Pages

Sunday, August 6, 2017

திருச்சி - தஞ்சாவூர் - மதுரை பயண குறிப்புகள்

திருச்சி....

எல்லா இடத்திலும் பரவி கொண்டு இருந்த இருக்கிற நோய் இங்கையும் விபாவித்திருக்கிறது.

கும்பகோணம் காபி.

பாக்குற இடத்துல எல்லாம் இங மாதிரி ஒரு போர்ட் வைச்சு இருக்காங்க. ஆனா அதுல கும் ங்குற அளவுக்கு கூட தரம் இருக்குறதில்ல.

கும்பகோணம் காபிக்கு முதல் தகுதியே பால் தண்ணி கலந்திருக்க கூடாதுங்குறது தான். ஆனா தண்ணில தான் பேருக்கு போனா போகுதுன்னு பால காட்டி இருக்காங்க. முக்கியமா பால் ஒரு கொதிக்கு மேல போக கூடாது. அப்ப அப்ப தேவை படுற பால் எடுத்து கொதிச்சு சைச்சுக்கணும்.இவங்க மொத்த பாலையும் குளிக்க வெண்ணி லெவல் வைக்குறாங்க.

ஆக மொத்தம் காபி காபி மாதிரி இல்லாம காககாபீ மாதிரி இருக்கு.

இதுல காமெடி என்ன கும்பகோணத்துலையே புகழ்பெற்ற முராரி ஸ்வீட்ஸ்ல காபி இப்புடி தான் இருக்கு.

கும்பகோணத்துல இருக்குற இந்த முராரி ஸ்வீட்ஸ் கடை கட் பீஸ் ஜாமூன் செமையா இருக்கு. இது கும்பேசுவரர் கோவில்
பக்கத்தாப்ல இருக்கு.

சில்பியின் கண்கள் வேண்டும் ...

ஆமாம் இப்படி தான் தோன்றியதெனக்கு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை இன்று காலை முதன் முறையாக கண்ட பொழுது.

அற்புதமான முத்து முத்தான சிற்பங்கள் எல்லாம் கண்ணில் ஒற்றி கொள்ளலாம் போல் இருக்கிறது. அதிலும் ஆனந்த நடனம் ஒவியமும் சிற்பமும் பல கதைகள் பேசுகிறது. கோயிலின் இரண்டாயிர வருட சரித்திரத்தை படிக்க வேண்டும் சிற்பங்கள் பேசும் கதையை தெரிந்துகொள்ள.

ஒவியம் வரைய எனக்கு தெரியாது எனக்கு, அதை பற்றி எப்பொழுதும் கவலை பட்டதில்லை. ஆனால் இன்று கோயிலுக்குள்ள கேமராக்களுக்கு அனுமதி இல்லை என தெரிந்த வேளையில் ஒவியம் வரைய கற்று கொண்டு இருக்கலாமே என்று ஏக்கம் வந்து போயிற்று.

நடை சாத்தும் நேரம் வந்துவிட்டபடியால் சிற்பங்களை ரசிக்க முடியவில்லை.

சரி இன்னொரு நாள் அமையாமலா போய் விடும் என்று வந்துவிட்டேன்.

சென்னை திரும்பின உடனே சில்பியின் தென்னாட்டு செல்வங்கள் வாங்க வேண்டும்.

திருமலை நாயக்கர்....

திருபரங்குன்றத்தில் முருகனை விட அவனது அண்ணன் விநாயகனின் அழகில் மெய் மறந்து, அந்த அழகை கொஞ்சம் கொஞ்சமாக பருகி கொண்டு இருந்தேன். பிறகு வழியே குடும்பத்தில் மற்றவர்களையும் பார்த்துவிட்டு வெளிவர திரும்பிய பொழுது தான் திருமலை நாயக்கரை பார்த்தேன். அவனது பட்டத்தரசியுடன் காட்சி தந்து கொண்டு இருந்தான்.

நாயக்கனின் சிலை வடிவம் அத்தனை நேர்த்தி. அதிலும் சிறு மீசையுடன் புன்னகை சிதறலில் என்னை சிதற செய்து கொண்டு இருந்தான்.

