Pages

Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Saturday, October 25, 2025

கோபுலு - காலங்கள் கடந்த ஓவியர்


இது பிரபல ஓவியர் கோபுலுவின் (S. கோபாலன்) மிகவும் புகழ்பெற்ற, என்றும் பசுமையான ஓவியங்களில் ஒன்று.

ஓவியத்தைப் பற்றிய குறிப்பு:

ஓவியர் கோபுலுவின் கோடுகளில் தனித்துவமான நகைச்சுவையும், அன்றாட வாழ்வின் யதார்த்தமும் கலந்திருக்கும். அதைப் பறைசாற்றும் ஒரு சித்திரம்தான் இது.

 * இந்த ஓவியத்தில் ஒரு பரபரப்பான குடும்பச் சூழல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நடுநாயகமாக ஒரு தந்தை அவசரமாகக் கிளம்பும் கோலத்தில் இருக்கிறார். அவரது உடையைச் சரிசெய்து, அவர் அவசரமாகக் கிளம்புவதைப் பார்த்து, மனைவி பதற்றத்துடன் அவருக்கு உதவ முயல்கிறார்.

 * வீட்டின் பல உறுப்பினர்களும் தங்களது வேலையில் மூழ்கியிருக்கிறார்கள் – குழந்தைகள் ஆட்டம், கொண்டாட்டம் மற்றும் குறும்புத்தனத்தில் இருக்கின்றனர்.

 * ஒரு சிறுமி தன் முகம் பார்க்கும் கண்ணாடியில் கேமராவைப் பிடித்துப் பார்ப்பது, இன்னொரு சிறுவன் தரையில் மையைக் கொட்டி விளையாடுவது, சமையலறைக்குள் ஒரு பெண் குனிந்து பார்ப்பது என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அசைவுகளிலும் ஒரு துள்ளலும், ஜீவனும் நிறைந்திருக்கிறது.

 * சுவர் முழுக்கக் கடிகாரம், காலண்டர், மான் கொம்பு, ஓவியங்கள், பழங்காலப் பொருட்கள் எனத் தொங்கவிடப்பட்டிருப்பது, அக்காலத்திய நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் வீடுகளில் இருந்த நெருக்கமான, வாழ்வியல் நிறைந்த சூழலை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

 * சின்னச் சின்னக் கோடுகளால், முகபாவனைகளால், உடல் மொழிகளால் கோபுலு அவர்கள் ஒரு முழு நீளக் கதையையே இந்த ஒற்றை ஓவியத்தில் சொல்லியிருக்கிறார். அவசரம், அன்பு, கண்டிப்பு, விளையாட்டு, குறும்பு எனப் பல உணர்வுகளின் கலவையாக இந்த ஓவியம் என்றும் ரசிக்கத்தக்கதாக உள்ளது.

ஓவியர் கோபுலுவின் இந்தக் கோட்டோவியங்கள், தமிழ் வெகுஜனப் பத்திரிகைகளின் பொற்காலத்தில் (குறிப்பாக ஆனந்த விகடன், கல்கி) வாசகர்களைக் கட்டிப்போட்டதில் மிக முக்கியப் பங்கு வகித்தவை. தேவனின் 'துப்பறியும் சாம்பு', கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்', சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' போன்ற பல தொடர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்கள் கதைமாந்தர்களுக்கு உயிரூட்டின.

 அவரது ஓவியங்களில் காணப்படும் நகைச்சுவை உணர்வும், எளிய மக்களின் வாழ்வைப் படம்பிடிக்கும் நேர்த்தியும் தான் இன்றும் அவரை ஒரு 'எவர் கிரீன்' ஓவியராக நிலைநிறுத்தியுள்ளது.

Sunday, September 29, 2024

வரி - வரி ஏய்ப்பு - அத்தியாயம் 6 - மதிப்பு கடத்தல்

 
போன அத்தியாயத்தில் ஒரு செல்வந்தர் சட்ட ரீதியாக தனக்கு வேண்டிய வேலைகளை செய்ய நிறுவனத்திற்குளேயே ஒரு கருப்பு ஆட்டை அமர்த்துவார் என சொல்லிருந்தேன்.

அதற்கு முன்....

கடன்கள் இரண்டு வகை படும் ஒன்று வங்கி மூலமாகவோ அல்லது நிதி நிறுவனம் மூலமாகவோ வாங்குவது. அப்படி நிறுவனங்கள் வங்கியில் இருந்து கடன் வாங்கும் பொழுதும் அதனை வைத்து வருமான வரியை குறைத்து கொள்வார்கள். ஏனென்றால் ஒரு பெரும் நிறுவனம் என்பது பலருக்கு வாழ்வியல் ஆதாரத்தை தரும் ஒன்று.  இந்திய அரசியல் சட்டம் பல தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதுகாப்பாக இருக்க இம்மாதிரியான சலுகைகளை தந்திருக்கிறது பெரும் நிறுவனங்களுக்கு. 

இது சட்ட ரீதியிலான கடன்.

அதே நிறுவனமோ அல்லது நிறுவன இயந்திரத்தை இயக்கும் மனிதர் எடுக்கும் தவறான முடிவுகளால் வங்கிகளில் இருந்து கடன் பெரும் தகுதியை இழந்திருக்கும்.

கடன் பெற்றால் தான் நிறுவனம் உயிரோடு இருக்கும் என்கிற நிலை வந்தால், அவர்கள் நாடுவது பெரும் நிதியாளர்களை தான். அதாவது பைனான்சியர்ஸ்.

சினிமா என்பது எல்லோருக்கும் தெரிந்த நுகர்வு பண்டம் என்பதால் பைனான்சியர் என்றால் சினிமா சம்பந்தப்பட்ட வார்த்தையாகவே பொதி புத்தியில் நிலைத்துவிட்டது.

ஆனால் சினிமா பைனான்சியர்களை விட அதிகம் லாபம் நடந்துவது இந்த நிறுவன பைனான்சியர்கள் தான்.

அது எப்படி சொல்லுற ?

திரைத்துறையில் யாரும் தங்களது பெயரில் கடன் வாங்குவது இல்லை. அவர்கள் எடுக்கும் படத்தில் பெயரில் தான் கடன் வாங்குவார்கள். அந்த படம் வெளிவந்து லாபம் அடைந்தால் தான் உண்டு இல்லையென்றால் இல்லை. 

படத்தின் மதிப்பு என்பது அதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகியை வைத்தே முடிவு செய் படுவதால், உச்ச நடிகர்கள் இருந்தால் தான் படத்திற்கு மதிப்பு இல்லையென்றால் உள்ளடக்கம் சார்ந்த மதிப்பு கூட்டலை படத்தை சார்ந்தோர் தான் செய்ய வேண்டும்.

உதாரணமாக இயக்குநர் பாலா சேது படம் வெளியீடுக்கு கஷ்ட பட்டதையும் பரதேசி பட வெளியீட்டுக்கு கஷ்ட பட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்துகொள்ளலாம். 

இப்படியான நிலை இருப்பதாலேயே பிரபல நடிகர்கள் வைத்தது தான் சட்டமாக இருக்கிறது.

ஆனால் நிறுவனங்களில் அப்படி இல்லை. நிதி அறிக்கை, லாப கணக்கு, வணிக ஒப்பந்தங்கள் தான் பேசும். அதே போல் நிறுவன குடுமி பைனான்சியர் கையில் கடன் கொடுக்கும் பொழுதே வந்துவிடும்.

இந்த பைனான்சியர்கள் பொறுத்தவரை தனிநபர் நிறுவனம், கூட்டு ஒப்பந்த நிறுவனம் அல்லது சிறிய நிறுவனம் என்றால் பிரச்சனை இல்லை. ( Sole Proprietorship / Partnership Firm / SME )

இதே பெரிய நிறுவனமாக இருக்கும் பொழுது அதில் தங்களது ஆளுமை இருக்க வேண்டுமென தங்களது ஆளை நிர்வாக குழு உறுப்பினராக சேர்ந்துவிடுவார். ( Board Of Directors ).

கடன் தொகை மிக பெரியது என்றால் என்ன செய்வார்கள் ?

இந்த நிதியாளர்கள் "சிறப்பான பழகுதல்" முறையால் வங்கியில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஆட்களை நட்பு வட்டத்தில் வைத்திருப்பார்கள்.  அவர்கள் வைத்து கடன் பெறவே முடியாத அளவுக்கு நிதி அறிக்கைகளை கொண்ட நிறுவனத்திற்கு கடன் பெற்று தருவார்கள். 

அது எப்படி முடியும் ?

ஒரு நிறுவனத்தின் கடன் தகுதி என்பது அந்த நிறுவனத்தின் கையெழுத்து போகும் அதிகாரத்தில் இருப்போரின் கடன் தகுதியை பொறுத்தே அமையும்.

அப்பொழுது கடன் வாங்க வேண்டுமென்பதற்காக மற்றவர்களை நீக்கிவிட்டு புதிதாய் வங்கியில் இருந்து நல்ல வட்டியில் அதிகமான தொகை கடனாக பெற கூடிய நல்ல நிதி நிலை கொண்ட ஒருவரை நிறுவன இயக்குநராக சேர்ப்பார்கள். 

எல்லாம் சரி அவர்களை வைத்து என்ன மாதிரியான காரியங்களை செய்வார்கள் ?

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வரி ஏய்ப்பில் முக்கிய பங்கு என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கருப்பு பணம் என்பது வெளிநாட்டிற்கு போய் பல கைகள் மாறி திரும்ப வெள்ளை பணமாக கருப்பு பணத்தை உருவாக்கியவர் கைக்கு வருவது தான்.

எல்லாம் சரி அது எப்படி கருப்பு பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்புவார்கள் ?

தங்கம், போதை பொருள் என திரைப்படங்களில் காட்டுவார்கள். அதெல்லாம் இலெமூரியா கால கதைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது.

உலகம் முழுக்க வணிக வாய்ப்புகள் அதிகமான பின்னர் கண்டுபிடித்தால் மாட்டிகொள்வோம் என்பது போன்ற விஷயங்களில் வரி ஏய்ப்பாளர்கள் நுழைவது இல்லை.

இல்லையென்றால் வேற வழியில் கருப்பு பணத்தை அனுப்புவார்கள் ?

பழங்கால வரி ஏய்ப்பு முறை தான் அது.

இந்தியா நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு காய்கறி பழங்கள் எல்லாம் ஏற்றுமதி ஆகுகிறது.

இதில் அரசு இயந்திரம் சோதனை என வந்தால் என்ன கண்டுபிடிப்பார்கள். 

ஒன்றும் இல்லை. காய்கறிகளில் பழங்களுக்கு நடுவில் எதாவது மறைத்து வைத்து அனுப்ப பட்டு இருக்கிறதா அவை அரசால் ஏற்றுகொள்ள பட்டவையா என்று தான் சோதனை செய்வார்கள். மற்றபடி காய் பழங்கள் ஏற்றுமதி இறக்குமதி எல்லாம் பெரிய விஷயம் இல்லை தான்.

உதாரணமாக -

அமெரிக்க நாட்டில் இருக்கும் ஒரு நிறுவனம் இங்கு இருந்து 20 டன் வெங்காயம் வாங்கி இருக்கிறது. அதனை இங்கு இருந்து அனுப்புவார்கள். 

அமெரிக்க நிறுவனத்தில் இந்த பரிவர்த்தனையை பார்த்துகொள்ள ஒருவர் இருப்பார், அவர் நமது நிதியாளர்களால் அமர்த்தபட்ட நபராக இருப்பார். அவரே இந்தியாவில் இருந்து தான் வெங்காயம் வாங்க வேண்டும் என்பதை சொன்னவராக இருப்பார்.

இதில் எப்படி கருப்பு பணம் சம்பந்தப்பட்டு இருக்கிறது ?

இங்கு 20டன் வெங்காயத்திற்கு பதில் 30டன் வெங்காயமாக அனுப்ப பட்டு இருக்கும். அதாவது 20டன் நிறுவன கணக்கில் வந்துவிடும். மிச்சம் இருக்கும் 10 டன் வெங்காயம் கருப்பு பணத்தின் இன்னொரு உருவம். 

பின்னர் இந்த பத்து டன் வெங்காயம் மட்டும் தனியாக எடுக்க பட்டு மக்களிடத்தில் விற்க படும். இந்திய கருப்பு பணம் அமெரிக்க மக்களின் மூலம் வெள்ளை பணமாக மாற்ற பட்டு இருக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள - Trade Based Terrorist Financing And Money Laundering - சர்வதேச அறிக்கைகள்

பின்னர் என்ன நடக்கும் ?

இது ஒன்று மட்டும் தான் வழியா வேறு வழி இல்லையா ?

தொடரும்....

#வரி #வரிஏய்ப்பு

வரி - வரி ஏய்ப்பு - அத்தியாயம் 5 - செலவு கணக்கு


போன அத்தியாயத்தில் அடையாள திருட்டை பற்றி சொல்லிருந்தேன், பின்னர் வரி ஏய்ப்புக்கு முக்கிய காரணியாக கடன்களும் அது உருவாக்கி தரும் மறைமுக வழிகளும் இருக்கிறதென சொல்லி முடித்திருந்தேன்.

பெரும் நிறுவனங்களும் பெரும் செல்வந்தர்களும் பெரும்பாலும் கடன்கள் வாங்குவதேனென பார்த்தோமானால் போலி கணக்கு எழுதுவதற்காக இருக்கும். பல பெருநகர வணிக சந்தைகளை கவனித்து பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு தோன்றுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். இவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் பிறகு ஏன் கடன் வாங்குகிறார்கள். இவர்கள் நினைத்தால் ஒரே காசோலை தந்து மொத்த விற்பனை செய்து விடலாமே. 

