Pages

Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Sunday, October 11, 2020

1922 வருட நாவல் I இந்திரபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன்

புஸ்தகா இணையத்தில் / செயலியில் பழைய நாவல்கள் எல்லாம் கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட நூறு வருடங்கள் பழமையான நாவல்கள், அதில்  அச்சில் இல்லாதவையும் அடங்கும். இது போன்ற முயற்சிகள் எல்லாம் ஆங்கிந் மட்டுமே  பார்த்திருக்கிறேன்.

அதாவது 15ஆம் நூற்றாண்டில் வந்த இலக்கிய படைப்புகள் எல்லாம் இன்றளவில் படிக்க கிடைக்கிறது. அவ்வளவு ஜாக்கிரதையாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பார்க்க அவ்வளவு பொறாமையாக இருக்கும் தமிழில் இது போன்று வருவதில்லையே என.

இன்று ஆரணி குப்புசாமி முதலியார் என்பவர் எழுதிய "இந்திரபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன்" என்னும் துப்பறியும் நாவலை ஸ்டோரிடெல் செயலியில் படிக்க ஆரம்பித்தேன்.

"இப்பூவுலகில் காலத்திற்குத் தக்கபடி சம்பவங்கள் நேர்கின்றன. நமது மதநூலில் கூறியபடி யுகதர்மத்திற்குத் தக்கபடி யாவும் மாறுபடுகின்றன. மதத்துவேஷத்தால் நமது மதத்தைக் குறை கூறுகிறவர்கள் கூறட்டும். எவ்வளவோ ...." என ஆரம்பித்தது. என்ன இது இக்காலத்தில் துப்பறியும் கதை என்றால் கொலை, மர்மம் என்று தானே ஆரம்பிக்கும், இது புதிதாய் இருக்கிறதே என ஒரு சந்தேகத்தில் கதை வந்த வருடத்தை பார்த்தேன். சரியாய் 98 வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறது. (ஆசிரியர் குறிப்பு 1-10-1922 என தேதி இடப்பட்டு இருக்கிறது)

நன்றி புஸ்தகா. 

1960 தொடங்கி 1990களின் இறுதி வரைக்குமே நிறைய நாவல்கள் வந்திருக்கிறது. அவற்றில் பல அச்சில் கிடைப்பது இல்லை. அரசு நூலகங்களில் மட்டுமே படிக்க கிடைக்கும். புஸ்தகாவில் அதெல்லாம் வந்தால் புக்பூச்சிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.

முக்கியமாக இதுபோன்ற அக்கால படைப்புகள் மூலம் அக்காலத்தில் இருந்த சமூக அமைப்பு, நாட்டு நடப்பு எல்லாம் தெரிந்த கொள்ள முடியும். சரித்திர ஆவணம் போன்று.

நேரம் கிடைத்தால் படிக்கவும்.

Tuesday, August 11, 2020

ஒலிப்புத்தகம் / Audio Book : Audible : Storytel

பம்பாய் கண்ணன், இவரை எஸ்.வி.சேகரோடு பெரிய மாப்பிள்ளை சின்ன மாப்பிள்ளை நாடகத்தில் நடித்தவர் என்றளவில் தான் அறிமுகம். ஆனால் சமீபத்தில் இவரும் இவரது குழுவினரும் இணைந்து வழங்கி இருக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் கடல் புறா ஆகிய நாவல்களின் ஒலி வடிவத்தை கேட்டு பிரமித்திருக்கிறேன். அதனை ஒலி நாடகம் என வகை படுத்திப்பட்டு இருந்தாலும் ஒலி நாடகமாக இல்லாமல் ஒலிப்புத்தகமாக தான் இருக்கிறது.  

தமிழில் இப்பொழுது தான் ஒலி புத்தகங்கள் பெரியளவில் வர ஆரம்பித்து இருக்கிறதென்றாலும் ஆங்கிலத்தில் பல வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது. 

