Pages

Tuesday, June 4, 2024

ரியான் பராக் - தேவை இல்லாத சர்ச்சை


தமிழ் பத்திரிக்கையாளர்களிடமிருந்து சர்ச்சை, அதிர்ச்சி, உல்லாசம், அழகி போன்ற வார்த்தைகளை அவர்களிடமிருந்து பிடுங்கி விட்டால் அவர்களால் பல செய்திகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியாது.

அதுவும் சில இடங்களில் அவர்கள் சொல்வது தான் நிஜம் என்பது போல் எழுதுவார்கள்.

ஏனென்றால் நன்றாக எழுதுகிறவன் நன்றாக யோசிப்பான் என்று மக்கள் நினைப்பதால் வரும் பிரச்சனை.

இப்பொழுது அவர்களிடம் சிக்கி இருப்பது துடுப்பாட்ட வீரர் ரியான் பராக்.

இன்ஸ்டாகிராம் செயலியில் அவ்வப்போது பரபரப்பான அலை வரும் பின்னர் கடந்து போகும். அப்படியாக சில நாட்களுக்கு முன்னர் ஒரு அலை ஆரம்பித்தது...

அதென்ன அலை..

யூடியூப் செயலியில் (உன்குழாய் என மகுடேஸ்வரன் மொழிபெயர்ப்பாரென நினைக்கிறேன்) ஒருவரது தேடுதல் சரித்திரத்தை (Search History) திரைச்சொட்டெடுத்து (Screenshot) பகிர்வது. அப்படி பலர் பகிர்ந்திருக்கிறார்கள்.

ரியான் பராக்கும் அப்படியே செய்திருந்தார். 

அதில் அவர் நடிகைகளின் கவர்ச்சியாக திரைப்படத்தில் வரும் காட்சிகளை தேடி உள்ளார் என்பது தெரிந்திருக்கிறது. 

இதனை பரபரப்பான செய்தியாக பல புரட்சி பத்திரிக்கையாளர்கள் செய்தியாக எழுதிருக்கிறார்கள். 

இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது

யூடியூப் - இந்திய அரசின் தொழில்நுட்ப பிரிவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலி.

ரியான் பராக் தேடுதலில் வர போவது  இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறையின் கீழ் இயங்கும் தணிக்கை குழுவினாரால் தணிக்கை செய்யப்பட்டு வெளியான இந்திய திரைப்பட பாடல்கள் மற்றும் காட்சிகள் தான் வர போகிறது. 

மேலும் சட்டபூர்வமாக பொதுதளத்தில் பார்க்க கிடைக்கும் காட்சிகள் பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. 

அது எப்பொழுது பிரச்சனையாகுமென்றால் அதனை தேவையில்லாமல் ஒரு பெண்ணிற்கு அனுப்பி தொல்லை தரும் பொழுது தான்.

ரியான் பராக் அவர்களுக்கு 22 வயது தான் ஆகுகிறது. இளம் வயது தான். அந்த வயதில் தேடி பார்ப்பது தவறு இல்லை. இள வயது கிளர்ச்சி என்பது சாதாரணமான ஒன்று தான்.

இதையெல்லாம் பிரச்சனையாக கேள்வி கேட்க கூடிய உரிமை ஒருவருக்கு இருக்கிறதென்றால் அது ரியான் பராக்கின் மனைவிக்கு உண்டு.

ஒன்றுமில்லாத பிரச்சனையை எதோ தேசிய குற்றம் போல் எழுதுவது என்ன மாதிரியான மனநிலையென தெரியவில்லை. 

இது ஒரு பக்கம் இருக்க...

இணைய பத்திரிக்கையாளர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்களென பார்த்தால் மக்களது வக்கிர புத்திக்கு தீனி போட்டு அவர்களை தங்களது செய்தி பத்திரிக்கை இணையதளத்திற்கு வர வைக்க தான்.

ஏன் அப்படி ...

அப்படி அதிகமான மக்கள் அந்த தளத்திற்கு வந்தால் தான் பார்வையாளர்கள் வரவு அதிகம் இருக்கிறது என காட்டி விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் மூலம் லாபம் பார்க்க முடியும்.

இதனை ஆங்கிலத்தின் Market Space என சொல்வார்கள். இந்தியாவில் எல்லோரும் திறன்பேசி (Smart phone) வைத்திருப்பதால் இப்படியாக செய்தி வர காரணம். 

மக்கள் எப்பொழுதும் ஆக்கபூர்வமான விஷயங்களை விட ஆக்கமே இல்லாத பொழுதுபோக்கு பக்கம் தேடி போவதால் தான்... அவர்களெல்லாம் ஒரு வகையில் இணைய ஈசல்களே.

இந்த இணைய ஈசல்களை உண்டு தின்று உயிர் பிழைக்கிறார்கள் சில புரட்சியாக எழுதும் பத்திரிக்கையாளர்கள். 

இதிலென்ன வேடிக்கை என்றால் எதோ இவர்களே புலனாய்வு செய்து கண்டுபிடித்தது போல் எழுதுவது தான்.

#நடந்ததுநடந்தபடியே 

#RiyanParag

No comments:

Related Posts with Thumbnails