Pages

Sunday, April 24, 2022

கலவை - 24/04/2022 - இராவணன் பத்து தலைநகரங்கள்

புதிதாக வாசிக்கிறவர்களுக்கு சொல்லி விடுகிறேன், இப்பகுதி பல துணுக்கு செய்திகள் கொண்ட பகுதி.

- - -

இராவணன்...

இந்திய புராணங்களின் உண்மை தன்மையை அறிந்துகொள்ள வேண்டுமென விருப்பம். அப்படி அறிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது தான் இது இப்படியாக இருக்கலாமோ என தோன்றியது. 

இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவை தவிர்த்து ராமாயணம் என்னும் கதை உலகெங்கும் மொத்தம் 12 நாடுகளில் கதையாகவும் புராணமாகவும் வழக்கத்தில் இருக்கிறது. மொத்தம் 14 நாடுகளிலும் சேர்த்து 300 வடிவங்களில் ராமாயணம் சொல்ல பட்டும் எழுத பட்டும் வருகிறது. 

அந்த 12 நாடுகள் - பர்மா, கம்போடியா, சீனாவின் திபெத்து, லாவோஸ், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ, நேபால், தாய்லாந்து, மலேசியா, மங்கோலியா, வியட்நாம். 

மேல் சொன்ன நாடுகளில் இந்து சமயம் வழக்கத்தில் இருந்த மாதிரி தெரியவில்லை. 

அதே போல் இந்தியாவில் பல மொழிகளில் பத்தாம் நூற்றாண்டிற்கு பின்னரே எழுத பட்டு இருக்கிறது. 

10ஆம் நூற்றாண்டில் தான் இராமானுஜரின் தலைமையில் வைணவ சமயம் பெரும் எழுச்சியை கண்டது. அவர் நாடெங்கும் வலம் வந்து பலரை வைணவ சமயத்தில் இணைத்தார். 

இப்படி பல தகவல்களை அறிந்து கொள்ளும் பொழுது இராவணனுக்கு பத்து தலை இருந்து இருக்காது ; அதற்கு பதிலாக பத்து தலை நகரங்கள் கொண்டு ஆட்சி செய்து இருக்க வேண்டும். அத்தனை பெரியதாக இருந்திருக்க வேண்டும் இராவணனின் ராஜ்ஜியம்.

இராமாயணத்தில் தண்டகாரண்யம் பகுதியில் இருந்தே இராவணன் ஆளுமையில் இருந்ததாக வரும்.

கடவுள் தன்மைகளை புராணத்தில் இருந்து விலக்கி வைத்து அணுகும்போது தான் அதன் உண்மை ஒருவாறு புரிந்துகொள்ள முடியும்.

- - -

பொன்னியின் செல்வன் நாவலை முடிந்த பின் அதே கதை வரிசையில் படிக்க வேண்டிய பல நாவல்கள் இருக்கிறது. 

அதில் முக்கியமானது அரு.ராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி. அதன் சிறப்பு மிகவும் மிகை படுத்த படாமல் கதை நகரும். இக்கதையில் வரும் ஜனநாதன் கச்சிராயன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இளநிலை பட்டப்படிப்பு முடித்த உடன் அப்பா எனக்கு வீரபாண்டியன் மனைவி நாவலை திருச்சி ஹிக்கின்பாதம்ஸ் கடையில் வைத்து வாங்கி கொடுத்தார். 

21 வருடங்களுக்கு முன்பு இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக அ.கி. வேங்கட சுப்ரமணியன் "அரு. ராமநாதன் எழுத்துக்களும் எண்ணங்களும்" என்ற பெயரில் எழுதியும் தொகுத்தும் ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அதனை வானதி பதிப்பகம் தான் பதிப்பித்து வெளியிட்டார்கள். இப்புத்தகத்தை தான் தற்பொழுது வாசித்து கொண்டு இருக்கிறேன்.

- - - 

பொன்னியின் செல்வன் நாவலை மிகவும் விரும்பி படித்தவர்கள் எல்லாம் சங்கதாரா நாவலை படிக்கும் பொழுது பெரும் அதிர்ச்சியடைவார்கள். 

இது இப்படி எல்லாம் இருக்காதே, உண்மைக்கு புறம்பாக எழுதி இருக்கிறார் என சிலம்பாட்டம் ஆடுவார்கள். எதோ நேரில் பார்த்தது போல் பொங்கல் வைப்பார்கள். அவர்களது பின்னூட்டங்களை / பதிவுகளை படிக்கும் பொழுது சிரிப்பாக தான் இருக்கும். 