இதற்கு கடன் வசூலிப்பது எப்படி நடைபெறுகிறதென பார்க்க வேண்டும்.

ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து கடன் வாங்கும் பொழுதும் கடன் தொகை நேரடியாக கடன் பெறுபவரின் வங்கி கணக்கிற்கு போய் விடும்.

பின்னர் மாதாந்திர தவணை முறையில் வங்கி கணக்கில் இருந்து சிறு சிறு தொகையாக எடுக்க படும்.

மாத சம்பளம் வாங்குபவருகளெல்லாம் இப்படியாக நடக்கும். 

பெரும் பணம் படைத்தவர்கள் மாதாந்திர தவணை செலுத்தி கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே சமயம் மாதாமாதம் சிறு தொகைகளாக ரொக்க பணமாக செலுத்துவார்கள். 

அதுவும் கடன் தவணை ஆரம்பித்து சில மாதங்களிலேயே ஆரம்பித்துவிடுவார்கள்.

பொதுவாக கடன் வாங்கி வியாபாரத்தில் அதனை முதலீடு செய்யும் பொழுது லாபம் என்பது உடனே வராது. அப்படியாக லாபம் வரும் பொழுது தான் மற்ற செலவுகளுக்கு பணம் செலுத்திவிட்டு கடனுக்கு பணம் செலுத்தி அசலை குறைக்க முடியும். 

ஒரு வியாபாரத்தின் தன்மையை ஆராய்ந்தாலே லாபம் எப்பொழுது வருமென கணிக்க முடியும்.

அப்படியாக அந்த காலத்திற்கு சிறு தொகை கடன் கணக்கிற்கு வந்தால் பிரச்சனை இல்லை. சரி எதோ பணம் வந்திருக்கிறது அதனால் அசலை குறைக்க பணம் செலுத்துகிறாரென எடுத்து கொள்ளலாம்.

ஆனால் தொடர்ந்து அப்படியாக வரும் பொழுது சந்தேகம் வர தான் செய்யும்.

ஏன் கடன் வாங்கினார் ? இப்படி சிறு லாபம் வருமென்கிற நிலையில் இருந்தால் கடன் வாங்காமலேயே வியாபாரத்தை நடத்தி இருக்கலாமே ?

இம்மாதிரியான நிலையில் மூன்று வாய்ப்புகள் தான் இருக்க முடியும் வணிக சந்தையில்.

1. உண்மையிலேயே உடனே லாபம் வருகிறது மனசாட்சியுடன் வாடிக்கையாளர் பணம் செலுத்துகிறார். இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

2. கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற எடுக்கும் முயற்சி. இதற்கும் வாய்ப்பு குறைவு. சந்தையில் ஒரு வணிகர் நேரடியாக இதில் ஈடுபடுவது இல்லை. பெயர் கெட்டு விடும் என்பதால்.

3. போலியாக நஷ்ட கணக்கு காட்ட. இதற்கு வாய்ப்புகள் அதிகம். போலி செலவு கணக்கை காட்டி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி விடலாம். 

சரி கடைசி குறிப்பை மட்டும் எடுத்து கொண்டு சிலவற்றை பார்ப்போம்.

பல வருடங்களுக்கு முன்பு நான் காஞ்சிபுரம் வணிக சந்தையில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது தெரிந்த வணிக தணிக்கையாளரை சந்தித்தேன். 

அவர் ஒரு விசித்திரமான கடன் கணக்கை பற்றி சொன்னார்.

ஒரு நபர் கிணறு வெட்ட கடன் வாங்கி இருந்தார். அதனை வைத்து விவசாயம் செய்ய போவதாக கடன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். 

சில மாதங்கள் போன பிறகு கடன் தவணை கட்டவில்லை ஏனென்று கேட்க நேரில் போய் பார்த்தால் கூட்டமாக வந்த மாடுகள் மண்ணை கிளறி விட்டதால் கிணறு மூடிகொண்டது என சொன்னாராம்.

இந்த வழக்கு ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்றைய தேதியில் இந்தியாவில் இருக்கும் பிரபல கோயில் ஒன்றில் தயாரிக்க படும் பிரசாதத்தில் அசைவ பொருட்கள் இருந்ததாக செய்திகள் வருகிறது.

அப்பொழுது குறிப்பிட்ட நாட்களில் தான் இந்த பிரச்சனை வருகிறது. அதனால் இதுவரையில் வாங்கிய கோடி கணக்கான சமையல் பொருட்களை குப்பையில் கொட்டி அழித்துவிடுவது என முடிவில் வருவார்கள்.

பிறகு என்ன ஆகும் கணக்கில் இத்தனை கோடி ரூபாய் சமையல் மூல பொருட்கள் வாங்க செலவாகி விட்டது என எழுதுவார்கள்.

சரி அப்படியானால் வியாபாரம் நடந்து லாபம் வந்திருக்குமே அந்த கணக்கு எங்கே என கேட்டால் ...

எங்கே வியாபாரம் நடந்தது, அசைவம் கலந்திருக்கிறது என குப்பை அதனை கொட்டி விட்டோமென சொல்வார்கள்.

இப்பொழுது உண்மையில் அந்த கோடி கணக்கான ரூபாய் வைத்து பொருட்கள் வாங்கினார்களாயென கண்டு பிடிக்க முடியாது.

சரி அந்த தொகை ஒரு கடைக்கு போய் இருக்கும், அங்கே வைத்து கண்டுபிடிக்கலாமென போனால் அந்த கடைகாரர் அந்த மூல பொருட்களை கடன் பெயரில் இன்னாரிடமிருந்து வாங்கினேன், அவருக்கு ரொக்க பணமாக கொடுத்துவிட்டேனென சொல்வார்.

அவர் சொன்ன படியே அவரது வங்கி கணக்கில் இருந்து அந்த தொகை எடுக்க பட்டு இருக்கும். இது போல ஆயிர கணக்கில் இருக்கும். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பண பரிவர்த்தனை பாதையை தொடர்ந்து செல்ல முடியாது.

பல ஆயிரம் கருப்பு பணம் உருவாகி இருக்கும். 

இதற்கென எல்லா மத நிறுவனங்களும் இப்படி தான் என சொல்லவில்லை. 

அந்த நிறுவன சட்ட திட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள ஒருவரை அந்த நிறுவனத்திற்குள் அமர்த்துவிடுவார் ஒரு செல்வந்தர்.

கருப்பு பணம் இப்படி அப்படியென பல நாடுகள் சுற்றி பல வணிக நிறுவனங்கள் வழியாக மீண்டும் அந்த செல்வந்தர் கணக்கிற்கு வெள்ளை பணமாக வந்து சேரும்.

கோயிலிருந்து கருப்பு பணம் உருவாகி விட்டது. அது மேற்கொண்டு எப்படி எந்த வழியில் போகும் ?

தொடரும்

#வரி #வரிஏய்ப்பு

வரி - வரி ஏய்ப்பு - கடன்கள் - அடையாளங்கள் விற்பனைக்கு - அத்தியாயம் 4


பழங்காலத்தில் வணிகம் சார்ந்து சமூக நிலை அமைப்புகள் உருவான பின்பு அதனை ஏற்று கொள்ளாமல் இருந்த மக்களை ஆதிக்க நிலையில் இருந்தவர்கள் தாங்கள் உருவாக்கிய சமூக அமைப்பில் இருந்து ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தனர். 

தொழில் செய்யவோ வணிகம் செய்யவோ குடும்பம் நடத்த பொருள் உதவியோ அவர்களுக்கு வழங்க படவில்லை. 

அப்பொழுது சமூக அமைப்பை ஏற்று கொண்ட மக்கள் செய்ய விரும்பாத வேலைகளை செய்து உயிர் வாழ வேண்டிய நிலைக்கு தள்ள பட்டார்கள். மனித கழிவை அகற்றுவது, பிணம் எரிப்பது, சாக்கடை சுத்தம் செய்வது போன்றவை. அதுதான் மற்ற மக்கள் செய்ய விரும்பாத வேலையாக இருந்தது. (விரிவாக உப்புக்கு சப்பாணி அத்தியாயம் 2ல் வரும்)

அதிலிருந்து பெரிய வருமானம் என்று வராது. ஊர் மக்கள் கொடுக்கும் பணம் சாப்பாட்டை கொண்டு தான் அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள்.

இயல்பாகவே இந்த போன்ற நிலையில் இருப்போர்கள் மீது வரி என எதையும் விதிக்க முடியாது. 

இருந்தும் அவர்களிடம் இருந்து பணம் பார்க்க நினைத்து, அவர்களை அடிமைகளாக மாற்ற நினைத்து வைத்தது தான் பெண்கள் மீதான மார்பு வரி.

கால போக்கில் சமூக அமைப்பை ஏற்று கொள்ளாத மக்களை கீழ்நிலை சாதி என முத்திரை கொடுத்து ஆதிக்க மக்களின் அடிமைகளாக மாற்றினார்கள்.

மார்பு வரி பற்றி பேசும் பொழுது எல்லாம் கேரளா நங்கேலி பற்றி தான் அதிகம் குறிப்பிடுவார்கள்.

ஆனால் மகாபாரதத்தில் பாண்டவர்கள் பகடை விளையாட்டில் தோற்று அடிமைகளாக ஆகி இருப்பார்கள். அப்பொழுது திரௌபதியையும் பந்தயமாக வைத்து தோற்று இருப்பார்கள். திரௌபதியை சபைக்கு இழுந்து வந்த உடன் மார் உடல் மறைத்து புடவை கட்டி இருப்பார். மார்பை மறைத்துகொள்ள பெண் அடிமைகள் வரி செலுத்த வேண்டுமென துரியோதனன் சொல்ல, வரி செலுத்த பணம் இல்லாத படியால் துச்சாதனன் இடம் சொல்லி துகிலுரிக்க சொல்வான். 

இப்படியாக ஒரு நாட்டுபுற கதை ஒன்று இருக்கிறது. ஆக சரித்திரத்தில் நாட்டை வளர்க்க மட்டும் இல்லை அடிமைகளை உருவாக்கவும் வரி பயன் பட்டு இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

போன அத்தியாயத்தில் வாடகைக்கு வங்கி கணக்கு பயன்படுத்த படுவதை பற்றி பார்த்தோம். அதுவே ஆரம்ப புள்ளி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் வேலையில்.

சில மாதங்களுக்கு முன்பு மிசோரம் மாநிலத்தில் வாகன கடன்களில் போலியான வாடிக்கையாளர்களை கொண்டு கடன் வழங்கியது பெரும் பிரச்சனையாகி பரபரப்பான செய்தியானது. ஆனால் பொது மக்கள் என்னவோ அதனை சிறு பிரச்சனையென கடந்திருப்பார்கள். ஆனால் கடல்களில் மிதக்கும் பெரிய பனிப்பாறையின் நுனி தான் அவையென பலருக்கு தெரிவதில்லை.

மூன்றாம் அத்தியாயத்தில் சொன்னது போலவே தான் கிடைக்கும் தரகும் பணத்திற்கு ஆசைபட்டு அடையாளங்களை விற்கிறார்கள்.

இப்படியாக போலி அடையாளத்தை வைத்து எந்த கடன் வாங்க முடியும் என கேள்வி வரும்.

முக்கியமாக கடன் மற்றும் கடன் அட்டைகள்.

நமது அரசும் அரசு இயந்திரமும் மத்திய வங்கியோடு இணைந்து இது போன்ற குற்றங்களை தடுக்க பல முயற்சிகள் எடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் கட்டுக்கடங்காமல் தான் இருக்கிறது.

ஏனென்றால் ?

உலகமயமாக்கலுக்கு முன்பு வரையில் லஞ்சம், கருப்பு பணம் என்பது எல்லாம் அதிகாரத்தில் இருப்பவர்களை சார்ந்தது என்ற நிலை இருந்தது. பொது மக்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது.

இன்றோ இந்திய நாட்டின் வணிக கதவுகள் திறந்துவிட்ட படியால் வணிக சந்தை பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அந்த மிக சந்தையில் இருந்து பொது மக்களும் பயன் பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.

தகுதிகளை வளர்ந்து கொண்டு சட்டரீதியாக வருமானம் பார்க்கும் மக்கள் அதிகமாகி கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களை போலவே தகுதிகளை வளர்த்துகொள்ளாமல் வருமான வாய்ப்புகளை இழந்த நிலையில் இருக்கும் மக்களும் அதிகமாகி கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களெல்லாம் தங்களது சட்ட ரீதியிலான அடையாளங்களை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அடையாளங்களை அடகு வைப்பது, சிறிய தொகைக்கு கொடுப்பது என செய்து கொண்டு இருக்கிறார்கள். அது தவறு என்று உணராதளவிற்கு தான் அவர்களது விழிப்புணர்வு இருக்கிறது.

சட்டரீதியான அடையாளங்களை வைத்து வரி ஏய்ப்பு நடக்குமா ? இதில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதில் எப்படி அடையாளங்கள் பயன் படுத்த படுகிறது ?

உதாரணமாக சில கடன்களுக்கு செயல் முறை அதிகமாக கவனிக்க படாமல் இருக்கும். அந்த கவன குறைவால் உருவாகும் ஓட்டைகளை தான் பொருளாதார இடை தரகர்கள் பயன் படுத்துவார்கள்.

அதென்ன ஓட்டைகள் ?

தொடரும்...

