Pages

Saturday, December 26, 2015

இளையராஜா இசை - மயிலிறகு மருந்து

அன்று ஒரு அற்புதமான நாள் ....

மதியம் முக்கிய வேலையாக அலுவலகத்தில் இருந்து, வழியில் இறக்கி விடுவதாக சொன்ன நண்பனோடு பைக்கில் நுங்கம்பாக்கம் சென்று கொண்டு இருந்தேன்.

போகும் வழியில் அவன் இளையராஜா இசையமைத்த தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலே என்ற பாடலை பாடினான். எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் நானும் சேர்ந்து பாடினேன். மதிய வெயில், போக்குவரத்து நெரிசல், வாகன சப்தங்கள் என்று எதுவும் எங்களை பொருட்படுத்தவில்லை. எதோ ஒரு ஞாயிறு காலை சொந்த ஊரில் மார்கழி குளிரில் நடந்தால் கிடைக்கும் இன்பத்தை உணர்ந்தேன்.

"மச்சி உனக்கு இளையராஜா பாட்டுன்ன பிடிக்குமாடா ??" என்று கேட்டேன்.

அதற்கு அவன் "மாமாஆ பிடிக்குமா ..... இளையராஜா பாட்டுன்ன உயிரு ... நைட் ரூம்ல இளையராஜா எம்பித்ரீய போட்டுட்டு கேட்டுகிட்டே இருப்பேண்டா .... சில பாட்ட கேக்குறப்ப அழுதுருவேன் ...." என்று சொல்லி கொஞ்சம் நேரம் கழித்து ..." ஏழர வருஷ லவ் மச்சீ .... மறக்க முடியல .... காசு இல்லன்னு சிங்கப்பூர் மாப்பிள்ளைய கட்டிகிட்டு போயிட்டா ..."

அதுக்கு நான் "ஏழர வருஷம் அதான் ஏழராகிருச்சு".

வண்டி நந்தனத்தை கடந்து கொண்டு இருந்தது, அப்பொழுது நான் "மச்சீ உனக்கு இந்த பாட்டு பிடிக்குமா ..." என்று கேட்டுவிட்டு சிட்டுக்குருவி படத்தில் வரும் என் கண்மணி உன் காதலி இள மாங்கனி என்ற பாடலை பாடினேன். உடனே அவனும் சேர்ந்து பாடினான்.

பாடிவிட்டு "மச்சீ அதவிட மௌன ராகத்துல வருமே மன்றம் வந்த தென்றலுக்கு  பாட்ட மட்டும் எத்தன ஆயிரம் வாட்டி கேட்டு இருப்பேன்னு தெரியல ..." என்று சொல்லியபடி அந்த பாடலின் இசை கோர்வையை பாடி காட்டினான்.

பிறகு பைக்கை ஒரு டீ கடை பக்கம் நிறுத்திவிட்டு "மச்சீ ஒரு சிவகுமார் படம் வருமே ... அதுல கூட ஒரு பொண்டாட்டிய இன்னொருத்தன் பைக் தள்ளிகிட்டு போவான் ... அப்ப ஒரு பாட்டு வருமே ...." வாங்கிய சிகரெட்டை பற்ற வைத்து இழுத்து புகைவிட்ட படி ..... "ஆங் ரோசாப்பூ ரவிக்கைக்காரி .....எண்ணுள்ளில எங்கோ ஏங்கும் கீதம் பாட்டு சான்ஸே இல்ல .. அப்படி ஒரு மியூசிக் ...நைட்டு கேட்டுகிட்டே இருப்பேன் ...தூக்கம் வராது ...கேட்டுகிட்டே இருக்க தோணும்"

வாங்கிய தேநீரை சுவைத்தபடி நான் "மச்சி பன்னீர் புஷ்பங்கள் ஒரு பாட்டு பூந்தளிர் ஆடன்னு ...கேக்குறப்ப எல்லாம் ஸ்கூல் லைஃப்ப ரொம்ப மிஸ் பண்ணுவேண்டா ...."

அவன் "நான் என் உயிர ஒரு பாட்டுக்காக கொடுக்கலாமுன்னு இருக்கேன அது ஜானி படத்துல என் வானிலே ஒரே வெண்ணிலா  பாட்டுக்கு தான் மச்சான்.... என்ன மியூசிக்கு ...என்ன வாய்ஸ் ....."

இப்படி பேசி கொண்டு டீ கடையிலிருந்து கிளம்பும் பொழுது மேற்கொண்டு அலுவலக வேலையை திங்கட்கிழமை அன்று பார்த்து கொள்ளலாம் என்று இருவரும் கிளம்பி பெசன்ட் நகரில் அமைதியான ; மரங்கள் சூழ்ந்த இடத்தில் அது தரும் நிழலில் நின்று கொண்டு நண்பனது கைபேசியில் இருந்த இளையராஜா பாடல்களை கேட்டு கொண்டு அதனை பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டோம்.

முப்பது வயது வரையில் ஆரவாரமான இசை, ஆர்ப்பாட்டமான இசை, துள்ளல் இசை போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் முப்பதுகளில் இது தான் வாழ்க்கை என்ற புரிதல் வரும் பொழுது இளையராஜாவின் பாடல்கள் பிடிக்க ஆரம்பிக்கிறது. இளையராஜாவின் இசை தினசரி வாழ்க்கையில் காயம் பட்டு இருக்கும் மனதிற்கு மயிலிறகின் மூலம் தடவ படும் மருந்தாக இருக்கிறது. 

No comments:

Related Posts with Thumbnails