அதில் என்ன பிரச்சனை என்றால் பம்பாய் கண்ணன் குழுவினரது ஒலி புத்தகங்கள் தவிர்த்து மற்ற ஒலி புத்தகங்கள் எல்லாம் ஏற்ற இறக்கத்துடன் இல்லாமல் தட்டையாக இருக்கிறது. 

ராஜேஷ்குமார் நாவலை படிக்கும் பொழுது மனதிற்குள் ஏற்படும் பரபரபப்பு யாரோ ஒரு பெண்மணி வாசிக்கும் பொழுது கதையின்  சுவாரசியமே இல்லாமல் போய் விடுகிறது. 

தமிழியில் இப்பொழுது தான் புத்தகங்கள் ஒலி வடிவில் வர ஆரம்பித்திருப்பதால் பல குறைகள் இருக்க தான் செய்யும். மேலும் புத்தகத்தை சுவாரசியமாக ஒலி வடிவத்திற்கு வாசிக்கும் நபர்கள் அதிகம் இல்லை. 

தமிழ் ஒலி புத்தகங்கள் அதிக லாபம் தருமொன்றாக மாறும் காலத்தில் திரைப்பட பின்னணி குரல் கொடுப்பவர்கள் நிச்சயம் கால் பதிப்பார்கள். 

இதுவரையில் சரித்திர நாவல்கள் ஒலி வடிவமாக கள்ள பதிப்பில் தான் கிடைத்தது. அதாவது யாரோ ஒருவர் குறிப்பிட்ட அந்த சரித்திர நாவல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு தனது குரலில் நாவலை வாசித்து நிழற்படத்துடன் காணொளியாக யூட்யூப்பில் பதிவேற்றி இருப்பார்கள்.

ஆனால் சட்டரீதியான தமிழ் ஒலி புத்தக பதிப்பு பல செயலிகளில் கிடைக்கிறது. குறிப்பாக சொல்வதென்றால் Audible, Storytel போன்ற பிரபல செயலிகள். இதில் ஒரு புத்தகம் மட்டும் வாங்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லாம் மாத சந்தா அல்லது வருட சந்தாவில் மேலே குறிப்பிட்டுள்ள செயலிகளில் ஒலி புத்தகங்கள் கிடைக்கிறது. கூகிள் புத்தகங்கள் என்ற செயலில் மட்டுமே தனி ஒலி புத்தகமாக வாங்க முடியும் என தெரிகிறது. தனி ஒலி புத்தகமாக வாங்கினால் பல நூல்களின் விலை கைக்கு அடங்காத ஒன்றாக இருக்கும்.

நீங்கள் தமிழ் நாவல்கள் மட்டுமே வாசிப்பேன் என இருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். பல எழுத்தாளர்களது புத்தகங்கள் ஒலி வடிவில் இல்லை. 

பிரபல தமிழ் எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை ஒலி வடிவில் கொண்டு வந்தால் இன்னும் பலரை தமிழ் வாசக பரப்பில் இணைக்க முடியும்.

Sunday, July 19, 2020

சங்கதாரா - காலச்சக்கரம் நரசிம்மா

காலச்சக்கரம் நரசிம்மா அவர்களெழுதிய சங்கதாரா நாவலை இன்று காலை படிக்க ஆரம்பித்து மதியம் மூன்று மணிக்கு எல்லாம் படித்து முடித்து விட்டேன். 

ஒரு சரித்திர புதினத்தை படிக்கின்றோம் என்ற உணர்வே இல்லாமல் அடுத்தது என்ன என்ற ஆவலை பக்கத்திற்கு பக்கம் ஏற்படுத்திகொண்டே செல்கிறார் ஆசிரியர். 

முக்கியமாக முன்னுரையிலேயே வாசகர்களை ஒரு சரித்திர கால பயணத்திற்கு தயார் செய்து விடுகிறார் ஆசிரியர். அதுவும் முகவுரை படிக்காமல் செல்வோருக்கு சுவாரசிய நஷ்டம். 