#வரி #வரிஏய்ப்பு

வரி - வரி ஏய்ப்பு - வாடகைக்கு வங்கி கணக்குகள் - அத்தியாயம் 3


போன அத்தியாயத்தில் பொருளாதார குருவிகளிடம் கருப்பு பணம் வருகிற வரைக்கும் பார்த்தோம். கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் முதல் படியாக இந்த குருவிகள் பயன்படுத்துவது பணத்திற்கு ஆசைபடும் ஏழ்மை நிலையில் இருக்கும் வங்கி கணக்குகள். 

இப்பொழுது தினசரி கஷ்ட பட்டு வேலை பார்த்து மாதத்திற்கு 10 ஆயிரம் சம்பாரிக்கும் ஒருவர் தான் இந்த குருவிகளின் குறி. இவர்களுக்கு வெளி உலகம் தெரியாது மேலும் இவர்களது உலகம் ஒரு சிறு வட்டத்திற்குள் இருக்கும். அது போலவே இவர்களது விழிப்புணர்வும் ஒரு எல்லைக்குள்ளாகவே இருக்கும். அதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொள்வார்கள் இந்த குருவிகள்.

பொதுவாக வாடகை என்று எல்லாம் வெளிப்படையாக தூண்டில் போட மாட்டார்கள் குருவிகள். தங்களுக்கு வியாபாரத்தின் மூலம் ஒரு தொகை வர வேண்டியது இருக்கிறது ஆனால் வங்கி கணக்கை முடக்கி இருப்பதால் அதனை பயன்படுத்த முடியாமல் இருக்கிறேன், கொஞ்சம் பணம் அனுப்பி பெற வேண்டி இருக்கிறது யாரை கேட்டும் உதவ யாரும் வரவில்லை, அந்த பண பரிவர்த்தனைகள் உன் வங்கி கணக்கில் செய்து கொள்ளட்டுமா, சும்மா எல்லாம் இல்லை அதற்கு தரகு பணமாய் 5000 ரூபாய் தருகிறேன் என்பதாய் இருக்கும் அந்த தூண்டில்.

மாதம் முழுவதும் கஷ்ட பட்டு பார்க்கும் வருவாய் சும்மா இருக்கும் வங்கி கணக்கின் மூலம் பாதி வருமானம் கிடைத்தால் லாபம் தானே என அந்த ஏழ்மை நண்பர் யோசிப்பார். கொஞ்சம் கடன் பிரச்சனையை சமாளித்துவிடலாமென யோசிப்பார்.

பெரியதாக பொருளாதார குற்றங்கள் பற்றி தெரியாததால் பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதால் என் வங்கி கணக்கு என் உரிமை என முடிவெடுப்பார்.

பிறவு என்ன நடக்கும் ?

பொருளாதார குருவிகள் இதே போன்ற பல அப்பாவிகளை பிடிப்பார், அவர்களது வங்கி கணக்குகள் கைவசம் வந்த உடன் வேலையை காட்ட ஆரம்பிப்பார்.

இந்தியாவில் தினசரி வங்கி கணக்கில் ஒரு லட்சம் மேல் பண பரிவர்த்தனை நடந்தால் இந்திய மத்திய வங்கிக்கு பரிவர்த்தனையின் விவரங்கள் வங்கியால் பகிர்ந்துகொள்ள படும். 

வங்கிக்கு தெரியாத நபர் என்றால் நேரில் பார்த்தோ அலைபேசியில் அழைத்தோ விவரங்கள் கேட்டு குறித்து வைத்துகொண்டு அவற்றை மத்திய வங்கி உடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். (இதற்கான அறிக்கை மத்திய வங்கியின் இணையதளத்தில் இருக்கிறது - https://www.rbi.org.in/commonperson/English/Scripts/Notification.aspx?Id=117 )

இதனை தெரிந்துகொண்ட குருவிகள் அந்த அப்பாவிகளின் வங்கி கணக்கில் தொடர்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி கொண்டு இருப்பார்கள்.

முக்கியமாக அப்பாவிகளின் வங்கி கணக்குகள் ஒரே வங்கியை அல்லது ஒரே வங்கி கிளையை சேர்ந்த ஒன்றாக இல்லாத மாதிரி பார்த்து கொள்வார்கள்.

ஏனென்றால் ஒரே ஆள் தொடர்ச்சியாக பல்வேறு கணக்குகளில் பணத்தை செலுத்திகொண்டு இருந்தால் ஏன் என்ன என வங்கி அதிகாரிகள் கேட்க வேண்டும்.

அதனால் மாற்றி மாற்றி கருப்பு பணத்தை மொத்தமாய் வங்கி கணக்கில் கொண்டு வந்திருப்பார்கள்.

பிறகு இந்த பணத்தை எல்லாம் ஏதோ தொண்டு நிறுவனத்திற்கோ அல்லது மத பிரச்சார நிறுவனத்திற்கோ அனுப்பி வைக்க படும்.

இந்த பரிமாற்றத்திற்கு மூன்று வாரங்களில் இருந்து இரண்டு மாதங்கள் வரைக்கும் குருவிகள் கால அவகாசம் எடுத்துக்கொள்வார்கள்.

சொன்ன மாதிரியே அப்பாவிகளிடம் வங்கியில் இருந்து யாராவது கூப்பிட்டு பண பரிவர்த்தனை பற்றி கேட்டால் சொத்து விற்க பணத்தில் உறவினர் கொடுத்தது நியாயபடி எனக்கி வர வேண்டிய பங்கு என சொல்லுங்கள் என சொல்லி விடுவார்கள்.

இது போன்ற காரணங்கள் சூழ்நிலைக்கு ஏற்றது போல் சொல்லி கொடுக்க படும்.

மேலும் இந்த பண பரிவர்த்தனையை எல்லாம் இந்த பொருளாதார குருவிகள் நேரில் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கென்று ஒரு புள்ளிங்கோ கூட்டம் இருக்கும். பெரும்பாலும் அவர்களும் அப்பாவிகள் தான் எதோ அண்ணன் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்ட போகிறாரென நம்பி மோசம் போய் கொண்டு இருப்பார்கள்.

ஒவ்வொரு வங்கி கணக்கிலும் குறிப்பிட்ட அளவிற்கு தான் பணத்தை செலுத்துவார்கள். நிறைய செய்தால் சந்தேகம் வந்துவிடும் என்ற காரணத்தால்.

சரி இந்த தொண்டு நிறுவனமோ அல்லது மத பிரச்சார நிறுவனமோ பணத்தை எடுத்து ஓடிவிட்டால் என்ன செய்வார்கள் ?

அப்படி எல்லாம் நடக்காது, தரவேண்டியது எல்லாம் சரியாக தரபட்டு கொண்டு இருக்கும். தரகு பணம்.

மேலும் இந்த பரிவர்த்தனையை எல்லாம் மறைக்க பொதுமக்களிடமிருந்தும் அதிகமாக நன்கொடை வாங்குவார்கள்.

காரணம்.

திருப்பதியில் மொட்டை அடித்த நபரை கண்டுபிடிக்க முடியுமா ? முடியாது ஏனென்றால் பலர் மொட்டை அடித்து இருப்பார்கள். அது போல பல கோடிகள் நன்கொடையாக  வரும் பொழுது சில லட்சங்கள் கண்டு கொள்ளாமல் விட படும். 

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் கதையாய் கருப்பு பணமும் நன்கொடை என்ற அடையாளத்தில் மறைந்து கொள்ளும்.

எல்லா தொண்டு நிறுவனங்களும் பிரச்சார நிறுவனங்களும் இப்படியாக என கேட்டால் இல்லை. நேர்மையாய் இருக்கும் பல இருக்கின்றன. 

ஆனால் இன்றைய தேதியில் பல தொண்டு நிறுவனங்கள் உருவாகி கொண்டு இருக்கிறது என்பதும் உண்மை. 

கருப்பு வெள்ளை ஆட்டத்தில் இது மட்டும் தான் வழியாக எடுத்து கொள்ள படுமா ?

இல்லை இதுவும் ஒரு வழி.

அப்படியென்றால் இன்னொரு வழி ?

 கடன்கள்....

தொடரும்

#வரி #வரிஏய்ப்பு

வரி - வரி ஏய்ப்பு - பொருளாதார குருவிகள் - அத்தியாயம் 2


வரிகளென்று சொன்னாலே அவை எதோ நவீன காலத்தின் அடையாளமாகவே பார்க்க படுகிறது ஆனால் அவை நாடோடிகளாக இருந்து கூட்டமாக வாழ தொடங்கி எப்பொழுது மனிதன் சமூக அமைப்பு என்று உருவாக்கினானோ அப்பொழுதே வரி என்பது பிறந்து விட்டது. வரியின் உருவம் பரிவர்த்தனை ஆகியவை காலத்திற்கு ஏற்றது போல் மாறி கொண்டு இருக்கும்.

மேலும் வரி என்பது சரித்திர நிகழ்வுகளோடு தொடர்புடையது, வரலாற்றின் போக்கை கொண்டு செல்லும் காரணியாக அமைந்துவிடுகிறது. ஆனால் மறைமுகமாக.

புறநானூற்றில் இடைக்குன்றூர் கிழார் எழுதியது 

"ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர்
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி,
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக,
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடி,
'பொருதும்' என்று தன்தலை வந்த
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க,
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே"

இந்த பாடலில் சேரர், சோழர் மற்றும் ஐந்து குறுநில மன்னர்கள் என ஒன்று சேர்ந்து பாண்டியன் நெடுஞ்செழியன் மீது படையெடுத்து போர் தொடுக்கிறார்கள்.

அவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்ந்து எதிர் போர் புரிந்து பாண்டியன் ஒற்றை ஆளாக போரில் வெல்கிறார். இது தான் இந்த பாடலில் கூற படும் செய்தி. 

இந்த போரின் காரணமாக பலர் கூறுவது பாண்டிய நாட்டில் இருந்த செல்வத்தை. ஆனால் செல்வம் இருந்தால் பெருன் படை கொண்டு போர் புரிய அவசியம் இல்லை. 

ஆனால் எப்பொழுது அவசியம் வந்ததென்றால் பாண்டியர்களிடத்தில் பெரும் வணிக வர்த்தகம் நடைபெறும் பெரிய துறைமுகங்களான கொற்கை துறைமுகம், பூம்புகார் துறைமுகம் ஆகியவை இருந்தன. அந்த வணிக வர்த்தகத்தின் மூலம் பாண்டியனுக்கு ஏராளமான வரி கிடைத்தது. அந்த வரியின் மூலம் பாண்டிய நகரம் பெருன் செல்வசெழிப்புடன் இருந்தது. அதுவே சோழர்களை, சேரர்களை கூட்டணி உடன் போர் தொடுக்க செய்தது.

வரி வாய்ப்பு பற்றி தெரியாததால் தான் மாலிக் கபூர் படையெடுத்து  வந்து பலரை கொன்று கொள்ளை அடித்து சென்றான். 

சரி இது பக்கம் இருக்கட்டும்.

போன தொடரில் பெரும் நிறுவனமோ அல்லது தொழிலதிபரோ எப்படி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவார்கள் என முடித்திருந்தேன்.

அது எப்படியென்றதரகர்கள் உதாரணமாக : 

Under Invoicing - அதாவது ஒரு பெரும் தொழிலதிபர் வணிக ஆண்டின் செய்து வந்த வணிகத்தின் மூலம் 200 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறதென்றால் அதனை 100 கோடி ரூபாய் தான் லாபம் கிடைத்திருக்கிறது என அரசுக்கு கணக்கு காட்டி அதற்கான வரியை செலுத்தி விடுகிறார்.

இப்பொழுது கணக்கில் வராத 100 கோடி ரூபாய் என்பது கருப்பு பணமாகி விடுகிறது.

இந்த 100 கோடி ரூபாயை சிறிது தரகு பணத்திற்காக வெள்ளையாக மாறி கொடுக்கும் இடை தரகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பொருளாதார குருவிகள்

இந்த 100 கோடியை  அந்த இடை தரகர் 20 நபர்களிடம் சமமாய் பிரித்து கொடுப்பார். அதாவது ஆள் ஒருவருக்கு 5 கோடி என்று.

அல்லது 5 நபர்களுக்கு 20 கோடி என. சூழ்நிலைக்கு ஏற்றது போல் சதவிகிதங்கள் மாறும்.

இந்த இரண்டாம் நிலை இடை தரகர்கள் அவர்களுக்கு கீழ் இருக்கும் நபர்கள் மூலம் கருப்பை வெள்ளையாக மாற்றும் வேலையை செய்வார்.

அவற்றில் சில கோயிலுக்கு நன்கொடை, போலி தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை, இல்லாத கடையில் பண பரிமாற்றங்கள் மற்றும் சில...

அதிலெல்லாம் எப்படி செயல் படும் ?

அடுத்த பதிவில்.

தொடரும்.

#வரி #வரிஏய்ப்பு

வரி ஏய்ப்பு - கருப்பு பணம் - அத்தியாயம் 1

இந்த 78வது சுதந்திர தினத்தில் இந்தியாவின் மிக பெரிய பிரச்சனை லஞ்சம் தான் என இந்தியன் தாத்தா தனமாய் பேசி கொண்டு இருந்தால் அவர்களை போல் அறிவார்ந்த கிணற்றுத் தவளை யாரும் இல்லை.

லஞ்சம் ஒரு பிரச்சனையாக இருந்ததென்னவோ உண்மை தான் அது உலகமயமாக்கலுக்கு முன்பும் பிந்தைய சிறு வருடங்களில் தான்.

ஏனென்றால் லஞ்சமாய் கொடுத்து வாங்க படும் பணம் வரி கணக்கில் வராமல் போய் விடும், அப்பொழுது லஞ்சம் யார் வாங்குவார்களென பார்த்தால் அரசு இயந்திரத்தில் இருப்போரும் இயந்திரத்தை இயக்கும் அதிகாரத்தில் இருந்தவர்களும் தான்.

