Pages

Monday, February 14, 2011

காதலும் நானும் - சுயம் சார்ந்த பதிவு

பெரிய மூக்கு, பெரிய காதுகள், திக்கு வாய், ஞாபக மறதி உடன் வளர்ந்த எனக்கு பதின்ம வயதில் அழகான பெண்களை பார்த்தால் காதல் வந்ததே இல்லை, அதற்க்கு பதில் பயமும், தாழ்வு மனப்பான்மையே வந்தது. அவர்களோடு பேச ஆயிரம் ஆசைகள் வரும். சொல்லாமலே படத்தில் ஒரு வசனம் வரும் " உடலையும் உருவத்தையும் வேற வேறன்னு படைச்ச ஆண்டவன், உணர்வுகளை ஒன்னு படைச்சிட்டான்....". என் வயதையொத்த மற்றவர்கள் பெண்களுடன் பேசு பொழுதெல்லாம் ( நான் படித்து கொஞ்சம் பணம் படைத்தவர்கள் படிக்கும் பள்ளி), தள்ளி நின்று ஏக்கத்தோடும் இயலாமையோடும் பார்ப்பேன். யாரவது என்னிடம் வந்து எனக்கெனகென்று விஷயங்களை பகிர்ந்து பேச மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு பள்ளி பருவம் ஒரு முடிவுக்கு வந்தது. மேலும் சரியாக படிக்காத என்னிடம் எந்த பெண் பேசுவாள் என்ற உணர்வும் நிறையவே இருந்தது.

+ 2 படிக்கும் பொழுது நான் இரசியமாக காதலித்த பெண் பக்கத்தில் group photo வில் நிற்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கே மனதில் ஆயிரம் ஆயிரம் பறவைகள் பறந்தது. பிற்பாடு பேசிக்கொள்ளலாம் என்று நின்றிருந்தேன். ஆனால் அவள் என்னை பார்க்காமல் பள்ளியை விட்டு கிளம்பி விட்டாள். பரீட்சை நேரத்திலும் தள்ளி நின்று பார்த்து கொண்டிருப்பேன். பரீட்சை முடிவுகள் வந்த உடன் பேசிக்கலாம் என்று மௌனமாய் இருந்தேன். முடிவுகள் வந்தது. அந்த பெண் நிறைய மதிப்பெண் வாங்கிருந்தாள். நான் எதுவுமே வாங்கவில்லை. பெயில்(fail ). தோல்வி. (ஆமாங்க நான் + 2 ல பெயில் ). பேச முடியாமல். யாரவது பார்க்கும் முன் வீட்டிற்கு வந்து விட்டேன்.

வாழ்க்கையை வெறுத்த நிலையில் கொஞ்ச நாள் சுற்றி கொண்டிருந்தேன். யுவாவையும் அப்பாஸையும் பார்க்க தைரியம் இல்லாமல். பிறகு சாத்தான் ஆசிர்வதித்த ஒரு வேளையில் அவர்களும் தோல்வி அடைந்ததை அறிந்து கொண்டு, மகிழ்ச்சி அடைந்தேன். இனம் இனத்தோடு சேர்த்து கொண்டதே என்று தான்.

