Pages

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, June 4, 2024

மங்கள் & மங்கள் - டாட்டூஸ்


எங்கூர்ல மங்கள் & மங்கள்ன்னு ஒரு கடை இருக்கு. இப்பம் தான் அண்ணாச்சி கடையாட்டம் பலது வைச்சு விக்குறாங்க.

ஆனா முன்னம் அது பாத்திர கடையா தான் இருந்துச்சு.

அதுல என்ன சிறப்புன்ன பாத்திரம் வாங்கிட்டு கடைக்கு முன்னாடி பெயர் கொத்தி கொடுக்க இருக்குற ஆள் கிட்ட பெயர் கொத்த கொடுப்பாங்க.

கடகல்லா பக்கமா வாசலண்ட அந்த ஆள் உட்காந்திருப்பாரு. அவர சுத்தி வெள்ளிகிழம அம்மன் கோயில் ல சர்க்கரை பொங்கல் வாங்க நிக்குற கூட்டம் மாதிரி எல்லோரும் நிப்பாங்க.

பாத்திரத்துல பெயர் கொத்தி கைல வாங்கினதும் லேடீஸ் முகத்துல அப்புடி ஒரு சிரிப்பு வரும். அது அவங்க பாத்திரமுன்னு சமூகத்குக்கு சொல்லாம சொல்லுற வழக்கமா அது இருந்துச்சு.

இப்பம் மெட்ராஸ் ல லவ்ஸ் ல விழுந்தா கல்யாணம் கட்டிகிட்டா குழந்தை பொறந்தான்னு பச்சை (டாட்டூ) குத்திக்குறாங்க. பெயரு, அச்சுன்னு பலது இருக்கும்.

லேடீஸ் ஆம்பளைஸ்ன்னு எல்லோரும் குத்திக்குறாங்க. அதைய எல்லாம் பாக்குறப்ப மங்கள் & மங்கள் பாத்திர கடை ல பெயர் கொத்துறது தான் ஞாபகத்துக்கு வருது.

முன்னாடி ஆம்பளைஸ்ன்ன கை ல பொண்டாட்டி பெயர் பச்சை குத்திப்பாங்க, லேடீஸ்ன்ன கை இல்லாங்காட்டி மார் தோள்பட்டை ல குத்திப்பாங்க.

இப்பம் எல்லாம் அவங்களே பாக்க முடியாத இடத்துல எல்லான் குத்திக்குறாங்க. கேட்டா மத்தவங்க பாப்பாங்க லன்னு ரூட்ட கொடுக்குறாங்க.

மத்தவன் பாக்குறதுன்னு ஏண்டா நீங்க செலவு பண்ணுறீங்கன்னு அக்கறை ல கேட்டா...

"Bro It's A Statement..."நு சொல்லுறாங்க.

இம்புட்டி வருஷமா பேங்க் ல வேல பாத்துட்டு நமக்கு ஸ்டேட்மெண்ட்ன்ன பாஸ்புக் ஸ்டேட்மெண்ட் தான் ஞாபகத்துக்கு வருது.

இதைய எல்லாம் பாக்குறப்ப வரவர  பூமர் ஆகிட்டு வருமோன்னு சந்தேகமா இருக்கீ.

Monday, June 3, 2024

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் - சைதாபேட்டை


சென்னையில் படிக்க தொடங்கிய நாள் முதல் பல கிராமங்களின் தொகுப்பான இந்த மாநகரின் வரலாற்றை தேடி தேடி வாசித்து வருகிறேன்.

அப்படியான தேடலில் கிடைத்தவை பல... மக்கள் பூங்கா (People's Park) போன்றவை அடங்கும். அதனை பற்றி 2013ஆம் ஆண்டு ஒரு சிறு கட்டுரை கூட எழுதிருந்தேன். (https://mayvee.blogspot.com/2013/02/1859.html?m=0)

இன்று மற்றொரு விஷயம் பற்றி கேள்வி பட்டேன். 

சைதாபேட்டை திருவிழாக்கள். 

காரணீஸ்வரர் கோவில் மற்றும் அதனை சார்ந்த பண்டிகை திருவிழாக்கள் பற்றி முன்பே கேள்வி பட்டு இருக்கிறேன். 

ஆனால் இன்று 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் பற்றி அலுவலகத்தில் ஒருவர் சொல்ல ஆச்சரியமடைந்தேன்.

ஆனால் சில கல்வெட்டுகள் படி இக்கோயில் 1000 வருட பழமையானது என சொல்கிறார்கள்.

ஆயிர வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவில் சமய சண்டைகள் வலுப்பெற்று இருந்தன. அதன்படி எங்கெல்லாம் சைவ சமய கோயில்கள் (சிவன் கோயில்கள்) கட்டபட்டனவோ அதன் அருகிலேயே வைணவ கோயில்கள்(பெருமாள் கோயில்கள்) கட்டபட்டன. 

உதாரணமாக ஸ்ரீரங்கம் - திருவானைக்கா.

நூற்று வருடங்கள் முன்பு இராமானுஜர் விஜய விலாஸ் சபை ஒன்று கட்ட பட்டு இருக்கிறது. மேலும் கோயிலை சுற்றி பல ஆழ்வார்களின் பெயரில் சபைகள் கோயில்கள் இருக்கிறது. அதனை பற்றிய வரலாறு எல்லாம் தெரியவில்லை.

திருவிழாக்கள், கோயில்கள் எல்லாம் வைத்து பார்த்தால் பழங்காலத்தில் சைதாபேட்டை முக்கிய கலாச்சார மையமாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.

அடையாறு ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது, அதனால் வணிக மையமாகவும் ராஜாக்கள் காலத்தில் இருந்திருக்க வேண்டும். 

மைலாப்பூர் என்னும் பண்டைய கடல் சார் வணிக மையம் இருந்தபடியால் சிறு மையமாக சைதாபேட்டை இருந்திருக்க வேண்டும்.

சைதாபேட்டை 1980களில் முக்கிய அரசியல் களமாக இருந்ததென கேள்விபட்டு இருக்கிறேன், ஆனால் கோயில்கள் பற்றி இப்பொழுது கேள்வி படுகிறேன். 

இந்தகோயிலை கட்டியவர்கள் பலிஜா செட்டி சமூகத்தை சேர்ந்த வணிகர்கள் தான்.

வணிகர்கள் ஒன்றுமில்லாத இடத்தில் கோயில் கட்டி இருக்க வாய்ப்பு இல்லை.

சைதாபேட்டை வரலாறு தெரிந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிரவும்.

/ / /

பழங்காலத்தில் கோயில்கள் வணிக மையமாக இருந்திருக்குமா ?

உப்புக்கு சப்பாணி - பதிவு விரைவில்

Sunday, March 12, 2023

Indian Cola Wars In Making அத்தியாயம் 1


Indian Cola Wars In Making

1990களில் நடந்தது போல் மீண்டும் ஒரு வணிக போரை இன்னும் கொஞ்ச நாட்களில் பார்க்க போகிறோம்.

சரி அதற்கு முன்பான காலத்தில், 1990களுக்கு முன் 1980கள் வரைக்குமான வணிக சந்தையை எவ்வாறு விளம்பரங்கள் மூலம் கட்டமைக்க பட்டது என்பதை தெளிவாக அம்பி பரமேஸ்வரன் என்பவர் ஒரு புத்தகத்தில் எழுதி இருப்பார். அதாவது ரேடியோ, செய்தி தாள் விளம்பரங்களின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சந்தையை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

உலகமயமாக்கலுக்கு பிறவான காலத்தில் அதிக முதலீடு உடன் சர்வதேச நிறுவங்கள் இந்திய சந்தையில் காலுன்ற, அவைகள் கொடுத்த சந்தையிடுதல் போட்டியை சமாளிக்க முடியாமல் பல நிறுவங்கள் சர்வதேச நிறுவங்களுக்கு அடிப்பணிந்து போனது,  சில நிறுவங்கள் தங்களது பொருளாதார நிலையை உயர்ந்து கொண்டு புதிய யுத்திகளுடன் களம் கண்டு வெற்றி பெற தொடங்கி இருக்கிறார்கள்.

இதில் முக்கிய பங்கு வகிப்பது அதிகவேக நுகரபடும் நுகர்வோர் பொருட்கள். ஆங்கிலத்தில் Fast Moving Consumer Goods சுருக்கமாக FMCG.

உலகமயமாக்கலால் திறந்து விட பட்ட இந்திய சந்தை கதவுகள் வழியே மற்ற துறைகளை விட உணவு துறை நிறுவங்களே வேகமாக வந்தது. அவற்றில் முக்கியமானது பெப்சி, கொகா கோலா நிறுவங்கள் தான். 

இவற்றின் இரண்டுக்கும் இடைய 1980களில் அமெரிக்காவின் நடந்த வியாபார போட்டி மிக பிரபலம்.  நம்மூரின் குழாயடி சண்டை எல்லாம் தோற்று விடுமளவிற்கு போட்டி. இதனை Cola Wars என அழைப்பார்கள். விளம்பர துறையில் இருப்போர்களுக்கு Cola Wars என்பது முக்கிய பாடம். இந்தியாவிலும் நடந்திருக்கிறது ஆனால் பெரியளவில் இல்லை. 

மிக பெரிய நுகர்வு சந்தையாக இருக்கிற அமெரிக்காவின் பல பொருட்களுக்கு இம்மாதிரியான சந்தை போட்டிகள் நடந்திருக்கிறது. 

இப்படியாக இரு நிறுவங்களுக்கும் போட்டி நடக்கையில், அவர்களுக்கு கிடைத்த புதிய சந்தை தான் இந்தியா. இதில் கொகா கோலா நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் தொழில் நடந்த்திருக்கிறது. அரசியல் காரணங்களினால் இந்தியாவை விட்டு வெளியேறியது.

பிறகு 1990களில் இந்திய சந்தைக்கு வந்த இரு குளிர்பான நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தை பிரபல படுத்த கையில் எடுத்தது கிரிக்கெட் என்னும் துடுப்பாட்டம் / மட்டைபந்தாட்டத்தை தான். 

காரணம் 1983 உலக கோப்பை வென்ற பின்னர் அடுத்தடுத்த கிரிக்கெட் போட்டிகளுக்கு  நிதி சேகரிக்க பல முயற்சி எடுத்தும் பெரிதாக பலன் இல்லை. இந்த சமயத்தில் தான் 1987 போட்டியை திருபாய் அம்பானி கையில் எடுத்து நடத்தினார். அதன் பின் தான் ரிலையன்ஸ் என்பது தனிபெரும் அடையாளமாக (Brand) உருவானது.

இந்தியர்கள் எல்லாம் கிரிக்கெட் வெறியர்கள் என நன்றாக உணர்ந்து கொண்ட இரு நிறுவனங்களும் பல்வேறு விளம்பர யுத்திகளை கையாண்டது. அதெல்லாம் கோலா போர்களின் தொடர்ச்சியாக தான் இருந்தது. 

அவற்றில் ஒரு அங்கமாக மக்கள் தாக்கமென்றால் தங்களது குளிர்பானம் தான் அவர்களது ஞாபகத்திற்கு வர வேண்டும் என்ற நிலையை கொண்டு வர முயன்றது. ஜந்து ரூபாய்க்கு குளிர்பானம் எல்லாம் அப்பொழுது தான் வந்தது. நான் கல்லூரி படிக்கும் பொழுது கல்லூரி உணவகத்தில் சாப்பாடு வாங்கினால் கூடவே குளிபானம் ஒன்றை வாங்கிவிடுவார்கள். தண்ணீரை விட விலை குறைவு என்பதால். அதே போல் மதிய வேளையில் மட்டும் அங்கு குடிநீர் தீர்ந்து போய்விடும். 

