Pages

Wednesday, May 26, 2021

CORONA SECOND WAVE II கொரோனா இரண்டாம் அலை II இரண்டாம் அலை சாவுக்கு சுய மருத்துவம் தான் காரணமா ? II

இந்த கொரோனாவில் பலர் இறக்க இதுவுன் காரணமாக இருக்கலாமென இரண்டாம் அலை தொடங்கிய நாளில் இருந்து சந்தேகம் வந்துகொண்டே இருந்தது. 

அது இப்பொழுது ஊர்ஜிதமாகிறது.

எனக்கு தெரிந்த நபர், கட்டிட துறையில் டிப்ளோமா பட்டம் பற்று வேலைக்கு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக உழைப்பால் முன்னேறி பெரிய பதவிக்கு வந்தார்.

அவருக்கு அடிக்கடி உடம்பிற்கு சுகமில்லாமல் போகும் பொழுது மருத்துவரிடம் போகாமல் டோலோ மற்றும் பரசிட்டமோல் மாத்திரைகள் இரண்டையும் பக்கத்தில் இருக்கும் மருந்துகடைக்கு போய் வாங்கி சாப்பிட்டுவிடுவார். முக்கியமாக டோலோ மாத்திரை பரசிட்டமோலையும் கலந்து தான் தயாரிக்க படுகிறது.

இப்படி எவ்வளவு நாள் மருத்துவரிடம் போகாமல் மாத்திரை சாப்பிடுறீங்க சார் என ஒரு முறை கேட்ட பொழுது, டொக்டர் கிட்ட போன அவனும் இதே தான் இதே எழுதி தருவாரு என சொன்னார். 

நான் இந்த கேள்வியை அவரிடம் மார்ச் மாதத்தில் கேட்டேன். வழக்கமாக நான் எல்லோரிடம் சொல்வதை அவரிடம் சொன்னேன், இப்படி சுய மருத்துவம் (self medication) பண்ணிக்காதீங்க நல்ல டொக்டரிடம் போங்கள் என சொல்லி விட்டு, நான் போன வேலை விஷயமாக பேசிவிட்டு வந்தேன்.

அப்பொழுதே அவர் மார்க்கூட்டு சளி (நெஞ்சு சளி) அதிகமாக இருப்பதாகவும் அது இருமலில் வெளி வருவது இல்லை என சொன்னார். 

ஏப்ரல் மாதத்தில் அவரை சந்தித்த பொழுது கொரோனா தடுப்பூசி போடுவதை பற்றி கேட்டார், அப்பொழுது தனக்கு சக்கரை நோய் இருப்பதாக அவர் சொல்லவும் ஒரு நல்ல மருத்துவரை பார்த்து வேண்டிய பரிசோதனைகளை செய்து கொண்டு, அவரை ஆலோசித்து தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என சொன்னேன்.

நான் சொன்ன மாதிரி செய்தாரா என தெரியவில்லை.

மே மாதம் 13ஆம் தேதி என்னை அழைத்து எனக்கு தந்திருந்த பேட்டி நேரத்தை (Appointment time) ரத்து செய்து தனக்கு காய்ச்சலாக இருப்பதாகவும் கொரோனா பரிசோதனைக்கு போகிறதாக சொன்னார்.

கொஞ்சம் நாள் கழித்து நுரையீரல் பலவீனமாக இருப்பதாகவும் கொரோனா தொற்று இருப்பதாக சொன்னார். 

நலம் விசாரித்து விட்டு, உதவி வேண்டுமென்றால் அழைக்க சொன்னேன்.

அப்படியே நாள் போனது, சரி இந்நேரத்துக்கு குணமாகி இருப்பார் என்று எண்ணி அழைத்தேன், அவர் மூத்த தான் கைபேசியை எடுத்தார், அப்பாவிடம் பேச வேண்டும் என்று சொன்ன பொழுது அப்பா நேற்று இறந்துவிட்டார் என சொன்னான். 