உலகமயமாக்கலுக்கு பின்னர் என்ன நடந்ததென்றால் இந்தியாவின் வணிக சந்தையின் கதவுகள் உலக வணிகத்திற்கு திறந்துவிட பட்டன. 

அப்படி திறந்துவிட பட்ட பொழுது வணிகம் வளர்ந்தது. வணிகம் வளர்ந்த பொழுது அரசுக்கு செலுத்த வேண்டிய வரி தொகையும் வளர்ந்தது.

லாபமொன்றே குறிக்கோளாக இருக்கும் வணிக இயந்திரம் வரியை தவிர்க்க வழி இருந்தால் அதனை பயன் படுத்திக்கவே செய்யும். 

வணிகத்தின் இயல்பு அது இல்லை, வணிகத்தில் இருக்கும் ஒரு வாய்ப்பு. அதனை பயன்படுத்தி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளாமல் இருப்பதும் அந்த வணிக இயந்திரத்தை செலுத்தி கொண்டு இருப்பவர்களின் கையில் இருக்கிறது.

அந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு வணிக இயந்திரத்தில் அதிகாரத்தில் இருப்பவர் வரி ஏய்ப்பு செய்து விடுகிறார்.

வணிகத்தை அல்லது கிடைக்க பெற்ற லாபத்தை குறைவாக காட்டி குறைவான வரி தொகையை செலுத்தில் விடுகிறார். நடப்பில் இருக்கும் வரி முறையை ஏய்த்து விடுகிறார். வரி ஏய்ப்பு நடந்து விடுகிறது.

கணக்கில் வராத பணம் கருப்பு பணமாக மாறி விடுகிறது.

இந்த கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற மூன்று அடுக்குகளை கொண்ட வழி முறையை கையாள்வார்கள்.

அவை

1. Placement - நிலை அமர்த்தல் 
2. Layering - அடுக்குகளை உருவாகுதல்
3. Integration - ஒருங்கிணைத்தல்

கருப்பை பணத்தை உருவான உடன் அதனை கையில் வைத்திருக்க முடியாது, அப்படி வைத்திருந்தால் அது சட்டத்திற்கு எதிரானது. 

அதனால் அதனை வெள்ளையாக மாற்றுவார்கள். அப்படி மாற்றிவிடுதலில் முதல் நிலை தான் நிலை அமர்த்தல்.

அப்படி நிலை அமர்த்திய உடன் பல்வேறு அடுக்குகளை உருவாக்கி அந்த கருப்பு பணம் வந்த மூலத்தை அழித்துவிடுவது தான் இரண்டாம் நிலை அடுக்குகளை உருவாக்குதல்.

அப்படி பல்வேறு அடுக்குகளை உருவாக்கி பல்வேறு பண பரிவர்த்தனைகள் செய்து பணத்தின் மூலத்தை கண்டுபிடிக்க முடியாமல் செய்து விட்டு, அதனை எல்லா அடுக்குகளிலும் இருந்தும் ஒரு வணிக இயந்திரத்திடம் கொண்டு வருவது தான் கடைசி நிலை தான் ஒருங்கிணைத்தல்.

வணிக அறிமுகம் இல்லாதோருக்கு இதுவரையில் புரியாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் எல்லோருக்கும் தெரிந்த துறையை கொண்டு உதாரணம் சொல்கிறேன். உடனே அப்படியா செய்தி அந்த துறையில் இப்படி தான் நடக்கிறதா என முடிவுக்கு வர வேண்டாம். வெறும் உதாரணம் தான்.

உதாரணமாக ...

சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் அவர் நடித்தால் படம் வெற்றி பெற்று விடுமென்கிற நிலையில் வெள்ளையாகவும் கருப்பாகவும் இவ்வளவு சம்பளம் வேண்டுமென தயாரிப்பாளரிடம் கேட்கிறார் என வைத்து கொள்வோம் .

இவ்வளவு தொகை தருகிறேன் மீதிக்கு ஒரு பகுதிக்கான விநியோக உரிமையை தந்துவிடுகிறேனென தயாரிப்பாளர் சொல்கிறார். இதெல்லாம் வெள்ளை சம்பள பகுதியில் வந்துவிடும் ஏனென்றால் இதெல்லாம் சட்ட ரீதியிலான ஒப்பந்தத்தில் எழுதப்படும்.

படம் எடுத்து முடிக்கபட்டது. வெளி வந்துவிட்டது.

இப்பொழுது நடிகரிடம் பல படங்களின் மூலம் கிடைக்க பெற்ற கருப்பு பணத்தை தான் விநியோக உரிமை எடுத்த பகுதி திரையரங்குகள் மூலம் வெள்ளை பணமாக மாற்றுவார். அங்கு ரசிகர்கள் கொண்டு பெரும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வார். படம் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிறது என காட்சி படுத்துவார்.

என்ன தான் பெரிய படமாக இருந்தால் இன்றைய காலகட்டத்தில் நிலவும் விலைவாசியில் அரங்கு நிறைந்த காட்சிகள் என்பது ஒரு மூன்று நாட்களுக்கு மேல் இருக்காது ஏனென்றால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமானதும் ஒரு காரணம்.

பிற்பாடு காலியான திரையரங்குகளில் இருபது பேர் மட்டுமே வந்தாலும் படம் ஓடி கொண்டு இருக்கும் அல்லது ஓட்டி கொண்டு இருப்பார்கள்.

ஒரு திரைப்படத்தை ஒரு காட்சிக்கு திரையிட்டால் ஆகும் செலவிற்கு பக்கத்தில் கூட இருபது பேர் மூலம் கிடைக்கும் வணிக லாபம் வராது.

இருந்தும் படத்தை ஓட்டுவார்கள்.

போலியாக இந்த பட காட்சிக்கு இத்தனை வந்தார்கள் அதில் வந்த பணம் இத்தனை என விநியோக உரிமை எடுத்த நடிகர் சொல்வார். திரையரங்கு உரிமையாளருக்கும் ஒரு பங்கு போய்விடும் அதனால் அவரும் அமைதியாக இருப்பார்.

திரையரங்கு வசூல் குறித்து இன்னும் வெளிப்படை தன்மையோடு இல்லாததற்கு இதுவுமொரு காரணம் . ஏனென்றால் ரொக்க பணத்தில் கையாள படும் வணிகத்தில் எதுவும் சாத்தியமே.

தின்பண்டங்கள் விற்ற பணம் என கணக்கு சொல்வார்கள், உண்மையில் தின்பண்ட்ம் அவ்வளவு விற்றதா என கணக்காளர் கண்டுபிடிப்பது கஷ்டமே.

தின்பண்டம் தயாரிக்க தேவையான பொருட்கள், தயாரிக்க தர படும் கூலி, அரங்கிற்கு கொண்டு செல்ல படும் கூலி, விற்பனை பிரதிநிதிகளின் கூலி எல்லாம் ரொக்க பணத்தில் நடைபெறுவதால் வணிகத்தின் தொகை அளவுகளை கண்டுபிடிப்பது கஷ்டம்.

இப்படி தான் நடக்கிறதா திரையுலகில் என்றால் எல்லோரும் அப்படி இல்லை பிழைக்க தெரியாதவர்கள் என பெயர் எடுத்த பல நடிகர்கள் இருக்கிறார்கள்.

அப்படியானல் எல்லா நடிகர்களும் இப்படி தான் செய்வார்களா என கேட்டால் இல்லை. கோயில் கட்டுவார்கள், தொண்டு நிறுவனம் ஆரம்பித்து தொண்டு செய்வார்கள்...

அவற்றின் வணிக தன்மைகளில் எல்லாவற்றிலும் வரி ஏய்ப்பு நடக்க வாய்ப்பு இருக்கிறது.

வணிக நிறுவனங்களின் வரி ஏய்ப்பு எப்படி நடக்கும், தொண்டு நிறுவனங்கள் என்ன செய்யும்... முடிந்தால் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

தொடரும்...

#வரி #வரிஏய்ப்பு

செபி - பஸ்பர நிதி - ஆட்டம் ஆரம்பம்


செபி நேற்று ஒரு முக்கியமான அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்திய பஸ்பர நிதி நிறுவனங்களை அந்த அறிக்கை ஆட்டி வைக்க போகிறதா இல்லையா என போக போக தான் தெரியும்.

அப்படி என்ன அந்த அறிக்கையில் சொல்லிருக்கிறது ?

பஸ்பர நிதியில் முதலீடு செய்வோரை இரண்டு வகையாக பிரிக்கலாம். 

நேரடி முதலீட்டாளர்கள் - இவர்களுக்கு பஸ்பர நிதி பற்றி எல்லாம் தெரியும். அ முதல் ஃ வரையில் அதன் செய்ல்பாடுகளை தெரிந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லாம் நேரடியாக பஸ்பர நிதி நிறுவனத்திற்கோ இணையதளத்திற்கோ போய் முதலீடு செய்வார்கள் அல்லது பஸ்பர நிதி நிறுவன பிரதிநிதிகள் மூலம் முதலீடு செய்பவர்களாக இருப்பார்கள்.

இந்த வகை முதலீடு திட்டங்களில் எந்தவித தரகு செலவுகளும் இருக்காது. 

தரகு வழி முதலீட்டாளர்கள் - இவர்கள் ஒரு வங்கியின் மூலமாகவோ அல்லது முதலீட்டு சேவை நிறுவனம் மூலமாகவோ பஸ்பர நிதி திட்டத்தில்  மூதலீடு செய்பவர்களாக இருப்பார்கள்.

இதுவரையில் முதலீடு நிறுவனங்கள் வெளியிடும் அரை ஆண்டு பஸ்பர நிதி திட்ட அறிக்கையில் தரகு வழி முதலீடுகளுக்கு மட்டுமே ஆன லாப  கணக்குகள் கொண்டு இருக்கும்.

இனிமேல் அதில் நேரடி முதலீடுகளுக்குமான லாப கணக்குகள் கொண்டு இருக்க வேண்டுமென செபி சொல்லி இருக்கிறது.

ஏன் இப்படி ?

முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் இந்தியாவில் வங்கி, முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் மூலம் வரும் பஸ்பர நிதி முதலீடுகளே அதிகம்.

மேல் சொன்ன பட்டியலும் ரொம்ப நீளம். சென்னையில் எந்த ஒரு குறிபிட்ட பகுதியை எடுத்து கொண்டாலும் வங்கி மற்றும் முதலீட்டு நிறுவன பிரதிநிதிகள் நூறுக்கு குறையாமல் இருப்பார்கள். ஒவ்வொரு பிரதிநிதியிடமும் பஸ்பர நிதிகளின் மாதாந்திர மற்றும் அரை ஆண்டு திட்ட அறிக்கை இருக்கும்.

இப்படி சென்னையின் ஒரு பகுதியின் எண்ணிக்கை இதுவென்றால் மொத்த இந்தியாவிலும் எண்ணிக்கை எப்படி இருக்குமென யோசித்து கொள்ளுங்கள்.

ஆகவே தரகு வழி முதலீட்டாளர்களுக்கு விஷயத்தை கொண்டு சேர்க்க தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஏனென்றால் அந்த வழியில் தான் லாபம் அதிகம் கிடைக்கிறது பஸ்பர நிதி நிறுவனங்களுக்கு.

எல்லாம் சரி அதென்ன பஸ்பர நிதி அறிக்கை ?

இதனை ஆங்கிலத்தில் Fact Sheet என்றும் தமிழில் தகவல் அறிக்கை என்றும் சொல்லலாம். அதில் ஒரு நிறுவனத்திலிருக்கும் பற்பல திட்டங்கள் பற்றிய விவரங்கள், எந்தெந்த நிறுவங்களில் முதலீடு செய்ய பட்டு இருக்கிறது, நிதி திட்ட மேலாளர் (Fund Manager) பற்றிய விவரங்கள், திட்டத்தின் லாப கணக்கு ஆகியவை அடங்கி இருக்கும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கவர பிரதிநிதிகளுக்கு வசதியாக இருக்கும்.

சரி நேரடி திட்டங்களுக்கு ?

நேரடி திட்டங்களில் முதலீடு செய்வோர்களுக்கு சந்தை பற்றியும் லாபங்கள் பற்றியும் துல்லியமாக கணிக்க முடிந்தவர்களாக இருப்பார்கள். ஆகவே திட்ட அறிக்கையை எல்லாம் தகவலுக்கு தான் வைத்திருப்பார்கள். அதனை வைத்து முடிவெடுக்க மாட்டார்கள்.

தரகு நிறுவனங்கள் தங்களுக்கு எது அதிகம் தரகு பணம் கொடுக்குமோ அந்த திட்டங்களை மட்டும் தான் பரிந்துரை செய்வார்கள்.

பஸ்பர நிதி தகவல் அறிக்கை உடன் ஒரு பிரதிநிதியை பார்த்தால் அவரிடம் பேசி கொடுத்து பார்த்தால் தெரியும் சில திட்டங்களை பற்றி மட்டுமே அதிக படுத்தி உயர்வாக சொல்வார்கள். அவை போல வேற எந்த திட்டமுமில்லையென சொல்வார்.

காரணமென்னவென்றால் அவரது நிறுவனத்திற்கு அந்த திட்டமோ அதிக தரகு பணம் தருபவையாக இருக்கும் அதனால் அதனை விற்றால் தான் அவருக்கு விற்பனை புள்ளிகள் (Sale Points) கிடைக்கும் சொல்ல பட்டு இருக்கும்.