இதெல்லாம் கோலா போரின் தொடர்ச்சி என்பதால் பெரிய சுவாரசியம் இல்லை. 

சுவாரசியம் எல்லாம் இனிமேல் தான். 

பெப்சி - கொகா கோலா ஆகிய நிறுவனங்களின் லாபத்தை பார்த்துவிட்டு பல புது நிறுவனங்கள் தங்களது புதிய குளிர்பானங்களை சந்தை படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

1970களில் கொகா கோலா இந்திய சந்தையை விட்டு போன பின்னர் அந்த இடத்தை கெம்ப கோலா பிடித்தது. 1990களின் உலகமயமாக்கல் வரைக்குமே பிரபல குளிர்பானமாக இந்திய சந்தையில் இருந்தது. அதன் பின் வியாபார போட்டியினால் தளர்ந்து போனது.

சில நாட்களுக்கு முன்னர் அந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் வாங்கிருக்கிறார்கள்.

இனி வரும் நாட்களில் இந்திய சந்தையை அந்த இரு நிறுவனங்களிடமிருந்து எப்படி மீட்டெடுக்க போகிறது என்பதெல்லாம் Cola Wars Version 2.Oல் வரும். 

கெம்ப கோலா இந்திய சந்தையை மட்டுமா குறி வைத்திருக்கும் சர்வதேச சந்தையையும் தானே கணக்கில் வைத்திருக்கும். பார்ப்போம்.

இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறப்பே பின்கள ஒருங்கிணைப்பு (Backward Integration) தான். அதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்ய தேவையானத்தை வெளியில் இருந்து வாங்காமல் அதனை அவர்களே தயாரித்து கொள்வது தான். இதன் மூலம் செலவு குறைவும்.

இதனை தான் இனி வரும் காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்ய போகிறது.

Tuesday, December 20, 2022

இன்றைய சினிமா


ஒரு காலத்துல  நியூஸ்பேப்பர் ல இன்னைக்கு டிவில என்னென்ன படம் போடுறாங்கன்னு ஆர்வமா பார்த்துட்டு இருந்தேன்...

அது வெட்டி ஆபீசரா இருந்த காலம் வரைக்கும் தொடர்ந்தது...

அப்ப தான் இந்தியா ல பிராட்பேண்ட் இண்டர்நெட் எல்லாம் புதுசா வர ஆரம்பிச்சது....

அப்பறமா டிவி சேனலேயே காய்கறி விக்குற மாதிரி கூவி கூவி சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்பம் தான் இன்றைய சினிமா பகுதிய பாக்குறத நிறுத்தினேன்.

அப்பறமா யூட்யூப் ல புது படம் எல்லாம் வந்த கையோட சுட சுட வர ஆரம்பிச்சது. பழைய படமும் அதே மாதிரி வர ஆரம்பிச்சது. ஒரு நல்ல நாள் ல சட்டம் கொண்டு வந்து அப்படி யூட்யூப் ல படத்த கள்ள தனமா வெளியீடுறத தடை பண்ணிட்டாங்க.

அப்புறமா OTT, சேனல்ன்னு வளர்ந்துருச்சு. படம் பாக்கணுமுன்ன எதாவது சேனல வைச்சா போதுமுன்னு ஆகிடுச்சு.

இந்த சேனல் ல இந்த சினிமா போடுறாங்கன்னு ஆர்வமா பாத்து, அதுக்காக காத்திருந்து படம் பாத்த காலத்துல சந்தோஷம், இப்பம் எந்த படத்த எப்ப வேணுமுன்னாலுன் பாக்கலாமுன்னு வசதி இருக்கு... ஆனா அந்த காத்திருப்பு சந்தோஷம் இல்ல.

Sunday, August 14, 2022

பொன்னியின் செல்வனும் நானும் 2

மேற்கொண்டு போகும் முன் முக்கிய அறிவிப்பு - எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் பராக் பராக் - வந்தியதேவன் பாதையில் ஒரு அனுபவ பயணம் என்ற தொடரை கல்கி ஆன்லைன் என்னும் கல்கி இதழின் யூடியூப் ஒளியலை வரிசையில் ( https://youtu.be/bUmXhOy3Cfs ) தொகுத்து வழங்க இருக்கிறார். தவற விட கூடாத நிகழ்ச்சி இது. 

- - - 
முதன் முதலில் பொன்னியின் செல்வனை படிக்கையில் ஒரு மாயாஜால உலகத்தில் பயணித்தது போலிருந்ததும். முதல் சில பக்கங்களில் கதையோடு ஒன்ற ஆரம்பிக்கும் வரையில் கொஞ்சம் என்னடா இது என்பது போல் தான் இருந்தது. அதன் பிறவு கல்கியில் எழுத்து நடையோட்டம் கூடவே பத்மவாசனது ஓவியங்கள் எல்லாம் சேர்ந்து கல்கி உருவாக்கிய அந்த மாயாஜால உலகத்திலென்னை தள்ளி விட்டது.

இப்படிப்பட்ட ஒரு மாயாஜால உலகத்தை படைக்க எம்மாதிரியான அனுபவங்கள் கல்கி அவர்களுக்கு உத்வேகமாக அமைத்திருக்கும் என்பதை அறிய சில புத்தகங்களை அவசியம் வாசிக்க வேண்டும்.

அவை

- தெய்வத்தமிழ் ஈழத்திலே : கல்கி
- நம் தந்தையர் செய்த விந்தைகள் : கல்கி
- பொன்னியின் புதல்வர் - சுந்தா

பொன்னியின் செல்வன் நாவலை போலவே கல்கி எழுதிய மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு அலை ஓசை. கல்கி தனது சுதந்திர போராட்டங்களின் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்த நாவலை எழுதிருப்பார். 1934 முதல் 1948 வரையிலான இந்தியவை அப்படியே படம் பிடித்து காட்டி இருப்பார். 

சிறு போராட்ட குழுக்கள், அவர்களது ரகசிய சந்திப்புகள், இவர்களை கண்காணிக்கும் சி.ஐ.டி.கள் மற்றும் அந்தகால அரசியல்வாதிகள் & பொதுமக்கள் என கலந்துகட்டி  எழுதிருப்பார். மிகுந்த பொறுமையுடன் வாசித்தால் தான் இப்படைப்பில் இருக்கும் பொக்கிஷங்களை கண்டடையலாம். கல்கிக்கு சாகித்திய அகாதமி விருதை வாங்கி தந்த படைப்பு இது.

பொன்னியின் செல்வனை மட்டுமே வாசித்த நபர்களுக்கு அலை ஓசை மிக பெரிய அதிர்ச்சியாக இருக்கலாம், ஏனென்றால் இரண்டிலும் வெவ்வேறு எழுத்துநடைகளை பயன்படுத்திருப்பார் கல்கி. 

1930களில் ஆனந்த விகடனில் தனது கட்டுரைகளின் மூலமும் கதைகளின் மூலமும் புகழ்பெற்று இருந்த கல்கி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வாசன் சம்மதம் கொடுக்காத நிலையில் ஆனந்த விகடனில் இருந்து விலகினார் கல்கி. 

அப்படி கல்கி ஆனந்த விகடனில் இருந்து விலகியதும் ஒரு வகையில் நன்மையே நிகழ்ந்தது. கல்கி விட்டு சென்ற இடத்தை தேவன் கையில் எடுத்து வழி நடத்தி சென்றார்.

ஏற்கனவே கல்கி தனக்கான ஒரு அடையாளத்தை எழுத்துலகில் பெற்றிருந்தார். போராட்டத்தில் சிறை சென்றுவிட்டு வந்த கல்கிக்காக அவரது நண்பர் சதாசிவம் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க முடிவெடுத்தார். 

அப்பொழுது கல்கி அவர்களையும்  பங்குதாரராக சேர்த்து கொண்டார். ஆனந்த விகடன் அப்பொழுதே வார இதழ்களின் சந்தையில் புகழ்பெற தொடங்கி இருந்தது. 

சதாசிவம் மற்றும் கல்கி இருவருக்கும் ஆனந்த விகடன் மற்றும் பல பிரபல இதழ்களில் மத்தியில் ஒரு புது இதழை ஆரம்பித்து மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே பெரிய சவால்.

அத்தகைய சவாலை எப்படி எதிர்கொள்வது யோசித்து சதாசிவம் ஒரு முடிவை எடுத்தார். புது பத்திரிக்கைக்கான ஒரு பெயரை தேர்ந்தெடுத்தார். அந்த பெயரே போதும் மக்களின் கவனத்தை பெற என நம்பினார்.

அந்த பெயர் "கல்கி". தமிழ் பத்திரிக்கை உலகில் ஒரு எழுத்தாளரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது அதுவே முதல் முறை.

இன்னொன்றயும் கவனிக்க வேண்டும் அப்பொழுது கல்கி எத்தகைய புகழை பெற்று இருந்தால் சதாசிவம் அவர்கள் தைரியமாக இந்த முடிவை எடுத்திருப்பார்.

பத்திரிக்கை ஆரம்பித்தாகி விட்டது, மக்களின் கவனத்தை பெற்றாகி விட்டது, கல்கி இதழுக்கான வாசக பரப்பை சந்தாதாரர்களை பெற என்ன வேண்டும் ?

எப்படி எல்லாம் எழுதினால் மக்களது கவனத்தை பெற்ற முடியும் என யோசித்து கல்கி எழுத ஆரம்பித்தது தான் " பார்த்திபன் கனவு' தொடர்கதை.

பெரும்பான்மையான மக்கள் சிவகாமியின் சபதம் கதை தான் முதலில் எழுத பட்டு இருக்கும் என்று ஆனால் உண்மையில் அது  பார்த்திபன் கனவு வந்து முடிந்த பிறகே அந்ததொடர் ஆரம்பிக்க பட்டது.

பார்த்திபன் கனவு வந்து கொண்டி இருந்த நேரத்தில் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டு இருந்தது.

அதனை சமாளிக்க போட்டியில் நிலைத்திருக்க அப்பொழுது ஆனந்த விகடனில் தலைமை பொறுப்பில் இருந்த தேவன் ஒரு ஜனரஞ்சக நகைச்சுவை தொடரை எழுத ஆரம்பித்தார். இன்றளவும் அந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. 

அந்த தொடரின் பெயர் ..... "துப்பறியும் சாம்பு".

தொடரும் ...

#பொன்னியின்செல்வன்
#PonniyinSelvan 
#பொன்னியின்செல்வனும்நானும்

Sunday, July 10, 2022

பொன்னியின் செல்வனும் நானும் - 1


பொன்னியின் செல்வன் பற்றி பேசுவதற்கு முன்னால் ஒன்றை சொல்லி ஆக வேண்டும், வார்த்தைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கதையை அப்படியே திரையில் கொண்டு வர முடியாது. ஏனென்றால் வார்த்தைகளின் மூலம் உருவாக்க படும் கற்பனைகளுக்கு எல்லை என்பது இல்லை. ஆனால் ஒரு படமாக எடுக்கப்பட்டு விட்டால் அந்த கற்பனைக்கு ஒரு உருவம் வந்துவிடும். எல்லை உருவாகி விடும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதும்  "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது..." என்று பேசியபடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவிற்கு வரும். உண்மையில் வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படி தான் பேசி இருப்பாரா என தெரியாது. ஆனால் சில பல சரித்திர குறிப்புகளை படித்தால் முற்றிலும் வேறுபட்ட உருவமே நமக்கு கிடைக்கும்.

