Pages

Thursday, October 14, 2021

வினோதய சித்தம் (2021) = முதல் தேதி (1955)

வினோதய சித்தம் : 

*

1955ல் சிவாஜி கணேசன் நடித்து முதல் தேதி என்று ஒரு படம் வந்தது. அப்படத்தில் நாயகன் தான் வேலை செய்யும் வங்கி திவால் ஆகிவிட்டதால் வேறு வேலை கிடைக்காத பயத்தில் காப்பீடு பணம் வருமே என தற்கொலை செய்து கொள்கிறான். எமன் தற்கொலை செய்வது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என அதனை ஏற்காமல் நாயகனை ஆவி ரூபமாக பூமி அனுப்புகிறார். ஆவி ரூபமாக தனது குடும்பம் படும் கஷ்டங்கள் அடமானங்கள் எல்லாவற்றையும் பார்த்து மனம் திருந்துகிறார். எமனும் மன்னித்து நாயகனுக்கு மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு தருகிறார்.  சுபம்.

இந்த சாதா மசாலா தோசையை மைசூர் மசாலா ஸ்பெஷல் தோசையாக மாற்றி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

*

காலங்காலமாக எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒரு பேராசை .... இன்னொரு தடவை வாய்ப்பு கிடைத்தால் நான் செய்த தவறுகளை எல்லாம் திருத்தி கொண்டு எல்லோருக்கும் பிடித்தமான பிரதியாக வாழ்வேன். ஆனால் உண்மையில் அப்படிபட்ட வாய்ப்புகள் யாருக்கும் கிடைப்பதில்லை.

இரண்டாம் வாய்ப்பு கிடைத்தாலும் அது  தவறுகள் செய்திருக்கிறான் என்கிற கவனத்துடனே வழங்க படுகிறது. 

ஆனால் நான் திருந்தி கொள்கிறேன் என்று ஒருவன் வருகிறான் என்றால் அவனுக்கு வழங்கபட்ட வாய்ப்பை சர்வ நாசம் பண்ணிவிட்டான் என்று அர்த்தம். 

உலகம் என்பது எல்லோரிடமும் இருந்து தொடங்குகிறது. இதனை புரிந்து கொண்டாலே பாதி 
பிரச்சனைகள் குறைந்து விடும். ஆனால் இதனை ஏற்க முடியாமல் தடுப்பது நாம் நம் மனதிற்குள் வளர்த்து வைத்திருக்கும் ஆசை & பிடிவாதம். இவை இரண்டும் ஒருவனை ஆட்டி படைக்கும் மாபெரும் சக்தி. 

அப்படி சிலரை புரிந்துகொண்டு விட்டோம் என நாம் நம்புவது எப்பொழுதென்றால் அவர்கள் நாம் கொண்டு இருக்கும் பிடிவாத நோய்க்கு அவர்கள் சாமரம் வீசும் பொழுது தான்.

மேற்சொன்ன சித்தார்ந்த விளக்கங்கள் இப்படம் பார்ப்பதினால் வருமா என கேட்டால், அப்படி எதுவும் வராது. இப்படத்தை பார்க்காமல் ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து யோசித்தாலே போதுமானது.

படத்தில் காலன் நேரில் வருவதால் பரசுராமன் வாழ்க்கை ஏதாவது மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதா ? இல்லை. நடக்கின்றவற்றை பரசுராமன் ஏற்று கொள்ளாமல் இருப்பதே முக்கிய காரணம். மேலும் காலன் பரசுராமனுக்கு எதையும் புரிய வைக்கவில்லை, எல்லாவற்றையும் தெரியப்படுத்துகிறார். 

அதனால் நேரம் இருந்தால் படத்தை பாருங்கள். ஆனால் இப்படத்தை வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் என ஜிலேபி சுற்றுகிறவர்களை நம்பி பார்க்க வேண்டாம்.

அப்பா, அம்மா, உடன்பிறப்பு, பொண்டாட்டி என குடும்பத்தில் இருக்கிறவர்களெல்லாம் சொல்லி நீங்கள் திருந்தவில்லை என்றால், சத்தியமாக இந்த படம் பார்த்து திருந்த போவது இல்லை.

Tuesday, October 5, 2021

இராஜராஜ சோழன் II பொன்னியின் செல்வன் II மதுராந்தகம்

பொன்னியின் செல்வன் நாவலுக்கும் அல்லது சோழர்களுக்கும் எனக்குமே ஒரு மறைமுகமான பந்தமொன்று இருக்கிறது. 