மூவரும் பேசி வைத்து கொண்டு, வீட்டில் அடம் பிடித்து ஒரு டுடோரியலில் சேர்ந்தோம். அங்கே கூட படிக்கும் பெண்களை பார்க்க முடியாதவாறு வகுப்பறை அமைந்து இருந்தது. எக்காரணம் கொண்டும் பெண் பிள்ளைகளை நாங்கள் பார்த்துவிட கூடாதென்று அப்படியொரு அமைப்பு.அப்படியொரு கண்டிப்பு. சாயங்காலம் அவர்கள் போன அரை மணி நேரம் கழித்து தான் நங்கள் போக முடியும். அப்பொழுதெல்லாம் இந்த சமுதாயம் "அவர் பையனா நீ ?" "அவன் தம்பியா நீயு ?" ன்னு கேட்டும் கேலி செய்து கொண்டு இருந்தபடியால் , வாழ்க்கையில் பெருசா சாதிக்க வேண்டும் என்ற வெறியே மிஞ்சி இருந்தது, வேறெதுவும் பெரிதாக தோன்றவில்லை. அப்படியும் ஒரு நாள் ஒரு பெண் தன் வீட்டில் செய்த உப்புமா என்று குரல் குடுத்த படிய கையை நீட்டினாள். முதல் வரிசையில் நான் இருந்ததால், பின்னாடி இருந்த பசங்களோட தொல்லை தாங்காமல் பயந்து கொண்டே வாங்கினேன். வாங்கும் பொழுது அவளது கை என் கை மேல் பட்டது. அவள் யாரென்று இன்று வரைக்கும் தெரியாது. அந்த முகம் தெரியாத, பெயரும் தெரியாத பெண்ணின் கையின் ஸ்பரிசம் இன்றளவும் நினைவில் இருக்கிறது.

பிற்பாடு அப்பாவின் செல்வாக்கு, அண்ணனின் நட்பு வட்டம் ஆகியவை இருந்ததால் ஒரு பெரிய கல்லூரியில் இடம் கிடைத்தது. பாடங்கள் புரியவில்லை. புதிய நட்புகளுடன் கல்லூரிக்கு பக்கத்தில் இருந்த பெட்டிக்கடை பக்கம் இருந்த நடைமேடையில் ஜாகை. தினமும் அங்குதான். அப்படி உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது தான் அவளை பார்த்தேன். ஐயர் பெண். நீண்ட தலைமுடி. கடவுள் அருகே இருக்கும் ஒரு தேவதை பூமிக்கு இறங்கி வந்தது போலிருந்தாள். கலையான முகம். வெண்ணிறம். கல்லூரியே அவள் பின் அலைந்தது. நானும். கல்லூரிக்கு வரும் பொழுது பஸ்ஸில் வருவாள். இதற்காக அரை கிலோ மீட்டர் தூரமிருக்கும் பஸ் ஸ்டாண்ட் வரை சென்று, அவள் வரும் வரை காத்திருந்து, அவள் வந்த பின் அவளுக்கு பாதுகாப்பளித்து, கல்லூரி வரை பின் தொடர்வேன். மாலையும் அவ்வாறே ; ஆனால் அவள் வீட்டு வரைக்கும்.

எல்லோரும் அவர்களது காதலை சொல்லிவிட்டார்கள். அவள் ஏற்று கொள்ளவில்லை. நான் எதிர்பார்க்காத நபர்களும் அதில் அடக்கும். நான் பெரும் முயற்சிக்கு பிறகு எதாவது பேசலாமென்று போனால், யாரவது அப்பொழுது தான் நேரம் குறித்து கொண்டு, கடலை போட்டு கொண்டிருப்பார்கள். எல்லோரும் அவளின் கடைக்கண் பார்வைக்காக காத்து இருந்தார்கள். அவளொரு நாள் என்னை திரும்பி பார்த்தாள்.

கல்லூரி முடிந்தது. வேலை இல்லாத நாட்கள், என் வாழ்வில் வசந்த காலமாய் வந்தது. உலகமே என்னை பார்த்து உமிழ்வது போலிருந்தது. மீண்டும் கிண்டல் பேச்சுகள் ஏளன பார்வைகள் வாழ்வில் மீண்டு வந்தது. வீட்டில் அண்ணன் கல்யாண பேச்சு. குலதெய்வ வழிபாடுக்கு போய் இருக்கும் பொழுது, ஒரு உறவினர் என்னிடம் வந்து "தம்பி நீயாச்சும் அப்பாம்மா சொல்லுற பொண்ணை கட்டிக்கபா..." என்று சொன்னார். எனக்கென்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்பொழுதும் என்னை பார்த்து சிரித்தவர்கள் முன்னாடி வளர்த்து காட்டணும் என்ற நினைவாய் இருந்தேன். வேறெந்த எண்ணமும் இல்லாமல் இருந்தேன்.