பலருக்கு பொன்னியின் செல்வன் வழியாக இராஜராஜ சோழனும் அவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் தெரிந்திருக்கும். சிலருக்கு கோயில் வழியாக இராஜராஜனையும் பின்னர் நாவலையும் அறிந்திருப்பார்கள்.

ஆனால் .....

2001ல் அழகம் பெருமாள் இயக்கத்தில் டும் டும் டும் என்ற திரைப்படம் வந்தது. அதில் தேசிங்கு ராஜா என்னும் பாடல் தஞ்சை பெருவுடையார் கோயிலில் எடுக்க பட்டு இருந்தது. அக்கோயில் நாங்கள் குடியிருந்த பகுதியில் இருந்து 50 நிமிட பயணத்தில் இருக்கிறதென்று தெரிந்த பின், ஒரு நாளில் ஜோதிகா நடனம் ஆடிய கோயிலை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் சொந்தகார அண்ணனுடன் சென்று பார்த்தேன். 

இவ்வளவு பெரிய கோயிலை யார் கட்டினாங்க என கேட்ட பொழுது இராஜராஜ சோழன் என சொன்னார்.

எங்கள் பகுதியில் நூலகத்தில் இருந்து தினந்தோறும் வார பத்திரிக்கைகள் வரும். அதில் கல்கியும் அடங்கும். அதில் எதோ ஒரு ராஜா காலத்து கதை ஒன்று வரும் (அது பொன்னியின் செல்வன் என்று அப்பொழுது தெரியாது), அதனை அம்மா ஆர்வமுடன் வாசிப்பார். என் பெரியம்மாவும் அந்த கதையை பற்றி மிகவும் சிலாகித்து சொல்வார். 

அதில் வரும் படங்கள் பார்ப்பத்தோடு மட்டும் நிறுத்தி கொள்வேன், அது ரொம்ப தமிழாக இருக்கவும் படிப்பதற்கெல்லாம் முயற்சி செய்ததில்லை. 

இப்படி பொன்னியின் செல்வன் பலர் பாராட்டி சொல்லியும் வாசிக்க சொல்லியும் .... "நீ என்ன சொல்லுறது நான் என்ன கேக்குறது" என்று அந்த வயதிற்குள்ள மனப்பான்மையுடன் இருந்ததினால் வாசிக்கவில்லை.

நண்பர்கள், சினிமா, பாட்டு என வாழ்க்கை சுழன்று கொண்டே இருந்தது.

மேற்படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு படித்து / முயன்று  கொண்டு இருந்த ஒரு வருடத்தில் முக்கால்வாசி நேரமும் வீட்டிலேயே தான் இருப்பேன். அப்படியான நேரத்தில் பெங்களூருவில் இருந்த பெரியப்பா வீட்டிற்கு போயிருந்தேன். பெரியம்மாவிடம் வீட்டிலேயே இருக்க ரொம்ப போர் அடிக்குது என சொல்லவும் ... சும்மா இருக்குற நேரத்துல் இதைய படி என பத்மவாசனின் ஓவியங்கள் கொண்டு   தொடராக வந்த பத்திரிக்கை பக்கங்களை பிணைத்த பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்கள் (ஆறு புத்தகங்கள்) கொடுத்தார்.

வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்த பிறகு முதல் சில பக்கங்களை வாசித்து முடிக்க 10 நாட்களானது.

அதன் பிறகு கதையோடு ஒன்றி பைத்தியம் பிடித்தது போல் வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டு வாரத்தில் மொத்த நாவலையும் படித்து முடித்தேன். 

கல்கியின் வார்த்தைகள் ஏற்படுத்திய மாயாஜாலம் ஒரு பக்கம் என்றால் அதனை வேறொரு தளத்தில் கொண்டு போனது பத்மவாசனின் ஓவியங்கள். 

துப்பறியும் கதைகள், காதல் கதைகள் ஆகியவற்றை வாசித்து கொண்டு இருந்தவனுக்கு பொன்னியின் செல்வன் வாசித்தது எப்படி இருந்ததென்றால் தெரு பசங்களுடன் பொழுதுபோக்கிற்காக குடியிருப்பு தெருவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவனை 20-20 கிரிக்கெட் போட்டியில் விளையாட விட்டது போல் இருந்தது.

பிறவு பெரியம்மாவிடம் பத்மவாசன் ஓவியங்கள் கொண்ட தொகுப்பை கொடுத்துவிட்டு மணியம் ஓவியங்கள் இருந்த தொகுப்பை வாங்கி மீண்டும் மணியம் ஓவியங்கள் வழியாக வாசித்தேன்.

அதகளத்தின் உச்சம் அந்த அனுபவம்.

பின்னர் வேதா ஓவியங்களோடு கல்கியில் தொடராக பொன்னியின் செல்வன் வர ஆரம்பித்தது. முதல் இரண்டு வாரங்கள் தான் வாசித்தேன், ஆனால் வேதாவின் ஓவியங்கள் மூலம் கதையோடு ஒன்ற முடியவில்லை.

பின்னர் பாம்பே கண்ணன் மற்றும் குழுவினர் கொண்டு வந்த பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் / ஒலி நாடகம் வடிவத்தை கிட்டத்தட்ட 64 மணி நேரம் செலவளித்து கேட்டு முடித்தேன். அதுவுமே மறக்க முடியாத மற்றொரு அனுபவம்.

அதே போல இன்னொரு புதிய அனுபவமாக இருக்க போகிறது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம்.

தொடரும்....

Sunday, May 29, 2022

தாம்பரம் ரயில் நிலையம் - 4ஆம் நடைமேடை


மோடிஜி சென்னை வந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தாம்பாரம் ரயில் நிலையத்திலும் அதற்கான மேடை அமைக்கபட்டது.

தவறில்லை.

மேடை அமைக்க 3 மற்றும் 4ஆம் நடைமேடையில் இருந்த பயணிகள் அமர நிறுவ பட்டு இருந்த நாற்காலிகளை அகற்றி இருந்தனர்.

அதுவும் தவறில்லை. பெரும் நிகழ்வு நடைபெறும் சமயம் நடக்க கூடியவை தான்.

ஆனால் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களாகியும் அங்கு இருந்த நாற்காலிகள் மீண்டும் அதே இடத்தில் நிறுவ படவில்லையே ???

ஏன் ???

இன்று வாரயிறுதி என்பதால் கூட்டம் இல்லை, இதே வார நாட்கள் என்றால் செங்கல்பட்டு வரை போகும் ரயிலுக்காக ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கும்.

தாம்பாரம் வரையிலான ரயில் சேவை தான் அதிகம்.

ஆனால் குறைந்த சேவைகள் கொண்ட செங்கல்பட்டு வரை போகும் ரயில்களை அதிகம் பயன்படுத்தும் புறநகர் பகுதிவாசிகள் நிலை தான் திண்டாட்டம்.  அவர்களின் நேரத்தின் பெரும் பகுதி ரயில் காத்திருப்பில் கழிந்து விடுகிறது.

Tuesday, May 17, 2022

முதல்வர் ஸ்டாலின் II தூய்மை பணியாளர்கள் II நன்மை


வழக்கமாய் இத்தனை பெரிய குப்பை தொட்டியில் இருந்து குப்பைகளை எடுக்க தூய்மை பணியாளர்கள் அந்த குப்பைத்தொட்டியில் இறங்கி அதில் நின்று கொண்டு தான் குப்பைகளை எடுப்பார்கள். 

சுத்தம் செய்ய படாமல் இருக்கும் அந்த தொட்டியில் அவர்கள் நின்று கொண்டு வேலை செய்வதை பார்த்தால் பாவமாக இருக்கும்.

அப்படி அசுத்தமாக இருக்கும் தொட்டியில் நான் இறங்க மாட்டேன், நான் இறங்க மாட்டேன் என்றால் அவர்களும் அப்படி இறங்க கூடாது. சரி கஷ்ட ஜீவனம் என சமாதானத்துடன் கடந்து சென்று விடுவேன்.

கடந்த காலங்களில் சரியாக அசுத்தமாக இருக்கும் பல தொட்டிகள் உடைந்து குப்பைகள் வெளியில் விழுந்து சிதறி கிடப்பதையும் அதில் வெறும் கைகளுடன் பணியாளர்கள் வேலை சரி செய்வதையும் பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை கேட்டு கூட இருக்கிறேன் ...."அதை கழுவ கூட எங்க காசுல தான் பவுடர் வாங்கணும் ..." என பதில் கிடைத்தது.

ஏன் இப்படிப்பட்ட நிலையில் வேலை செய்கிறார்கள் என யோசித்ததும் உண்டு.

இன்று கோடம்பாக்கத்தில் ஒருவரை பார்க்க சென்று இருந்தது பொழுது ஒரு நிகழ்வை கண்டேன்.

ஒரு பணியாளர் குப்பைதொட்டியை சலவைத்தூள் (Soap Powder) கொண்டு சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

வெறும் கைகளுடனா வேலை செய்கிறார் என கேள்வி பார்த்த பொழுது, தேவையான கையுறைகளை அணிந்திருந்தார்.

குப்பைத்தொட்டியினூள்ளே கழுவ சலவைத்தூளுடன் கலந்த நீரை அடிக்க இயந்திர நீர் துப்பாக்கி உடன் இணைந்த நீர் தொட்டியை பக்கத்தில் ஒரு வண்டியில் வைத்திருந்தனர். பணியாளர் குப்பைத்தொட்டியை கழுவி கொண்டு இருந்தார்.

அதே தெருவில் இருந்த மற்ற பணியாளர்களின் கையிலும் தரமான கையுறைகள். எல்லாம் அரசு ஏற்படாம்.

இப்படி அடிமட்ட மக்களுக்காக யோசித்து செயல்படும் முதல்வர் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறார்.

சந்தோஷமாக சொல்வேன் Stalin is more Dangerous Than Karunanidhi.

#DMk 
#StalinIsMoreDangerous 
#TN 
#Stalin

Sunday, May 15, 2022

கலவை - ஜெயில் இயக்குனர் வசந்தபாலன்

வசந்தபாலன் இயக்கத்தில் வந்த ஜெயில் படத்தை பார்த்தேன், ஏதோ கண்ணகி நகரில் இருப்போர் எல்லோரும் திருட்டு தொழிலில்தான் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது போல் காட்டியிருக்கிறார்.

ஆனால் உண்மையிலேயே படத்தில் காட்டி இருப்பது போல் மக்கள் இருக்கிறார்கள், அவர்களெல்லாம் ஒரு 2% தான்.

நிஜத்தில் கிடைத்த வேலையை, தொழிலை செய்து கொண்டு தங்களது அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுத்திட வேண்டும் என்று உழைப்பவர்களை கொண்ட பகுதி தான் கண்ணகி நகர்.

முன்பு இரண்டு படங்களில் வசந்த பாலனுக்கு இருந்த பிரச்சினை தான் இந்த படத்திலும் அவருக்கு இருக்கிறது. படத்தை ஆரம்பிக்க தெரிந்தவருக்கு அதை எப்படி முடிப்பது என்று புரியாமல் குழப்பிக் கொண்டு முடித்திருக்கிறார்.

- - -

சுஜாதாவின் சிவந்த கைகள் நாவலை படித்தேன். தொடங்கியதும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை. பாதாம் அல்வாவினால் எழுத்தபட்டது ஒரு எழுது நடை. 

ஏற்கனவே இரண்டு ஒரு முறை வாசித்திருக்கிறேன் என்ற ஞாபகமே வரவில்லை. 

வாசித்து கொண்டு இருக்கும் பொழுதே இந்த நாவலை திரைப்படமாக எழுத்தால் எப்படி இருக்கும் என நினைத்து கொண்டே இருந்தேன். 