சுந்தர சோழருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த உத்தம சோழர் என்று அழைக்க பட்ட  மதுராந்தகன் தனது ஆட்சி காலத்தில் செகற்பட்டு மாவட்டத்தில் (பழைய செகற்பட்டு மாவட்டம் - அதில் காஞ்சிபுரம் ஒரு பகுதியாக இருந்தது)     விவசாயம் செழிக்க மாபெரும் ஏரி ஒன்றினை உருவாக்கினார். பின்னர் அவரது பெயரிலேயே அந்த ஊரும் ஏரியும் அழைக்கபட்டு வருகிறது. இப்பொழுது செங்கற்பட்டு மாவட்டத்திலேயே இருக்கும் பெரிய ஏரி மதுராந்தக ஏரி. 

அப்பொழுது ஏரி உருவாக்கத்தில் ஈடுபட்டு இருந்த சோழர்களுக்கு கருங்குழியில் இருந்து உணவிற்கான அரிசி போய் இருக்கலாம். 

கருங்குழி சோழர்காலத்தில் பெரும் ஊராக இருந்து வந்துள்ளதாம். இதனை மா.கேசவன் எழுதிய "வரலாறுமிக்க கருங்குழி நூலில் காணலாம்.

கருங்குழியில் இரண்டு போர்கள் நடந்திருக்கிறது. குறிப்பு இல்லாத மாலிக் கபூர் தலைமையில் நடந்த மொகலாய படையெடுப்பு மற்றும் வந்தவாசி போரில் கருங்குழி கோட்டையை ஹைதர் அலியும் ஆங்கிலேயர்கள் மாறி மாறி கைபற்றி இருக்கிறார்கள். இதனை பற்றிய விரிவான தகவல்கள் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆவண ஏட்டில் இருக்கிறது. 

சரி இதில் நான் எப்படி வருகிறேன்...?

என் அப்பா பிறந்து வளர்ந்த ஊர் தான் கருங்குழி. என் தாத்தா அங்கு தான் அலுவலக வேலை, விவசாயம் மற்றும் அரிசி வியாபாரம் செய்து வந்தார். ஒரு வேளை இராஜராஜ சோழருக்கு எங்க குடும்பத்து முன்னோர்கள் சோறு கூட போட்டு இருக்கலாம். 

மதுராந்தகம் வட்டம் கருங்குழி கிராமம் தான் என் பூர்வீகம்.

இப்பொழுது தலைப்புக்கு இந்த விசைபலகை நடனம் பொருந்தி வருகிறதா ???

Monday, October 4, 2021

Couch Potato

Couch Potato - இன்றைய கார்ப்பரேட் உலகில் தவிர்க்க முடியாத ஒன்று கம்ப்யூட்டர் முன்னாடி எந்தவித நடமாட்டமும் இல்லாமல் உட்கார்ந்திருப்பது. 

சரி அது வேலை ஒன்று பண்ண முடியாது, என பலர் சொல்லி கொண்டு அதுக்கு தானே காலை அரை மணி நேரம் இராஜராஜ சோழன் கணக்காய் வீராவேசமாக நடக்கிறோம் என்று சமாதானம் செய்து கொள்கிறார்கள். 

அந்த அரை மணி நேரம் மட்டும் இல்லாமல் அலுவலகத்தில்  ஒவ்வொரு அரை மணி நேரமும் கொஞ்ச நிமிடங்கள் நடக்க வேண்டும். 

நீடித்த தொலைபேசி அழைப்புகளை நடத்தவாறு பேசுவது நலம்.

முக்கியமாக எந்நேரமும் போனில் வெப் சீரிஸ் பார்த்து கொண்டு இருப்பது உடல் நலத்திற்கு நல்லது இல்லை.  முக்கியமாக இதயத்திற்கு. 

மனிதர்களுடன் பழகுவது அவசியம் தான், உரையாடலும் மனத்திற்கு நல்லது தான், ஆனால் அந்த பழகுவது என்பதினை நிஜ உலகில் இல்லாமல் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் மேற்கொள்கிறார்கள். 

உலக சுகாதார மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி உலகில் மனிதர்களின் இறப்பு எண்ணிக்கை அடுக்கேற்றம் முறையில் தான் கணக்கிட்டு பார்க்க வேண்டும்.

இது உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உள்ள சார்ந்த மன அழுத்தம் போன்றவற்றை கொண்டு வரும். 

அதே போல் உட்கார்ந்தே இருப்பதை விட நிற்பது உடலுக்கு நன்மை தரும் விஷயம்.

சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான் வேலை என்பதற்காக உட்கார்ந்தே இருப்பது நல்லது இல்லை.

எடுக்க வேண்டிய நகல் பிரதியை நீங்களே போய் நகல் பிரதியெடுப்பு இயந்திரத்தில் எடுக்கலாம். 

அலுவலகத்தில் இன்னொருவரை கைபேசியில் அழைத்து பேசுவதை விட நேரில் சென்று பேசலாம்.