முதுநிலை வகுப்புகளில் சேர்ந்த நாட்கள் அவை. ஒரு மேலாண்மை கோட்பாடை வைத்து ஒரு நாடகம் போடுமாறு ஆசிரியர் ஒருவர் சொன்னார். பிறகு அதற்காக என்னையும் ஒரு முஸ்லிம் பெண்ணையும் ஒரு குழு என்று அமைத்தார். பிறகு அன்று வகுப்புகள் முடிந்த மாலை நேரத்தில் அந்த பெண் என்னிடம் நாடகம் குறித்து பேசினாள், பேசினாள்.... அவ்வளவு பேசினாள். அவளது அழகை ரசித்த நான், பிறகு அவளது அறிவை கண்டு வியந்தேன். என் மொபைல் நம்பரை வாங்கி கொண்டு கூட்டத்தில் மறைத்து போனாள். நாளொரு மேனியுமாய், பொழுதொரு வண்ணமாய் பேச்சுகள் தொடர்ந்தது. அவள் பார்த்து ஆச்சரிய பட்ட இயற்க்கை, அவள் வளர்க்கும் செடிகள், படித்த புத்தகங்கள் என்று பேசுவாள். அவள் பேசும் பொழுதெல்லாம், சொல்ல முடியாத ஓன்று என்னை பறக்க செய்தது.

ஒரு சமயம், மற்ற பெண்கள் அவளை ஏதோ கிண்டலடித்து கொண்டிருக்கும் பொழுது, "YES I WAS TALKING WHOLE OF NIGHT WITH MY HUBBY ONLY " என்று சொன்னாள். அதிர்ச்சி அடைந்து அவளை பார்த்தேன். அவளும் என்னை வெட்கத்தோடு பார்த்தாள். முன்தினம் இரவு முழுவதும் நான் தான் அவளோடு பேசி கொண்டிருந்தேன் : அதனால் தான் அதிர்ச்சி அடைந்தேன். பேசி கொள்ளும் நேரங்கள் அதிகமானது.

வாழ்க்கை நாம் நினைத்த மாதிரி போனால், அதற்கும் கனவுக்கும் வித்தாயசம் இல்லாமல் போய்விடும். கல்லூரி முடிய போகும் நேரம் வந்தது. மூன்று நாட்களாய் அவள் காணவில்லை.போன் பண்ணினால், அவளேடுக்கவேயில்லை. பைத்தியம் பிடித்தது போலானது எனக்கு. நான்கு நாட்கள் போய் இருக்கும். இரவு பத்து மணி ஆகிருக்கும். அவளிடமிருந்து போன்.

எடுத்தேன். மூன்று நிமிஷங்கள் நீண்ட மௌனம். விசும்பி கொண்டிருந்தாள். ஏன் என்று தெரியவில்லை, புரியவில்லை. பிறகு ஒரு பெருமூச்சுக்கு பிறகு "mayvee , am going to get married .... got engaged " என்றாள். எனக்கு சொல்வதென்று புரியவில்லை. ஒரு நொடி அழுகலாமா என்று நினைத்தேன். பிற்பாடு ..." hey congrats ...." என்று சொல்லி கிண்டலடிக்க ஆரம்பித்தேன்.

பிறகு பல நிலைகள் கடந்து வந்துவிட்டேன். ஆனால் எந்த சிறப்பான உணர்வும் வரவில்லை. இயலாமைகளும் பயங்களும் நிறைய இருந்தாலும், வாழ்வில் எதாவது பெரிதாய் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிக்கிறது. எனது பொருளதாராதிற்க்கான போராட்ட வாழ்க்கையில் மெல்லிய உணர்வுகளுக்கான பக்கங்கள் என்று பார்த்தால், அவை மயான பூமியில் நிலவும் மௌனமாகவே இருக்கிறது. எதையோ இழந்து விட்டது போல், இரவின் தனிமையில் அழுகின்றேன். நினைத்த நிலையை அடைவேனா, ஆசைப்பட்ட காதலும் கிடைக்குமா என்று தெரியவில்லை. வீட்டில் கல்யாண பேச்சை எடுத்து இருக்கிறார்கள், எனக்கு நிலை இல்லாத பொருளாதார நிலையை கண்டு பயமே மேலோங்கிறது. (target முடிக்கவில்லையென்றால் வேலை காலி).

