Pages

Sunday, September 13, 2020

தமிழுக்கு வந்த சோதனை

திருவள்ளுவர் என்பதை பள்ளியில் படிக்கும் பொழுது பரீட்சையில் கொரவல்லுவர், தெருவள்ளுவர் என்றெல்லாம் எழுதி சாதனை படைத்து இருக்கிறேன். அப்படி பரீட்சைக்கு கிளம்பி போகிற பொழுதெல்லாம் அப்பா கிண்டலாக கம்பர், திருவள்ளுவர் எல்லாம் தூக்கு மாட்டிகொள்ள பள்ளி வந்திருப்பார்கள் என சொல்வார்.

சமீபத்தில் சுவரஜதி என எழுதி இருந்ததை சவரஜாதி என படித்துவிட்டு, சங்கீத குறிப்புகளில் இப்படி சாதியை பற்றி எழுதி இருக்கிறார்களே என மனைவியிடம் சொல்லி மாட்டிகொண்டேன். அதுவரையில் தமிழ் புலவர் என சொல்லி கொண்டு இருப்பேன். 

புலவர் என்பது புளுவர் ஆனது தான் மிச்சம்.

 இப்பொழுதும் சில இடங்களில் எழுத்து பிழைகளுடன் எழுதுகிறேன். பின்னர் கவனித்து திருத்தி கொள்கிறேன்.

நிற்க

பாமா கோபாலன் எழுதிய "குமுதம் ஆபீஸில் கோபாலன்" புத்தகத்தை படித்து கொண்டு இருக்கிறேன். அதில் ஒரு இடத்தில் தயாரித்த என்பதற்கு பதிலாக தாயாரித்த என வந்திருக்கிறது.

ஆக

நானெல்லாம் எழுத்து பிழை (பேசும்போது கூட எழுத்து பிழை வருன் எனக்கு) கண்டுபிடிக்கும் அளவிற்கு புத்தகம் வருகிறது. 

இது செம்மொழியான தமிழுக்கு நல்லது இல்லை. 

கவனம் எழுத்தாளர்களே.

இரு புத்தகம்

படித்து முடித்தது - குபேரவன காவல், இதிகாசத்தை மைய படுத்திய கதையில் பரபரப்பான சம்பவங்கள் எதிர்பார்த்தேன். அதுவும் மகாபாரத புருஷாமிருகம், யட்சிணி, குபேரவனம் எல்லாவற்றையும் வைத்து வாசகனை மிரட்டி எடுத்திருக்கலாம்.

ஆனால் ஆசிரியர் வேறொரு கோணத்தில் எழுத்திருக்கிறார். 

ஒரு வேளை அதே கதை போக்கில் அவர் இந்த நாவலை எழுதிருந்தால் வாசகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கும்.

படிக்க ஆரம்பித்திருப்பது - முகம்மது யூனுஸ் எழுதிய "Banker To The Poor" என்னும் புத்தகம். 
முகம்மது யூனுஸ் என்பவர் பங்களாதேஷ் நாட்டின் முக்கியமான பொருளாதார நிபுணர். பங்களாதேஷ்  நாட்டில் கிராமீன் வங்கி தொடங்கியதற்கும், சிறிய அளவிலான கடன்கள் மற்றும் நுண்ணிய பொருளாதார கொள்கை ஆகியவற்றுக்காக நோபல் விருது வாங்கி இருக்கிறார்.

ஏழைகள் இல்லா உலகம் உருவாக்க போராடி கொண்டு இருப்பவர்.

சமீபத்தில் ராகுல் காந்தி உடனான இணைய வழி உரையாடலின் ( https://youtu.be/f4J7hK_1n1E ) பொழுது இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பு தவறானதாக இருக்கிறது, அது மாற்ற பட வேண்டும் என சொல்லி இருக்கிறார். 

அவசியம் படிக்க வேண்டிய புத்தக பட்டியலில் இவரது புத்தகங்கள் வைத்திருக்கிறேன்.

Thursday, September 10, 2020

சொத்தில் பங்கு

திரையரங்கில் காட்ட படும் விளம்பரங்களில் மூலம் வரும் வருமானத்தில் பங்கு வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.