இந்த முறை தான் எடுக்கப்பட வேண்டிய முடிவு இல்லை என்று இல்லை இது ஒரு ஆரம்பம் தான்.  

குறிப்பு - கடந்த நான்கு வருடங்களாக சமூக ஊடக பயன்பாட்டை முற்றிலும் குறைத்து கொண்டு விட்டேன். யூ டியூப் மட்டும் தான் தொடர்கிறது. அதனையும் குறைக்கும் முயற்சியில் இருக்கிறேன். தொலைகாட்சி தொடர்களை பார்ப்பதை விட்டு 20 வருடங்கள் ஆக போகிறது. வெப் சீரிஸ் வெளி வந்து விட்டது என்பதற்காக பார்த்தே தீர்வது என இருப்பது இல்லை, பொறுமையாக இரண்டு வருடம் எடுத்து கொண்டு கூட பார்ப்பேன்.

Saturday, October 2, 2021

பொன்னியின் செல்வன் II எம்.ஜி.ஆர். II மணிரத்தினம்

பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர போகிறது, எல்லோரும் கொண்டாடிய நாவலை எப்படி திரையில் வர போகிறதென்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் அதே சமயத்தில் பொன்னியின் செல்வன் நாவலின் முடிவுரையில் கல்கி அவர்கள் சட்டென தொடரை முடித்து பின்னாளில் இக்கதையை மேற்கொண்டு எழுத வருகிறவர்களுக்கு பல்வேறு குறிப்புகளை தந்திருப்பார்.

நாவல் மணிமேகலையின் மரணத்தோடு நிறுத்தபட்டு இருக்கும். 

குறிப்பு -  29 அக்டோபர் 1950ல் தொடங்கி 16 மே மாதம் 1954ல் நாவல் தொடர் முடிந்திருக்கிறது. நாவல் முடிந்த ஏழாவது மாதத்தில் 5டிசம்பர் 1954 கல்கி அவர்கள் மரணம் அடைந்தார். 

பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய சம்பவமாக இருப்பது வீரபாண்டியனின் கொலை தான். வீரபாண்டியன் தப்பித்திருந்தால்  சரித்திரம் வேறு மாதிரி மாறி இருக்கும். 

மதுரையின் மீதான சோழர்களின் படையெடுப்பை வேறொரு கோணத்தில் பேசுவது தான் அரு.ராமநாதன் எழுதிய வீரபாண்டியனின் மனைவி.  

வரலாற்றின் படி வீரபாண்டியனின் மகனான சுந்தரபாண்டியன் தான் சோழர்கள் கைப்பற்றிய மதுரையை மீட்டார்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர். பல முயற்சி எடுத்தார், ஒரு தரம் படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் வரையில் போய் நின்று இருக்கிறது.

முயற்சி தோல்வியடைந்தாலும் அவருக்கு இந்த பாண்டிய - சோழ வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்த படியால், பொன்னியின் செல்வன் பேசிய வரலாற்றில் அடுத்த கட்டமான  பாண்டியர் மதுரையை மீட்டத்தை அடிப்படையாக கொண்டு அகிலனால் எழுத பட்ட கயல்விழி என்ற நாவலை அடிப்படையாக கொண்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் படத்தை எடுத்தார்.

சோகமென்னவென்றால் அப்படத்தின் தரமான் பிரதி தற்பொழுது காண கிடைப்பதில்லை.

இப்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எப்படி கொண்டு போய் எப்படி முடிப்பார்கள் ?

எப்படியும் முதல் பாகம் ஆதித்த கரிகாலன் மரணத்தோடு முடியும். அப்பொழுது தான் விறுவிறுப்பாக அடுத்த இரண்டாம் பாகத்திற்கான வரவேற்பு களத்தை உண்டாக்க முடியும். இதே போன்ற யுத்தியை தான் பாகுபலியிலும் கையாண்டார்கள்.

பொன்னியின் செல்வன் முடிந்த கையோடு பாண்டியர்களின் எழுச்சியை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்.

பணம், திறன் எல்லாம் இருந்தாலுமே கல்கியின் வார்த்தைகளுக்கு உயிர் தருவது கடினமான காரியம். 

பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பே ஒவ்வொரு முறையும் அதனை படிக்கும் பொழுது வாசிக்கும் நபரை அந்த கதையின் ஒரு அங்கமாக மாற்றிவிடும் வல்லமை கல்கியின் எழுத்துக்களுக்குண்டு. அவை தற்போதைய திரைகதை ஆசிரியர்களுக்கு இருக்கிறதா ???

தெரியவில்லை. காத்திருந்து பார்ப்போம்.
Related Posts with Thumbnails