ஏனிந்த பதிவை எழுதிகிறேன் என்று தெரியவில்லை. நான் இன்றைக்கு காதலர் தினத்தை எவ்வகையிலும் கொண்டாடவில்லை. promotion க்காக online exam எழுதுவதில் தான் இன்றைய நாள் சென்றது. அதிலும் தோல்வி : எத்தனையாவது முறை என்று தெரியவில்லை. இந்த வாரத்திற்குள் கட்டாயம் முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை முடிக்கிறேன்.

எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

- - -
பதிவும் தளமும் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள். பின்னோட்டம் போட மறவாதீர்கள், அது என்னை கொஞ்சம் உற்சாக படுத்தும்.

இப்படிக்கு
மேவி

9 comments:

Anonymous said...

I could feel the pain and maturity in your post.

மேவி... said...

@ அனானி : நன்றிங்க. உங்க பெயரையும் சொல்லிருக்கலாமே (உங்களை தவிர வேறு யாருக்கும் இந்த பதிவு பிடிக்கவில்லை போலிருக்கு :(((

ஹேமா said...

மேவீ....எப்பிடி இருக்கீங்க.சுகம்தானே.ஆளையே காணமுடியறதில்ல இப்பல்லாம் !

ஹேமா said...

மேவீ...கவலைப்படாதீங்க.மனசுக்கு நிறைஞ்ச வாழ்க்கை கண்டிப்பாக் கிடைக்கும் உங்களுக்கு.இப்பவே வாழ்த்துச் சொல்லி வைக்கிறேன் !

மேவி... said...

@ ஹேமா : நன்றி ஹேமா ..உங்களது வார்த்தை பலிக்கட்டும்.

வேலை பளு ...அதனால் இரவு நேரங்களில் இணையம் பக்கம் வர முடியல ... காலை நேரங்களில் மட்டும் தான் உலா வருவேன்... மேலும் கடந்த ஒரு மாசமாய் கம்ப்யூட்டர் க்கு உடம்பு சரியில்லை ...

பிறகு நீங்க எப்புடி இருக்கீங்க ????? சுவிஸ் எப்புடி இருக்கு ??? விவரங்களை மெயில் அனுப்புங்க

Mohamed Husain said...

Hey Mayvee, don't worry dude...Everything is good for something...I'm also like that... life will teach newthings everyday..All the best for your future...

Avargal Unmaigal said...

என் மனதை தொட்ட பதிவு. உங்கள் எழுத்துகள் என்னை அப்படியே கல்லூரி நாட்களுக்குள் இழுத்து சென்றன. இந்த பதிவை படித்து முடித்தது எதையோ இழந்த மாதிரி ஒரு உணர்வு, நண்பரே உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

மீண்டும் சொல்லுகிறேன் உங்கள் எழுத்து மிகவும் நன்றாக உள்ளது.

மேவி... said...

@ Mohamed Husain : முதல என்னைய மன்னிச்சுருங்க நண்பா ; ரொம்ப லேட்டா உங்க கமெண்ட்க்கு பதில் சொல்லுறதுக்கு. ஆமாம் வாழ்க்கை ; இயற்க்கை
இந்த இரண்டையும் விட உலகத்தில் சிறந்த ஆசிரியர் யாரிருக்கிறார் ????

மேவி... said...

@Avargal Unmaigal : நன்றி மதுரை தோழரே. உங்களது கல்லூரி நாட்களுக்குள் சென்று திரும்பி வந்தாச்சா ?

Related Posts with Thumbnails