அப்படியே தங்களது படங்களை திரையிடுவதின் மூலம் நஷ்டம் ஏற்பட்டால் அதில் ஒரு பங்கை நாங்கள் ஏற்று கொள்கிறோம் என சொல்வார்களா ???

கொஞ்சம் இப்படியே போனால் காபி,டீ சமோசா விற்ற காசில், சைக்கிள் ஸ்டாண்ட் வாடகை காசில் எல்லாம் பங்கு வேண்டும் என சொல்வார்கள் போல.

எல்லாம் சரி, இது நாள் வரைக்கும் உங்களது படங்களை திரையில் பார்த்து உங்களுக்கு லாபத்தை கொடுத்த ரசிகர்களுக்கு உங்கள் சொத்தில் பங்கு தருவீர்களா மதிப்புக்குரிய தயாரிப்பாளர்களே.

Sunday, September 6, 2020

அய்யரா நீயு....???

வாழ்க்கையில் நான் அதிகம் எதிர்கொண்ட கேள்வி என்றால் அது "அய்யரா நீயு...?" என்பது தான். சைவ உணவுமுறையை பின்பற்றுபவன் என்பதால் அப்படி கேட்பார்கள். இல்லையென சொன்னால் "அப்ப நீங்க யாரு....?" என அடுத்த கேள்வி வரும்.

அடுத்தாய் "இப்ப எல்லாம் அய்யரே நான்-வெஜ் சாப்பிடுறாங்க...." என சொல்வார்கள். அதாவது அவர்களே சாப்பிடுகிறார்கள் நீ சாப்பிட்டால் என்ன என்பது போல் சொல்வார்கள். என் வரையில் யார் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது என் கவலை இல்லை. அவர்களுக்கு பிடித்து இருக்கிறது சாப்பிடுகிறார்கள் என இருந்துவிடுவேன். 

யாரிடமும் போய் சைவம் தான் சிறந்த உணவுமுறை என விவாதம் செய்தது இல்லை. ஆனால் என்னிடம் நிறைய பேர் வந்து அசைவ உணவுமுறைக்கு கொள்கை பரப்பு செயலாளர் அவர்கள் தான் என்பது போல் பேசுவார்கள்.

சிலர் "இவன் அய்யர் தான் ஆனா சொல்ல மாட்டேனுங்குறான்..." என அவர்களே முடிவு செய்துவிடுவார்கள்.  இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை. 

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கல்லூரி சேர்கிற வரைக்குமே சார்ந்த சாதி பற்றி தெரியாது. சாதி சான்றிதழ்  கொடுக்கும் பொழுது தான் அது பற்றி தெரிந்தது. பின் பெயரோடு சாதி பெயரையும் சேர்த்து எழுதி பார்த்தேன், அது அப்படி ஒன்றும் கவர்ச்சிகரமாக இல்லை என்பதால் வெறும் பெயரை மட்டும் வைத்து கொண்டேன்.

சிறு வயதில் இருந்தே அப்பா அம்மா இருவரும் சாதி, மதம் ஆகியவைக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியதில்லை. நல்ல படிக்கணும், உங்க வாழ்க்கை உங்க கையில் என்பது மட்டும் அப்பா அடிக்கடி சொல்வார்.

ஒரு தரம் நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி மாதா கோவில் ஆகியவற்றுக்கு பள்ளி சுற்றுலா போகிறேன் என அம்மாவிடம் சொன்ன பொழுது தர்காவில் உண்டியல் இருந்தால் அதில் போட பணமும், வேளாங்கண்ணி கோவிலில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க காசும் அம்மா கொடுத்தார். இத்தனைக்கும் அம்மா தீவிர இந்து மத வழிபாட்டை பின்பற்றுபவர்.

பைபிள் , குர்ஆன் மற்றும் பகவத் கீதை ஆகியவை வாங்கி படிக்க கொடுத்தார் அப்பா. அப்பா எல்லா மதங்களையும் விமர்சனம் செய்வார். ஆனால் உனக்கான கொள்கையை நீ தான் தேர்தெடுக்க வேண்டும், நான் வேண்டுமானால் அதற்கு உதவி செய்கிறேன் என்று தான் அப்பா சொல்வார். 