சம்பவங்களை தொடர்ச்சியாய் சொல்லாமல் அடுக்கு அடுக்காய் கதை போகிறது, அப்படி போவதினாலேயே நாவலின் ஆரம்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்விற்கான பதில் அல்லது தொடர்ச்சி நாவலின் இறுதியில் வரும். அப்படி எழுதபட்டு இருப்பதே தனி சுவாரசியத்தை வாசிப்பவர்களுக்கு கொடுக்கிறது.

முக்கியமாக சரித்திர நாவல் என்பது தரவுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட வேண்டும். ஆசிரியர் அதனை சரியாக செய்திருக்கிறார்.

படைப்புகள் வாசிப்பது என்பது அப்படைப்பிற்குள், படைப்பின் வழியாக நாம் மேற்கொள்ளும் ஒரு பயணம். எல்லா படைப்புகளையும் முன் முடிவுகளின்றி வாசிக்க பட வேண்டும். அப்படி வாசித்தது சிறந்த ஒரு அனுபவமாக இருந்தது.

எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

Sunday, June 28, 2020

பா.ராகவன் - நட்பு வட்டம்

பா.ராகவன் எந்நாளும் நல்ல வாசகராக உருவாகவே முடியாது என கூறி  என்னை நட்பு வட்டத்தில் இருந்து தூக்கி விட்டார்.இத்தனைக்கும் அவரது புத்தகங்களை விரும்பி படிப்பேன் என அவரிடமே சொல்லிருக்கிறேன். 

என்ன நடந்தது ???

இந்த 2020 புத்தக திருவிழாவில் அவர் எழுதிய என் பெயர் எஸ்கோபர் புத்தகத்தை வாங்கினேன். சமீபத்தில் படித்த நல்ல புத்தகம்.சில நாட்களுக்கு முன்பு அந்த புத்தகம் ஒரு நாளைக்கு மட்டும் அமேசான் கிண்டிலில் இலவசமாக கிடைக்கும் என குறிப்பிட்டு இருந்தார். இதை அன்றே சொல்லிருந்தால் எனக்கும் கொஞ்சம் பணம் மிச்சம் ஆகி இருக்கும். ( https://m.facebook.com/story.php?story_fbid=2696826930644905&id=100009528732084 )

சரி எதோ வியாபாரம்... அடுத்த புத்தகத்திற்கான மார்க்கெட்டிங் என எடுத்து கொண்டாலும், காலையிலிருந்து இரவு வரைக்கும் வெயிலில் சுற்றி கஷ்ட பட்டு சம்பாதித்த பணத்தை மிச்சம் படுத்திருக்கலாமே. போனால் போகட்டும் என நினைக்குமளவிற்கு தாராள பண போக்குவரத்து இல்லை.

பணத்தை மிச்ச படுத்திருப்பேனே என எப்பொழுதாவது இந்த புத்தகத்தை அமேசான் கிண்டிலில் இலவசமாக கொடுக்கும் பொழுது படித்து கொள்கிறேன் என சொன்னேன். 

அதற்கு நீங்கள் எல்லாம் நல்ல வாசகராக உருவாகவே முடியாது என சொல்லி விட்டார். நட்பு வட்டத்திலிருந்து தூக்கியது கூட பெரும் பிரச்சனை இல்லை. சிறு வயதில் இருந்து பழகிய நண்பன் புரியாமல் சண்டை போட்டு கொண்டு பேசாமல் இருந்தான், அவனிடம் கூட நான்கு வருடங்கள் பேசாமல் இருந்திருக்கிறேன். 

ஆனால் எதோ என்னை பற்றி முழுமையாக தெரிந்தது போல இப்படி சொல்லி விட்டாரே என்ற வருத்தம் தான்.

மேலும் நல்ல வாசகராக ஏன் உருவாக வேண்டும் என்பதற்கான காரணத்தையும் சொல்லாமல் போய் விட்டார் ; எனக்கு தெரிந்து எழுத்தாளர்களுக்கு வரும்படி வர வேண்டும் அல்லது தங்களது அறிவாளி தனத்திற்கு பக்தர்கள் உருவாக வேண்டும். 

ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்த இருந்த நான், படித்து முடித்த பின்னார் இருக்கும் நான் பழைய நான் இல்லை. அந்த புத்தகத்தில் இருக்கும் எழுத்துகள் வாசகனை மாற்றியிருக்க வேண்டும். 

நல்ல வாசிப்பு என்பது எல்லா மனிதரிடமும் அன்பு செலுத்த சொல்லி தர வேண்டும், மனிதர்களை புரிந்துகொள்ள வைக்க வேண்டும், கோபமடையாமல் வைக்க வேண்டும்.... இவை அனைத்தும் வாசிப்பு வாசகனுக்குள் செய்ய வேண்டும். 

வாசிப்பு என்பது இல்லாமலேயே இவற்றை நான் செய்து கொண்டு இருக்கிறேன். பின் ஏன் நான் நல்ல வாசகனாக உருவாக வேண்டும்.

மேலும் யாராது டெலிகிராம் செயலி மூலம் கள்ள பதிப்பை தரவிறக்கம் செய்து படித்துவிட்டு அல்லது இலவசமாக வாங்கி படித்துவிட்டு விமர்சனம் எழுதினால், அதனை தங்களது அடுத்த புத்தகத்தை சந்தை படுத்த பயன்படுத்தி கொள்வார்கள். ஆனால் ஒருவன் நேர்மையாக, நேர்மையான வழியில் செலவின்றி புத்தகத்தை படித்து கொள்கிறேன் என சொன்னால் இப்படி கோபமடைகிறார்கள்.

அது ஏன் சார் ஒருவன் நல்ல வாசகனா இல்லையா என கண்டுபிடிக்க ஏதேனும் தர கட்டுப்பாட்டு கருவி கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களா எழுத்தாளர் சார் ???

ஒரு கடையினுள் போய் அங்கிருக்கும் ஒரு பொருளை பிடிக்கவில்லை அதனால் வாங்க மாட்டேன் என சொன்னால் அந்த பொருளை நான் ஏன் வாங்க வேண்டும் என அங்கு இருக்கும் விற்பனை பிரதிநிதி பத்து காரணங்கள் சொல்வார்.

சொல்லி கொள்வது ஒன்றே தான் அமேசான் கிண்டிலில் புத்தகங்களை வெளியிடும் எழுத்தாளர்களது புத்தகங்களை அவசரபட்டு வாங்கி விடாதீர்கள், சில நாட்கள் கழித்து இலவசமாக அந்த புத்தகத்தை தருவார்கள்.

Tuesday, April 14, 2020

கமர்கட் - இலக்கிய உவமை

சி.சரவணகார்த்திகேயன் எழுதின பிரியத்தின் துன்பியல் புத்தகத்தை வாசித்து கொண்டு இருக்கிறேன்.

அதில்.

எழுத்தாளர் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எழுதிருக்கிறார் போல அல்லது இரவு உணவகத்தில் எதுவுமில்லாத பொழுது உப்புமா தயாரித்து தருவது போல கமர்கட் நாவில் உருட்டி என எழுதிருக்கிறார்.

கமர்கட் மிட்டாயை வாயில் ஒரு ஓரமாக வைத்துக்கொண்டு இருந்தாலே போதும். அதனை வாயிலின் வைத்து உருட்டி உருட்டி யாரேனும் ருசிப்பார்களாக என தெரியவில்லை. 

இது இன்னொரு எழுத்தாளரின் புத்தகத்திற்கு எழுதப்பட்ட முன்னுரை என சொல்கிறார்.(பா. ராகவனின் 14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்)

இம்மாதிரி உருட்டி உருட்சி ருசிப்பது எல்லாம் சிறு பிள்ளைகள் செய்வார்கள் என்றால், அந்த எழுத்தாளர் எழுதுவது எல்லாம் சிறு பிள்ளைதனமானது என சொல்கிறாரா .... தெரியவில்லை.

தமிழ் இலக்கியத்தில் உவமைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டது போல.

