்லை, அதனால் வார்த்தைகள் மூலமாவது உங்களை நான் டாக்டர் ஆக்கி இருக்கிறேன்.

ஓட்டு போட்ட மக்களுக்காக எப்பொழுது தான் குரல் கொடுப்பார்களோ ??? பிரபல நடிகர்களின் குரலை போல் பேசும் மிமிக்ரி கலைஞர்களை போல் மத்திய அரசின் குரலாகவே இருக்கும் மாநில அரசு சுய குரலின் பேச ஆரம்பிக்குமோ ???

இச் இச் இச்

1997 வரைக்கும் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பக்கம் மாலை 6மணிக்கு மேல எந்த வித வெளிச்சமும் இருக்காது. ஒரே இருள் சூழ்ந்து இருக்கும்.

அப்பொழுது காதலர்கள் ஒருவர் மடியில் இன்னொருவர் படுத்துகொண்டோ அல்லது பக்கத்தில் அமர்ந்து கொண்டோ இச் இச் இச் சத்தங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து கொண்டு இருப்பார்கள். அந்த பக்கமாய் போனால் இந்த சத்தத்தை தவிர்த்து வேறொன்றும் கேட்க முடியாது. இந்த சத்தங்களை கேட்பதற்காகவே கோடை விடுமறைக்கு சென்னை வருகின்ற பொழுது அவ்வப்போது (தினமும்) மெரினா கடற்கரைக்கு போவேன். இருட்டில் ஒன்றும் பார்க்க முடியாட்டியும். காதுகள் இருப்பதின் பயனை பயன் படுத்தி கொள்வேன். இரண்டு நிமிடங்கள் ... அப்படியே நடந்து போகிற மாதிரி.

22 வருடங்கள் கழித்து

இன்று appointment கொடுத்த வாடிக்கையாளர் அரை மணி கழித்து வர சொல்லவே வேறு வழியில்லாமல் பாதி வழியில் இருந்த நான் கோட்டூர்புரம் டர்ன்புல்ஸ்  பூங்காவிற்கு வந்தேன்.

சும்மா உட்கார்ந்திருக்க பிடிக்காமல் பூங்காவை சுற்றி வந்தேன். காதலர்கள். ஒருவர் மடியில் இன்னொருவர். பக்கத்தில் உட்கார்ந்தபடி. நெருங்கிய நிலை. தூரம் விட்டு விட்டு நான்கு ஜோடிகள். காதுகளை தீட்டி கொண்டு வேறு பக்கம் பார்த்தபடி நடந்தேன்.

சத்தங்கள் இல்லை. என்னவென்று பார்த்தேன். இரண்டு ஜோடி மகாபலிபுரம் குரங்கு சிலையை வார்த்தது போல் பேன் பார்த்து கொண்டு இருந்தனர். ஒரு ஜோடி மதியம் உணவை காணவில்லை போலும் ஒருவர் நகத்தை இன்னொருவர் கடித்து துப்பி கொண்டு இருந்தனர்.

இவர்களை வைத்து கொண்டு இந்தியா எப்படி வல்லரசு ஆகும்.

Sunday, August 20, 2017

காப்பர் டி மரணங்கள் - மத்திய அரசு - அரசு மருத்துவமனை


சஞ்சய் காந்தியின் திட்டங்களில் முக்கியமானது குடும்ப கட்டுப்பாடு திட்டம் ....டார்கெட் வைத்து அவசரம் அவசரமாக அதனை செயல் படுத்தியதால் பலர் இறந்து போனார்கள். இது ஆவண படுத்தியும் உள்ளார்கள்.

இப்பொழுது அதே மாதிரியான திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அதாவது குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு அவர்களது அனுமதி உடன் கருத்தடை சாதனம் காப்பர் டி பொருத்துவது என்பது.

ஒவ்வொரு அரசு மருத்துவமனையும் இந்த திட்டத்தின் மூலம் ஒன்று இரண்டு பேருக்காவது சாதனம் பொருத்திருக்க வேண்டும் என்று கட்டாயம் படுத்தி இருக்கிறது.

இது ஒரு புரம் இருக்க வட இந்தியாவில் பெண்களது அனுமதி இல்லாமல் இந்த காப்பர் டி பொருத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது சில மாதங்களுக்கு முன்பு.

தமிழ் நாட்டில் அனுமதி இல்லாமல் மணிமேகலைக்கு சரிவர பொருத்தி இருக்கிறார்கள். அதனால் அவருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதை தனியார் மருத்துவமனை மூலம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அந்த ரிபோர்ட்டை வைத்து அரசு மருத்துவமனையில் கேட்ட பொழுது, அவர்கள் நாங்களே சரி செய்து விடுகிறோம் என்று சொல்லி மலகுடலில் ஓட்டை விழுந்து சாகுமளவிற்கு சிகிச்சை தந்து இருக்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள்.

வெளியில் தெரிந்த விஷயம் இது ஒன்று தான், தெரியாமல் போன மரணங்கள் எத்தனையோ.

கருத்தடை சாதனம் நல்லது தான், ஆனால் அது தனிநபர் விருப்பத்தில் பெயரிலேயே பொருத்தபட வேண்டும். டார்கெட்டினால் அல்ல.

யாராவது RTIல் குழந்தை பிறந்து கொஞ்ச மாதங்களிலேயே இறந்த தாய்மார்கள் எத்தனை பேர் என்று கேட்டாலே இந்த விஷயம் அம்பலத்திற்கு வரும்.

மேலும் இதற்கு பொருளாதார ரீதியாக கீழ்நிலையில் இருப்பவர்களே இலக்காகுகிறார்கள்
.
Related Posts with Thumbnails