Pages

Wednesday, May 19, 2021

திருக்குறளும் நானும்

திருக்குறளும் நானும்.

இப்படியாக தலைப்பில் எழுதணும் என ஆசை தான், ஆனால் அப்படி எ அப்படி எழுத வேண்டுமென்றால் ஒன்று திருக்குறளை முழுமையாக படித்து இருக்க வேண்டும் அல்லது அதனை பற்றி சிறிதளவு ஆராய்ச்சி ஆவது செய்திருக்க வேண்டும்.

நான் இவை இரண்டும் செய்திருக்கவில்லை.   எனக்கு 13 வயதாக இருக்கும்பொழுது குடும்ப நண்பர் ஒருவர் எனக்கு திருக்குறள் புத்தகத்தை பிறந்தநாள் பரிசாக தந்தார்.

அதுவரை திருக்குறளை ஒரு மனப்பாடப் பகுதியாக பார்த்து வந்த எனக்கு அந்த புத்தகம் பெரிதாக ஈர்க்கவில்லை. 

 இரண்டு வருடங்களுக்குப் பின் எழுத்தாளர் நரசய்யா அவர்கள் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு பேட்டியில் திருக்குறளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

அது ஒரு சனிக்கிழமை மதியம் என்பதால் பார்க்க வேறு ஒன்றும் இல்லாத காரணத்தால் அந்த நிகழ்ச்சியை வேறு வழியின்றி பார்க்கத் தொடங்கினேன்.

அதில் திருவள்ளுவர் என்பவர் யார் என்பதை கண்டுபிடிக்க திருக்குறள் பாடல்களிலேயே பல துப்பு இருப்பதாய் சொன்னார். ஒரு பதின் வயத்தொற்றவனுக்கு அவர் சொன்ன தகவல்கள் எல்லாம் ஏதோ ஒரு மாயாஜால பெட்டியை திறந்து விட்டது போல் தோன்றியது. 

ஆவல்கள் மிளிரிட குடும்ப நண்பர் தந்த திருக்குறள் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். பெரிதும் ஒன்றும் புரியாததால் புத்தகத்தை மூடி வைத்தேன்.

+2 பள்ளி பரீட்சையில் தோல்வியடைந்து அடுத்து என்ன செய்வது என தெரியாமல் வியாச பாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் என படித்து விட்டு அடுத்து என்ன படிப்பது என தெரியாமல் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.  அதிகபடியான மன குழப்பத்தில் இருந்த பொழுது தான் மஞ்சள் அட்டையில் பரிசாக வந்த அந்த திருக்குறள் புத்தகம் கண்ணில் பட்டது.எதோ ஒரு வேகத்தில் அதனை எடுத்து படித்தேன்....

ஆள்வினையுடைமை அதிகாரம், குறள் 611 (இப்பொழுது தான் சரியாக சொல்ல தெரிகிறது)

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்"

குரல் புரியவில்லை பிறவு விளக்கத்தை படித்தேன். சற்று தைரியம் வந்தது.

அந்த அதிகாரத்தின் கடைசி குறள்..

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்று பவர்."

இதனை படித்து முடித்த பொழுது என்ன செய்ய வேண்டும் புரிந்து இதெல்லாம் தோல்வியே இல்லை புரிந்து, அப்பாவிடம் சொல்லி ஒரு டுடோரியல் செண்டரில் சேர்த்து விட சொன்னேன். 

நான் படித்தது CBSE, அதனால் தமிழக அரசு கல்வி முறையில் என்னால் ஒன்றி படிக்க முடியுமா என அப்பா யோசித்தார். அப்பாவை எப்படியோ பேசி சம்மதிக்க வைத்தேன்.

அந்த நம்பிக்கையை தந்தது இந்த குறள்..

அதிகாரம் தெரிந்து தெளிதல்.

குறள் 505

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்".

வென்றுவிட முடியும் என நம்பிக்கை தருவது திருக்குறளே.

- நிற்க -

அந்த திருக்குறள் புத்தகம் எனக்கு பரிசாக தந்தவர் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர். கன்னடர் மூலமாக தான் எனக்கு திருக்குறள் அறிமுகம் ஆனது. அவர் மட்டும் அந்த பரிசை தராமல் இருந்திருந்தால் ஒரு மனப்பாட பகுதியாக மட்டுமே திருக்குறளை அணுகி இருப்பேன்.

நன்றி - லலிதா ஆண்ட்டி அத்தை ( அவரை நான் அப்படி தான் அழைப்பேன்)

No comments:

Related Posts with Thumbnails