2000களின் பிற்பகுதியில் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்றதாக இருக்கும் என அவசர அவசரமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தோம்.
பெயர்ந்த பிறகு சந்தித்த முதல் பிரச்சனை கேபிள் டிவி தான். நானும் அண்ணனும் விசாரித்து ஒரு இருட்டான வீட்டொன்றில் போய் பேசி இணைப்பிற்கான பணம் கட்டிவிட்டு வந்தோம். (இப்பொழுது அந்த வீட்டில் ஒரு குடும்பம் குடித்தனம் இருக்கிறார்கள். பக்கத்தில் இருந்த அண்ணாச்சி கடை சூப்பர் மார்கெட்டாக மாறிவிட்டது)
மாதாமாதம் வீட்டிற்கே வந்து பணம் வாங்கி கொண்டு போவார்கள். ஒரு சமயம் வீடு பூட்டி இருக்கிறது என பணம் வசூலிக்காமல் இணைப்பை துண்டித்து விட்டு சென்றுவிட்டார்கள்.
இதே திருச்சியாக இருந்தால் அடுத்த மாசத்தோடு சேர்த்து கொடுங்க, அப்பறமா வாங்கிக்குறேன் என பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டு போவார்கள். ஆனால் சென்னை வந்த கொஞ்ச காலத்திலேயே இப்படியான அனுபவம்.
அப்பொழுது சன் டி.டீ.எஃச். அறிமுகமாகி விளம்பரங்கள் வந்து கொண்டு இருந்தன.
அப்பா கேபிள் டிவிக்கு இது மேல் என சொன்னதால் கேபிள் டிவிக்கு பிரியாவிடை தந்துவிட்டோம்.
அதில் என்ன ஒரு சிக்கல் என்றால் அதனை Recharge செய்ய முகவரிடம் இருந்து recharge card வாங்க வேண்டும் என்பது போல் அமைப்பு இருந்தது. ஒரு சமயம் முகவர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டால் திங்கட்கிழமை வரைக்கும் காத்திருக்க வேண்டும். வாரயிறுதிகளில் பெருங்களத்தூர் மிகவும் அமைதியாக தான் இருக்கும். ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் கட்டிடங்கள் இருந்த காலம் அது.
சித்ரா டாக்கீஸில் நான்கு இடைவேளைகளுடன் திரையில் கோடுகள் புள்ளிகள் கோலங்கள் தாங்கிய பழைய எம்.ஜி.ஆர். சிவாஜி படம் பார்க்க கூட்டமாய் நின்று கொண்டு இருப்பார்கள். இப்பொழுதும் அங்கு கூட்டமாக இருக்கிறது ஆனால் படம் காண அல்ல. மதுபானத்திற்காக.
நஷ்டம் காரணமாக டாக்கீஸ் சிமெண்ட் கிடங்காக இருந்து பின்னர் சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அங்கு வந்தது. அந்த டாஸ்மாக் கடை சென்னையில் எனக்கு கிடைத்த அதிர்ச்சிகளில் முக்கியமான ஒன்று. திருச்சியிலும் சாராயக்கடை இருக்கும், ஆனால் குடியிருப்பு பகுதிகளில் இருக்காது. எல்லாம் வணிக பகுதியில் தான் இருக்கும்.
இந்த பிரச்சனை காரணமாக டாடா ஸ்கை டி.டீ.எஃச். வாங்கினோம். முக்கிய காரணம் டாடா ஸ்கை முன் கட்டண அட்டைகளை விற்ற முகவர் எல்லா நாட்களிலும் கடை திறந்து வைத்திருப்பார். அப்பறம் இணையத்தில் கட்டணம் செலுத்த ஆரம்பித்தோம்.
அதே போல் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்பிற்கு BSNL இணைப்பு தான் சென்னை வந்த உடன் வாங்கினோம். ஆனால் என்ன பிரச்சனை என்றால் கட்டணம் செலுத்துவதை தவிர்த்து சின்ன பிரச்சனை என்றாலும் குரோம்பேட்டையிலுள்ள அவர்களது அலுவலகத்திற்கு தான் போக வேண்டும். அப்பா தான் போய் விட்டு வருவார்.
வளர்ந்து வந்து கொண்டு இருந்த பகுதி என்பதால் ( வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு கட்டி வந்த பிறகு பல வருஷங்களுக்கு இது Extension areaவாக தான் இருந்தது) அடிக்கடி கனரக வாகன வருகையால் கம்பி அறுந்து போகும்.
அதை சரி செய்ய ஒரு வாரம் ஆகும்.
அப்பொழுது ஏர்டெல் நிறுவனம் இணைய சேவை மற்றும் தொலைபேசி அழைப்பு, புகாருக்கு உடனடி தீர்வு என சொன்னதால் BSNL சேவையை ரத்து செய்து விட்டு ஏர்டேல் (இணையம் மற்றும் தொலைபேசி) இணைப்பை வாங்கினோம் .
வைத்திருந்த வரைக்கும் பிரச்சனை என எதுவும் இருந்தது இல்லை. ஏர்டெலுக்கு முன் சோதனை அடிப்படையில் ACT இணைய சேவை பயன்படுத்தினோம். ஜியோவில் தொலைபேசி இணைப்பு, இணைய சேவை, டி.டீ.எஃச். ஒன்றில் மூன்று சேவைகள் கூடுதலாக இலவச ஓடிடி தளங்களின் சந்தா என விலையும் குறைவாக இருந்ததினால் மாறிவிட்டோம்.
ஏதற்கு சொல்கிறேன் என்றால் இந்த மாற்றங்களை காண 14 வருடங்களானது.
இதனை பற்றி எல்லாம் சுஜாதா 1998லேயே எழுதி இருக்கிறார்.
ஏனெனில் அவர் வாத்தியார்.
No comments:
Post a Comment