சங்கதாரா நாவலின் முன்னுரையிலேயே போதிய விளக்கங்களை ஆசிரியர் தந்து இருப்பார். அதனை கூட புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். 

பொன்னியின் செல்வன் பிரியர்கள் அதே கதையோட்டத்தில் வேறு நாவல் படிக்க ஆரம்பிக்கும் முன் முதலில் செய்ய வேண்டியது.... பொன்னியின் செல்வனை விட்டு வெளியே வருவது தான்.

- - -

வெங்கட் பிரபு இயக்கத்தில் வந்த மன்மத லீலை படத்தை பார்த்தேன். இது வரையில் அவரது இயக்கத்தில் வந்த படங்கள் எதோ ஒரு வகையில் பிடித்து இருந்தது. 

ஆனால் இந்த படம் எந்த ரகத்திலும் கவரவில்லை. நல்ல தயிர் சாதத்திற்கு ஜிலேபி தொட்டுகிட்டு சாப்பிட்டது போல் ஒரு படம்.

- - -

இணைய பயன்பாட்டில் எனக்கு இது 25வது வருடம். சமூக தளங்களின் பயன்படுத்த ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகுகிறது.

பதிவுகள் எழுத ஆரம்பித்து 16 வருடங்கள். முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன் பின்னர் தான் தமிழில் எழுத ஆரம்பித்தேன். 

கைபேசி இணைய பயன்பாட்டில் 17 வருடங்கள். 

பல புனைபெயர்கள். 

இணையத்தில் கற்றது தான் நிறைய.

நன்றி.

- - -

Sunday, April 10, 2022

எதற்கும் துணிந்தவன் - Conditions Apply

ஞாயித்து கிழம அதுவுமா நல்ல படத்த பாக்கலாமுன்னு நெட்ஃபிலிக்ஸ் ல ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடான்னு ஜெய் பீம் ல விட்டத இப்ப பிடிச்சுருலாமுன்னு எதற்கும் துணிந்தவன் படத்த தமிழ தவிர்த்து விட்டு இருந்தாங்க. 

சரி தமிழ் ல பாப்போமுன்னு சன் நெக்ஸ்ட் பக்கமா தாவினேன்.

ஒரு 13 வருஷத்துக்கு முன்னாடி வாரணம் ஆயிரம், அயன்னு தொடர்ச்சியா இரண்டு ஹிட் கொடுத்தாரு. அதைய நம்பி அதுக்கு அடுத்ததா வந்த ஆதவன் படத்துக்கு ஆவலா முதா நாள் போனேன். வழக்கமா தியேட்டருக்கு போனா உட்கார இடத்துல ஆணி இருக்கும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கலாம். ஆனா ஆதவன் படத்த பார்க்க போனப்ப சீட் ல உட்கார வைச்சு சீட்டோட சேர்த்து ஆணி அடிச்ச மாதிரி ஆகிருச்சு. கதவ திறந்து விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க, நொந்து நூடில்ஸான பிறவு விட்டாங்க. நல்ல வேளை OTT ல பாத்ததால ஓட்டி ஓட்டி தான் பார்த்தேன்.

ஜெய் பீம திரையரங்கு ல கொண்டாடமா விட்டுட்டோம், அதனால இதைய கொண்டாடிருவோமுன்னு தியேட்டரு வந்த ரசிகர்கள் வைச்சு சம்பவம் பண்ணிட்டாங்க. 

சன் டிவிகாரனே தன்னோட படம் வர போகுதுன்ன செமைய விளம்பரம் பண்ணுவான், ஆனா இந்த படத்துக்கு ரொம்ப பேசாம இருந்தப்பவே டவுட் ஆனேன்.

வாய்ஸ் ஓவர் டெக்னிக் எல்லாம் 1980கள் மைக் மோகனோட கடைசி படத்தோட காலாவதி ஆகிருச்சு. அதைய எல்லாம் இப்ப கொண்டு வந்து சுட்டுட்டு இருக்காரு இயக்கனரு. 

சமைக்க தெரியாதவன் யூ டியூப் பாத்து சமைச்ச மாதிரி படம்.

சூரி கிட்ட நீங்க இந்த படத்துல நடிக்குறீங்கன்னு சொல்லி காமெடி பண்ணிருப்பாங்கன்னு நினைக்குறேன். நம்பி ஏமாந்துட்டாரு போல. அதே மாதிரி தான் பிரியங்கா மோகன் கிட்டையும் சொல்லிருப்பாங்க போல. 

