Pages

Tuesday, August 11, 2020

ஒலிப்புத்தகம் / Audio Book : Audible : Storytel

பம்பாய் கண்ணன், இவரை எஸ்.வி.சேகரோடு பெரிய மாப்பிள்ளை சின்ன மாப்பிள்ளை நாடகத்தில் நடித்தவர் என்றளவில் தான் அறிமுகம். ஆனால் சமீபத்தில் இவரும் இவரது குழுவினரும் இணைந்து வழங்கி இருக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் கடல் புறா ஆகிய நாவல்களின் ஒலி வடிவத்தை கேட்டு பிரமித்திருக்கிறேன். அதனை ஒலி நாடகம் என வகை படுத்திப்பட்டு இருந்தாலும் ஒலி நாடகமாக இல்லாமல் ஒலிப்புத்தகமாக தான் இருக்கிறது.  

தமிழில் இப்பொழுது தான் ஒலி புத்தகங்கள் பெரியளவில் வர ஆரம்பித்து இருக்கிறதென்றாலும் ஆங்கிலத்தில் பல வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது. 

அதில் என்ன பிரச்சனை என்றால் பம்பாய் கண்ணன் குழுவினரது ஒலி புத்தகங்கள் தவிர்த்து மற்ற ஒலி புத்தகங்கள் எல்லாம் ஏற்ற இறக்கத்துடன் இல்லாமல் தட்டையாக இருக்கிறது. 

ராஜேஷ்குமார் நாவலை படிக்கும் பொழுது மனதிற்குள் ஏற்படும் பரபரபப்பு யாரோ ஒரு பெண்மணி வாசிக்கும் பொழுது கதையின்  சுவாரசியமே இல்லாமல் போய் விடுகிறது. 

தமிழியில் இப்பொழுது தான் புத்தகங்கள் ஒலி வடிவில் வர ஆரம்பித்திருப்பதால் பல குறைகள் இருக்க தான் செய்யும். மேலும் புத்தகத்தை சுவாரசியமாக ஒலி வடிவத்திற்கு வாசிக்கும் நபர்கள் அதிகம் இல்லை. 

தமிழ் ஒலி புத்தகங்கள் அதிக லாபம் தருமொன்றாக மாறும் காலத்தில் திரைப்பட பின்னணி குரல் கொடுப்பவர்கள் நிச்சயம் கால் பதிப்பார்கள். 

இதுவரையில் சரித்திர நாவல்கள் ஒலி வடிவமாக கள்ள பதிப்பில் தான் கிடைத்தது. அதாவது யாரோ ஒருவர் குறிப்பிட்ட அந்த சரித்திர நாவல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு தனது குரலில் நாவலை வாசித்து நிழற்படத்துடன் காணொளியாக யூட்யூப்பில் பதிவேற்றி இருப்பார்கள்.

ஆனால் சட்டரீதியான தமிழ் ஒலி புத்தக பதிப்பு பல செயலிகளில் கிடைக்கிறது. குறிப்பாக சொல்வதென்றால் Audible, Storytel போன்ற பிரபல செயலிகள். இதில் ஒரு புத்தகம் மட்டும் வாங்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லாம் மாத சந்தா அல்லது வருட சந்தாவில் மேலே குறிப்பிட்டுள்ள செயலிகளில் ஒலி புத்தகங்கள் கிடைக்கிறது. கூகிள் புத்தகங்கள் என்ற செயலில் மட்டுமே தனி ஒலி புத்தகமாக வாங்க முடியும் என தெரிகிறது. தனி ஒலி புத்தகமாக வாங்கினால் பல நூல்களின் விலை கைக்கு அடங்காத ஒன்றாக இருக்கும்.

நீங்கள் தமிழ் நாவல்கள் மட்டுமே வாசிப்பேன் என இருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். பல எழுத்தாளர்களது புத்தகங்கள் ஒலி வடிவில் இல்லை. 

பிரபல தமிழ் எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை ஒலி வடிவில் கொண்டு வந்தால் இன்னும் பலரை தமிழ் வாசக பரப்பில் இணைக்க முடியும்.

Saturday, August 8, 2020

கலவை - நெபோடிசம் / ஃபேஸ்புக் / அயோத்யா ராமர் கோயில்

ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவருக்கு ரிச்சா பனாய் என்னும் நடிகையை நான் Follow செய்வதாய் காட்டி இருக்கிறதாம். அவரும் எனக்கு ஏன் இப்படி என்பது போல பதிவு எழுதிருக்கிறார்.

அவரை ஃபாலோ செய்வதும் செய்யாமல் இருப்பதும் பெரிய விஷயம் இல்லை. ஃபாலோ செய்தால் அதை மறுக்கவும் மாட்டேன்.

நான் ஃபாலோ செய்யாத ஒருவரை, அப்படி செய்வதாக என் நட்பு வட்டத்தில் இருப்போருக்கு ஏன் ஃபேஸ்புக் இப்படி காட்ட வேண்டும் ???

வியாபார தந்திரத்தை இப்படி என் பெயரை வைத்து பயன்படுத்த வேண்டுமா ???
- - - - -
"நடிகர்கள் தன் மகன்/மகளை ஆடிசன் பண்ணாமல் சொந்த படத்தில் அறிமுகபடுத்துவது நெபோடிசம்" - சூப்பர் மாடல்

அப்ப எங்க அப்பா அம்மா என்னை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தது எல்லாம் நெபோடிசம் கீழ வருமா ???

