பம்பாய் கண்ணன், இவரை எஸ்.வி.சேகரோடு பெரிய மாப்பிள்ளை சின்ன மாப்பிள்ளை நாடகத்தில் நடித்தவர் என்றளவில் தான் அறிமுகம். ஆனால் சமீபத்தில் இவரும் இவரது குழுவினரும் இணைந்து வழங்கி இருக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் கடல் புறா ஆகிய நாவல்களின் ஒலி வடிவத்தை கேட்டு பிரமித்திருக்கிறேன். அதனை ஒலி நாடகம் என வகை படுத்திப்பட்டு இருந்தாலும் ஒலி நாடகமாக இல்லாமல் ஒலிப்புத்தகமாக தான் இருக்கிறது.
தமிழில் இப்பொழுது தான் ஒலி புத்தகங்கள் பெரியளவில் வர ஆரம்பித்து இருக்கிறதென்றாலும் ஆங்கிலத்தில் பல வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
அதில் என்ன பிரச்சனை என்றால் பம்பாய் கண்ணன் குழுவினரது ஒலி புத்தகங்கள் தவிர்த்து மற்ற ஒலி புத்தகங்கள் எல்லாம் ஏற்ற இறக்கத்துடன் இல்லாமல் தட்டையாக இருக்கிறது.
ராஜேஷ்குமார் நாவலை படிக்கும் பொழுது மனதிற்குள் ஏற்படும் பரபரபப்பு யாரோ ஒரு பெண்மணி வாசிக்கும் பொழுது கதையின் சுவாரசியமே இல்லாமல் போய் விடுகிறது.
தமிழியில் இப்பொழுது தான் புத்தகங்கள் ஒலி வடிவில் வர ஆரம்பித்திருப்பதால் பல குறைகள் இருக்க தான் செய்யும். மேலும் புத்தகத்தை சுவாரசியமாக ஒலி வடிவத்திற்கு வாசிக்கும் நபர்கள் அதிகம் இல்லை.
தமிழ் ஒலி புத்தகங்கள் அதிக லாபம் தருமொன்றாக மாறும் காலத்தில் திரைப்பட பின்னணி குரல் கொடுப்பவர்கள் நிச்சயம் கால் பதிப்பார்கள்.
இதுவரையில் சரித்திர நாவல்கள் ஒலி வடிவமாக கள்ள பதிப்பில் தான் கிடைத்தது. அதாவது யாரோ ஒருவர் குறிப்பிட்ட அந்த சரித்திர நாவல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு தனது குரலில் நாவலை வாசித்து நிழற்படத்துடன் காணொளியாக யூட்யூப்பில் பதிவேற்றி இருப்பார்கள்.
ஆனால் சட்டரீதியான தமிழ் ஒலி புத்தக பதிப்பு பல செயலிகளில் கிடைக்கிறது. குறிப்பாக சொல்வதென்றால் Audible, Storytel போன்ற பிரபல செயலிகள். இதில் ஒரு புத்தகம் மட்டும் வாங்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லாம் மாத சந்தா அல்லது வருட சந்தாவில் மேலே குறிப்பிட்டுள்ள செயலிகளில் ஒலி புத்தகங்கள் கிடைக்கிறது. கூகிள் புத்தகங்கள் என்ற செயலில் மட்டுமே தனி ஒலி புத்தகமாக வாங்க முடியும் என தெரிகிறது. தனி ஒலி புத்தகமாக வாங்கினால் பல நூல்களின் விலை கைக்கு அடங்காத ஒன்றாக இருக்கும்.
நீங்கள் தமிழ் நாவல்கள் மட்டுமே வாசிப்பேன் என இருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். பல எழுத்தாளர்களது புத்தகங்கள் ஒலி வடிவில் இல்லை.
பிரபல தமிழ் எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை ஒலி வடிவில் கொண்டு வந்தால் இன்னும் பலரை தமிழ் வாசக பரப்பில் இணைக்க முடியும்.
No comments:
Post a Comment