நான்கு படங்களுடன் கன்னித்தீவு கதை தினத்தந்தியில் வருவதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். நான்கு படங்கள் எப்பொழுது மூன்று படங்களானது என தெரியவில்லை.
கன்னித்தீவு கதை எங்கப்பா சிறுவயதில் படித்திருக்கிறாராம். நானும் படித்திருக்கிறேன். இந்த தொடரை தொடர்ந்து வாசிக்கிறவர்கள் எப்படி கதையை ஞாபகம் வைத்திருக்கிறார்களென தெரியவில்லை.
இன்று வந்திருப்பது 21,996 அத்தியாயம். அதாவது 20,000 நாட்களுக்கும் மேலாய் தினமும் தொடர் வந்து கொண்டு இருக்கிறது. 1960ல் கருப்பு வெள்ளை படங்களுடன் தொடராக ஆரம்பித்தது 2013ஆம் ஆண்டு முதல் வண்ண படங்களுடன் வர ஆரம்பித்தது.
எம்.ஜி.ஆர். படங்களை விரும்பி பார்க்கும் ஆதித்தனார், 1958ஆம் வந்த எம்.ஜி.ஆர். படமான கன்னித்தீவு பட பெயரையே தொடருக்கும் வைத்து விட்டார்.ஒரு செய்தித்தாளில் புனைவு பட கதை வருவதே புதுமை, அதிலும் இத்தனை ஆண்டுகள் வருவது உலக சாதனை தான். இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தி கொண்டு இருப்பது தமிழ் செய்தித்தாள் என்பது மற்றொரு பெருமை.
ஆயிரத்தொரு இரவுகள் என்ற அரேபிய கதையை தழுவி தான் கன்னித்தீவு கதை.
இந்த தொடருக்கு முதலில் எழுதி ஓவியங்களை வரைந்து வருகிறவர் கணேசன் என்பவர். இடையில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட பொழுது தங்கம் என்பவர் சிறிது காலம் தொடரை எழுதி இருக்கிறார்.
சரி இது பழைய தொடர் இப்பொழுதுள்ள தலைமுறையினர் யாரும் விரும்பி வாசிக்க மாட்டார்கள் என நினைத்தால் ஏமாற்றம் நினைத்தவர்களுக்கு தான். இளம் தலைமுறை சிலர் கன்னித்தீவின் முழு கதை என்ன என்று தேடி கொண்டும் விசாரித்து கொண்டும் இருக்கிறார்கள்.
கன்னித்தீவு தொடருக்கு போட்டியாக கண்ணதாசன் தனது தென்றல் திரை பத்திரிக்கையில் ஒரு தொடர் பட கதையை வெளியீட்டு வந்தார். கன்னித்தீவு அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. மேலும் கண்ணதாசன் சொன்னது போல் படங்கள் போடாமல் வெவ்வேறு படங்கள் வரையபட்டால் சில குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
பிறகு கன்னித்தீவு என்ற பெயருக்கு அதிக கவர்ச்சி வந்ததினால் கன்னித்தீவு வீரன், கன்னித்தீவு மோகினி என்ற பெயரில் எல்லாம் திரைப்படங்களும் கதைகளும் வெளிவந்து இருக்கிறது.
ஒரு கட்டத்தில் பலருக்கு சிறுவயதில் இந்த கன்னித்தீவு தொடர் தான் ஆரம்ப புள்ளியாக இருந்தது என்பது தான் உண்மை.
No comments:
Post a Comment