நெபோடிசம் என்றால், அதே நடிகர்கள் தங்களது மகனுக்கு போட்டியாக வேறு ஒருவரை வர விடாமல் செய்வது தான் நெபோடிசம்.

- - - - -
அயோத்யாவில் ராமர் கோயில் கட்ட போகும் வேளையில்...

அயோத்யா ராமர் கோயில் நில வழக்கு மொத்தம் 132 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த 132 ஆண்டுகளாக அதனை மையப்படுத்தி பல்வேறு அரசியல் நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் நடந்துள்ளது. 

அந்த நிகழ்வுகளையும் ஆவன செய்ய வேண்டும். அதனை நல்ல புரிதலோடு எழுத வேண்டும். 

மேலும் இந்த 132 ஆண்டு வழக்கு ஆயுளின் 500 வருட கடந்த காலத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

நினைப்பது சரியென்றால், 2021 ஆம் ஆண்டின் புத்தக திருவிழாவில் இந்த தலைப்பில் புத்தகங்கள் ஏகப்பட்டது வரும்.

நடுநிலைமையுடன் வரும் புத்தகம் சரித்திரத்தில் இடம்பெறும். அதில் சந்தேகம் இல்லை.

- - - - -

Wednesday, August 5, 2020

Alumbunaties : The Hostel Days :: Nakkalities

Alumbunaties : The Hostel Days

நக்கலைட்ஸின் நகைச்சுவை தொடர் யூடியூபில் வெளிவந்து வெற்றிகரமாக பலரது பாராட்டுகளைப் பெற்று கொண்டு இருக்கிறது. மேலும் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது இத்தொடர். பலர் தங்களது கல்லூரி கால விடுதி நாட்களை நினைவு படுத்துகிறது எனவும் மீண்டும் கடந்து வந்துவிட வாழ்க்கையை வாழ வைக்கிறது இந்த தொடர் என சொல்கிறார்கள்.

தொடர் வந்த சமயத்தில் பார்க்கவில்லை, சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் சொல்லிய பின்னரே பார்த்தேன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் விழுந்து விழுந்து சிரித்தேன் என சொன்னால் இருக்கும். அதுவும் "சிடுமூஞ்சி சீனியர்" அத்தியாய முடிவில் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு சிரித்து கொண்டு இருந்தேன். ஏனென்றால் அந்த அத்தியாயத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

மொத்தம் ஒன்பது அத்தியாயம் : ஒவ்வொன்றும் அத்தனை தரம்.... வாய்ப்புகளே இல்லை. டிவிட்டரில் ஒருவர் சொன்னது போல தமிழ் இணைய தொடர் இயக்குநர்களுக்கு SITCOM தொடர் என்றால் எப்படி எடுக்கப்பட வேண்டும் என உட்கார வைத்து பாடம் எடுத்து இருக்கிறார்கள்.

அதிலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கான நடிகர்களின் தேர்வு அவ்வளவு கனகச்சிதமாக இருக்கிறது.

சித்து, ஜோ,சுடலை வேம்பு, பாஷீர் மற்றும் இவர்கள் கண்டு மிரளும் வார்டன் ஆள்துரை ; எல்லோரும் மனத்தில் தங்கிவிட்டார்கள். அதுவும் பாஷீரின் மலையாளம் கலந்த தமிழில் எந்தாடா சித்து என சொல்வது அத்தனை அழகாக இருக்கிறது. 

பொதுவாக இம்மாதிரியான கல்லூரி விடுதி சம்பந்தப்பட்ட தொடர் என்றால் தரமற்ற நகைச்சுவை இருக்க வேண்டும், அதனை விட்டால் தரமாக எதுவும் சொல்ல முடியாது என்பது போல் எடுத்து இருப்பார்கள்.கிடைக்கிறது.. ஆலும்புனாடீஸ் தொடரை குடும்பத்தோடு பார்க்கலாம். ஒரு துளி ஆபாசம் இல்லை.

ஒவ்வொரு தொடரும் சுமார் 20 நிமிடங்களில் இருந்து 25 நிமிடங்கள் வரை இருக்கிறது. வாரயிறுதியை கொண்டாட நல்லதொரு தொடர். 

யூட்யூப்பில் நக்கலைட்ஸ் சேனலில் பார்க்க கிடைக்கிறது.

விடுதி வாழ்க்கை என்பது ஒரு தனி உலகம். அதனை அனுபவித்தவர்களுக்கு இந்த தொடர் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விடுதி வாழ்க்கையை அனுபவிக்காதவர்களுக்கும் இத்தொடர் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் தான் இதன் சிறப்பு.

எல்லா அத்தியாயங்களை பார்த்த பிறகு நீங்கள் கண்டிப்பாக பாஷீர் மற்றும் சுடலை வேம்பு ஆகியோரின் ரசிகர்களாக மாறி இருப்பீர்கள்.

முக்கிய குறிப்பு - இத்தொடரின் முகப்பு பாடலான Hostel Anthem பாடலை தனி பதிவாக கேட்க கிடைக்கிறது. தொடரை பார்த்த பின் இந்த பாடல் உங்களுக்கு பிடித்து போகும்.
Related Posts with Thumbnails