சரி இரண்டு வித திட்டங்களின் லாப கணக்கும் ஒன்றாக வெளியிட்டால் என்ன மாதிரியான பிரச்சனை வரும் ?

பொதுவாக வியாபாரத்தில் லாபம் எல்லாம் எல்லாவித செலவுகளுக்கும் கட்டணம் செலுத்திய பின்னர் மிச்சம் வருவது தான்.

செலவுகள் இல்லையென்றால் லாபம் அதிகமாக இருக்குமென்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

அதனால் நேரடி திட்டத்தின் லாபங்களை பல ஆண்டு காலம் முதலீட்டு நிறுவனம் மூலம் முதலீடு செய்பவர் பார்த்தால் அடடேய் அதுல இவ்வளவு கிடைக்குதா அப்ப இவன் மூலமா என்னதுக்கு பண்ணிகிட்டு என முடிவெடுத்து நேரடியாக முதலீடு செய்ய போய் விடுவார்.

இதே போக்கு அதிகமாகி மக்கள் எல்லோரும் நேரடியாக முதலீடு செய்ய போய் விட்டால் முதலீடு நிறுவனங்களுக்கு லாபம் குறையும்.

அப்படி குறைந்தால் அவர்களது லாபம் குறையும். செலவு கணக்கு அதிகமாகும்.

இதன் மூலம் லாபம் கிடைக்க கூடியது பஸ்பர நிதி நிறுவனங்கள் தான்.

அவர்களுக்கு செலவுகள் குறைந்து லாபம் அதிகமாகும்.

செய்தி உரலி -   https://www.business-standard.com/markets/news/sebi-plans-half-yearly-disclosures-for-direct-plan-mutual-fund-schemes-124092701140_1.html

Tuesday, June 4, 2024

மங்கள் & மங்கள் - டாட்டூஸ்


எங்கூர்ல மங்கள் & மங்கள்ன்னு ஒரு கடை இருக்கு. இப்பம் தான் அண்ணாச்சி கடையாட்டம் பலது வைச்சு விக்குறாங்க.

ஆனா முன்னம் அது பாத்திர கடையா தான் இருந்துச்சு.

அதுல என்ன சிறப்புன்ன பாத்திரம் வாங்கிட்டு கடைக்கு முன்னாடி பெயர் கொத்தி கொடுக்க இருக்குற ஆள் கிட்ட பெயர் கொத்த கொடுப்பாங்க.

கடகல்லா பக்கமா வாசலண்ட அந்த ஆள் உட்காந்திருப்பாரு. அவர சுத்தி வெள்ளிகிழம அம்மன் கோயில் ல சர்க்கரை பொங்கல் வாங்க நிக்குற கூட்டம் மாதிரி எல்லோரும் நிப்பாங்க.

பாத்திரத்துல பெயர் கொத்தி கைல வாங்கினதும் லேடீஸ் முகத்துல அப்புடி ஒரு சிரிப்பு வரும். அது அவங்க பாத்திரமுன்னு சமூகத்குக்கு சொல்லாம சொல்லுற வழக்கமா அது இருந்துச்சு.

இப்பம் மெட்ராஸ் ல லவ்ஸ் ல விழுந்தா கல்யாணம் கட்டிகிட்டா குழந்தை பொறந்தான்னு பச்சை (டாட்டூ) குத்திக்குறாங்க. பெயரு, அச்சுன்னு பலது இருக்கும்.

லேடீஸ் ஆம்பளைஸ்ன்னு எல்லோரும் குத்திக்குறாங்க. அதைய எல்லாம் பாக்குறப்ப மங்கள் & மங்கள் பாத்திர கடை ல பெயர் கொத்துறது தான் ஞாபகத்துக்கு வருது.

முன்னாடி ஆம்பளைஸ்ன்ன கை ல பொண்டாட்டி பெயர் பச்சை குத்திப்பாங்க, லேடீஸ்ன்ன கை இல்லாங்காட்டி மார் தோள்பட்டை ல குத்திப்பாங்க.

இப்பம் எல்லாம் அவங்களே பாக்க முடியாத இடத்துல எல்லான் குத்திக்குறாங்க. கேட்டா மத்தவங்க பாப்பாங்க லன்னு ரூட்ட கொடுக்குறாங்க.

மத்தவன் பாக்குறதுன்னு ஏண்டா நீங்க செலவு பண்ணுறீங்கன்னு அக்கறை ல கேட்டா...

"Bro It's A Statement..."நு சொல்லுறாங்க.

இம்புட்டி வருஷமா பேங்க் ல வேல பாத்துட்டு நமக்கு ஸ்டேட்மெண்ட்ன்ன பாஸ்புக் ஸ்டேட்மெண்ட் தான் ஞாபகத்துக்கு வருது.

இதைய எல்லாம் பாக்குறப்ப வரவர  பூமர் ஆகிட்டு வருமோன்னு சந்தேகமா இருக்கீ.

சிறந்த தலைமை - காவ்யா மாறன்


தலைமை பொறுப்பில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டுமென்பதை காவ்யா மாறன் உலகிற்கு தனது செயலின் மூலம் சொல்லி இருக்கிறார்.

ஒரு விளையாட்டு வீரரோ அல்லது பயிற்சியாளரோ அப்படி செய்திருந்தால் பெரிய விஷயமாக இருந்திருக்காது.

ஆனால் விளையாட்டை வணிகமாக பார்க்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு வெற்றி வாய்ப்பை இழந்து தோல்வியடைந்த தனது குழுவினர்களை பார்த்து கவலை பட வேண்டாம் என சொல்லி நன்றாக விளையாடியதற்கு குழு வீரர்களை பாராட்டி இருக்கிறார்.

எதிர் விமர்சனங்கள் வருமென தெரிந்தும் காணொளியை வெளியிட்டு இருப்பதற்கு துணிச்சல் வேண்டும். 

விளையாட்டு அணியின் நிர்வாகம் என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. விளம்பரதாரர்கள், முதலீட்டாளர்கள், நிறுவன நிர்வாகம் என தோல்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். இப்படி நாளைய தினத்திற்கான சிக்கல்கள் எதிரில் நிற்க... இந்த செயல் பாராட்ட பட வேண்டிய ஒன்று. 

அப்பாவின் காசு யார் கேட்க போறாங்க என விஷயம் தெரியாதவர்கள் சொல்லி விடலாம், ஆனால் வணிக நிர்வாகமென்பது எல்லாவற்றையும் சரியாக ஆவண படுத்த பட வேண்டும், அது தோல்வியாக இருந்தாலும் சரி வெற்றியாக இருந்தாலும் சரி. 

மேலும் வெற்றி கொண்டாட்டங்களை விட தோல்வியடைந்த சமயங்களில் தான் தலைவன் என்பவன் குழுவினரோடு இருக்க வேண்டும். வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு சுற்றுபவர்களுக்கு இதன் அடர்த்தி புரியாது.

வருங்காலத்தில் உங்களது விளையாட்டு அணி பல வெற்றிகளடைய வாழ்த்துகள் காவ்யா மாறன்.

#kavyamaaran #sunrisershyderabad #KalanithiMaran

ரியான் பராக் - தேவை இல்லாத சர்ச்சை


தமிழ் பத்திரிக்கையாளர்களிடமிருந்து சர்ச்சை, அதிர்ச்சி, உல்லாசம், அழகி போன்ற வார்த்தைகளை அவர்களிடமிருந்து பிடுங்கி விட்டால் அவர்களால் பல செய்திகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியாது.

அதுவும் சில இடங்களில் அவர்கள் சொல்வது தான் நிஜம் என்பது போல் எழுதுவார்கள்.

ஏனென்றால் நன்றாக எழுதுகிறவன் நன்றாக யோசிப்பான் என்று மக்கள் நினைப்பதால் வரும் பிரச்சனை.

இப்பொழுது அவர்களிடம் சிக்கி இருப்பது துடுப்பாட்ட வீரர் ரியான் பராக்.

இன்ஸ்டாகிராம் செயலியில் அவ்வப்போது பரபரப்பான அலை வரும் பின்னர் கடந்து போகும். அப்படியாக சில நாட்களுக்கு முன்னர் ஒரு அலை ஆரம்பித்தது...

அதென்ன அலை..

யூடியூப் செயலியில் (உன்குழாய் என மகுடேஸ்வரன் மொழிபெயர்ப்பாரென நினைக்கிறேன்) ஒருவரது தேடுதல் சரித்திரத்தை (Search History) திரைச்சொட்டெடுத்து (Screenshot) பகிர்வது. அப்படி பலர் பகிர்ந்திருக்கிறார்கள்.

ரியான் பராக்கும் அப்படியே செய்திருந்தார். 

அதில் அவர் நடிகைகளின் கவர்ச்சியாக திரைப்படத்தில் வரும் காட்சிகளை தேடி உள்ளார் என்பது தெரிந்திருக்கிறது. 

இதனை பரபரப்பான செய்தியாக பல புரட்சி பத்திரிக்கையாளர்கள் செய்தியாக எழுதிருக்கிறார்கள். 

இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது

யூடியூப் - இந்திய அரசின் தொழில்நுட்ப பிரிவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலி.

ரியான் பராக் தேடுதலில் வர போவது  இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறையின் கீழ் இயங்கும் தணிக்கை குழுவினாரால் தணிக்கை செய்யப்பட்டு வெளியான இந்திய திரைப்பட பாடல்கள் மற்றும் காட்சிகள் தான் வர போகிறது. 

மேலும் சட்டபூர்வமாக பொதுதளத்தில் பார்க்க கிடைக்கும் காட்சிகள் பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. 

அது எப்பொழுது பிரச்சனையாகுமென்றால் அதனை தேவையில்லாமல் ஒரு பெண்ணிற்கு அனுப்பி தொல்லை தரும் பொழுது தான்.

ரியான் பராக் அவர்களுக்கு 22 வயது தான் ஆகுகிறது. இளம் வயது தான். அந்த வயதில் தேடி பார்ப்பது தவறு இல்லை. இள வயது கிளர்ச்சி என்பது சாதாரணமான ஒன்று தான்.

இதையெல்லாம் பிரச்சனையாக கேள்வி கேட்க கூடிய உரிமை ஒருவருக்கு இருக்கிறதென்றால் அது ரியான் பராக்கின் மனைவிக்கு உண்டு.

ஒன்றுமில்லாத பிரச்சனையை எதோ தேசிய குற்றம் போல் எழுதுவது என்ன மாதிரியான மனநிலையென தெரியவில்லை. 

இது ஒரு பக்கம் இருக்க...

இணைய பத்திரிக்கையாளர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்களென பார்த்தால் மக்களது வக்கிர புத்திக்கு தீனி போட்டு அவர்களை தங்களது செய்தி பத்திரிக்கை இணையதளத்திற்கு வர வைக்க தான்.

ஏன் அப்படி ...

அப்படி அதிகமான மக்கள் அந்த தளத்திற்கு வந்தால் தான் பார்வையாளர்கள் வரவு அதிகம் இருக்கிறது என காட்டி விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் மூலம் லாபம் பார்க்க முடியும்.

இதனை ஆங்கிலத்தின் Market Space என சொல்வார்கள். இந்தியாவில் எல்லோரும் திறன்பேசி (Smart phone) வைத்திருப்பதால் இப்படியாக செய்தி வர காரணம். 

மக்கள் எப்பொழுதும் ஆக்கபூர்வமான விஷயங்களை விட ஆக்கமே இல்லாத பொழுதுபோக்கு பக்கம் தேடி போவதால் தான்... அவர்களெல்லாம் ஒரு வகையில் இணைய ஈசல்களே.

இந்த இணைய ஈசல்களை உண்டு தின்று உயிர் பிழைக்கிறார்கள் சில புரட்சியாக எழுதும் பத்திரிக்கையாளர்கள். 

இதிலென்ன வேடிக்கை என்றால் எதோ இவர்களே புலனாய்வு செய்து கண்டுபிடித்தது போல் எழுதுவது தான்.

#நடந்ததுநடந்தபடியே 

#RiyanParag

Monday, May 1, 2023

பொன்னியின் செல்வன் : நாவலும் திரைப்படமும்

மணிரத்னம் எடுத்த பொன்னியின் செல்வன் திரைபடம் ஏன் நாவலை போல் இல்லை என பலர் கேட்டு கொண்டு இருக்கிறார்கள். 

பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பம்சமே நந்தினி கதாப்பாத்திரத்தின் பின்னணியில் இருக்கும் குழப்பங்களும், பிறகு அத்தனை அரசியல் சூழ்ச்சியை தாண்டி பிறப்பில் இருந்து மிகவும் கஷ்டபட்டு வளர்ந்து, தான் உண்டு தான்  வேலை உண்டு என இருக்கும் சேந்தன் அமுதனுக்கு ராஜ்ஜியத்தை மணிமகுடத்தை போர்கள் பல வென்று அரசனுக்குரிய எல்லா தகுதிகளையும் கொண்ட அருள்மொழிவர்மன் நியாயத்தின் பாதையில் நின்று தருவது தான். 

நாவலை முதன் முதலில் பதின்ம வயதில் படிப்போர் பலரும் அந்த தியாகத்தில் நெகிழ்ந்து போய் அருள்மொழிவர்மனை கொண்டாடுவார்கள். மிக பெரிய திருப்பமாக அது இருக்கும். 

இதற்கு எல்லாம் முன்பாக சோழ அரசாட்சி எல்லாம் எத்தையக பெருமை வாய்ந்தது, அத்தனை பெரிய சோழ ராஜ்ஜியத்தை கட்டமைக்கப்பட்ட கதை என எல்லாவற்றையும் கல்கி முதலேயே நமக்கு படம் போல் கதை போகிற போக்கில் சொல்லி விடுவார். அதையெல்லாம் படித்துவிட்டு அப்பேர்ப்பட்ட சோழ மணிமகுடத்திற்கு ராஜ்ஜியத்திற்கு ஆபத்தா என பதைபதைப்புடன் நாவலை வாசிக்க வைக்கும். 