ஆனால் 1980களில் நடக்கும் கதையை இக்காலத்துக்கு ஏற்றது போல மாற்ற வேண்டும். அதுவே ஒரு சவாலான ஒன்றாகும்.

- - -

இப்பொழுது முகில் எழுதிய உணவு சரித்திரம் பாகம் - 1 வாசித்து கொண்டு இருக்கிறேன். அக்காலத்தில் அல்வாக்களை மருத்துவ ரீதியாகவும் பயன் படுத்த பட்டது என அதில் படித்ததில் இருந்து ...

ஒரு வேளை அமைதிப்படை அம்மாவாசை Anesthesiologistஆக அரசியலுக்கு வருவதற்கு முன் இருந்திருப்பார் போல.

- - -

பாரா எழுதிய பொலிக பொலிக வாசித்த பிறவு முதன் முறையாக திருபெரும்புதூர் சென்று வந்தேன். 

நகரமயமாக்கல் நகரங்களின் பக்கத்தில் இருந்து இப்பொழுது தான் தூக்கத்தில் இருந்து எழுந்தது போல கொஞ்சம் சோம்பலாக புதுமைகளுக்கு வணக்கம் சொல்லி கொண்டு இருக்கிறது.
இந்திய ஆன்மீகத்தில் திருபெரும்புதூருக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. இங்கு பிறந்த இராமானுஜர் திருப்பதிக்கு போகாமல் இருந்திருந்தால் இன்னுமும் சிவனா காளியா என சண்டை நடந்து கொண்டு இருந்திருக்கும்.

ஆன்மீக பக்தியை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு பார்த்தோமானால் அழகு அழகாய் சிற்பங்கள். ஒவியர் சில்பி இதனை எல்லாம் வரைந்து வைத்திருக்காரா என ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தேன்.

பக்தி, சிற்பங்கள் இரண்டையும் தள்ளி வைத்துவிட்டால் முக்கிய குறை - முன்பு போல தையிலையில் சுட சுட அதிரசம் வைத்து விற்பது இல்லை.

திருபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் சிப்காட் வழியாக சேத்துப்பட்டு தாண்டி மலைப்பட்டுக்கு வந்தால் அமைதியான சூழலில் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. மாலை நேரத்தில் அமைதியாக நேரத்தை கழிக்க ஏற்ற இடம்.

- - -

2ஜி வழக்கில் ஆ.ராசா அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என சொல்லிவிட பிறகும்  BSNL நிறுவனத்தின் தேக்க நிலைக்கு ராசா, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரும் காரணம் என இந்த காணொளியில் ( https://youtu.be/Wlgk8XXHWuA ) சொல்லி இருக்கிறார்கள்.

இது தவிர்த்து இவர்களது Think School வலையகத்தில் பல பொருளாதார வழக்காய்வுகள் (Case Studies) பற்றி பல காணொளிகள். ஆர்வம் இருப்போர் கண்டடையலாம். 

- - -

Sunday, April 24, 2022

கலவை - 24/04/2022 - இராவணன் பத்து தலைநகரங்கள்

புதிதாக வாசிக்கிறவர்களுக்கு சொல்லி விடுகிறேன், இப்பகுதி பல துணுக்கு செய்திகள் கொண்ட பகுதி.

- - -

இராவணன்...

இந்திய புராணங்களின் உண்மை தன்மையை அறிந்துகொள்ள வேண்டுமென விருப்பம். அப்படி அறிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது தான் இது இப்படியாக இருக்கலாமோ என தோன்றியது. 

இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவை தவிர்த்து ராமாயணம் என்னும் கதை உலகெங்கும் மொத்தம் 12 நாடுகளில் கதையாகவும் புராணமாகவும் வழக்கத்தில் இருக்கிறது. மொத்தம் 14 நாடுகளிலும் சேர்த்து 300 வடிவங்களில் ராமாயணம் சொல்ல பட்டும் எழுத பட்டும் வருகிறது. 

அந்த 12 நாடுகள் - பர்மா, கம்போடியா, சீனாவின் திபெத்து, லாவோஸ், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ, நேபால், தாய்லாந்து, மலேசியா, மங்கோலியா, வியட்நாம். 

மேல் சொன்ன நாடுகளில் இந்து சமயம் வழக்கத்தில் இருந்த மாதிரி தெரியவில்லை. 

அதே போல் இந்தியாவில் பல மொழிகளில் பத்தாம் நூற்றாண்டிற்கு பின்னரே எழுத பட்டு இருக்கிறது. 

10ஆம் நூற்றாண்டில் தான் இராமானுஜரின் தலைமையில் வைணவ சமயம் பெரும் எழுச்சியை கண்டது. அவர் நாடெங்கும் வலம் வந்து பலரை வைணவ சமயத்தில் இணைத்தார். 

இப்படி பல தகவல்களை அறிந்து கொள்ளும் பொழுது இராவணனுக்கு பத்து தலை இருந்து இருக்காது ; அதற்கு பதிலாக பத்து தலை நகரங்கள் கொண்டு ஆட்சி செய்து இருக்க வேண்டும். அத்தனை பெரியதாக இருந்திருக்க வேண்டும் இராவணனின் ராஜ்ஜியம்.

இராமாயணத்தில் தண்டகாரண்யம் பகுதியில் இருந்தே இராவணன் ஆளுமையில் இருந்ததாக வரும்.

கடவுள் தன்மைகளை புராணத்தில் இருந்து விலக்கி வைத்து அணுகும்போது தான் அதன் உண்மை ஒருவாறு புரிந்துகொள்ள முடியும்.

- - -

பொன்னியின் செல்வன் நாவலை முடிந்த பின் அதே கதை வரிசையில் படிக்க வேண்டிய பல நாவல்கள் இருக்கிறது. 

அதில் முக்கியமானது அரு.ராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி. அதன் சிறப்பு மிகவும் மிகை படுத்த படாமல் கதை நகரும். இக்கதையில் வரும் ஜனநாதன் கச்சிராயன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இளநிலை பட்டப்படிப்பு முடித்த உடன் அப்பா எனக்கு வீரபாண்டியன் மனைவி நாவலை திருச்சி ஹிக்கின்பாதம்ஸ் கடையில் வைத்து வாங்கி கொடுத்தார். 

21 வருடங்களுக்கு முன்பு இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக அ.கி. வேங்கட சுப்ரமணியன் "அரு. ராமநாதன் எழுத்துக்களும் எண்ணங்களும்" என்ற பெயரில் எழுதியும் தொகுத்தும் ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அதனை வானதி பதிப்பகம் தான் பதிப்பித்து வெளியிட்டார்கள். இப்புத்தகத்தை தான் தற்பொழுது வாசித்து கொண்டு இருக்கிறேன்.

- - - 

பொன்னியின் செல்வன் நாவலை மிகவும் விரும்பி படித்தவர்கள் எல்லாம் சங்கதாரா நாவலை படிக்கும் பொழுது பெரும் அதிர்ச்சியடைவார்கள். 

இது இப்படி எல்லாம் இருக்காதே, உண்மைக்கு புறம்பாக எழுதி இருக்கிறார் என சிலம்பாட்டம் ஆடுவார்கள். எதோ நேரில் பார்த்தது போல் பொங்கல் வைப்பார்கள். அவர்களது பின்னூட்டங்களை / பதிவுகளை படிக்கும் பொழுது சிரிப்பாக தான் இருக்கும். 

சங்கதாரா நாவலின் முன்னுரையிலேயே போதிய விளக்கங்களை ஆசிரியர் தந்து இருப்பார். அதனை கூட புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். 

பொன்னியின் செல்வன் பிரியர்கள் அதே கதையோட்டத்தில் வேறு நாவல் படிக்க ஆரம்பிக்கும் முன் முதலில் செய்ய வேண்டியது.... பொன்னியின் செல்வனை விட்டு வெளியே வருவது தான்.

- - -

வெங்கட் பிரபு இயக்கத்தில் வந்த மன்மத லீலை படத்தை பார்த்தேன். இது வரையில் அவரது இயக்கத்தில் வந்த படங்கள் எதோ ஒரு வகையில் பிடித்து இருந்தது. 

ஆனால் இந்த படம் எந்த ரகத்திலும் கவரவில்லை. நல்ல தயிர் சாதத்திற்கு ஜிலேபி தொட்டுகிட்டு சாப்பிட்டது போல் ஒரு படம்.

- - -

இணைய பயன்பாட்டில் எனக்கு இது 25வது வருடம். சமூக தளங்களின் பயன்படுத்த ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகுகிறது.

பதிவுகள் எழுத ஆரம்பித்து 16 வருடங்கள். முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன் பின்னர் தான் தமிழில் எழுத ஆரம்பித்தேன். 

கைபேசி இணைய பயன்பாட்டில் 17 வருடங்கள். 

பல புனைபெயர்கள். 

இணையத்தில் கற்றது தான் நிறைய.

நன்றி.

- - -

Friday, December 17, 2021

கலவை - 17/12/2021

இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு எல்லோரும் சமம் என நம்ப படுகிறது.

ஒருவன் விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் விமான நிலைய மலசல கூடத்தில் சீறுநீர் அல்லது மலம் கழிக்க கட்டணம் எதுவும் கொடுக்க தேவை இல்லை.

ஆனால் ரயில் நிலையத்திலோ அல்லது பேருந்து நிலையத்திலோ மலசல கூடத்தில் கட்டணம் வசூலிக்க படுகிறது. 

விமான நிலையத்தில் கழிவறை பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை என்றால் மற்ற போக்குவரத்து நிலையங்களிலும் இலவசமாக தானே இருக்க வேண்டும். 

அப்படி கட்டணம் வசூலிக்கப்படும் போக்குவரத்து நிலைய கழிவறைகளில் எத்தனை முறை , எந்தெந்த நேரங்களில் அவை சுத்தம் செய்ய படுகிறது என்ற விவரம் கிடைப்பதில்லை. 

கட்டணம் பணமாக தான் வசூலிக்க படுகிறது. அரசு முன்னெடுத்து செல்லும் திட்டமான UPI வழிக்க கட்டணம் செலுத்த வசதி இல்லை.  

கையில் சில்லறை காசு இல்லாதவர்கள் கழிவறை ஒப்பந்ததாரர்களின் வசவு சொற்கள் கேட்க வேண்டி இருக்கு. 

அதுவும் பேருந்து நிலைய கழிவறைகளில் மாற்று திறனாளி ஒருவர் போய் வர வேண்டுமென்றால் தர்ம சங்கடங்களை அனுபவிக்க வேண்டி வரும். 

போருந்து மற்றும் ரயில் நிலையத்தில் பெரும்பாலும் மாற்று திறனாளிகளுக்கான கழிப்பிடம் பூட்டியே இருக்கும். 

இது இப்படி என்றால்

சில இடங்களில் அரசு அமைத்திருக்கும் இலவச கழிவறைகளில் சிலர் மலம் கழித்துவிட்டு அது ஏதோ பிறர் பார்த்து பரவச பட வேண்டிய ஒன்று என நினைத்து நீர் ஊற்றி கழுவாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

(ஆம் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது)

# # # #

சிவாஜி கணேசன் நடித்த அருணோதயம் படத்தை கொஞ்ச நாட்களுக்கு முன்பு பார்த்தேன். 

அருமையான படம். 

இதனை மட்டும் கொரிய பட இயக்குநர்கள் பார்த்தால், கொஞ்சம் நகாசு வேலை செய்து அருமையான ஒரு Crime Thriller படம் எடுத்திருப்பார்கள்.

