அத்தியாயம்– 1
(முழுவதும் கற்பனையான கதை)
4000 ஆண்டுகளுக்கு முன்பு.
வசதி , படை பலம் என்று எவ்வளவோ இருக்க தனது அண்ணன் ஏன் பிடிவாதமாக ஒரு குரங்கு கூட்டத்தை அழைத்து கொண்டு வந்து இந்த கடற்கரையில் அமர்ந்திருக்கிறார், ஆயிரம் போர் வித்தைகள் கற்றவராக இருந்தாலும் ஒரு பலம் பொருந்திய அரசனை வீழ்த்த எப்படி இவரால் முடியும், நான் துணைக்கு இருந்தாலும் எப்படி எங்கள் இருவரால் முடியும் ?என்று யோசித்தபடி மீண்டும் மீண்டும் தனது கால்களை தொட்டுவிட்டு போகும் அலைகளை பார்த்தபடி அமர்ந்திருந்த இராமனை நோக்கி இலக்குமணன் வந்து, பக்கத்தில் அமர்ந்தான்.
“அண்ணா எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, அண்ணியாரின் தந்தை சனகரும் உங்களது கொள்கைகளை வெள்ளி தட்டில் பொரித்து, அதனை நிருபாசனத்தில் வைத்து ஆட்சி செய்யும் தம்பி பரதனும் இருக்கையில், நீங்கள் ஏன் ஒற்றை மனிதராய், விலங்கினமா மனித இனமா என தெரியாத ஒரு கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு எல்லா வலமும் மிக்க இலங்கை அரசன் இராவணனை எதிர்த்து அண்ணியாரை மீட்க போர் புரிய கிளம்பி இந்த தனுஷ்கோடி கடற்கரை வரையில் எந்த தைரியத்தில் வந்து இருக்கிறீர்கள் ?”
வழக்கம் போல இராமன் பலமான சிந்தனைக்கிடையில் வட்ட சிந்தனையாளன் இலக்குமணனை பார்த்து சிரித்தான். வாசிப்பு பழக்கம் இல்லாததால் கோபங்களை கையாள தெரியா பருவத்தில் இருக்கிறான் என தனக்குள் நினைத்தப்படி பேச ஆரம்பித்தான்.
“தம்பி நமது தந்தையின் ஆணையிட்ட படி தென்திசை நாட்டுகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டி தரும் கடல்சார் வணிகத்தை நமது வசமாக வேண்டும் .....”
பேசி கொண்டு இருந்த இராமனை இடைமறித்து இலக்குமணன்
“சரி வர்த்தகத்தை வசமாக்க ஏன் இந்த தனி நபர் போர், சனகரின் படை இல்லையா நமது நாட்டு போர் படைகள் இல்லை.. வாடகைக்கு வரும் கூர்கா போர் படை இல்லையா ?”
“இருக்கிறது இல்லையென சொல்லவில்லை, திராவிட ஆட்சியை பிடிப்பது மட்டும் தான் நமது இலட்சியம் என்றால் அவர்களது உதவியை நாடி இருக்கலாம். ஆனால் அது வணிகர்களது நம்பிக்கையை பெற்று தராது. ஆட்சியை வசமாக்கிவிட்டு போனால் வரி மட்டுமே வரும், இலாபம் வராது. மீண்டும் யாராவது கலகம் செய்து திராவிட நாட்டை நமது கைகளில் இருந்து மீட்கலாம்... வணிகர்களது நம்பிக்கையை வென்று விட்டால் நமது பரம்பரையில் கடைசி வரைக்கும் திராவிடம் நம் வசம்.”
இலக்குமணன் தான் எவ்வளவு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் சாட்சியாக இருக்கிறோம் என்பதனை நினைத்து பெருமிதம் பட்டான் .இந்த திட்டம் மட்டும் வெற்றி பெற்றால் சீன, சுமாத்திரா, சிங்கைநகரம் போன்ற நாடுகளுக்கு போகும் கப்பல்கள் நிற்கும் துறைமுகம் நமது வசம் ஆகும்.... அப்படியானால் என யோசிக்க யோசிக்க இலக்குமணன் கடந்த சில மாதங்களில் நடந்தவை எல்லாம் கண்கள் முன்னால் காட்சிகளாக விரிந்தது.
= = =
சூர்ப்பனகை ஆயிரம் வித்தைகள் கற்றவள், எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் ஒற்றை ஆளாக சமாளித்து கலப்பை வில்லை கொண்டு வெற்றி பெற்று விடுவாள்.
இராவணனது ஒரே தங்கை.