மேலும் கல்கியின் வார்த்தை பிரயோகம், எழுத்துநடை அப்படியே கட்டி போட்டுவிடும். மேலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் குணநலன்கள் பற்றிய விவரிப்பு மேலும் கதைக்குள் நம்மை கொண்டு போய் விடும்.

திரைப்படத்தில் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது என சொல்கிறார்கள். ஆனால் நாவல் தந்த உணர்வை திரைப்படம் தந்திருக்கிறதா என்பது தான் கேள்வி. 

சேந்தன் அமுதன் விரும்பி திருமணம் செய்து கொள்கிற பூங்குழலி ஆகிய இரு கதாப்பாத்திரங்களும் கதையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். அந்த கதாப்பாத்திரங்களை தயிர் சாதத்திற்கு வைக்க படும் அப்பளத்தை போல் கையாள பட்டுகிறது. 

நாவலில் வருது போல் எடுக்க போவது இல்லை, அதனை தழுவி எனது போக்கில் படம் எடுக்க போகிறேன் என்று மணிரத்னம் அவர்கள் முன்பே சொல்லி இருந்தால் எந்தவித பிரச்சனையும் வந்திருக்காது. வெக்கை நாவலை தழுவி அசுரன் படத்தை வெற்றிமாறன் எடுத்தது போல். 

ஆங்கில திரைப்படங்களில்  நாவலின் கதாப்பாத்திரங்களை மட்டும் எடுத்து கொண்டு அவர்களது வசதிக்கேற்ப புது கதை ஒன்றை உருவாக்கி கொள்வார்கள். அப்படியாவது செய்திருக்கலாம். அப்படி செய்தால் வணிகம் பாதிக்கும் என்று செய்யவில்லையோ ?

காலை சிற்றுண்டிக்கு வடை செய்கிறேன், நெய் மசாலா தோசை செய்கிறேன், இரண்டு வகை சட்னி மற்றும் வடைகறி செய்கிறேன் என வீட்டில் காலையில் எழுந்ததும் சொல்கிறார்கள். நீங்களும் அதே நினைப்பில் சொல்லபடுகிற எல்லா வேலைகளும் செய்து விட்டு, உடற்பயிற்சி செய்துவிட்டு குளித்து விட்டு பசியோடு வந்தால், சாப்பிட தட்டில் உப்புமா வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது மணி சார் செய்திருப்பது.

#பொன்னியின்செல்வன்2
#ps2movie 
#PonniyinSelvan2 
#மணிரத்னம்

Saturday, April 22, 2023

கொற்கை : மதுரை : சமணர் கழுவேற்றம் : பாண்டிய நாடு - அத்தியாயம் 4


"மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு...." என்கிற இப்பாடலை சிவ வழிபாட்டு முறையை கொண்ட குடும்பத்தில் பிறந்த எல்லோரும் கேட்டு இருப்பார்கள். சிறுவயதில் என் அப்பா எனக்கு திருநீறு அணியும் பொழுது பாடுவார். (ஆம் அதனை திருநீறு அணிதல் என்று தான் கூற வேண்டும்)

நெற்றி முழுவதும் திருநீறு அணிவதை உத்தூளனம் என்று சொல்ல படுகிறது. இந்த உத்தூளனம் முறை இந்தியாவின் மற்ற இடங்களை காட்டிலும் தமிழ் நாட்டில் பரவலாக பின்பற்ற படுகிறது. இதற்கும் பழங்கால வணிகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இதற்கு நாம் 10ஆம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஷாம்பெயின் சந்தையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அதனை படிக்கும் முன் பிரான்ஸ்  நாடு ஒரு காலத்தில் ரோம் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்ததை ஞாபக படுத்திகொள்ள வேண்டும். 

(சரி அதென்ன ஷாம்பெயின் சந்தை.... பின்னர் பார்க்கலாம்)

12ஆம் நூற்றாண்டு மற்றும் 13ஆம் நூற்றாண்டின் கால குறிப்பின் படி இச்சந்தையில் அதிகம் விற்ற பொருட்களில் ஒன்றாக இருந்தவை ஜவுளி, மசாலா மற்றும் தோல் பொருட்கள். இவற்றில் தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்து அதிகம் ஏற்றுமதியானவை எதுவென்று பார்த்தால் அவை ஜவுளி, மசாலா, கரும்பு சக்கரை மற்றும் உப்பு.

தென்னிந்தியாவின் முக்கிய துறைமுகமாக இருந்தது கொற்கை துறைமுகம் தான். இந்த கொற்கை துறைமுகம் பாண்டிய ராஜ்ஜியத்தின் தலைமை நகரமாக இருந்தது. இங்கு தான் பாண்டிய நாடு முடி இளவரசன் தங்கி வணிக தொடர்புகளை கவனித்து கொள்ளவார். வேறு யாரையும் நம்பி அப்பொறுப்பை பாண்டி நாட்டு ராஜ்ஜியம் வழங்கியது இல்லை. 

பழங்கால ரோமானிய கடல் வணிக வரைபடத்தில் கொற்கை துறைமுகமும் பாண்டிய நாட்டு பெயர்கள் தான் முக்கியமாக அடையாளம் காட்ட படுகிறது. சேர நாட்டு பெயர் அடைப்புக்குறிக்குள் தான் இருக்கிறது. 

பாண்டி நாட்டிற்கு அதிக வணிகத்தையும் அதன் மூலம் வரி பணத்தையும் தந்து கொண்டு இருந்தது.

(பார்க்க படம் இணைத்திருக்கிறேன்)

இப்பொழுது 7ஆம் நூற்றாண்டுக்கு செல்வோம்.

பாண்டியர்களளவிற்கு சோழர்கள் பெரிய ராஜ்ஜியகாரர்களாக இல்லை. பாண்டிய நாட்டை சைவத்தில் இருந்து சமணத்திற்கு மாறிய கூன் பாண்டியன் ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.  

அப்பொழுது நம் தொடரில் வர போகிறவர்கள் வேறு யார் சமணத்தை பின்பற்றியவர்கள் என பார்த்தால் ஹொய்சள ஆட்சியாளர்கள் தான். 

சமணத்தை ஆதரித்து கொண்டு இருந்த கூன் பாண்டியன் ராஜ்ஜியத்தின் கீழ் தான் உலக கடல் வணிகத்தின் மையமான கொற்கை துறைமுகம் இருந்தது. 

இவ்வேளையில் தான் சோழ நாட்டில் பிறந்த  திருஞானசம்பந்தர் தீராநோய் உடன் போராடி கொண்டு இருந்த கூன் பாண்டியனை சந்திக்கிறார். சமண சமயத்தவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. அரசனது நோயை சம்பந்தர் குணமாக்கிவிட்டால் சமணர்கள் அவர்களது உயிரை மாய்த்துகொள்ள வேண்டும் என முடிவாகிறது. 

அதன்படி சைவ அமைப்பின் மருத்துவமுறையில் உடல்நிலையில் முன்னேற்றமடைகிறது.  அப்பொழுது ஒவ்வொரு முறையும் சமபந்தர் சிறப்பு சிவ பூஜை செய்கிறார்கள்.

கூன் பாண்டியனது உடல்நிலை முற்றிலும் குணமாகிவிட்ட பின் திருநீற்று பதிகம் பாடி பூஜையில் வைக்கபட்ட திருநீற்றை கின் பாண்டியனது உடல் முழுக்க அணிவிக்கிறார்.(இது மட்டுமே குறிப்பில் கிடைக்கிறது. பூஜை, சைவ மருத்துவம் எல்லாம் செவிவழி செய்தி)

இடையில் சமணர்கள் திருஞானசம்பந்தர் சோழ நாட்டு உளவாளி, அவரை நம்ப வேண்டுமென சொல்கிறார்கள். 

சமணர் கழுவேற்றம். ஒரு சமணரும் மிச்சமில்லாமல் எல்லோரும் கழுவேற்ற பட்டனர்.

9ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்து பாண்டியர்கள் வெளியேற்ற பட்டனர்.

10ஆம் நூற்றாண்டில் சைவ சமயத்தை பின்பற்றிய சோழர்கள் தஞ்சாவூரை தலைமையிலான ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். ஆதி சோழர்களது தலைநகரம் திருச்சிராப்பள்ளி தான். ஆனால் அதனை தவிர்த்து தஞ்சாவூரில் தலைமை இடத்தை ஏன் சோழர்கள் அமைக்க வேண்டும்.

திருச்சிராப்பள்ளி சமண பள்ளிகளுக்கு அக்காலத்தில் புகழ்பெற்றது.

21ஆம் நுற்றாண்டிற்கு வருவோம். 

பிரதான் மந்திரி காத்திஷக்தி மாஸ்டர் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மப்பேடில்  தளவாடங்கள் பூங்கா  ஒன்றை ரிலையன்ஸ்   நிறுவனம் தொடங்க போகிறதாம். இதன் மூலம் வான்வழி, தரை வழி மற்றும் கடல்வழி போக்குவரத்து சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள போகிறதாம். புதிதாக அமைக்கபட போகும் பரந்தூர் விமான நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த பூங்கா. 

இந்த இடத்தில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவிலில் தான் அந்த புகழ்பெற்ற வைணவ விவாதம் நடந்ததாக கூறபடுகிறது. 

8ஆம் நுற்றாண்டில் இன்றைய ஆந்திர பிரதேசத்தில் நடத்த ஒரு வணிக செயல்பாடு  முக்கியமான இந்துமத கோவில் உருவாக காரணமாக இருக்குமோ.

அதென்ன செயல்பாடு , அதென்ன கோவில் ?

தொடரும்...

#indianbusinessseries
#cholargal 
#RelianceIndustries 
#hinduism 
#Seasilkroute
#rajarajacholan 
#PonniyinSelvan2 
#PS2
#KORKAI
#Pandiyan

Monday, April 17, 2023

போர்கள் : வணிகம் : மதம் : சோழர்கள் - அத்தியாயம் 3


ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க பல காரணங்கள் இருக்கிறது, அதில் முக்கிய காரணம் அந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க தான் என பலரால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு முக்கிய காரணமாக பாட திட்டத்தில் நாடோடி மன்னர்களான தைமூர், செங்கிஸ் கான் ஆகியோரது வெறிதனமான செயல்களை படித்ததினால் தான். 

ஆனால் வெற்றிவேல் வீரவேல் என சொல்லி கொண்டு நிலையான ஒரு நாட்டின் மன்னனால் அப்படி சாதாரணமாக போர் தொடுத்துவிட முடியாது. முக்கிய காரணம் அதற்கான செலவு.

ஆயுதம் தயாரிப்பது, நாட்டின் உள்ளோர் மற்றும் வீரர்களுக்கான உணவு, பாதுகாப்பு ஆகிய செலவுகள் எல்லாம் கணக்கில் கொண்டு தான் ஒரு போர் தொடுப்பதை பற்றி ஆட்சியாளர்கள் யோசிக்க முடியும். ஒரு அரசன் படையெடுத்து நமது நாட்டை நோக்கி வருகிறான் என்றால், அந்நாட்டின் செல்வங்களை தான் முதலில் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைப்பார்கள். படையெடுத்து வரும் அரசனுக்கு கொள்ளையடிப்பது மட்டும் தான் லட்சியம் என்றால், அப்படையெடுப்பில் பெரிய லாபம் இருக்காது.

செல்வங்களை தவிர்த்து ஒரு நாட்டின் வணிக வளமே அந்நாட்டின் மீது படையெடுப்பை பற்றி தீர்மானிக்க முக்கிய காரணியாக அமைகிறது.

அக்காலத்தில் கடல் பட்டுவழி சாலை வழியை பார்த்தால் அது அரேபிய தேசத்தில் இருந்து காயல்பட்டினம் (இன்றைய கன்னியாகுமரி) வந்து அங்கிருந்து ஸ்ரீலங்காவின் (அன்றைய சிலோன்) அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வழியாக கலிங்க நாட்டு துறைமுகத்திற்கு (இன்றைய புரி துறைமுகம்) செல்லும்.

கலிங்க நாட்டில் இருந்து தான் ஜாவா, மலாய், சுமத்திரா, ஸ்ரீவிஜயம் ஆகிய நாட்டுகளுக்கு வணிக கப்பல்கள் செல்லும். 

சோழர்கள் போர்களில் ஈழத்து போர், கலிங்க போர் முக்கியமானதாக கருதுவேன். கலிங்க நாட்டு போரில் நடந்தவற்றை 12ஆம் நூற்றாண்டின் பரணி வகை நூலான கலிங்கத்துப்பரணி நூலில் ஒட்டக்கூத்தர் மற்றும் செயங்கொண்டார் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். 

முதலாம் கலிங்கத்துப்பரணி பாடல்கள் முதலாம் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழன் தென் கலிங்க மன்னன் வீமனை வென்றதை பாடுகிறது. இரண்டாம்   கலிங்கத்துப்பரணி முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் கருணாகர தொண்டைமான் கலிங்க போரில் வென்றதை பேசும். 

கருணாகர தொண்டைமான் என்ற பெயரை கேட்டதும் சரித்திர நாவல் பிரியர்களுக்கு ஆனந்தம் பொங்கி இருக்கும். சாண்டில்யன் அவர்கள் எழுதிய கடல் புறா நாவலில் தலைமை கதாபாத்திரமாக வருவார்.