ஆக்ஷன் படமுன்ன வில்லன்னு ஒருத்தரு இருக்கணுமே ஷூட்டிங் போறப்ப இல்லாட்டி ஷூட்டிங் முடிச்ச பிறவு தான் இயக்குனருக்கு தோணிருக்கும் போல.... வில்லன் இல்லாம கூட இந்த படத்த கொண்டு போயிருக்கலாம். வினய் வைச்சு montage shots மட்டும் எடுத்துட்டு மொத்த படத்துலையும் அங்கங்க தூவி விட்டுருக்காங்க. 

கடைசி ல எதற்கும் துணிந்தவன்னு படத்துக்கு இயக்குனர் பெயர் வைக்கல படத்த தியேட்டர் ல பாக்க வந்தவங்களுக்கு வைச்ச பெயர் அதுன்னு ரொம்ப யோசிச்ச பிறவு தான் தெரிஞ்சுச்சு.

கன்னித்தீவு : தினத்தந்தி : உலக சாதனை


நான்கு படங்களுடன் கன்னித்தீவு கதை தினத்தந்தியில் வருவதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். நான்கு படங்கள் எப்பொழுது மூன்று படங்களானது என தெரியவில்லை.

கன்னித்தீவு கதை எங்கப்பா சிறுவயதில் படித்திருக்கிறாராம். நானும் படித்திருக்கிறேன். இந்த தொடரை தொடர்ந்து வாசிக்கிறவர்கள் எப்படி கதையை ஞாபகம் வைத்திருக்கிறார்களென தெரியவில்லை.

இன்று வந்திருப்பது 21,996 அத்தியாயம். அதாவது 20,000 நாட்களுக்கும் மேலாய் தினமும் தொடர் வந்து கொண்டு இருக்கிறது. 1960ல் கருப்பு வெள்ளை படங்களுடன் தொடராக ஆரம்பித்தது 2013ஆம் ஆண்டு முதல் வண்ண படங்களுடன் வர ஆரம்பித்தது.

எம்.ஜி.ஆர். படங்களை விரும்பி பார்க்கும் ஆதித்தனார், 1958ஆம் வந்த எம்.ஜி.ஆர். படமான கன்னித்தீவு பட பெயரையே தொடருக்கும் வைத்து விட்டார்.ஒரு செய்தித்தாளில் புனைவு பட கதை வருவதே புதுமை, அதிலும் இத்தனை ஆண்டுகள் வருவது உலக சாதனை தான். இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தி கொண்டு இருப்பது தமிழ் செய்தித்தாள் என்பது மற்றொரு பெருமை.

ஆயிரத்தொரு இரவுகள் என்ற அரேபிய கதையை தழுவி தான் கன்னித்தீவு கதை.

இந்த தொடருக்கு முதலில் எழுதி ஓவியங்களை வரைந்து வருகிறவர் கணேசன் என்பவர். இடையில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட பொழுது தங்கம் என்பவர் சிறிது காலம் தொடரை எழுதி இருக்கிறார்.

சரி இது பழைய தொடர் இப்பொழுதுள்ள தலைமுறையினர் யாரும் விரும்பி வாசிக்க மாட்டார்கள் என நினைத்தால் ஏமாற்றம் நினைத்தவர்களுக்கு தான். இளம் தலைமுறை சிலர் கன்னித்தீவின் முழு கதை என்ன என்று தேடி கொண்டும் விசாரித்து கொண்டும் இருக்கிறார்கள்.

கன்னித்தீவு தொடருக்கு போட்டியாக கண்ணதாசன் தனது தென்றல் திரை பத்திரிக்கையில் ஒரு தொடர் பட கதையை வெளியீட்டு வந்தார். கன்னித்தீவு அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. மேலும் கண்ணதாசன் சொன்னது போல் படங்கள் போடாமல் வெவ்வேறு படங்கள் வரையபட்டால் சில குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

பிறகு கன்னித்தீவு என்ற பெயருக்கு அதிக கவர்ச்சி வந்ததினால் கன்னித்தீவு வீரன், கன்னித்தீவு மோகினி என்ற பெயரில் எல்லாம் திரைப்படங்களும் கதைகளும் வெளிவந்து இருக்கிறது. 

ஒரு கட்டத்தில் பலருக்கு சிறுவயதில் இந்த கன்னித்தீவு தொடர் தான் ஆரம்ப புள்ளியாக இருந்தது என்பது தான் உண்மை.
Related Posts with Thumbnails