இது இப்படியே போனால் தீவிர அரசியல் கட்டுரை தொகுப்பிற்கு இலந்தை வடை போல காரசாரமாக உள்ளது என யாராவது எழுதினால் ஆச்சரியம் இல்லை.

Monday, May 25, 2015

இணையமும் இலக்கியமும்

தமிழ் நவீன இலக்கிய சரித்திரம் என்று ஒன்று எழுதபட்டால் அதில் நிச்சயம் இணையத்தின் பலன்கள் என்று தனியாக எழுத பட வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். 

பத்தாண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004 ஆம் ஆண்டில் மய்யம் என்ற இணையதளத்தில் சிறந்த பத்து தமிழ் புத்தகங்கள் என்ற தலைப்பின் கீழ் விவாதம் நடந்து இருக்கிறது. அதில் கலந்து கொண்டவர்கள் தந்திருக்கும் புத்தக பட்டியல் எல்லாம் முப்பது அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு எழுத பட்டவையாக இருக்கிறது. தற்கால படைப்புகள் பற்றி யாரும் பேசவில்லை.

அப்பொழுது என்னென்ன படைப்புகள் வெளிவந்தன பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 

அதிலொருவர் மு.வரதராசன் அவர்களது படைப்பை பற்றி சிலாகித்து குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது எத்தனை பேர் அவரை வாசிக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

தற்காலத்தில் இலக்கியம் அறிமுகமாகும் முன்னரே எல்லோருக்கும் முக நூல் அறிமுகமாகி விடுகிறது. அதன் மூலம் அறிமுகமாகும் எழுத்தாளர்களின் நூல்களையே அவர்கள் பெரிதும் விரும்பி வாசிக்கிறார்கள். அத்தோடு நிறுத்தி கொள்பவர்கள் ஏராளம். தீவிரமாக நல்ல படைப்புகளை தேடி வாசிப்பவர்கள் குறைவே. 

நமது தமிழ் நாட்டில் தான் இப்படி ஒரு நிலைமை. கழிவறையை சுத்த படுத்தும் அமிலத்தை பற்றி கூட எந்த வித பிரச்சினையும் இல்லாமல் சுலபமாக தெரிந்து கொள்ள முடிகிறது ஊடகங்கள் மூலம். ஆனால் ஒருவனை நல்ல மனிதனாக்க கூடிய நல்ல புத்தகங்கள் பற்றி தெரிந்து கொள்வது கஷ்டமான காரியமாக தான் உள்ளது. 

ஒருவன் இணைய அறிமுகம் இல்லாமல் இலக்கிய பத்திரிகைகள் வாசிக்காமல் இருந்தால் தற்கால நவீன இலக்கிய படைப்புகள் பற்றி தெரிந்து கொள்ள முடியுமா ???

பல சமானியன்களை படைப்பாளி ஆக்கி இருப்பது இணையத்தின் மற்றொரு சிறப்பு. இல்லாவிட்டால் பணத்தை தேடும் வாழ்க்கையில் இவைக்கெல்லாம் நேரமே இல்லாமல் போய் இருக்கும். 

அதே போல் தமிழ் இலக்கிய இணைய வரலாற்றில் இருவருக்கு முக்கிய பங்குண்டு. அவர்கள் சுஜாதாவும், சாரு நிவேதிதாவும். 

சுஜாதா அவர்கள் அம்பலம் இணையதளத்தில் எழுதியது, வாசகர்களுடன் உரையாடியது பற்றி பலர் கூற கேட்டு இருக்கிறேன்.

அதே சாரு நிவேதிதா அவர்கள் கோணல் பக்கங்களை இணையத்தில் எழுதி வந்த காலத்தில் பலர் தூங்காமல் இரவு படித்து இருக்கிறார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். 

இணைய வருகைக்கு முன் பொது மக்களால் விரும்பி படிக்க பட்டது அல்லது கொண்டாட பட்ட எழுத்துக்கள் என்று பார்த்தோமானால் அவை ஜனரஞ்சக பத்திரிகைகளில் வெளி வந்த படைப்புகளே. உதாரணமாக பொன்னியின் செல்வன், கடல்புறா போன்றவை.