இந்த காலகட்டத்தில் தான் தமிழகத்தில் சைவமா வைணமா சண்டை வலுப்பெற்றது. 

சமண மதத்தில் இருந்து மன்னர்களை சைவ சமயம் பக்கம் கொண்டு வந்தார்கள் அப்பொழுது இருந்த  தீவிர சைவ துறவிகள்.  அதற்கு சாட்சியாக இந்நாளும் பலரால் பட பெறும் ஒரு பாடல் .

அந்த பாடல் "மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு....".

இது யாரால் எதனால் பாட பெற்றது ? அதில் பின்னால் என்ன வணிக செயல்பாடு இருந்திருக்கும் ?

இப்பொழுது 12ஆம் நூற்றாண்டின் சோழர்களின் போர் பக்கம் இருந்து 19ஆம் நூற்றாண்டிற்கு வருவோம்.

திருபாய் அம்பானி செயதது போல் ஜாம்ஷெட்ஜி டாடா என்பவர் 1868ல் ஒரு நிறுவனம் ஆரம்பித்தார். பிறகு 1874ல் ஒரு ஜவுளி நிறுவனத்தை ஆரம்பித்தார்.

ஜவுளியும் சோழர்களின் காலத்தில் முக்கிய வணிக பொருளாக இருந்தது. மஸ்லின் துணிக்கும் சோழர்களுக்கும் சம்பந்தம் இருக்குமா ?

திருப்பதிக்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு இருந்திருக்கும் ?

கடல் பட்டுவழி சாலையில் அந்த வைணவ பெரியவரின் பங்கு என்னவாக இருந்திருக்கும் ?

தொடரும்

#indianbusinessseries
#rajarajacholan 
#rajendracholan 
#Srilanka
#dhirubhaiambani

சோழர்களின் வணிக ராஜ்ஜியம் / BACKWARD INTEGRATION - ரிலையன்ஸ் - அத்தியாயம் 2

இந்தியாவின் நவீன வணிக போக்கில் வெற்றி பெற்ற நிறுவனங்களில் முக்கியமானது திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கதை.  அவர் அவ்வாறான மிக பெரிய வணிக ராஜ்ஜியத்தை அமைக்க காரணமாக இருந்தது BACKWARD INTEGRATION என்கிற முறையில் அவர் தொழிலை மற்றும் அதனை சார்ந்த வியாபாரத்தை விருத்தி செய்தது தான். 

அதென்ன Backward Integration ?

அதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்ள வேண்டும்.

1950கள் - அம்பானி அவர்கள் ஜவுளி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார். 10 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்தமாக துணி வாங்கி அதனை தேவைக்கேற்றது போல அல்லது வியாபார வாய்ப்புகள் இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். வெளிநாட்டு துணி வகைகளையும் இங்கு விற்பனைக்காக இறக்குமதி செய்தார்.

1960கள் - அம்பானி அவர்கள் என்னதான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வந்தாலும் உற்பத்தியாளர்கள் தான் அதிக லாபமடைந்தார்கள். அவர்களுக்கு அம்பானி சம்பளம் வாங்காமல் வேலை செய்து போல உணர்ந்தார். இந்நிலையை மாற்ற மிக பெரிய முடிவினை எடுத்தார். அது வரைக்கும் இந்தியாவில் செயல்படும் ஏற்றுமதியாளர்கள் யாராவது அப்படிபட்ட துணிச்சலான முடிவை எடுத்திருப்பார்களா என தெரியவில்லை. 

உற்பத்தியாளர்களின் கைக்கு போகும் லாபம் தனக்கு வர வேண்டும் என்றால் தானும் ஒரு உற்பத்தியாளராக உருவாக வேண்டும் என முடிவெடுத்து ஜவுளி உற்பத்தியில் ரிலையன்ஸ் நிறுவனம் அடியெடுத்து வைத்தது.

1970கள் - இன்னும் பெரியளவிலான தொழில் செய்ய பங்கு சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் பட்டியலிட பட்டது. 

அதன் பிறகான ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு வியாபார யுத்திகள் கையாள பட்டதால் ...

அதென்ன Backward Integration ?

ஒரு தொழிலுக்கு தேவையானவற்றை ஒரு நிறுவனமே தயாரித்து கொள்வது தான் அது. 

இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு  ரிலையன்ஸ் நிறுவனத்தை 1970களில் விட்டு விட்டு ஆயிரம் வருடம் பின்னோக்கி இராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்திற்கு போகலாம். 

அக்காலத்தில் பட்டுவழி சாலை என்பது நில வழி மற்றும் கடல் வழி என இரண்டு வழிகள் இருந்தன. 

இராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இருவரும் சோழ தேசம் எனது ஒரு வளம் நிறைந்த தேசமாக உருவாக வேண்டும் என்ற கனவு இருந்தது.

தந்தை அக்கனவை கண்டார், மகன் கனவை செயல்படுத்தி காட்டினார். 

அரேபிய வியாபாரிகள் அக்காலத்தின் உலக வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றினார்கள். (அவர்களை பற்றி தெரிந்ததை வரும் நாட்களில் எழுதுகிறேன்)

அவர்களது முக்கியமான வர்த்தக மையமாக அக்காலத்தில் இந்திய நிலப் பரப்பு இருந்துள்ளது (இந்தியா என்னும் தேசம் அப்பொழுது இல்லை).

இந்தியாவை தாண்டி சீனா, சுமத்திரா,பர்மா, தாய்லாந்து, மலாய் , ஜாவா, வியட்நாம், ஸ்ரீவிஜய ஆகிய நாடுகளில் அவர்களுக்கு வர்த்தகம் இருந்தது. இதற்காக இலங்கை, இந்தியா பர்மா ஆகிய துறைமுகங்களை பயன்படுத்தி வந்தனர். இவற்றில் மூலம் வரிபணம் அதிக அளவின் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு கிடைத்து கொண்டு இருந்தது. அவற்றை எல்லாம் ராஜேந்திர சோழன் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.

(இதனை ராஜேந்திர சோழர் காலத்து சோழ ராஜ்ஜிய நிலப்பரப்பையும் கடல் வணிகத்தின் பட்டுவழி சாலையும் ஒப்பிடுகையில் நாம் புரிந்து தெரிந்து கொள்ளலாம்)

இதன் மூலம் கடல் வணிகத்தில் வியாபார கப்பல்கள் நிற்கும் எல்லா முக்கியமான துறைமுகங்களும் சோழ ராஜ்ஜியத்தின் கீழ்  இருந்தது. அவற்றின் மூலம் கிடைத்த வரி பணம் சோழ தேசத்தை வளமான தேசமாக இருந்தது. 

எல்லாம் சரி .... திருபாய் அம்பானி கையாண்ட யுத்தியை பல வருடங்களுக்கு முன்பே வேறொருவர் கையாண்டு பெரும் வெற்றி பெற்று இருந்தார்.

அவர் யார் ?

தொடரும்...

#IndianBusinessSeries
#Reliance 
#dhirubhaiambani 
#Chozhakingdom
#rajarajacholan 
#Rajendracholan

Sunday, March 12, 2023

Indian Cola Wars In Making அத்தியாயம் 1


Indian Cola Wars In Making

1990களில் நடந்தது போல் மீண்டும் ஒரு வணிக போரை இன்னும் கொஞ்ச நாட்களில் பார்க்க போகிறோம்.

சரி அதற்கு முன்பான காலத்தில், 1990களுக்கு முன் 1980கள் வரைக்குமான வணிக சந்தையை எவ்வாறு விளம்பரங்கள் மூலம் கட்டமைக்க பட்டது என்பதை தெளிவாக அம்பி பரமேஸ்வரன் என்பவர் ஒரு புத்தகத்தில் எழுதி இருப்பார். அதாவது ரேடியோ, செய்தி தாள் விளம்பரங்களின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சந்தையை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

உலகமயமாக்கலுக்கு பிறவான காலத்தில் அதிக முதலீடு உடன் சர்வதேச நிறுவங்கள் இந்திய சந்தையில் காலுன்ற, அவைகள் கொடுத்த சந்தையிடுதல் போட்டியை சமாளிக்க முடியாமல் பல நிறுவங்கள் சர்வதேச நிறுவங்களுக்கு அடிப்பணிந்து போனது,  சில நிறுவங்கள் தங்களது பொருளாதார நிலையை உயர்ந்து கொண்டு புதிய யுத்திகளுடன் களம் கண்டு வெற்றி பெற தொடங்கி இருக்கிறார்கள்.

இதில் முக்கிய பங்கு வகிப்பது அதிகவேக நுகரபடும் நுகர்வோர் பொருட்கள். ஆங்கிலத்தில் Fast Moving Consumer Goods சுருக்கமாக FMCG.

உலகமயமாக்கலால் திறந்து விட பட்ட இந்திய சந்தை கதவுகள் வழியே மற்ற துறைகளை விட உணவு துறை நிறுவங்களே வேகமாக வந்தது. அவற்றில் முக்கியமானது பெப்சி, கொகா கோலா நிறுவங்கள் தான். 

இவற்றின் இரண்டுக்கும் இடைய 1980களில் அமெரிக்காவின் நடந்த வியாபார போட்டி மிக பிரபலம்.  நம்மூரின் குழாயடி சண்டை எல்லாம் தோற்று விடுமளவிற்கு போட்டி. இதனை Cola Wars என அழைப்பார்கள். விளம்பர துறையில் இருப்போர்களுக்கு Cola Wars என்பது முக்கிய பாடம். இந்தியாவிலும் நடந்திருக்கிறது ஆனால் பெரியளவில் இல்லை. 

மிக பெரிய நுகர்வு சந்தையாக இருக்கிற அமெரிக்காவின் பல பொருட்களுக்கு இம்மாதிரியான சந்தை போட்டிகள் நடந்திருக்கிறது. 

இப்படியாக இரு நிறுவங்களுக்கும் போட்டி நடக்கையில், அவர்களுக்கு கிடைத்த புதிய சந்தை தான் இந்தியா. இதில் கொகா கோலா நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் தொழில் நடந்த்திருக்கிறது. அரசியல் காரணங்களினால் இந்தியாவை விட்டு வெளியேறியது.

பிறகு 1990களில் இந்திய சந்தைக்கு வந்த இரு குளிர்பான நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தை பிரபல படுத்த கையில் எடுத்தது கிரிக்கெட் என்னும் துடுப்பாட்டம் / மட்டைபந்தாட்டத்தை தான். 

காரணம் 1983 உலக கோப்பை வென்ற பின்னர் அடுத்தடுத்த கிரிக்கெட் போட்டிகளுக்கு  நிதி சேகரிக்க பல முயற்சி எடுத்தும் பெரிதாக பலன் இல்லை. இந்த சமயத்தில் தான் 1987 போட்டியை திருபாய் அம்பானி கையில் எடுத்து நடத்தினார். அதன் பின் தான் ரிலையன்ஸ் என்பது தனிபெரும் அடையாளமாக (Brand) உருவானது.

இந்தியர்கள் எல்லாம் கிரிக்கெட் வெறியர்கள் என நன்றாக உணர்ந்து கொண்ட இரு நிறுவனங்களும் பல்வேறு விளம்பர யுத்திகளை கையாண்டது. அதெல்லாம் கோலா போர்களின் தொடர்ச்சியாக தான் இருந்தது. 

அவற்றில் ஒரு அங்கமாக மக்கள் தாக்கமென்றால் தங்களது குளிர்பானம் தான் அவர்களது ஞாபகத்திற்கு வர வேண்டும் என்ற நிலையை கொண்டு வர முயன்றது. ஜந்து ரூபாய்க்கு குளிர்பானம் எல்லாம் அப்பொழுது தான் வந்தது. நான் கல்லூரி படிக்கும் பொழுது கல்லூரி உணவகத்தில் சாப்பாடு வாங்கினால் கூடவே குளிபானம் ஒன்றை வாங்கிவிடுவார்கள். தண்ணீரை விட விலை குறைவு என்பதால். அதே போல் மதிய வேளையில் மட்டும் அங்கு குடிநீர் தீர்ந்து போய்விடும். 

இதெல்லாம் கோலா போரின் தொடர்ச்சி என்பதால் பெரிய சுவாரசியம் இல்லை. 

சுவாரசியம் எல்லாம் இனிமேல் தான். 

பெப்சி - கொகா கோலா ஆகிய நிறுவனங்களின் லாபத்தை பார்த்துவிட்டு பல புது நிறுவனங்கள் தங்களது புதிய குளிர்பானங்களை சந்தை படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

1970களில் கொகா கோலா இந்திய சந்தையை விட்டு போன பின்னர் அந்த இடத்தை கெம்ப கோலா பிடித்தது. 1990களின் உலகமயமாக்கல் வரைக்குமே பிரபல குளிர்பானமாக இந்திய சந்தையில் இருந்தது. அதன் பின் வியாபார போட்டியினால் தளர்ந்து போனது.

சில நாட்களுக்கு முன்னர் அந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் வாங்கிருக்கிறார்கள்.

இனி வரும் நாட்களில் இந்திய சந்தையை அந்த இரு நிறுவனங்களிடமிருந்து எப்படி மீட்டெடுக்க போகிறது என்பதெல்லாம் Cola Wars Version 2.Oல் வரும். 

கெம்ப கோலா இந்திய சந்தையை மட்டுமா குறி வைத்திருக்கும் சர்வதேச சந்தையையும் தானே கணக்கில் வைத்திருக்கும். பார்ப்போம்.

இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறப்பே பின்கள ஒருங்கிணைப்பு (Backward Integration) தான். அதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்ய தேவையானத்தை வெளியில் இருந்து வாங்காமல் அதனை அவர்களே தயாரித்து கொள்வது தான். இதன் மூலம் செலவு குறைவும்.