# # # # 

போன வாரம் வைகுண்ட ஏகாதசி சொர்க்க திறப்பு எல்லாம் நடந்திருக்கிறது ஆனால் அதனை பற்றி பிரக்ஞை இல்லாமல் இருந்திருக்கிறேன்.

ஏனென்றால் திருச்சி மாவட்டத்தில் மார்கழி மாதம் வந்தாலே எல்லோருக்கும் ஸ்ரீரங்க சொர்க்க வாசல் சுற்றியே பேசி கொண்டு இருப்பார்கள். பகல் பத்து தரிசனம் இரா பத்து தரிசனம் என திருவிழா போல் இருக்கும் ஸ்ரீரங்கம். 

கல்லூரி காலத்தில் இதில் தன்னார்வலராக பணியாற்றி இருக்கிறேன் என்பதால் வைகுண்ட ஏகாதசி என்றாலே மலரும் நினைவுகள் தான்.

ம்ம்ம்.

# # # #

சிலுக்கு ஸ்மிதா என்றால் யாரென தெரியாத தலைமுறை ஒன்று உருவாகி வளர்ந்திருக்கிறது.

அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

தட் என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் மொமண்ட்

# # # #

ஆங்காங்கே பலர் சிலரை உனக்கு இங்க இடமில்ல பாகிஸ்தானுக்கு போ என கூச்சலிட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இது எங்கிருந்து பழக்கமாகி இருக்கும் அவர்களுக்கு என யோசித்து கொண்டு இருந்தேன்.

இதனை அவர்களுக்கு கற்று கொடுத்ததே விகடன் மற்றும் ஜெயகாந்தன் தான் என நினைக்கிறேன்.

1960கள் வரைக்குமே அவர்கள் படிக்கும் பத்திரிக்கையாக இருந்த விகடனில் ஜெயகாந்தன் "பாரீஸுக்கு போ" என்ற தொடரை எழுதினார். அதனை படித்து வளர்ந்தவர்கள் தான் இன்று "அந்த சிலரை" பாகிஸ்தானுக்கு போ, அரேபியாவுக்கு போ என சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் மொத்த வழக்கையும் ஜெயகாந்தன் & விகடன் மேல் எழுதிடணும்.

# # # # 

Tuesday, June 22, 2021

மதன் கௌரி II MADAN GOWRI II KOKRU II YOUTUBE


நேற்று பிரபல யூ ட்யூப் காணொளியாளர் மதன் கௌரி  தனது செய்தி செயலி பற்றி தனது காணொளியில் அறிமுக படுத்தி இருந்தார். உரலி - https://youtu.be/CkIOuAGF3Hc 

 அவரது காணொளிகளை தொடர்ந்து கண்டு வருபவன் என்பதால் ஒரு ஆவலில் பதிவிறக்கம் செய்து பயன் படுத்தி பார்த்துவிட்டேன். 

செயலியின் பெயர் KOKRU.தமிழில் எழுதினால் கொக்ரு என்று இருக்கலாம்.

செயலியின் முதல் ஏமாற்றம் எனது கைபேசி எண்ணை வைத்து பதிவு செய்ய முடியாதது. கூகிள் கணக்கையோ அல்லது ஃபேஸ்புக் கணக்கையோ வைத்து தான் பதிவு செய்ய முடிகிறது. இதனை பற்றி அந்த செயலியில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தில் போய் பார்த்தால் நமது தகவல்களை பற்றிய குறிப்பில் "இது உங்கள் சொத்து..." என எழுதி விட்டு நம்மை படிக்க வைப்பது போலுள்ளது. 

நமது மொழி & விருப்பம் சார்ந்து செய்திகளை நமக்கு காட்ட படுகிறது. அந்த செய்திகள் எல்லாம் தொடர்ச்சியாக செல்லாமல், ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்புவது போல் உள்ளது. 

DARK BACK GROUND - எனக்கு பிடிக்காத ஒன்று. இதனை மாற்றி கொள்ள வாய்ப்பில்லை. மற்ற செயலிகளின் தேவை பட்டால் பின்னணி நிறத்தை மாற்றி கொள்ள முடியும்.

DailyHunt என்கிற செய்தி செயலி போன்றே உள்ளது,

இந்த செயலி நான் கவர்ந்த விஷயம் புகழ்பெற்ற Reuters நிறுவனத்தின் செய்திகளை பார்க்க முடிகிறது. இந்நிறுவனம் செய்தி உலகின் தாத்தா மாதிரி. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். 

இந்த செயலியின் வருமானம் என்பது  எந்த இணையதளத்தின் (தினதந்தி, தினமலர், இந்து தமிழ் திசை .....) செய்தியை படிக்க படுகிறதோ, அந்நிறுவனங்களில் இருக்கு தரகு பணம் இந்த செயலி நிறுவனத்திற்கு கிடைக்கும். 

பயன் படுத்த ரொம்ப எளிதாக இருக்கிறது. செயலியை பயன் படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக விளம்பரங்கள் வர வாய்புள்ளது.

இவர்களது நிபந்தனைகளை படிக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"The right to access – You have the right to request Our Company for copies of your personal data. We may charge you a small fee for this service."

நமது தனிப்பட்ட தகவல்களை இவர்கள் எந்த பணமும் கொடுக்காமல் எடுத்து கொள்வார்களாம், ஆனால் அதனை திரும்ப கேட்டால் பணம் கட்ட வேண்டுமாம். நல்ல நியாயம். 

இது போல பலது உள்ளன. எல்லாவற்றையும் படியுங்கள். 

மற்ற செயலிகள் உள்ளது போலவே இதிலும் உள்ளது. மேலும் இந்த செயலி நமது கைபேசிக்கு என்ன செய்யும் என்பதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள். கடைசி திரைச்சொட்டில் காணுக.

மேலும் இந்த செயலியை பயன் படுத்துவதின் மூலம் உங்கள் தகவல்கள் திருடு போக வாய்ப்பு இருக்கிறதே என புரட்சி சிந்தனை வேண்டாம். ஃபேஸ்புக் மற்றும் கூகிளை பயன் கொண்டு இருந்தாலே உங்க தகவல்கள் எதுவும் பாதுகாப்பாக இல்லை என கொள்க.

குறிப்பு - என் தகவல்களை வைத்து அப்படி என்ன செய்து விடுவார்களென்று தெரியவில்லை. ஏய் கம்பெனிகாரா என் டிடெயில்ஸ் எல்லாம் கால் காசுக்கு கூட வராது. நம்பி ஏமாந்து போயிறாதே.


Sunday, June 20, 2021

கலவை - 20/06/2021

Mantra - Sounds of Silence என்கிற ஆவண படத்தை பார்த்து கொண்டு இருக்கிறேன். அதில் மந்திரம் மட்டும் தான் மனதின் அமைதிக்கு அழைத்து செல்லும் என்பது போல் ஒரு வெளிநாட்டு அம்மணி பேசி கொண்டு இருக்கிறார். 

சிறு வயதிலிருந்த என் அப்பா "மந்திரம் ஆவது நீறு..." பாடுவதை கேட்டு தான் வளர்ந்திருக்கிறேன். அந்த பாடலை அவரது குரலில் கேட்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. 

அதே போல் என் அண்ணனின் மகள் சிறு வயதில் காயத்ரி மந்திரம் அழகாக பாடுவாள். அதுவும் எனக்கு பிடித்த ஒன்று. 

மேல் சொன்ன இரண்டிலும் பாடலை விட அந்த பாடலை பாடியவர்கள் மீது இருக்கும் அன்பே அந்த பாடலை பிடிக்க செய்தது. அடிக்கடி அவர்கள் பாடி கேட்ட பொழுது அது ஒன்றும்  அமைதியை தந்தது இல்லை. 

சமீப காலமாக The Beatles குழுவினரது Here Comes The Sun பாடல் தான் என்னை தினமும் தூக்கத்திலிருந்து எழுப்பபி மன அமைதியை தருகிறது. 

அதனை தொடர்ந்து Jay & The Americans குழுவினரது Come A Bit Closer பாடல், Carl Douglas பாடிய Kung Fu Fighting, John Denver பாடிய Take Me Home, Country Road ஆகிய பாடல்களை எல்லாம் ஒரு தரம் கேட்டுவிடுவேன். 

அப்படி ஒரு சுற்று போய் வருவதற்கு "கிரீஸ் டப்பா எப்படி உதச்ச...." என்ற நாள் பொழுது சந்திக்க மனம் தயார் ஆகிவிடும். 

கிளப் ஹவுஸை இன்று சுற்றி கொண்டு இருக்கும் பொழுது ஒரு குழுவில் அதிகாலையில் உங்களை உற்சாகமூட்டும் பாடல் எது என்று பேசி கொண்டு இருந்தார்கள். 

வழக்கம் போல் எதிர்ப்பார்த்த படி பாடல்களை சொல்லி கொண்டு இருந்தனர். 

நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சியின் போது எப்பொழுதும் எதாவது விவாதம், பேருரை அல்லது ஒலி புத்தகம் தான் கேட்பேன். ஆனால் எல்லாவற்றுக்கும் முன்பாக RedBone குழுவினர் பாடிய Come And Get Your Love பாடலை கேட்க தவறவிட மாட்டேன். 

அதனால் இது எல்லாம் எனக்கு மன அமைதியை தரும் பாடல்கள். 

எந்த ஒரு விஷயம் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறதோ அதுவே மன அமைதியை தரும். அவை மந்திரங்களாக இருக்க வேண்டும் என்று இல்லை.

- - -

சமீப காலமாக இந்திய சந்தையில் Sectoral Fund & Thematic Fund (துறை சார்ந்த & அடிப்படையிலான நிதி) ஆகிய பரஸ்பர நிதி (Mutual Fund) திட்டங்கள் அதிக லாபகத்தை ஈட்டி தந்திருக்கிறது. ஆனால் இதில் சங்கிலி தொடர் சந்தை அபாயமும் இருப்பதால், கவனத்துடன் முதலீடு செய்யவும். 

சில நிபுணர்கள் என்ன சொல்கிறார்களென்றால் நீங்கள் பலதரப்பட்ட நிதி திட்டத்தில் (Diversified Fund) முதலீடு செய்திருந்தால், அதன் நிதி மேலாளரே தேவையான நேரத்தில் லாபம் தரும் துறையில் முதலீடு செய்வார்களாம், இதற்கென்று தனி திட்டம் பக்கம் போக வேண்டுமாம். 

தற்பொழுதுள்ள சூழ்நிலையில் துறை சார்ந்த நிதி திட்டங்களில் முதலீடு செய்வது நல்லதென்றே தோன்றுகிறது.

- - -

பல நாட்கள் கழித்து சாண்டில்யன் அவர்களெழுதிய ஜல தீபம் நாவலை வாசித்து கொண்டு இருக்கிறேன். சாண்டில்யன் நாவல்களென்றே இருக்கும் தனி உலகத்தில் உலாவுகிறேன். அதொரு தனி சுகம்.

- - -

Crypto Currency சம்பந்தமாக என்ன மாதிரியான சட்டங்கள் வரும், அதற்கான வரி விதிப்பு எப்படி இருக்கும் என்று முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அறிக்கை சொல்கிறது. 

இதனை வழக்கத்தில் இருக்கும் Demat Account கணக்கின் கீழ் கொண்டு வருவார்கள் என்றே நினைக்கிறேன். 

சந்தையில் இதில் முதலீடு செய்வோர்களின் எண்ணிக்கை, அது தரும் லாபம் என இரண்டும் அதிகம் இருப்பதால் , பெரும் நிறுவனங்கள் இதனை விட மாட்டார்கள்.