ஜனரஞ்சக பத்திரிகைகளில் நாவல்கள் தொடர் கதைகளாக வந்து கொண்டு இருந்த காலத்தில் கணையாழியில் தொடராக வந்த குருதிப்புனல் நாவல் அந்த காலத்தில் இலக்கிய பத்திரிகை வாசகர்களால் அதிகம் படிக்க பட்டது. வேறு சிலராலும் பிரச்சனை செய்வதற்கு என்றும் படிக்க பட்டது அந்த கதை. 

இணைய காலம் வரையிலும் சிலர் பொன்னியின் செல்வன் மற்றும் சாண்டில்யன் நாவல்களை விட்டு வெளி வரவில்லை. 

இணையத்தின் பலரது கட்டுரைகளின் மூலம், இலக்கிய விவாதங்கள் மூலம் கிடைத்த புத்தக அறிமுகங்கள் தான் பலரை தீவிர வாசிப்புக்கு அழைத்து சென்று இருக்கிறது.

இணையத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் புத்தகம் வாங்குவது. முன்பு எல்லாம் தமிழ் புத்தகங்கள் வாங்குவது என்பது மிக சுலபமான காரியமாக இருந்ததில்லை என்று கட்டுரை வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. கடைகள் தேடுவது, பதிப்பக முகவரி தேடுவது என்று கூகிள் இல்லாத காலத்தில் எப்படி சாத்திய பட்டு இருக்கும் ??

தற்போது எல்லா முன்னணி தமிழ் பதிப்பகங்களும் முன்னணி இலக்கிய புத்தக விற்பனை கடைகளும் தங்களுக்கென்று தனிய இணையதளம் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் புத்தகம் வாங்குவது எளிமையாக உள்ளது. அமேசான் போன்ற வியாபார தளங்களும் தமிழ் புத்தகங்களை விற்கிறது. 

இணையத்தின் மூலம் ஏற்பட்டுள்ள சரிவுகளும் உள்ளது. ஒரு படைப்பாளியை முக நூல் தந்திருக்கும் அடையாளத்தை மட்டும் வைத்து கொண்டு விமர்சிப்பது. எழுத்தாளரின் கள போராட்டங்களை பற்றி எதுவும் தெரியாமல் தன்னை போல் அவரும் ஒரு சமூக தள பயனாளி என்ற முறையில் பேசுவதும் அதிகமாகியுள்ளது. 

Sunday, December 15, 2013

கதைகளும் நானும் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியும்

கிராமத்து கதைகளில் இந்த ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிக்கு மிகவும் முக்கியமானது. காலம் காலமாய் சொல்லபட்டு வந்து, ஒரு நம்பிக்கையாய் உருவெடுத்து .... கடந்த இருபது வருடங்களில் காணாமல் போனது. காணாமல் போக முக்கிய காரணம்... யாருக்கும் கதையை சுவாரசியமாக சொல்ல தெரியவில்லை அல்லது சொல்ல விருப்பம் இல்லை

வெளி நாடுகளில் இன்னும் பழம் பெரும் கதைகளை காமிக்ஸாக, கார்டூனாக, படங்களாக பதிவு செய்து காபாற்றி கொண்டு இருக்கும் காலத்தில் தமிழ் நாட்டில் அந்த மாதிரியான முயற்சிகளை யாரும் எடுப்பதில்லை

கதையை கேட்பவர்களுக்கு மட்டும் இல்லை, அதை சொல்பவர்களுக்கும் சுவாரசியமாக தான் இருக்கும். மன அழுத்தம் / MENTAL STRESS ஆகிய வற்றுக்கு சிறந்த மருந்து கதை சொல்வது தான். வருத்தம் என்வென்றால் யாரும் அதை உணராமல் இருக்கிறார்கள்

கதை சொல்வதின் முக்கியத்துவதை எஸ்ரா அவர்கள் தனது பல கட்டுரைகள் மூலம் வலியுறுத்தி வருகிறார்

அது மட்டும் இல்லை, பிள்ளைகளுக்கு கதை சொல்வதின் மூலம், பெற்றோர் பிள்ளை உறவு நெருக்கம் இன்னும் பல படும்.

