பல செய்திகளை அல்லது பல குறுங்கட்டுரைகளை ஒரு தொகுப்பாக 14 வருடங்களுக்கு முன்பு தமிழ் இணையத்தில் பலர் எழுதி கொண்டு இருந்தார்கள். குறிப்பாக பரிசல் (பரிசல்காரன் - அவியல்) , கார்க்கி, கேபிள் சங்கர் ( கொத்து பரோட்டா) மற்றும் பலர் இந்த வடிவில் எழுதி கொண்டு இருந்தார்கள். பெரிதும் வெற்றி பெற்ற வடிவமாக இருந்தது.
அப்பொழுது தமிழ் இணையத்தில் பிரபலமானவர்கள் எல்லாம் இந்த வடிவத்தில் எழுதி கொண்டு இருந்த பலர் இப்பொழுது இந்த வடிவத்தில் எழுதுவது இல்லை. நான் இன்னுமும் எழுதி கொண்டு இருக்கிறேன்.
ஏனென்று தெரியுமா ?
அவர்களுக்கெல்லாம் எழுத உருப்படியான விஷயங்கள் கிடைக்கிறது அல்லது இருக்கிறது. எனக்கு அப்படி எதுவுமில்லை என்பதினால்..... எழுதுகிறேன்.
= = =
2016ல் நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் கால் வைத்த பின் கிண்டி குதிரை நொண்டி குதிரை கணக்காய் அடித்து பிடித்து 2017ல் நிலை கண்டு, ,2018ல் இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 10 கோடி சந்தாதாரர்கள் என்ற நிலையை நெட்ஃபிளிக்ஸீக்கு இந்தியாவில் கிடைப்பார்கள் என அந்த குழும தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ் சொன்னார்.
அவர் சொல்லி மூன்று வருடங்களாகி விட்ட நிலையில் நான்கு கோடியே அறுபது லட்சம் சந்தாதாரர்கள் உடன் நெட்ஃபிளிக்ஸ் ஆட்டம் ஆடி கொண்டு இருக்கிறது.
இது இப்படியாக இருக்க இந்தியாவில் முதன் முறையாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்த பிக் ஃபிளிக்ஸ் என்கிற OTT வடிவேலுவின் கிணத்தை காணோம் நகைச்சுவையில் வரும் கிணற்றை போல் உள்ளது.
அங்காளி பங்காளிகளான டிஸ்னி ஹாட்ஸடார் மற்றும் சோனி லிவ் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கிறது.
போன வருடம் வரைக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தான் முன்னணியில் இருந்தது ; ஸ்டார் குழும நிறுவனங்களின் தொலைக்காட்சி தொடர்களின் காப்புப்பிரதியாக இருந்ததினால் அதன் மதிப்பு ஏற்றதிலேயே இருந்தது.
பின் ஹர்ஷத் மேத்தாவின் கதையான ஸ்கேம் 1992 வந்ததினால் சோனி லிவ் OTTக்கு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்த தொடர் நெட்ஃபிளிக்ஸில் வந்திருக்க வேண்டியது.
சந்தையை புரிந்து கொள்ளா அதிகாரம், தவறான முடிவுகள், ஆற்றோடு போகும் மனப்பான்மை,திரை நட்சத்திரங்களுக்கான அவியத்தின் பின்னால் ஓடுதல், சராசரி மாத கட்டணம் அதிகமாக இருத்தல் ஆகியவைகளால் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் பின் தங்கி இருக்கிறது.
= = =
நடிப்பின் சிகரம் கேலாக்ஸி ஸ்டார் விமல் நடித்த கன்னிராசி படத்தை பார்த்து உய்யலாலா அடைந்தேன். ஜோடியாக வரலட்சுமி நடித்திருந்தார்.
காலையில் ஒரு பிளேட் பொங்கல் சாப்பிட்டுவிட்டு சூடான டிகிரி காபிக்கு காத்திருக்கும் பாவனையுடன் விமல் அட்டகாசமாய் நடித்திருந்தார்.
பொதுவாய் எம்.ஜி.ஆர். படங்களில் தான் நாயகி நாயகனை தூரத்தி தூரத்தில் காதலிப்பார். விமல் அண்ணனுக்கு சினிமாவில் இரண்டாம் எம்.ஜி.ஆர். என பெயர் வாங்க ஆசை வந்துவிட்டது போல.
இதனை அடுத்து கந்தாசாமி என்னும் காவியத்தை பார்த்தேன்.... இந்த படம் வெளிவரும் பொழுது சில்லறை எல்லாம் சிதற விட்டு இருக்கேன் என்று நினைக்கும் பொழுது விதி கீரிஸ் டப்பாவை எப்படி உதச்ச என சிரித்தது.
ஷ்ரேயா சரன் அம்மணி மியாவ் மியாவ் பூனை என்னும் பாடலுக்கும் நடனம் ஆடி இருந்தார்.... அதை பார்க்கும் பொழுது மலச்சிக்கலில் அவஸ்தை பட்டு கொண்டு இருந்த நடன இயக்குநரின் வேதனை புரிந்தது.
= = =
கடவுள் என்னும் கொலைகாரன் என்னும் குறுநாவலை படித்தேன். எழுத்து நடை எல்லாம் நன்றாக இருக்கிறது ... ஆனால் கதை கிண்டி குதிரை கணக்காய் தான் இருக்கிறது (நெட்ஃபிளிக்ஸ் பந்தி).
Two minutes silence.
= = =
ஊரெங்கும் ஒரியல் பாலோ இயக்கி இருக்கும் தி இன்னொசென்ட் இணைய தொடரை பற்றி தான் பேச்சு . பார்க்கவில்லை என சொன்னால் எதிர்கட்சிகாரன் என்ன நினைப்பான் என்கிற தர்ம சங்கட நிலை வந்துவிடும் என்பதினால் பார்க்க தொடங்கினேன்.
சும்மா பரபர என இருக்கிறது காட்சிகளின் நகர்வு.
= = =
வேலை சார்ந்த அழுத்தம் அதிகபடியான நிலை இருப்பதினால், மன தளர்வுக்கு என்ன செய்வது தெரியாமல் இருந்த வேளையில் தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள் என்கிற புத்தகம் படிக்க கிடைத்தது.
கடி ஜோக்கு வகையை சார்ந்த நகைச்சுவை துணுக்கு தான். வாய் விட்டு சிரித்தேன் ஒவ்வொரு நகைச்சுவை துணுக்கிற்கும்.
இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால் தமிழ் பேச தெரியும் படிக்க தெரியாதோருக்காக தங்கிலீஷ் வடிவிலும் இருக்கிறது.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். நண்பர்களிடையே இந்த புத்தகத்தில் வரும் ஜோக்குகளை சொல்லி உறவை மேம்படுத்தலாம்.
புத்தகம் தந்த நண்பருக்கு நன்றி.
= = =
No comments:
Post a Comment