இதனை தான் இனி வரும் காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்ய போகிறது.

Wednesday, February 1, 2023

குறட்டையும் தமிழ் மொழியும்


குறட்டையும் "ல,ழ" வும்

தொண்டை பகுதியிலுள்ள சுவாச பாதையில் சதை வளர்வதால் பலருக்கு குறட்டை பிரச்சனை வருகிறது.

இதற்கு நாவு பயிற்சி என ஒன்று பரிந்துரைக்கப்படுகிறது. இதனை செய்வதால் குறட்டை பிரச்சனை குறையும் என சொல்கிறார்கள்.

பல்வேறு விதமான நாவசைவுகள் கொண்ட இந்த பயிற்சியில் நாவை மேல் வரிசை பற்கள் பக்கம் வைப்பது, இரண்டாவது நாவை மடக்கி தொண்டை பார்த்து வைப்பது போல வருகிறது.

இந்த இரண்டு வித பயிற்சிகளும் "ல" மற்றும் "ழ" உச்சரிப்புகளோடு ஒத்து போகிறது.

தமிழில் மட்டும் இப்படியான உச்சரிப்பு இருக்கிறதா அல்லது வேறு மொழிகளிலும் இவ்வகை உச்சரிப்பு இருக்கிறதா என தெரியவில்லை.

இதனை சொற்ப்பிறப்பியலில் வைத்து ஆராய முடியாது, ஏனென்றால் இவை எழுத்து. எழுத்து என்பது மொழி பிறப்பின் பொழுதே அல்லது வெறும் உரையாடல் ஓசையாக இருந்து மொழி எழுத்து வடிவம் பெறும் போதோ உருவானதாக இருக்கும்.

"ல" & "ழ" எழுத்து மற்றும் உச்சரிப்பின்  உருவாக்கம் நா பயிற்சியினை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்குமோ ? தெரியவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, குறட்டை பிரச்சனைக்கு தீர்வாக தமிழின முன்னோர்கள் இதனை செய்து இருப்பார்களா ?

குறிப்பு - ல,ள,ழ ஆகிய மூன்றின் உச்சரிப்பும் நல்ல நாவு பயிற்சி கொடுப்பவை.

Tuesday, December 20, 2022

இன்றைய சினிமா


ஒரு காலத்துல  நியூஸ்பேப்பர் ல இன்னைக்கு டிவில என்னென்ன படம் போடுறாங்கன்னு ஆர்வமா பார்த்துட்டு இருந்தேன்...

அது வெட்டி ஆபீசரா இருந்த காலம் வரைக்கும் தொடர்ந்தது...

அப்ப தான் இந்தியா ல பிராட்பேண்ட் இண்டர்நெட் எல்லாம் புதுசா வர ஆரம்பிச்சது....

அப்பறமா டிவி சேனலேயே காய்கறி விக்குற மாதிரி கூவி கூவி சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்பம் தான் இன்றைய சினிமா பகுதிய பாக்குறத நிறுத்தினேன்.

அப்பறமா யூட்யூப் ல புது படம் எல்லாம் வந்த கையோட சுட சுட வர ஆரம்பிச்சது. பழைய படமும் அதே மாதிரி வர ஆரம்பிச்சது. ஒரு நல்ல நாள் ல சட்டம் கொண்டு வந்து அப்படி யூட்யூப் ல படத்த கள்ள தனமா வெளியீடுறத தடை பண்ணிட்டாங்க.

அப்புறமா OTT, சேனல்ன்னு வளர்ந்துருச்சு. படம் பாக்கணுமுன்ன எதாவது சேனல வைச்சா போதுமுன்னு ஆகிடுச்சு.

இந்த சேனல் ல இந்த சினிமா போடுறாங்கன்னு ஆர்வமா பாத்து, அதுக்காக காத்திருந்து படம் பாத்த காலத்துல சந்தோஷம், இப்பம் எந்த படத்த எப்ப வேணுமுன்னாலுன் பாக்கலாமுன்னு வசதி இருக்கு... ஆனா அந்த காத்திருப்பு சந்தோஷம் இல்ல.

Sunday, August 14, 2022

பொன்னியின் செல்வனும் நானும் 2

மேற்கொண்டு போகும் முன் முக்கிய அறிவிப்பு - எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் பராக் பராக் - வந்தியதேவன் பாதையில் ஒரு அனுபவ பயணம் என்ற தொடரை கல்கி ஆன்லைன் என்னும் கல்கி இதழின் யூடியூப் ஒளியலை வரிசையில் ( https://youtu.be/bUmXhOy3Cfs ) தொகுத்து வழங்க இருக்கிறார். தவற விட கூடாத நிகழ்ச்சி இது. 

- - - 
முதன் முதலில் பொன்னியின் செல்வனை படிக்கையில் ஒரு மாயாஜால உலகத்தில் பயணித்தது போலிருந்ததும். முதல் சில பக்கங்களில் கதையோடு ஒன்ற ஆரம்பிக்கும் வரையில் கொஞ்சம் என்னடா இது என்பது போல் தான் இருந்தது. அதன் பிறவு கல்கியில் எழுத்து நடையோட்டம் கூடவே பத்மவாசனது ஓவியங்கள் எல்லாம் சேர்ந்து கல்கி உருவாக்கிய அந்த மாயாஜால உலகத்திலென்னை தள்ளி விட்டது.

இப்படிப்பட்ட ஒரு மாயாஜால உலகத்தை படைக்க எம்மாதிரியான அனுபவங்கள் கல்கி அவர்களுக்கு உத்வேகமாக அமைத்திருக்கும் என்பதை அறிய சில புத்தகங்களை அவசியம் வாசிக்க வேண்டும்.

அவை

- தெய்வத்தமிழ் ஈழத்திலே : கல்கி
- நம் தந்தையர் செய்த விந்தைகள் : கல்கி
- பொன்னியின் புதல்வர் - சுந்தா

பொன்னியின் செல்வன் நாவலை போலவே கல்கி எழுதிய மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு அலை ஓசை. கல்கி தனது சுதந்திர போராட்டங்களின் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்த நாவலை எழுதிருப்பார். 1934 முதல் 1948 வரையிலான இந்தியவை அப்படியே படம் பிடித்து காட்டி இருப்பார். 

சிறு போராட்ட குழுக்கள், அவர்களது ரகசிய சந்திப்புகள், இவர்களை கண்காணிக்கும் சி.ஐ.டி.கள் மற்றும் அந்தகால அரசியல்வாதிகள் & பொதுமக்கள் என கலந்துகட்டி  எழுதிருப்பார். மிகுந்த பொறுமையுடன் வாசித்தால் தான் இப்படைப்பில் இருக்கும் பொக்கிஷங்களை கண்டடையலாம். கல்கிக்கு சாகித்திய அகாதமி விருதை வாங்கி தந்த படைப்பு இது.

பொன்னியின் செல்வனை மட்டுமே வாசித்த நபர்களுக்கு அலை ஓசை மிக பெரிய அதிர்ச்சியாக இருக்கலாம், ஏனென்றால் இரண்டிலும் வெவ்வேறு எழுத்துநடைகளை பயன்படுத்திருப்பார் கல்கி. 

1930களில் ஆனந்த விகடனில் தனது கட்டுரைகளின் மூலமும் கதைகளின் மூலமும் புகழ்பெற்று இருந்த கல்கி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வாசன் சம்மதம் கொடுக்காத நிலையில் ஆனந்த விகடனில் இருந்து விலகினார் கல்கி. 

அப்படி கல்கி ஆனந்த விகடனில் இருந்து விலகியதும் ஒரு வகையில் நன்மையே நிகழ்ந்தது. கல்கி விட்டு சென்ற இடத்தை தேவன் கையில் எடுத்து வழி நடத்தி சென்றார்.

ஏற்கனவே கல்கி தனக்கான ஒரு அடையாளத்தை எழுத்துலகில் பெற்றிருந்தார். போராட்டத்தில் சிறை சென்றுவிட்டு வந்த கல்கிக்காக அவரது நண்பர் சதாசிவம் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க முடிவெடுத்தார். 

அப்பொழுது கல்கி அவர்களையும்  பங்குதாரராக சேர்த்து கொண்டார். ஆனந்த விகடன் அப்பொழுதே வார இதழ்களின் சந்தையில் புகழ்பெற தொடங்கி இருந்தது. 

சதாசிவம் மற்றும் கல்கி இருவருக்கும் ஆனந்த விகடன் மற்றும் பல பிரபல இதழ்களில் மத்தியில் ஒரு புது இதழை ஆரம்பித்து மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே பெரிய சவால்.

அத்தகைய சவாலை எப்படி எதிர்கொள்வது யோசித்து சதாசிவம் ஒரு முடிவை எடுத்தார். புது பத்திரிக்கைக்கான ஒரு பெயரை தேர்ந்தெடுத்தார். அந்த பெயரே போதும் மக்களின் கவனத்தை பெற என நம்பினார்.

அந்த பெயர் "கல்கி". தமிழ் பத்திரிக்கை உலகில் ஒரு எழுத்தாளரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது அதுவே முதல் முறை.

இன்னொன்றயும் கவனிக்க வேண்டும் அப்பொழுது கல்கி எத்தகைய புகழை பெற்று இருந்தால் சதாசிவம் அவர்கள் தைரியமாக இந்த முடிவை எடுத்திருப்பார்.

பத்திரிக்கை ஆரம்பித்தாகி விட்டது, மக்களின் கவனத்தை பெற்றாகி விட்டது, கல்கி இதழுக்கான வாசக பரப்பை சந்தாதாரர்களை பெற என்ன வேண்டும் ?

எப்படி எல்லாம் எழுதினால் மக்களது கவனத்தை பெற்ற முடியும் என யோசித்து கல்கி எழுத ஆரம்பித்தது தான் " பார்த்திபன் கனவு' தொடர்கதை.

பெரும்பான்மையான மக்கள் சிவகாமியின் சபதம் கதை தான் முதலில் எழுத பட்டு இருக்கும் என்று ஆனால் உண்மையில் அது  பார்த்திபன் கனவு வந்து முடிந்த பிறகே அந்ததொடர் ஆரம்பிக்க பட்டது.

பார்த்திபன் கனவு வந்து கொண்டி இருந்த நேரத்தில் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டு இருந்தது.

அதனை சமாளிக்க போட்டியில் நிலைத்திருக்க அப்பொழுது ஆனந்த விகடனில் தலைமை பொறுப்பில் இருந்த தேவன் ஒரு ஜனரஞ்சக நகைச்சுவை தொடரை எழுத ஆரம்பித்தார். இன்றளவும் அந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. 

அந்த தொடரின் பெயர் ..... "துப்பறியும் சாம்பு".

தொடரும் ...

#பொன்னியின்செல்வன்
#PonniyinSelvan 
#பொன்னியின்செல்வனும்நானும்

Sunday, July 31, 2022

வாடகை மகிழுந்து - அநியாய கட்டணம்


இன்றைய தேதியில் வாடகைக்கு வாகனங்களை அமர்த்துவது என்பது பலரது தினசரி வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சிலரது அன்றாட வேலையே இதனை நம்பியே தான் இருக்கிறது.

கொஞ்ச நாட்களாக எரிபொருள் விலை உயர்வினால் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் பலரும் பேருந்து, இரயில்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதுவுமே அதிக சேவைகளை கொண்டதாக இல்லை.

இது தான் வேளையென நாங்கள் இருக்கிறோம் போக்குவரத்து நெரிசல் பற்றியோ எரிபொருள் விலை பற்றியோ கவலை படவேண்டாம், எங்களது வாடகை மகிழுந்து சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று விளம்பர படுத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட வேளையில் அவர்கள் நிறுவனத்தின் வாடகை கட்டணம் எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்று புரியாத ஒன்று. ஏனென்றால் நேரத்திற்கு தகுந்தவாறு கட்டணம் மாறி கொண்டே இருக்கும். போகும் தூரம் ஒன்றே என்றாலும்.

இதில் வேறு கூடுதலாய் ஐம்பது ரூபாய் கொடுத்தால் தான் ஓட்டுனர்கள் வருவார்கள். இல்லாவிட்டால் ஏதோ இலவசமாக வர சொன்னது போல் பேசுவார்கள்.

சரி ஒரு மாதிரியான முயற்சி பண்ணி பார்ப்போம் என....

போகிற தூரம் சார்ந்து தான் OLA, UBERல் எல்லாம் கட்டணம் நிர்ணயிக்க படும் என்று சொல்ல படுகிறது.

ஆனால் கிளம்பும் இடமும் போய் சேர்கிற இடமும் ஒரே இடமாக வைத்து பார்த்தேன்.

நியாயமாக பார்த்தால் கட்டணம் எதுவும் வந்திருக்க கூடாது. ஆனால் வந்திருக்கிறது. 

புறப்படும் இடம் - மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன் வாசல்
சேருமிடம் -மைலாப்பூர் கபாலீஸ்வரர் முன் வாசல்

இது இப்படியாக இருக்க...

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போக எதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க படுகிறது தெரியவில்லை. 

இன்னொன்றும் புரிகிறது இதுவரையில் அதிகமாக தான் வாடகை கட்டணத்தை தான் இந்த வாடகை மகிழுந்து நிறுவனத்தார் வசூலித்துள்ளனர்.

இவர்களுக்கென கட்டண அட்டவணை என்று எதுவும் இல்லை. 

ஏன் இல்லை என்பதும் தெரியவில்லை.

#olataxi 
#ubertaxi
Related Posts with Thumbnails