Pages

Friday, July 31, 2020

கூடலழகி - கொண்டாட்டம்

பிடித்த எழுத்தாளரின் தொடர் ஒன்று வார இதழில் வர போகிறது என தெரிந்தால் எத்தனை கொண்டாட்டமாக இருக்கும் ; 1990களில் விகடனில் வந்த மதன், தேவிபாலா மற்றும் பலரது தொடரின் முதல் அத்தியாயத்தை படிக்கும் பொழுது உணர்ந்திருக்கிறேன்.

Kaalachakram Narasimmaa அவர்கள் கல்கி இதழில் எழுத ஆரம்பித்திருக்கிற இந்த தொடரின் அறிவிப்பை படித்ததும் அதே கொண்டாட்ட மனநிலையை அடைந்தேன்.

அதிலும் ஆதித்ய கரிகாலன் மரணத்தை பின்புலமாக கொண்டு சங்கதாரா என்னும் நாவலை எழுதிவிட்டார்.ஆனாலும் திரும்பவும் கதைகளமாக கொண்டு ஒரு தொடர்....

கதை எப்படி போகும் என ஆவலுடன் படிக்க போகிறேன்.
வாழ்த்துகள் சார்.

கல்கி பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய நாவல்களின் மூலம் நடந்த ராஜபாட்டையில் மனம் கவர்ந்த எழுத்தாளர் பயணிக்க போகிறார் என்பதே மற்றொரு கொண்டாட்டமாக இருக்கிறது.

பின் குறிப்பு - தொடரில் இவர் தரும் குறிப்புகளை குறித்துக்கொள்ள நாட்குறிப்போடு படியுங்கள். இவர் தரும் குறிப்புகள் கொண்டே இரண்டு மூன்று சரித்திர நாவல்கள் எழுதிவிடலாம்.

Sunday, July 19, 2020

சங்கதாரா - காலச்சக்கரம் நரசிம்மா

காலச்சக்கரம் நரசிம்மா அவர்களெழுதிய சங்கதாரா நாவலை இன்று காலை படிக்க ஆரம்பித்து மதியம் மூன்று மணிக்கு எல்லாம் படித்து முடித்து விட்டேன். 

ஒரு சரித்திர புதினத்தை படிக்கின்றோம் என்ற உணர்வே இல்லாமல் அடுத்தது என்ன என்ற ஆவலை பக்கத்திற்கு பக்கம் ஏற்படுத்திகொண்டே செல்கிறார் ஆசிரியர். 

முக்கியமாக முன்னுரையிலேயே வாசகர்களை ஒரு சரித்திர கால பயணத்திற்கு தயார் செய்து விடுகிறார் ஆசிரியர். அதுவும் முகவுரை படிக்காமல் செல்வோருக்கு சுவாரசிய நஷ்டம். 

சம்பவங்களை தொடர்ச்சியாய் சொல்லாமல் அடுக்கு அடுக்காய் கதை போகிறது, அப்படி போவதினாலேயே நாவலின் ஆரம்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்விற்கான பதில் அல்லது தொடர்ச்சி நாவலின் இறுதியில் வரும். அப்படி எழுதபட்டு இருப்பதே தனி சுவாரசியத்தை வாசிப்பவர்களுக்கு கொடுக்கிறது.

முக்கியமாக சரித்திர நாவல் என்பது தரவுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட வேண்டும். ஆசிரியர் அதனை சரியாக செய்திருக்கிறார்.

படைப்புகள் வாசிப்பது என்பது அப்படைப்பிற்குள், படைப்பின் வழியாக நாம் மேற்கொள்ளும் ஒரு பயணம். எல்லா படைப்புகளையும் முன் முடிவுகளின்றி வாசிக்க பட வேண்டும். அப்படி வாசித்தது சிறந்த ஒரு அனுபவமாக இருந்தது.

எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா!

தொடர்ந்து ஒரே எழுத்தாளரின் புத்தகங்களை படிக்க கூடாது என்கிற பழக்கத்தையும், ஆண்டுக்கு ஒரு சரித்திர நாவல் தான் படிக்க வேண்டும் என்கிற பழக்கத்தையும் மாற்றி வைத்திருக்கிறார் காலச்சக்கரம் நரசிம்மா.

அத்திமலைத்தேவன், சங்கதாரா ஆகிய நாவல்களை தொடர்ந்து இந்த ஆண்டில் மூன்றாவதாக அவரெழுதிய  அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா! நாவலை படிக்க எடுத்திருக்கிறேன். நாவல் எதை பற்றியது என தெரியவில்லை, எந்தவித முன் முடிவுகளுமில்லாமல் காலச்சக்கரம் நரசிம்மா என்ற பெயருக்காக .....

எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு புத்தகம் வாங்க போகையில் பரிந்துரை பெயரில் வாங்கி, சரி வாங்கிவிட்டோம் அப்படி என்ன தான் இருக்கிறது என படித்து தான் பார்ப்போமே என சட்டென்று முடிவெடுத்து பஞ்ச நாராயண கோட்டம் நாவலை படிக்க ஆரம்பித்தேன். முதல் சில பக்கங்கள் கடக்கிறவரைக்கும் வாசிப்பு அனுபவமாக இருந்தது அதன் பிறகு புத்தகத்தை முடிக்கிற வரைக்கும் நிகழ்ந்தது எல்லாம் மாயாஜாலம் தான். ஹோய்சாலப் பேரரசு, இராமானுஜர், விஷ்ணுவர்த்தன், சாந்தலா என  வாசிப்பின் வழி நிகழ்ந்த காலப்பயணம். பரவச அனுபவம்.

அதன் பிறகு அவரது படைப்புகளை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொன்றும் தனி உலகத்தை ஏற்படுத்தி தனி மாயாஜால அனுபவங்களை தந்தது.

அதே போல் ஒரு மாயாஜால காலப்பயண அனுபவத்தை அனுபவிக்க ......

அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா...!!!
Related Posts with Thumbnails