Pages

Monday, December 20, 2021

டி.டீ.எச். II சுஜாதா


2000களின் பிற்பகுதியில் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்றதாக இருக்கும் என அவசர அவசரமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தோம். 

பெயர்ந்த பிறகு சந்தித்த முதல் பிரச்சனை கேபிள் டிவி தான். நானும் அண்ணனும் விசாரித்து ஒரு இருட்டான வீட்டொன்றில் போய் பேசி இணைப்பிற்கான பணம் கட்டிவிட்டு வந்தோம். (இப்பொழுது அந்த வீட்டில் ஒரு குடும்பம் குடித்தனம் இருக்கிறார்கள். பக்கத்தில் இருந்த அண்ணாச்சி கடை சூப்பர் மார்கெட்டாக மாறிவிட்டது)

மாதாமாதம் வீட்டிற்கே வந்து பணம் வாங்கி கொண்டு போவார்கள். ஒரு சமயம் வீடு பூட்டி இருக்கிறது என பணம் வசூலிக்காமல் இணைப்பை துண்டித்து விட்டு சென்றுவிட்டார்கள். 

இதே திருச்சியாக இருந்தால் அடுத்த மாசத்தோடு சேர்த்து கொடுங்க, அப்பறமா வாங்கிக்குறேன் என பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டு போவார்கள். ஆனால் சென்னை வந்த கொஞ்ச காலத்திலேயே இப்படியான அனுபவம். 

அப்பொழுது சன் டி.டீ.எஃச். அறிமுகமாகி விளம்பரங்கள் வந்து கொண்டு இருந்தன. 

அப்பா கேபிள் டிவிக்கு இது மேல் என சொன்னதால் கேபிள் டிவிக்கு பிரியாவிடை தந்துவிட்டோம். 

அதில் என்ன ஒரு சிக்கல் என்றால் அதனை Recharge செய்ய முகவரிடம் இருந்து recharge card வாங்க வேண்டும் என்பது போல் அமைப்பு இருந்தது. ஒரு சமயம் முகவர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டால் திங்கட்கிழமை வரைக்கும் காத்திருக்க வேண்டும். வாரயிறுதிகளில் பெருங்களத்தூர் மிகவும் அமைதியாக தான் இருக்கும். ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் கட்டிடங்கள் இருந்த காலம் அது. 

சித்ரா டாக்கீஸில் நான்கு இடைவேளைகளுடன் திரையில் கோடுகள் புள்ளிகள் கோலங்கள் தாங்கிய பழைய எம்.ஜி.ஆர். சிவாஜி படம் பார்க்க கூட்டமாய் நின்று கொண்டு இருப்பார்கள். இப்பொழுதும் அங்கு கூட்டமாக இருக்கிறது ஆனால் படம் காண அல்ல. மதுபானத்திற்காக.

நஷ்டம் காரணமாக டாக்கீஸ் சிமெண்ட் கிடங்காக இருந்து பின்னர் சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அங்கு வந்தது. அந்த டாஸ்மாக் கடை சென்னையில் எனக்கு கிடைத்த அதிர்ச்சிகளில் முக்கியமான ஒன்று. திருச்சியிலும் சாராயக்கடை இருக்கும், ஆனால் குடியிருப்பு பகுதிகளில் இருக்காது. எல்லாம் வணிக பகுதியில் தான் இருக்கும். 

இந்த பிரச்சனை காரணமாக டாடா ஸ்கை டி.டீ.எஃச். வாங்கினோம். முக்கிய காரணம் டாடா ஸ்கை முன் கட்டண அட்டைகளை விற்ற முகவர் எல்லா நாட்களிலும் கடை திறந்து வைத்திருப்பார். அப்பறம் இணையத்தில் கட்டணம் செலுத்த ஆரம்பித்தோம்.

அதே போல் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்பிற்கு BSNL இணைப்பு தான் சென்னை வந்த உடன் வாங்கினோம். ஆனால் என்ன பிரச்சனை என்றால் கட்டணம் செலுத்துவதை தவிர்த்து சின்ன பிரச்சனை என்றாலும் குரோம்பேட்டையிலுள்ள அவர்களது அலுவலகத்திற்கு தான் போக வேண்டும். அப்பா தான் போய் விட்டு வருவார். 

வளர்ந்து வந்து கொண்டு இருந்த பகுதி என்பதால் ( வாடகை வீட்டில் இருந்து  சொந்த வீடு கட்டி வந்த பிறகு பல வருஷங்களுக்கு இது Extension areaவாக தான் இருந்தது) அடிக்கடி கனரக வாகன வருகையால் கம்பி அறுந்து போகும். 

அதை சரி செய்ய ஒரு வாரம் ஆகும்.

அப்பொழுது ஏர்டெல் நிறுவனம் இணைய சேவை மற்றும் தொலைபேசி அழைப்பு, புகாருக்கு உடனடி தீர்வு என சொன்னதால் BSNL சேவையை ரத்து செய்து விட்டு ஏர்டேல் (இணையம் மற்றும் தொலைபேசி) இணைப்பை  வாங்கினோம் .

வைத்திருந்த வரைக்கும் பிரச்சனை என எதுவும் இருந்தது இல்லை. ஏர்டெலுக்கு முன்  சோதனை அடிப்படையில் ACT இணைய சேவை பயன்படுத்தினோம். ஜியோவில் தொலைபேசி இணைப்பு, இணைய சேவை, டி.டீ.எஃச். ஒன்றில் மூன்று சேவைகள் கூடுதலாக இலவச ஓடிடி தளங்களின் சந்தா என விலையும் குறைவாக இருந்ததினால் மாறிவிட்டோம். 