- - -

YouTube ல் ராடன் நிறுவனத்தார் இலவசமாக ரொம்ப காலம் முன்பு வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் அனைத்து பாகங்கள், அதன் அத்தியாயங்கள் பதிவேற்றி இலவசமாக பார்க்க கொடுத்திருக்கிறார்கள். 

அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. அதுவும் பட்டாபி என்ற கதாப்பாத்திரத்திற்காக பார்த்து கொண்டு இருக்கிறேன். 

டிக்டாக் பிரபலம் சுரேஷ் பாபு அவர்கள் தனது காணொளிகளை தனது SURESH Babu 250 என்கிற சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

அதில் அவர் சொல்லும் சுட்டி கதைகள், மன நலம் பாதிக்கப்பட்ட அவரது தம்பியுடனான அவரது உரையாடல் பார்க்க பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.

- - - 

லோகி இணைய தொடரின் அடுத்த அத்தியாயம் வந்துவிட்டது. இதில் லோகி தன்னுடைய மேம்படுத்தப்பட்ட மற்றொரு லோகியை டைம் வெரியன்ஸ் அத்தாரிட்டின் அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு பரபர என துரத்தி கொண்டு செல்கிறார். ஆனால் கடைசியில் உச்சகட்ட திருப்பத்தை வைத்து பார்ப்போரின் ஆவலை அதிக படுத்தி இருக்கிறார்கள். 

ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

- - -

Sunday, June 13, 2021

கலவை – 13/06/2021

தகவல் பரிமாற்றத்துக்கு பல விஞ்ஞான வளர்ச்சிகள் வந்துவிட்ட நிலையில் ஒரு காலத்தில் அதற்கென இருந்த ஒன்றை பற்றி பலரும் இன்றளவில் மறந்துவிட்டனர்.

அது இன்லேண்ட் லேட்டர்.
இன்று நாம் தொலைபேசி / கைபேசி, ஈமெயில் ஆகியவற்றில் பல விஷயங்களை பரிமாறி கொண்டாலும் ஒரு இன்லேண்ட் லெட்டரில் நலம் விசாரித்தலுக்கு ஈடாகாது. இடம் குறைவாக இருந்தாலும் சுருக்கி எழுத்தின் அளவை குறைத்து , எழுத எழுத எதோ ஒன்றை மறந்துவிட்டோமே, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோமா என பதைபதைப்புடன் எழுதிய ஒரு தலைமுறை இப்பொழுது அதனை தங்களது ஞாபக அடக்கில் எங்கு இருக்கிறது என தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதுவும் கல்யாணம் ஆகி வேறு ஊருக்கோ வேறு மாநிலத்திற்கோ வந்து விட்ட பெண்கள் எல்லோரும் தங்களது அம்மாவிற்கு எழுதிய கடிதங்களில் “மணி பதினொன்னு ஆகிருச்சு... அடுப்பு ல இப்ப தான் சாம்பார் வைச்சுட்டு வந்தேன், கொஞ்சம் இருமா யாரோ கூப்பிடுறாங்க ....” என எழுதிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வந்து ...” பக்கத்து வீட்டு அக்கா தான் கூப்பிட்டாங்க கொஞ்சம் தயிர் வேணுமுன்னு கேட்டாங்க.... “ என தினசரி வாழ்வை கடிதங்களில் பதிவு செய்தவர்கள் பல. 

இன்னும் சில வீடுகளில் அந்த கடிதங்களை பாதுகாப்பாய் வைத்திருப்பார்கள், அந்த நாளைய வாழ்க்கையை அந்த கடிதம் படிக்கும் பொழுதெல்லாம் மீண்டும் வாழ்ந்து விட்டு வருவார்கள்...

 அந்த கொஞ்ச நிமிடங்களுக்கு கல்யாணமாகி புதிதாய் வேறு ஊருக்கு வந்த பெண்ணாய் மாறி இருப்பார்கள். என்றோ இறந்துவிட்ட தங்களது  அம்மாவை உயிருடன் அழைத்து வந்து பேசி கொண்டு இருப்பார்கள். 

அவர்களே இப்பொழுது பேர குழந்தைகள் பார்த்துவிட்ட பாட்டிகளாக இருந்தாலும், ஒவ்வொரு கடிதத்தை படிக்கும் பொழுது தங்களது அம்மா உடன் பேசுவதாக உணர்வார்கள்.

அந்த உணர்வை இப்பொழுதுள்ள விஞ்ஞான முன்னேற்றங்களால் தர முடியாது.

தபால்காரரை எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்த பரவச நிமிடங்களும் மனிதர்களுக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே. 

= = =

தொகுப்பு வார்த்தையாளர் அரச தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள் ClubHouse என்கிற செயலிக்கு சொல்லகம் என்று தமிழில் பெயர் வைத்துள்ளார். அவ்வாறு செய்வது ஒருவனை உபயோகிக்கும் பொருளுக்கு அவனது வசதிக்கேற்ப அவனது மொழியிலேயே பெயர் வைத்து பயன்படுத்தி கொள்வது உலக நடப்பில் இருப்பது தானே. 

இதனை அவர் தனது வடிவ பனுவல் பக்கத்தில் எழுதிய பிறகு ஏன் அதனை அத்தனை சண்டை என புரியவில்லை. 

மேலும் இதனை முன் வைத்து அவர் ஒரு வார்த்தைகளின் அச்சு பிரதி ஒன்றை எழுதிட வேண்டும். 

ஆயிரம் இருந்தாலும் அரச தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள் அவர்கள் சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்க தான் செய்கிறது.

= = =

The Family Man என்கிற இணைய தொடரின் Season 2 நேற்று காற்றுசொல் (Airtel – நன்றி இராஜ தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள்) நிறுவனத்தின் உதவியால் பார்த்தேன்.

பரபரப்பான களத்தில் கதை நகர்கிறது. கதையின் சிறப்பு செல்லம் சார் தான். 
முதல் பாகத்தில் ஸ்ரீகாந்த் திவாரியின் குடும்ப வாழ்க்கையை பற்றி பேசிவிட்டதால், இதில் சம்பவங்களை மைய படுத்திய காட்சிகள் நகர்கிறது. 

மூன்றாம் பாகத்தில் ஸ்ரீகாந்த்  திவாரி எந்த பிரச்சனையை சமாளிக்க போகிறார் என்பதை சொல்லி எதிர் பார்ப்பை அதிக படுத்தியுள்ளனர்.

வழக்கம் போல விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் சமந்தாவின் குடும்பத்தை தரைகுறைவாக பேச சிலருக்கு யார் உரிமை கொடுத்தது என்று தெரியவில்லை. சமந்தா என்று இல்லை அதில் நடித்த நடிகர்களின் குடும்பத்தை தரைகுறைவாக பலர் பேசி கொண்டு இருக்கிறார்கள். 

அவர்கள் அப்படி தரைகுறைவாக விமர்சனம் செய்வது எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.” நான் விமர்சனம் செய்கிற பெயரில் இன்னொரு குடும்பத்து பெண்களை அசிங்கமாக பேசி / எழுதி இருக்கிறேன் “ என சொல்லி அவரது அம்மா , மனைவியிடம் அதனை காட்டுவார்களா ? 

= = =

The Heritage Of Kashmir என்ற ஆவண படத்தை பார்த்தேன். காஷ்மீரில் இருக்கும் பழங்கால கோயில் பற்றியது அது. கோயிலின் சிறப்புகளை மட்டும் சொல்லாமல் அதனை சார்ந்த வரலாற்றையும் சேர்த்து சொன்னது தான் முக்கிய அம்சம். 

அவந்திவர்மன் ஆட்சி, 840கிலோ தங்கதால் செய்யப்பட்ட விஷ்ணு சிலை என பல விஷயங்களை பேசுகிறது.

= = =

மார்வெலின் லோகி இணைய தொடரின் முதல் பாகம் கடந்த ஒன்பதாம் தேதி வெளிவந்திருக்கிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் ஒரு இடத்தில் லோகி டெஸெராக்ட்டை திருடி கொண்டு மறையும் இடத்தில் இருந்து இந்த கதை ஆரம்பிக்கிறது.
அப்படி மறைந்து தப்பித்து போன இடத்தில் டைம் வேரியன்ஸ் அதாரிட்டி என்ற அமைப்பிடம் சிக்கி கொள்கிறார்...

அங்கு தானோஸ் எதற்காக சண்டை போட்டாரோ அந்த இன்பினிட்டி ஜெம்ஸை Paper Weightஆக டைம் வேரியன்ஸ் அதாரிட்டில் பயன்படுத்துகிறார்கள். 
அவர்கள் லோகியிடம் சொல்லும் வேலையில் பரபரப்பு தொடங்குகிறது....

முதல் அத்தியாயம் முடிகிறது.

= = =

சமூக இணையதளங்களின் மீதான வலுவான சட்டங்கள் வர போகிறது. 
இந்த நிலையில் சில நிறுவனங்கள் தங்களது பயன்பாட்டாளர்களின் தகவல் பாதுகாப்பு பற்றி கவலை படுகிறார்கள். 

கூகிளில் ஒன்றை பற்றி தேடிவிட்டு ஃபேஸ்புக்கிற்கு வந்தால் அந்த பொருளின் விளம்பரம் தான் நம்மை வரவேற்கும்.

மண்டை மேல இருக்குற கொண்டைய மறைக்க தெரியல பாரேன் இவங்களுக்கு. 

= = =

Tuesday, June 8, 2021

CLUBHOUSE II கிளப் ஹவுஸ்

இத பத்தி தெரிஞ்சதும் உடனே டவுன்லோடு போட்டுட்டு .... ஒரு ரூம் ல போய் அமைதியா உட்கார்ந்தேன்.

பஞ்சவர்ண கிளி ஒரு காலத்துல வர்ணமே இல்லாம இருந்துச்சுன்னு பேசிட்டு இருந்தாங்க. 

சரி பரிணாம வளர்ச்சி அது இதுன்னு அறிவா பேசுறாங்கன்னு உட்கார்ந்து கேக்க ஆரம்பிச்சா ...

ஒருத்தர் ஒரு நடிகர் இந்த மாதிரி சொல்லிருக்காருன்னு பேசிட்டு இருந்தவர் சொன்னாரு..

உடனே ஒரு பொண்ணு இருங்க நான் போய் ரிசெர்ச் பண்ணிட்டு வரேன்னு சொன்னாங்க...

சரி பெரிய படிப்ஸ் போல இருக்கீன்னு நினைச்சேன்... புஸ்தகத்துல தேடி பார்பாங்க போலன்னு நினைச்சேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு கூகிள் ல தேடி பார்த்தேன் அப்படி எதுவும் இல்லையேன்னு அந்த அம்மணி வந்து சொன்னாங்க.

மிருதங்க சக்ரவர்த்தி சிவாஜி கணேசன் நிலைமைக்கு போயிடுவோமோன்னு பயந்து அந்த ரூம் ல இருந்து இன்னொரு ரூம்க்கு போனேன்...

அரசியல் பேசுற குரூப் போல ... சரி வாழ்வியல், கோட்பாடு, கொள்கை முரண்னு கம்பு சுத்துவாங்கன்னு நினைச்சா அப்படி இருக்க கூடாதுன்னு நினைக்குறேன்... இடம் எல்லோருக்கும் கொடுக்கணுமுன்னு இட ஒதுக்கீடு பத்தி பேசிட்டு இருந்தாங்க. மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கைய வடை வடையா சுட்டுட்டு இருந்தாங்க. இட ஒதுக்கீடு பிரச்சனைய சரி செய்ய அழி ரப்பர் போதுமுங்குற மாதிரி பேசிட்டு இருந்தாங்க.

