Pages

Monday, April 1, 2013

ஸோஜோ - ஜப்பானிய பேய்


நேற்று பழங்கால ஜப்பானிய பேய் நம்பிக்கைகளை பற்றி படித்து  கொண்டிருந்தேன். அதில் ஸோஜோ என்ற சாப்பாட்டிற்காக அலையும் பேயை பற்றி படித்தேன், ஆச்சரியம் ஸோஜோ போலவே குணம் கொண்ட ஒற்றை கண்ணன் பேயை பற்றி  அப்பாவும் அம்மாவும்  சொல்லி சொல்லி தான் சிறு வயதில் என்னை சாப்பிட வைப்பார்கள்.

அதாவது ஒற்றை கண்ணன் பேய் தினமும் நடு இரவில் வந்து நான் சாப்பிட்டேனே இல்லையா என்று அம்மா அப்பாவிடம் கேட்பானாம். "மேவி சாப்பிட்டாச்சு" என்று அப்பா சொல்லுவாராம். பல சமயம் அப்படியே திரும்பி போய் விடுவானாம், சில சமயம் சந்தேகம் கொண்டு என் வயிற்றை தொட்டு பார்த்து நான் சாப்பிட்டேனா இல்லையா என்று பார்ப்பானாம்.

இதை எல்லாம் நான் அப்பொழுது ரொம்ப உண்மை என்றே நம்பிக்கொண்டு இரவு பயபக்தியுடன் சாப்பிட்டு, காலையில் எழுந்து  அப்பாவிடமோ அம்மாவிடமோ முந்தைய இரவில் ஒற்றை கண்ணனின் வருகையை பற்றி விசாரித்து கொண்டிருப்பேன். பதில் சொல்வது அம்மாவாக இருந்தால் வந்தான் போனான் என்று தான் இருக்கும். இதே அப்பாவாக இருந்தால் அவர் ஒற்றை கண்ணனுடன் நடந்த வாக்குவாதம், அவனை நம்ப வைக்க தூங்கி கொண்டிருந்த எனக்கு, அரை தூக்கத்தில் எழுப்பி சாப்பிட வைத்தது என்று சொல்வார். 

பிறகு காலங்கள் மாற, அப்பா உயர் பதவிக்கு போக, நான் வளர... ஒரு நல்ல நாளில் இருந்து ஒற்றை கண்ணன் எங்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்தி கொண்டான். என்னை பற்றி கவலை படாத அவனை பற்றியும் நான் கவலை படவில்லை. 

வளர்ந்த பிறகு ஒற்றை கண்ணன் என்பது அம்மா அப்பா என்னுள் வளர்த்த நம்பிக்கை தான் என்று தெரிந்தாலும், அந்த நம்பிக்கையை மீண்டும் வளர்த்து அந்த பொய்மையில் தொலைந்து போக விரும்பினேன். என்னோடு வளர்ந்த சில மனங்களின்  இயல்பு பிடிக்காததால். 

இரவு அலுவலக வேஷங்களில் இருந்து மீண்டு வந்த நேரத்தில் ஒற்றை கண்ணன் பற்றிய நினைவுகள் மங்கி, ஸோஜோ எப்படி இருப்பான், அவனுக்கும் ஒற்றை கண்ணனுக்கும் எதாவது ஒற்றுமை இருக்குமோ என்று எல்லாம் யோசித்த பொழுது இரவு மணி இரண்டு... அதை சரியான நேரத்தில் சாப்பிட்டு தூங்கியவர்கள் அதிகாலை என்றும் சொல்லுவார்கள். ஸோஜோ பற்றிய  குறிப்புகள் தேடலில் இறங்கினேன். 

ஸோஜோ வெண் உடல் கொண்டவன், சிகப்பு நிற தலைமுடி கொண்டவன் என்றும் தெரிந்து கொண்டேன். இணையத்தில் பார்க்க கிடைத்த 15ம் நூற்றாண்டு மற்றும் 16ம் நூற்றாண்டு ஓவியங்கள் மூலம் ஸோஜோவின் கால்கள் வாத்துக்கள் போல் இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். ஸோஜோ பழங்கால நம்பிக்கை என்ற அளவில் மட்டும் இல்லாமல்  மேடை நாடகம் வரையிலும் பரவி இருக்கிறானாம். 

தேடகளின் நடுவில் குளித்து விட்டு வந்த பொழுது கொஞ்சம் பசித்தது. ஜன்னல் வழியே இரவு வானத்தை பார்த்த பொழுது ..ஒற்றை கண்ணன் எங்கோ அதில் இருந்து கொண்டு என்னை கவனிப்பதாய் உணர்ந்தேன் 

பேய் கதைகள் என்பது ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரங்களில் ஒரு பகுதி. அது அந்த காலத்திய சமூகத்தை படம் பிடித்து காட்டும். பேய் கதைகள் இப்பொழுது நமது நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டு வருகிறது. கலாச்சார பிடிப்புகளில் இருந்து நாம் நழுவி கொண்டே இருக்கிறோம். 


No comments:

Related Posts with Thumbnails