ஏதற்கு சொல்கிறேன் என்றால் இந்த மாற்றங்களை காண 14 வருடங்களானது. 

இதனை பற்றி எல்லாம் சுஜாதா 1998லேயே எழுதி இருக்கிறார்.

ஏனெனில் அவர் வாத்தியார்.

Friday, December 17, 2021

கலவை - 17/12/2021

இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு எல்லோரும் சமம் என நம்ப படுகிறது.

ஒருவன் விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் விமான நிலைய மலசல கூடத்தில் சீறுநீர் அல்லது மலம் கழிக்க கட்டணம் எதுவும் கொடுக்க தேவை இல்லை.

ஆனால் ரயில் நிலையத்திலோ அல்லது பேருந்து நிலையத்திலோ மலசல கூடத்தில் கட்டணம் வசூலிக்க படுகிறது. 

விமான நிலையத்தில் கழிவறை பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை என்றால் மற்ற போக்குவரத்து நிலையங்களிலும் இலவசமாக தானே இருக்க வேண்டும். 

அப்படி கட்டணம் வசூலிக்கப்படும் போக்குவரத்து நிலைய கழிவறைகளில் எத்தனை முறை , எந்தெந்த நேரங்களில் அவை சுத்தம் செய்ய படுகிறது என்ற விவரம் கிடைப்பதில்லை. 

கட்டணம் பணமாக தான் வசூலிக்க படுகிறது. அரசு முன்னெடுத்து செல்லும் திட்டமான UPI வழிக்க கட்டணம் செலுத்த வசதி இல்லை.  

கையில் சில்லறை காசு இல்லாதவர்கள் கழிவறை ஒப்பந்ததாரர்களின் வசவு சொற்கள் கேட்க வேண்டி இருக்கு. 

அதுவும் பேருந்து நிலைய கழிவறைகளில் மாற்று திறனாளி ஒருவர் போய் வர வேண்டுமென்றால் தர்ம சங்கடங்களை அனுபவிக்க வேண்டி வரும். 

போருந்து மற்றும் ரயில் நிலையத்தில் பெரும்பாலும் மாற்று திறனாளிகளுக்கான கழிப்பிடம் பூட்டியே இருக்கும். 

இது இப்படி என்றால்

சில இடங்களில் அரசு அமைத்திருக்கும் இலவச கழிவறைகளில் சிலர் மலம் கழித்துவிட்டு அது ஏதோ பிறர் பார்த்து பரவச பட வேண்டிய ஒன்று என நினைத்து நீர் ஊற்றி கழுவாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

(ஆம் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது)

# # # #

சிவாஜி கணேசன் நடித்த அருணோதயம் படத்தை கொஞ்ச நாட்களுக்கு முன்பு பார்த்தேன். 

அருமையான படம். 

இதனை மட்டும் கொரிய பட இயக்குநர்கள் பார்த்தால், கொஞ்சம் நகாசு வேலை செய்து அருமையான ஒரு Crime Thriller படம் எடுத்திருப்பார்கள்.

# # # # 

போன வாரம் வைகுண்ட ஏகாதசி சொர்க்க திறப்பு எல்லாம் நடந்திருக்கிறது ஆனால் அதனை பற்றி பிரக்ஞை இல்லாமல் இருந்திருக்கிறேன்.

ஏனென்றால் திருச்சி மாவட்டத்தில் மார்கழி மாதம் வந்தாலே எல்லோருக்கும் ஸ்ரீரங்க சொர்க்க வாசல் சுற்றியே பேசி கொண்டு இருப்பார்கள். பகல் பத்து தரிசனம் இரா பத்து தரிசனம் என திருவிழா போல் இருக்கும் ஸ்ரீரங்கம். 

கல்லூரி காலத்தில் இதில் தன்னார்வலராக பணியாற்றி இருக்கிறேன் என்பதால் வைகுண்ட ஏகாதசி என்றாலே மலரும் நினைவுகள் தான்.

ம்ம்ம்.

# # # #

சிலுக்கு ஸ்மிதா என்றால் யாரென தெரியாத தலைமுறை ஒன்று உருவாகி வளர்ந்திருக்கிறது.

அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

தட் என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் மொமண்ட்

# # # #

ஆங்காங்கே பலர் சிலரை உனக்கு இங்க இடமில்ல பாகிஸ்தானுக்கு போ என கூச்சலிட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இது எங்கிருந்து பழக்கமாகி இருக்கும் அவர்களுக்கு என யோசித்து கொண்டு இருந்தேன்.

இதனை அவர்களுக்கு கற்று கொடுத்ததே விகடன் மற்றும் ஜெயகாந்தன் தான் என நினைக்கிறேன்.

1960கள் வரைக்குமே அவர்கள் படிக்கும் பத்திரிக்கையாக இருந்த விகடனில் ஜெயகாந்தன் "பாரீஸுக்கு போ" என்ற தொடரை எழுதினார். அதனை படித்து வளர்ந்தவர்கள் தான் இன்று "அந்த சிலரை" பாகிஸ்தானுக்கு போ, அரேபியாவுக்கு போ என சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் மொத்த வழக்கையும் ஜெயகாந்தன் & விகடன் மேல் எழுதிடணும்.

# # # # 
Related Posts with Thumbnails