கல்லூரி சேர்ந்த பின் பெரியாரை படித்தேன்.

நான் ஏன் சைவம் சாப்பிடுகிறேன் என கேட்டால் சிறுவயதில் இருந்தே சைவம் சாப்பிட்டே பழகி விட்டேன். அசைவம் சாப்பிட கூடாது என்றோ, பிடிக்காது என்றோ இல்லை. அசைவம் சாப்பிட்டு தான் உயிர் வாழ முடியும், சைவ சாப்பாடே இல்லை என ஒரு நிலை வந்தால் அப்பொழுது பார்த்து கொள்கிறேன்.

நான் ரொம்ப காலம் நெருக்கமாய் பழகும் நண்பர்கள் எல்லோரும் தீவிரமாக அசைவம் சாப்பிடுகிறவர்கள் தான். அவர்கள் யாரும் என்னை அசைவம் சாப்பிட சொல்லி கட்டாய படுத்தியது இல்லை.

கல்லூரி விடுதியில் கூட அவைச உணவும் இருக்கும் சைவ உணவும். நான் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருந்தேன்.

வீட்டில் நீ அசைவம் சாப்பிட கூடாது என கட்டாய படுத்தி இருந்தால் கூட வெட்டிவீம்புக்கு சாப்பிட்டு இருப்பேன். அப்படி எதுவும் நடக்கவில்லை.

இப்படியாக வளர்ந்த என்னிடம் நீ அய்யரா என கேட்டால் எத்தனை முறை தான் இல்லை என சொல்லி கொண்டு இருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பு தான் வருகிறது. 

சரி பொதுவில் சாதி பெயரை சொல்ல கூடாது என இருப்பேன், அதையும் மீறி இம்சை தாங்க முடியாமல் சாதி பெயரை சொன்னால், எதோ எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய சாதி பட்டியலை மனப்பாடம் செய்து வைத்திருப்பது போல "அப்படி ஒரு சாதியா.... கேள்வி பட்டதே இல்லையே..." என பதில் வரும். அத்தோடு நிறுத்தி கொள்ளாமல் அது பற்றி மேலும் கேட்டு, அந்த இம்சைக்கு எல்லாம் விளக்கி பதில் சொல்லும் நிலை வந்து விடுகிறது.

அதனால் இப்பொழுது இப்படி கேட்டால் தயங்கமால் ஆமாம் என சொல்லிவிடுவேன். இல்லாவிட்டால் அப்பா காந்தியவாதி என சொல்லிவிடுவேன்.

மனிதனை மனிதனாக எந்த வித முத்திரைகளும் இல்லாமல் பார்க்க பழகி விட்டேன். என்னிடம் போய் இப்படி கேள்வி வந்தால் முன்பு கோபம் தான் வரும். ஆனால் இப்பொழுது அந்த சாதி மத கேள்விகள் எல்லாவற்றையும் நல்ல பொழுதுபோக்காக பார்க்க தொடங்கி விட்டேன்.

பின் குறிப்பு - எல்லா மனிதர்களுக்கும் அவர்களுக்கு பிடித்த உணவை சாப்பிட முழு உரிமை இருக்கிறது. அதே போல் தான் எனக்கும் சைவ உணவு சாப்பிட முழு உரிமை இருக்கிறது.

ஆனால் நான் அசைவ உணவு சாப்பிடாமல் இருப்பது பற்றி கவலை பட்டால் சிறந்த அசைவ பண்டங்களை வாங்க மாதம் 10,000 ரூபாயும், அதனை சிறந்த முறையில் சமைத்து தர சமையல் ஆள் சம்பளம் 20,000ரூபாயும் தர கேள்வி கேட்கும் நீங்கள் தயார் என்றால், அசைவ உணவை சாப்பிடுவதை பற்றி யோசிக்கிறேன்.
Related Posts with Thumbnails