காரணம் கேட்ட பொழுது நுரையீரல் ரொம்ப பலவீனமாகிவிட்டதால் காப்பாற்ற முடியாமல் போனதாம். 

மருத்துவ காப்பீடு இரண்டு லட்சத்திற்கு தான் எடுத்திருக்கிறார். கையிருப்பு பணம் எல்லாம் காலி ஆகி விட்டதாம். ஆயுள் காப்பீடும் அவர் எடுக்கவில்லை. வீட்டு கடன் வாங்கி கட்டி இருக்கிறார். வீட்டு கடன் பாதுகாப்பு காப்பீடும் அவர் எடுக்கவில்லை. அதனால் மீதி கடன் தொகை காட்டினால் தான் அந்த வீடு அவர்களுக்கு என இருக்கும். இல்லாவிட்டால் அதுவும் இல்லை.

பழமைவாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர், அவரது மனைவி பெரிதாக படிக்கவில்லை, இரு மகன்கள் மூத்தவன் எட்டாவது , இளையவன் மூன்றாவது.... பணகார பள்ளியில் படிக்கிறார்கள். 

அவர் மட்டுமே குடும்ப வருமானத்திற்கு உழைத்து கொண்டு இருந்தார்.

பெரிய தொகையை தான் சம்பளமாக வாங்கி கொண்டு இருந்தார். இப்பொழுது அது இல்லாத பொழுது கைவசம் சொத்துகள் வைத்து அல்லது விற்று இல்லாவிட்டால் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தாலுமே மாதம் அவரது சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்கு வந்தாலே அதிகம். 

இப்பொழுது அந்த குடும்பம் மாதம் அவரது சம்பளத்திற்கு வாழ பழகி விட்டார்கள். அது இல்லையென்ற பொழுது ....அவர்களது நிலைமை ?

இதை எல்லாம் அவர் தவிர்த்திருந்திருக்கலாம்.... தனக்கு சுகமில்லாத பொழுது / உடம்பு சரியில்லாத பொழுது ஆரம்பித்திலேயே நல்ல மருத்துவரை கண்டு மருத்துவ ஆலோசனை பெற்று ... அதன் படி நடந்திருந்தால் இந்நேரத்திற்கு அவர் உயிரோடு இருந்திருப்பார். தனது உடல் நிலையை பற்றி குடும்பத்தாரிடம் எதுவும் சொல்லவில்லையாம்.

இதனால் நான் சொல்லி கொள்வது என்னவென்றால்....

உடம்பிற்கு எதாவது ஒன்று என்றால் அலட்சியம் செய்யாதீர்கள், தகுந்த மருத்துவரை கண்டு ஆலோசனை பெறுங்கள். குடும்பத்தாரிடம் உடம்பிற்கு எதாவது என்றால் சொல்லுங்கள். 

முக்கியமாக காய்ச்சல் என்பது வெறும் அறிகுறி தான். அடிக்கடி காய்ச்சல் வருகிறது என்றால் மருத்துவரை போய் பாருங்கள். நேரடியாக மருத்துகடைக்கு போய் மருந்து வாங்குவதை விட்டுவிடுங்கள். 

வெளிநாடுகளில் இருப்பது போல மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருத்து கொடுக்க கூடாது என ஒரு சட்டம் வர வேண்டும். 

உங்கள் நண்பரோ சொந்தகாரரோ பெரிய மருத்துவர் இல்லையென்றால் அவரிடம் மருத்துவ ஆலோசனை கேட்காதீர்கள்.

முக்கியமாக கூகிள் தேடுபொறி  சிந்திக்கும் திறன் கொண்ட மருத்துவர் இல்லை. நீங்கள் என்ன தேடுகிறீர்களோ இணையத்தில் உள்ள அது சார்ந்த பக்கங்களை காண்பிக்கும். அவ்வளவே.

No comments:

Related Posts with Thumbnails