இத தவிர்த்து உடற்பயிற்சி பத்தி ஒரு குரூப் ல பேசிட்டு இருந்தாங்க. அது நமக்கு தேவை இல்லாத ஆணின்னு நெய் ரவா தோசை சாப்பிடுறத பத்தி எதாச்சு குரூப் இருக்காங்க தேடி பார்த்தேன்... அப்படி எதுவும் இல்ல.

எல்லாம் live conversation என்பதால் எல்லோரும் தங்களை பெரிய அறிவாளியா காட்டிக்க ரொம்ப கஷ்ட படுறாங்க.... கூகிளும் கையுமா சுத்துறாங்க.

கூகிள் ல இல்லாட்டி அது எதுவும் உண்மை இல்லைன்னு நினைக்குற குரூப் சுத்துற இடம் கிளப்ஹவுஸ்.

செம எண்டர்டெயின்மெண்ட் கிடைக்கும் கிளப்ஹவுஸ் ல.

Don't miss it.

2004ல அறிவாளிதனம் என்பது சமூக இணைய தளத்தில் விஞ்ஞான வளர்ச்சி வளர வளர கூடவே வளருமுன்னு சொல்லிட்டு வெறுப்பு ல யாகூ மெசஞ்சர விட்டு வெளிய வந்தேன்.... இப்ப அதே விஞ்ஞானம் கிரிஸ் டப்பாவ எப்படி உதச்சன்னு கேக்குது.

Sunday, September 6, 2020

அய்யரா நீயு....???

வாழ்க்கையில் நான் அதிகம் எதிர்கொண்ட கேள்வி என்றால் அது "அய்யரா நீயு...?" என்பது தான். சைவ உணவுமுறையை பின்பற்றுபவன் என்பதால் அப்படி கேட்பார்கள். இல்லையென சொன்னால் "அப்ப நீங்க யாரு....?" என அடுத்த கேள்வி வரும்.

அடுத்தாய் "இப்ப எல்லாம் அய்யரே நான்-வெஜ் சாப்பிடுறாங்க...." என சொல்வார்கள். அதாவது அவர்களே சாப்பிடுகிறார்கள் நீ சாப்பிட்டால் என்ன என்பது போல் சொல்வார்கள். என் வரையில் யார் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது என் கவலை இல்லை. அவர்களுக்கு பிடித்து இருக்கிறது சாப்பிடுகிறார்கள் என இருந்துவிடுவேன். 

யாரிடமும் போய் சைவம் தான் சிறந்த உணவுமுறை என விவாதம் செய்தது இல்லை. ஆனால் என்னிடம் நிறைய பேர் வந்து அசைவ உணவுமுறைக்கு கொள்கை பரப்பு செயலாளர் அவர்கள் தான் என்பது போல் பேசுவார்கள்.

சிலர் "இவன் அய்யர் தான் ஆனா சொல்ல மாட்டேனுங்குறான்..." என அவர்களே முடிவு செய்துவிடுவார்கள்.  இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை. 

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கல்லூரி சேர்கிற வரைக்குமே சார்ந்த சாதி பற்றி தெரியாது. சாதி சான்றிதழ்  கொடுக்கும் பொழுது தான் அது பற்றி தெரிந்தது. பின் பெயரோடு சாதி பெயரையும் சேர்த்து எழுதி பார்த்தேன், அது அப்படி ஒன்றும் கவர்ச்சிகரமாக இல்லை என்பதால் வெறும் பெயரை மட்டும் வைத்து கொண்டேன்.

சிறு வயதில் இருந்தே அப்பா அம்மா இருவரும் சாதி, மதம் ஆகியவைக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியதில்லை. நல்ல படிக்கணும், உங்க வாழ்க்கை உங்க கையில் என்பது மட்டும் அப்பா அடிக்கடி சொல்வார்.

ஒரு தரம் நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி மாதா கோவில் ஆகியவற்றுக்கு பள்ளி சுற்றுலா போகிறேன் என அம்மாவிடம் சொன்ன பொழுது தர்காவில் உண்டியல் இருந்தால் அதில் போட பணமும், வேளாங்கண்ணி கோவிலில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க காசும் அம்மா கொடுத்தார். இத்தனைக்கும் அம்மா தீவிர இந்து மத வழிபாட்டை பின்பற்றுபவர்.

பைபிள் , குர்ஆன் மற்றும் பகவத் கீதை ஆகியவை வாங்கி படிக்க கொடுத்தார் அப்பா. அப்பா எல்லா மதங்களையும் விமர்சனம் செய்வார். ஆனால் உனக்கான கொள்கையை நீ தான் தேர்தெடுக்க வேண்டும், நான் வேண்டுமானால் அதற்கு உதவி செய்கிறேன் என்று தான் அப்பா சொல்வார். 

கல்லூரி சேர்ந்த பின் பெரியாரை படித்தேன்.

நான் ஏன் சைவம் சாப்பிடுகிறேன் என கேட்டால் சிறுவயதில் இருந்தே சைவம் சாப்பிட்டே பழகி விட்டேன். அசைவம் சாப்பிட கூடாது என்றோ, பிடிக்காது என்றோ இல்லை. அசைவம் சாப்பிட்டு தான் உயிர் வாழ முடியும், சைவ சாப்பாடே இல்லை என ஒரு நிலை வந்தால் அப்பொழுது பார்த்து கொள்கிறேன்.

நான் ரொம்ப காலம் நெருக்கமாய் பழகும் நண்பர்கள் எல்லோரும் தீவிரமாக அசைவம் சாப்பிடுகிறவர்கள் தான். அவர்கள் யாரும் என்னை அசைவம் சாப்பிட சொல்லி கட்டாய படுத்தியது இல்லை.

கல்லூரி விடுதியில் கூட அவைச உணவும் இருக்கும் சைவ உணவும். நான் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருந்தேன்.

வீட்டில் நீ அசைவம் சாப்பிட கூடாது என கட்டாய படுத்தி இருந்தால் கூட வெட்டிவீம்புக்கு சாப்பிட்டு இருப்பேன். அப்படி எதுவும் நடக்கவில்லை.

இப்படியாக வளர்ந்த என்னிடம் நீ அய்யரா என கேட்டால் எத்தனை முறை தான் இல்லை என சொல்லி கொண்டு இருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பு தான் வருகிறது. 

சரி பொதுவில் சாதி பெயரை சொல்ல கூடாது என இருப்பேன், அதையும் மீறி இம்சை தாங்க முடியாமல் சாதி பெயரை சொன்னால், எதோ எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய சாதி பட்டியலை மனப்பாடம் செய்து வைத்திருப்பது போல "அப்படி ஒரு சாதியா.... கேள்வி பட்டதே இல்லையே..." என பதில் வரும். அத்தோடு நிறுத்தி கொள்ளாமல் அது பற்றி மேலும் கேட்டு, அந்த இம்சைக்கு எல்லாம் விளக்கி பதில் சொல்லும் நிலை வந்து விடுகிறது.

அதனால் இப்பொழுது இப்படி கேட்டால் தயங்கமால் ஆமாம் என சொல்லிவிடுவேன். இல்லாவிட்டால் அப்பா காந்தியவாதி என சொல்லிவிடுவேன்.

மனிதனை மனிதனாக எந்த வித முத்திரைகளும் இல்லாமல் பார்க்க பழகி விட்டேன். என்னிடம் போய் இப்படி கேள்வி வந்தால் முன்பு கோபம் தான் வரும். ஆனால் இப்பொழுது அந்த சாதி மத கேள்விகள் எல்லாவற்றையும் நல்ல பொழுதுபோக்காக பார்க்க தொடங்கி விட்டேன்.

பின் குறிப்பு - எல்லா மனிதர்களுக்கும் அவர்களுக்கு பிடித்த உணவை சாப்பிட முழு உரிமை இருக்கிறது. அதே போல் தான் எனக்கும் சைவ உணவு சாப்பிட முழு உரிமை இருக்கிறது.

ஆனால் நான் அசைவ உணவு சாப்பிடாமல் இருப்பது பற்றி கவலை பட்டால் சிறந்த அசைவ பண்டங்களை வாங்க மாதம் 10,000 ரூபாயும், அதனை சிறந்த முறையில் சமைத்து தர சமையல் ஆள் சம்பளம் 20,000ரூபாயும் தர கேள்வி கேட்கும் நீங்கள் தயார் என்றால், அசைவ உணவை சாப்பிடுவதை பற்றி யோசிக்கிறேன்.

Sunday, April 19, 2020

கூகிள் வாய்ஸ் டைப்பிங் / Google Voice Typing

நான் வீட்டிலிருந்து போடுற போஸ்ட் எல்லாம் கூகுள் வாய்ஸ் டைப்பிங் ல தான் போடுவேன். என்ன வெளியில இருக்கும்போது  சும்மா பேசிக்கிட்டே டைப் பண்ண பார்க்கிறவங்க ஒரு மாதிரி பாப்பாங்க.

பெரிய போஸ்ட் எழுதணுமுன்ன கூகுள் வாய்ஸ் டைப்பிங் ல தான் பண்ணுவேன். அப்புறம் பிற்பாடு வரிக்கு ஏத்தமாதிரி எடிட்டிங் பண்ணிடுவேன். அப்படி எடிட்டிங் பண்ணும்போது செல்லினம் யூஸ் பண்ணுவேன்.

இது நான் காலங்காலமா பயன்படுத்தற விஷயம்தான். கூகுள் வாய்ஸ் டைப்பிங்ங்குறது இன்னைக்கு நேத்து இல்ல ரொம்ப நாளாவே இருக்கு.

கூகுள் வாய்ஸ் டைப்பிங் ல குரல வெச்சு மட்டுமில்ல நம்ம எழுதி கூட போஸ்ட் போடலாம் அதுக்கு கூட ஆப்ஷன் இருக்கு. 

கூகுள் வாய்ஸ் டைப்பிங்கில் ஒரு பெரிய கட்டுரை எழுத போறீங்கன்ன முக்கியமான விஷயம், நடுவில் யாரும் வந்து பேசாத மாதிரி பார்த்துக் கொள்ளவும். என்ன பேச போறீங்க இல்ல என்ன டைப் பண்ண போறீங்க என்றது முன்னாடியே யோசனை பண்ணி வச்சிக்கோங்க. என்ன நீங்க சொல்றத அப்படியே அங்க டைப் ஆயிடும். நடுல யாராச்சும் வந்து இந்தாங்க காபி அப்படின்னு சொன்னா கூட அதுவும் டைப் ஆயிடும். 

முக்கியமான விஷயம் வார்த்தைகள சொல்லுறப்ப சரியா சொல்லணும். பேசுறப்ப ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்டு பிறவு கூகிள குத்தம் சொல்ல கூடாது. 

தமிழ் மொழில இருக்குற வட்டார வழக்க கூட டைப் பண்ண முடியும்.

இந்த ஜி போர்டு ஆப் கூகுளில் இருந்து வர ஆபீஷியல் அப். இதைய ப்ளே ஸ்டோரில் போய் நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம்.

ஒரு 15 - 20 வருஷத்துக்கு முன்னாடி ல இருந்து இத பத்தியும் இத்தோட சாத்தியங்களை பத்தியும் பல பேர் ஆராய்ச்சி கட்டுரை எல்லாம் எழுதி வந்துட்டு இருக்காங்க. அது எல்லாம் சயின்ஸ்ங்குறதால நம்ம இலக்கியவாதிகள் லைட் ரீட்டிங் ல விட்டுருப்பாங்க.