தனக்கும் தனது தங்கைக்கும் இருபத்தைந்து ஆண்டுகள் வித்தியாசம் என்பதால் அவள் கற்க ஆசை பட்டத்தை எல்லாவற்றையும் கற்க தகுந்த ஏற்பாடுகள் செய்தான். ஞானிகள் அறிஞர்கள் இருந்த சபையில் எல்லோரிடமும் விவாதம் செய்வது சூர்ப்பனகைக்கு பிடித்த ஒன்று. பல தரப்பு கொள்கைகளுடன் விவாதம் செய்யும் பொழுது அறிவு தெளிவு ஏற்படும் என்பது அவளெண்ணம்.
அவளது அறிவு தேடலுக்கு தடை போடாமல் தஞ்சை, காஞ்சி ,மிதிலை, நாளந்தா மற்றும் பல சிறந்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பிடித்த விஷயங்களை சிறந்த ஆசிரியர்கள் மூலம் கற்க வழி செய்தான்.
அப்படி ஒரு தரம் பருவகால ஓய்வு விடுமுறைக்கு வந்த சூர்ப்பனகை எங்கோ பல தேசங்கள் கடந்து அறியப்படாத எகிப்து என்ற நிலப்பரப்பில் இறந்தவர்களது சடலங்களை பதப்படுத்தும் புதைப்பதை வழக்கமாக இருப்பதை பற்றி இராவணனிடம் ஆர்வம் பொங்க சொல்லி கொண்டு இருந்தாள்.
அறிவும் அழகும் ஒருங்கிணைந்தவளை இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படி தன்னை அறிவு தேடலில் தன்னையே தொலைத்து கொண்டு இருப்பாள். தனது வளர்ப்பில் ஏதேனும் தவறிருக்குமோ, அம்மை அய்யன் இல்லாத குழந்தையை ஒரு சக்கரவர்த்தியை தயார் செய்வது போல் வளர்த்து விட்டோமோ என கவலையில் மாலை நேரத்து மேகங்களை பார்த்து கொண்டு இருந்தான்.
அந்த கவலையென்னும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல .....
“அண்ணா வங்காள தேசத்தில் மரக்கலம் கட்டுவதை பற்றி கொஞ்சம் கற்று கொண்டு வந்திருக்கிறேன்... நாளை அயல்நாட்டு வணிகர்களை சந்திக்க கந்தார துறைமுகத்திற்கு போகிறோம் அல்லவா .... அங்கு போர் மற்றும் வணிக மரக்கலம் கட்டுவதை பற்றி அவர்களிடம் பேச வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கிறது.... அதனை பற்றி போகும் வழியில் உங்களுக்கு விவரித்து விடுகிறேன் .....” என சூர்ப்பனகை சொன்னதும் அப்பொழுது தான் இராவணனுக்கு அவள் தனது அன்பு தங்கை மட்டும் அல்ல இந்த இலங்காதிபதி அரசாட்சியில் வணிக அமைச்சர் என்றதும் நினைவும் வந்தது.
கொஞ்சம் நேரம் போக உளவுத்துறை அதிகாரிகள் தர போகும் பரத நாட்டு பற்றிய அறிக்கைகளை படிக்க காத்து கொண்டு இருந்தான்.
சூர்ப்பனகை மெல்லிய குரலில் ..”அண்ணா ஒரு விஷயம் உங்களிடம் சொல்ல வேண்டும்...”. இது வரையில் இல்லாத தயக்கம் கவனிக்க செய்தான் . முகத்தின் மொழியோ அவள் வாழ்வின் முக்கியமான ஒன்றை சொல்ல இருக்கிறாள் என்பதை சொல்லியது. மனத்தில் அதுவாக இருக்குமோ என்ற சந்தோஷம் ஏற்பட்டாலும் இராவணன் எதையும் காட்டி கொள்ளாமல் ...
“இராமர் என்று ஒரு இளவரசர்... “
என்று சூர்ப்பனகை சொல்ல ஆரம்பிக்கும் பொழுது உளவுத்துறை அமைச்சர் ஞானமுருகு இலங்காதிலகம் தனது படை தளபதியான அதிமலையனோடு உள்ளே வந்தார். வந்தவர் முகத்திலுள்ள கலக்கத்தை கண்டு எதோ முக்கிய விஷயம் போலிருக்கிறது என யூகித்து,
“அரசே நான் உத்தரவு வாங்கி கொள்கிறேன் என சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
பொதுவில் அண்ணனுக்கு சக்கரவர்த்திக்குரிய மரியாதை தர வேண்டும் என்பதில் சூர்ப்பனகை கவனமாக இருந்தாள்.
அப்படி வெளியே போகும் பொழுது அதிமலையன் கையில் இருந்த ஏட்டில் அயோத்தி என்று தலைப்பு இருந்ததை பார்த்தாள்.
தொடரும்.....
No comments:
Post a Comment