பெரிய தொப்பை. தொப்பை உடனே அவனை சிலை வடிக்க அனுமதித்த அவனது / அவன் மகனது பெருந்தன்மையை எண்ணி வியந்து கொண்டே கண்களை மூடி, சிலையாய் இருப்பவன் உயிர் பெற்று வந்து விட மாட்டானோ என்ற ஆசையில் திறந்தேன். ஒவ்வொரு முறையும் ஏமார்ந்தேன்.

ஒரு முந்நூறு வருடங்களுக்கு முன்பு அந்த சன்னதி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து நேரில் பார்க்க கால இயந்திரம் இல்லாமல் தவித்தேன்.

கோயிலில் பல்வேறு இடங்களிலும் திருமலை நாயக்கர் சிலை இருந்தாலும் அந்த சிலை மிக தெளிவான கலை அழகுடன் திகழ்ந்தது என் கண்களுக்கு.

நீங்கள் அங்கு போனால் அந்த சிலையை கண்டிப்பாக பாருங்கள். 

அழகர் மலை ....

போகும் பொழுதே கள்ளழகர் கோயில் மற்றும் பழமுதிர்ச்சோலை கோயில் ஆகியவற்றை பார்த்துவிட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு விடுவது என்று தான் திட்டம்.

அதற்கு முன் கள்ளழகர் இவ்வளவு ரம்யமான இடத்திலிருப்பாரென்று நினைத்து கூட பார்த்ததில்லை. மலையை நெருங்க நெருங்க வானிலை குளிர்ச்சியாக மாறியது.

கள்ளழகர் கோயிலை அடைந்த பொழுது சரியாக மாலை 5.30 மணி. மலைக்கு மேல ராக்காயி அம்மன் கோயிலும் பழமுதிர்ச்சோலை கோயிலும் ஏழு மணிக்கே நடை சாத்திவிடுவார்கள் என்று சொன்னதால், நேராக ராக்காயி கோயிலுக்கு போனோம். அங்கு நூபுரகங்கை நீரூற்றில் தண்ணி தெளித்து கொண்டு வந்துவிடுவது என்று போய் நீரின் குளுமையான தன்மையை கண்டு ஒரு குளியலை போட்டேன்.

பிறகு அங்கு இருந்து பழமுதிர்ச்சோலை கோயில். கூட்டமே இல்லாததால் நுழைந்த உடனே தரிசனம் கிடைத்தது.

பிறகு கள்ளழகர் கோயில்.

இருளும் குளுமையும் ஒன்றிணைந்திருக்கவே அழகான சிற்பங்கள், பார்ப்பவர் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் கள்ளழகர்.... எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. அதிலும் நூபுரகங்கை குளியல் குளுமை இன்னும் இருந்ததால் அற்புதம் இன்னும் அற்புதமாக இருந்தது.

இந்த சுற்றுப்பயணத்தில் பார்த்த கோயில்கள்

தஞ்சாவூர் -

பெரிய கோவில்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்
திருகருகாவூர்
திருவலஞ்சுழி
திருநாகேஸ்வரம்
கும்பேஸ்வரர் கோயில்
உப்பிலியப்பன் கோயில்
பட்டீஸ்வரம்

மதுரை -

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
திருபரங்குன்றம்
ராக்காயி கோயில்
பழமுதிர்ச்சோலை கோயில்
கள்ளழகர் கோயில்

கடைசியாக நேற்று திருச்சி. மனைவிக்கு என்னுடைய 25 வயது வரை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த பகுதிகளை சுற்றி காட்டினேன். எதோ தொலைந்த திரும்பவும் கிடைக்கவே கிடைக்காத ஒன்றை தேடி கொண்டு இருந்தேன். ஏன் இப்புடி சும்மா சுத்திட்டு இருக்கீங்க என்று மனைவி கேட்குமளவிற்கு குடும்ப நண்பரது பைக்கில் சுற்றிக்கொண்டு இருந்தேன். ஏதோ மனதிற்குள் ஒரு சொல்ல முடியாத வலி.

திருவெறும்பூரில் +Vasu Balaji​​ புகழ் அஸ்வின் ஸ்வீட்ஸ் கடைக்கு விஜயம் செய்து பயணத்தை நிறைவு செய்தோம்.

என்னை விட சென்னையை விட்டு மற்ற ஊர்களுக்கு போகாத பக்தி பழமான வீட்டம்மணிக்கு தான் இந்த பயணம் அதிக உற்சாகத்தை தந்தது.

No comments:

Related Posts with Thumbnails