ம்ம்ம்.... நேரம் இருந்தால் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு பாருங்கள்.. முடிந்தால் குழந்தைகளுக்கு கதையாக சொல்லுங்கள்.

= = = = =

நான் கதைகள் கேட்டு வளர்ந்தவன் தான்... ஏன் இன்றளவும் நேரம்  கிடைத்தால் அம்மா எனக்கு எதாவது நீதி கதைகள் சொல்லுவார்.

சிறு வயதில் அம்மா எங்களுக்கு ( இந்த எங்களுக்கு என்பதில் நானும் என் அண்ணனும் அடங்கும்) ஆயிரதொரு இரவுகள் கதைகளை வித விதமாய் சொல்லுவார். அப்பொழுதெல்லாம் அது ஆயிரத்தோரு இரவுகள் கதையாக அறிமுகமாகவில்லை. ராஜாராணி கதையாக, ஒற்றை கண் ராட்சஷன் கதையாக தான் அறிமுகமானது

அதிலும் இந்த ஒற்றை கண் ராட்சஷனை என்னால் மறக்கவே முடியாது. தினமும் நடு இரவில் நான் உணவு உண்டேன என்று பார்க்க ஜன்னல் வழியாக வந்து என் வயிற்றை தொட்டு பார்ப்பானாம், சாப்பிட்டு இருந்தால் ஒன்றும் சொல்லாமல் போய் விடுவானாம். சாப்பிடவில்லையென்றால் கண்ணை குத்த வருவானாம். உடனே அம்மா எழுந்து "இன்னைக்கு ஒரு நாள் விட்டுரு..நாளைல இருந்து ஒழுங்கா சாப்பிட்டுருவான்" என்று சொன்ன பிறகு போயிவிடுவானாம். இதை தினமும் சொல்லி வைத்தது அம்மா காலையில் என்னிடம் வந்து சொல்லுவார்கள். நாட்கள் போக போக நானே ஒற்றை கண்ணனின் வருகை பற்றி அம்மாவிடம் கேட்க ஆரம்பித்து விட்டேன். பிறகு என் வாழ்கையில் இருந்து ஒற்றை கண் ராட்சஷன் மறைந்து போயிவிட்டான்

இப்பொழுது அதையெல்லாம் நினைத்து பார்த்தால், அம்மா சொன்ன விஷயங்கள் பொய் என்று தெரிந்தாலும், பரவச படாமல் இருக்க முடியவில்லைநாஸ்டல்ஜியா வகையில் மனதில் படிந்துவிட்டது. அந்த அளவிற்கு அம்மாவின் கதை சொல்லும் திறன் இருந்திருக்கிறது

என் பால்யத்தை அந்த ஒற்றை கண் ராட்சஷன் தான் ஒரு இரவில் கலவாண்டு போயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த அறியாமை காலங்களுக்கு மீண்டும் போய் வாழ தினந்தோறும் இரவில் ஒற்றை கண்ணனை எதிர்பார்த்து கொண்டு காத்து இருக்கிறேன்

இந்த அளவுக்கு தாக்கம் பெற அம்மா சொல்லிய கதைகள் தான் காரணம்.

கதை சொல்லிகளாக மாறி, உங்களது குழந்தைகளுக்கு சுவாரசியமான உலகை வார்த்தைகள் மூலம் காட்டிடுங்கள்.  
முக்கியமாக நமது கிராமத்து நம்பிக்கை கதைகளாக சொல்லுங்கள். அதனை காபாற்றவும், அதன் மூலன் நமது பண்பாட்டினை பிடிப்புடன் வைத்திருக்கவும்

நன்றியுடன் 
மேவி.
Related Posts with Thumbnails