புஸ்தகா இணையத்தில் / செயலியில் பழைய நாவல்கள் எல்லாம் கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட நூறு வருடங்கள் பழமையான நாவல்கள், அதில் அச்சில் இல்லாதவையும் அடங்கும். இது போன்ற முயற்சிகள் எல்லாம் ஆங்கிந் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
அதாவது 15ஆம் நூற்றாண்டில் வந்த இலக்கிய படைப்புகள் எல்லாம் இன்றளவில் படிக்க கிடைக்கிறது. அவ்வளவு ஜாக்கிரதையாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பார்க்க அவ்வளவு பொறாமையாக இருக்கும் தமிழில் இது போன்று வருவதில்லையே என.
இன்று ஆரணி குப்புசாமி முதலியார் என்பவர் எழுதிய "இந்திரபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன்" என்னும் துப்பறியும் நாவலை ஸ்டோரிடெல் செயலியில் படிக்க ஆரம்பித்தேன்.
"இப்பூவுலகில் காலத்திற்குத் தக்கபடி சம்பவங்கள் நேர்கின்றன. நமது மதநூலில் கூறியபடி யுகதர்மத்திற்குத் தக்கபடி யாவும் மாறுபடுகின்றன. மதத்துவேஷத்தால் நமது மதத்தைக் குறை கூறுகிறவர்கள் கூறட்டும். எவ்வளவோ ...." என ஆரம்பித்தது. என்ன இது இக்காலத்தில் துப்பறியும் கதை என்றால் கொலை, மர்மம் என்று தானே ஆரம்பிக்கும், இது புதிதாய் இருக்கிறதே என ஒரு சந்தேகத்தில் கதை வந்த வருடத்தை பார்த்தேன். சரியாய் 98 வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறது. (ஆசிரியர் குறிப்பு 1-10-1922 என தேதி இடப்பட்டு இருக்கிறது)
நன்றி புஸ்தகா.
1960 தொடங்கி 1990களின் இறுதி வரைக்குமே நிறைய நாவல்கள் வந்திருக்கிறது. அவற்றில் பல அச்சில் கிடைப்பது இல்லை. அரசு நூலகங்களில் மட்டுமே படிக்க கிடைக்கும். புஸ்தகாவில் அதெல்லாம் வந்தால் புக்பூச்சிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.
முக்கியமாக இதுபோன்ற அக்கால படைப்புகள் மூலம் அக்காலத்தில் இருந்த சமூக அமைப்பு, நாட்டு நடப்பு எல்லாம் தெரிந்த கொள்ள முடியும். சரித்திர ஆவணம் போன்று.
நேரம் கிடைத்தால் படிக்கவும்.