ஆனா இதைய அமெரிக்காவை கண்டுபிடிச்சா கொலம்பஸ் கணக்கா நம்ம ஊரு இலக்கியவாதிகள் பேசுறது தான் சிரிப்பு சிரிப்பா இருக்கு. ஏன்ன  சரித்திரத்த கொஞ்சம் புரட்டி பார்த்தா கொலம்பஸுக்கு முன்னாடி வைக்கிங் இன மக்கள் அமெரிக்காவுக்கு பஸ் (கப்பல்) விட்டு இருக்காங்க. 

பின் குறிப்பு - இது முழுவதும் தூய்மையான நெய்யினால் செய்யப்பட்ட பலகாரங்கள் மாதிரி ... இது முழுக்க கூகிளின் ஜி போர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் எழுதப்பட்ட பதிவு.

தொலைக்காட்சியில் புத்தகங்கள்

புத்தகங்களை வீட்டு தொலைகாட்சியில் எப்படி வாசிப்பது.

உங்கள் தொலைக்காட்சியில் இருக்கும் HDMI பகுதியில் கூகிள் காஸ்ட் கருவியை இணைக்கவும்.

அதன் பின்னர்

உங்களது ஆண்டிராய்டு மொபைலில் கூகிள் ஹோம் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்ட பின் அதற்கு தேவையான அனுமதிகளை Settingsல் ஏற்படுத்தி கொள்ளவும்.


பின் கூகிள் ஹோம் உங்கள் தொலைகாட்சியை ஒரு பெயர் வைத்து சேமித்து கொண்டு செயலில் போய் CAST MY SCREENயை தேர்ந்தெடுக்கவும்.


அதன் பின் AMAZON KINDLE அல்லது சேகரிப்பில் இருக்கும் மின்னூல்களை தேர்ந்தெடுத்து படிக்கவும். 

முக்கியமாக ROTATE SCREEN கொடுத்து அகல வாக்கில் வைத்து படிக்கவும். நேர் வாக்கில் வைத்திருந்தால் படிக்க கடினமாக இருக்கும். 

தொலைக்காட்சியும் மொபைலும் ஒரே இண்டர்நெட் இணைப்பில் இணைந்திருக்க வேண்டும்.

இந்த வசதியின் மூலம் யூ டியூப், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் ஆகியவையும் படிக்கலாம்.

கடந்த இரண்டு வருடங்களாக சில புத்தகங்களை இப்படி தான் படிக்கிறேன். இப்படி படிப்பதின் மூலம் கண்களுக்கு அதிக சிரமம் இருக்காது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரு குழுவாக உட்கார்ந்து கொண்டு விவாதித்த படியே புத்தகங்களை படிக்கலாம்.

மொபைலில் தரவிறக்கம் செய்து  வைத்திருக்கும் திரைப்படங்களை இதன் மூலம் பார்க்க வேண்டாம். ஒளி ஒலி அமைப்பு சரியாய் வராது.

நன்றி - சிவதீபம், விஸ்வா, கே.ஆர்.டீ. சார், அமேசான் கிண்டில், சாம்சங் நிறுவனம்

Wednesday, September 27, 2017

ஏதுமற்ற காலத்தில் சினிமா

ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள் முத ஷோ போய் ஏறக்குறைய பத்து வருஷமாகி இருக்கும்.

அது ஒரு பித்து நிலை. இத்தனைக்கும் இப்ப புக் பண்ணி இருக்குற மாதிரி ஆன்லைன் ல எல்லாம் புக் பண்ண மாட்டேன். அப்படி பண்ணவும் வசதி இல்லங்குறது வேற விஷயம்.

அப்ப தங்கிட்டு இருந்த பெருங்களத்தூர் ரூம் ல இருந்து கிளம்பி நேர தியேட்டர் போயிடுவேன். அங்க போய் அடிச்சுபிடிச்சு டிக்கெட் வாங்கி எல்லாம் படம் பார்ப்பேன். முக்காவாசி தாம்பரத்துல இருக்குற நேஷனல், வித்யா தியேட்டர் ல பாப்பேன். இதுல நேஷனல் தியேட்டர் ல அப்ப படம் பாக்குறதுங்குறது இட்லி குண்டா ல இருந்துட்டு வர மாதிரி இருக்கும். எதாச்சு பாட்டு வந்தா வெளில போய் காத்து வாங்கிட்டு வருவேன்.

இப்ப தான் எம்ஆர் தியேட்டர் ல ஏசி எல்லாம் போட்டு டக்கரா இருக்கு. அப்ப எல்லாம் அங்கன படம் பாக்குறதுங்குறது கக்கத்துல கொள்ளி கட்டைய வைச்சுகிட்டு ஒம குண்டத்துல உட்கார்ந்து படம் பாக்குற மாதிரி தான்.

குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் அப்பவே சூப்பரா தான் இருக்கும். ஆனா அங்க போற அளவுக்கு பஸ் டிக்கெட் வாங்க அப்ப எல்லாம் காசு இருக்காது.

இதுல இன்னொரு கூத்து என்னன்ன தாம்பாரத்துல படம் பாத்துட்டு, திரும்பி பஸ் ல வர காசு இருக்காது ... அதனால ரயில் தண்டவாளம் வழியா நடந்து வருவேன். டைம் வீணாகுமேங்குற கவலை எல்லாம் இல்ல. ஏன்ன அவ்வளவு வெட்டியா இருந்தேன். சிம்பிளா வெட்டி ஆபீஸர்.

இப்புடி தான் லீந்னு ஒரு படம்... அந்த படத்துல நடிச்சவங்களே படத்த முழுசா பாத்து இருப்பாங்களானு தெரியாது. அப்புடி ஒரு மச மொக்கையான படம். படம் தான் அப்புடின்ன தியேட்டர் ஸ்கிரீனும் செம மொக்கையா இருக்கும். எதோ புட்பால வைச்சு படமுன்னு போயிட்டேன். படத்தோட ஹீரோ சிபிராஜ்ன்னு படம் முடிஞ்சு வெளில வந்து போஸ்டர பாத்து தான் தெரிஞ்சு கிட்டேன்.

இதவிட காவிய சோகம் என்னன்ன படத்த பத்தி பேசுறதுக்கு ஒரு ஆள் கிடைக்க மாட்டாங்க. அப்புடியே கிடைச்சாலும் படம் நல்லா இருக்கான்னு கேட்டுட்டு ...சரி மச்சான் ஞாயித்து கிழம என் ஃபிகரோட போறேன்னு சொல்லி கடுப்படிப்பாங்க.

வேலை கிடைக்கலையேன்னு சோகம் இருந்தாலும் ஃபிகர் கூட இல்லையேன்னு அழுகாச்சி + கடுப்புஸ் + சோகமா இருக்கும். அப்ப எல்லாம் ஜிலேபி, லட்டு வகையறா ஃபிகர்ஸ் எல்லாம் கனவுல கூட பாக்க முடியாத அளவுக்கு பஞ்சத்துல இருந்தேன். இண்டர்வியூன்ன மட்டும் தான் சிட்டிக்குள்ள போவேன். அதுவும் காசு மிச்சம் பண்ண ஒரே நாள் ல மூணு நாலு இண்டர்வியூ போவேன். தனி தனியா போனா காசு அதிகமாகுமே என்குற கவலை தான்.

அதனால இந்த மாதிரி ஜிலேபி, லட்டு ஃபிகர்ஸ எல்லாம் சினிமாவுல மட்டும் தான் பாக்க முடியும். அந்த மாதிரி லட்டு ஜிலேபிய எல்லாம் இந்த மாதிரி மட்டமான ஸ்கிரீன் ல பாக்குறப்ப தும்ப பூவுல தூக்கு மாட்டிட்டு தொங்கிறலாம் போல இருக்கும்.

ம்ம்ம்ம்ம்

அது எல்லாம் ஒரு காலம்.

Wednesday, September 6, 2017

தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணன் கோயில்

தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணன் கோயில்.

சோழர் கால கோயில்கள் என்று பார்க்கும் பொழுது நாம் அவசியம் கர்நாடகாவிலுள்ள மைசூர் வரையில் இருக்கிற சோழர்கள் கட்டின கோயில்களை மற்றும் சீரமைத்த கோயில்களை பார்த்தல் வேண்டும்.

ஆதி சோழர்கள் விவாசாயத்திற்கான நீர் பாசனத்திற்காக மைசூர் (காவேரி பிறப்பிடம்) வரை போர் புரிந்துள்ளார்கள். அந்த காலத்தில் அணைகளில்லாத பொழுதும் ஒரு நாட்டை பழி வாங்க வேண்டும் என்றால் நீர் விஷம் கலந்துவிடுவார்கள். ஆதலால் சோழர்களுக்கு மைசூர் தேவை பட்டது. ஹோய்சாலர்களுக்கும் சோழர்களும் போருறவு இருந்ததை அறியலாம்.

இந்த நவநீத கிருஷ்ணன் கோயில் ஆதி சோழர்களின் ஒருவரான ராஜேந்திர சிம்மா அவர்களால் 4ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இங்கு ராமப்ரமேயரும் நவநீத கிருஷ்ணரும் எழுந்தருளி இருக்கிறார்கள். நவநீத கிருஷ்ணன் தவிழ்ந்தபடி கையில் வெண்ணை உடன் காட்சி தரும் அழகே அழகு.

அதுவும் நாங்கள் போன பொழுது ஒரு பெண்மணி நவநீத கிருஷ்ணன் புகழ் பாடல்களை பாடிகொண்டு இருந்தார். தெய்வீக ராகம் என்றால் அது தானோ என்றெண்ணும் வகையிலிருந்தது.

மேலும் குலோத்துங்கனின் வைணவர்களுக்கு எதிரான செயல்களில் இருந்து தப்பித்த  இராமானுஜர் ஹோய்சாலப் பேரரசின் ஆதரவு தேடி போன பொழுது, வழியில் இந்த கோயிலில் தங்கியதாக சொல்கிறார்கள். முக்கியமாக சூலத்தின் மேல் இராமானுஜர் அமர்ந்திருப்பது இருக்கும் சிலையை குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகவல் பகிர்ந்தால் நலம்.

இந்த கோயிலை குறிந்து சொல்ல படும் Folklore ஒன்று ..... ஒரு அரசனின் குழந்தையை யாரோ கை வேறு கால் வேறாக வெட்டி போட்டு விட்டார்களாம். பிறகு அந்த அரசன் நவநீத கிருஷ்ணனை வேண்டி பாடிய பொழுது இறந்து போன குழந்தை உயிருடன் மண்ணில் இருந்து தோன்றி தவிழ்ந்து வந்ததாம்.

சிற்பங்கள் சொல்லி கொள்ளுமாறு எதுவுமில்லை இக்கோயிலில். பாடல் பெற்ற ஸ்தலமாயென்று தெரியவில்லை. ஆழ்வார்கள் வழிபாடு இருக்கிறது.

மண்ணில் இருந்து குழந்தை தோன்றியதால் மண்ணூர் என்று பெயர் வந்ததாம். பிறகு அது மரலூர் ஆகி ... பின் ஏதெதோ ஆகி இப்பொழுது தொட்டமல்லூர் என்ற பெயரில் வந்திருக்கிறது.

குழந்தைகளின் நோய் தீர்வு, குழந்தை வரம் ஆகியவற்றின் வழிபாட்டுக்கு புகழ்பெற்றது.

இந்த தொட்டமல்லூர், சென்னபட்ணா வட்டத்திற்கு இதையெல்லாம் விட .... புகழ்பெற்ற நித்தியானந்தா பீடம் இந்தனருகில் தான் அமைந்து இருக்கிறது.

Related Posts with Thumbnails