Absolute Master Class Marketing
நெட்ஃபிக்ஸ் தமிழக பார்வையாளர்கள் சந்தையை கைபற்ற வேண்டுமென முடிவு செய்துவிட பிறவு அவர்கள் கையிலெடுக்கும் ஒவ்வொரு யுத்தியும் ஆச்சரிய பட வைக்கிறது.
சந்தைப்படுத்தலில் கற்க ஆர்வமாக உள்ள எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒன்று.
இதற்கு முன்பு சிலபல முயற்சிகள் நெட்ஃபிக்ஸ் எடுத்திருந்தாலும் சமீபத்திய காலத்தில் தமிழர்களை குறி வைத்து நகர்த்தும் விஷயங்கள் நெட்ஃபிக்ஸை தமிழ் மக்கள் மனதில் உட்கார வைத்து விடும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.
ஆரம்பத்தில் மொத்த இந்தியாவிற்கும் ஒரே மாதிரியான விளம்பரங்கள் வெளியிட்ட பொழுது வடக்கு தெற்கு சண்டைகள் பின்னூட்ட பகுதியில் அதிகம் வந்ததால் Netflix South என தனி ட்விட்டர் பக்கத்தை ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு தெற்கில் எந்த மாநில மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என ஆராய்ந்து அந்த மொழியில் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள்.
மொத்த இந்திய மக்களின் வருவாயை கணக்கிட்டு சந்தா தொகையை குறைத்தார்கள்.
அதன் பின் ஆட்டம் ஆரம்பம்.
Sex Education தொடருக்கு விளம்பர படுத்தும் விதமாக பாக்யராஜ் அவர்களை பேச வைத்து ஒரு காணொளி வெளியிட்டார்கள். அதில் வேறு யார் பேசி இருந்தாலும் எடுபட்டு இருக்காது. ( https://youtu.be/I1kA5YSYuEU )
கொஞ்ச நாட்களுக்கு முன்பு Squid Game தொடருக்காக பரிதாபங்கள் கோபி சுதாகர் ஆகியோரை வைத்து காணொளி கொண்டு வந்தார்கள். அதில் பிரபல Youtube காணொளி பதிவர்களை நடிக்க வைத்து இருந்தார்கள். வழக்கம் போல எல்லையில்லா அளவில் அதகளம். ( https://youtu.be/C3RVZdoN9to )
இப்பொழுது 1980கள் மற்றும் 1990களின் சிறுவர்களை அதிகம் ஈர்த்த சன் டிவி டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேஷ் குமார் அவர்களை வைத்து நெட்ஃபிக்ஸின் 2021ஆம் ஆண்டின் சிறந்தவைகள் என ஒரு காணொளி வெளியிட்டு இருக்கிறார்கள். ( https://youtu.be/4wrHALUeIrE )
இவற்றின் முக்கிய அம்சம் என பார்த்தால் நெட்ஃபிக்ஸ் பற்றியோ அல்லது அவற்றின் தொடர்களை பற்றி தெரியாதவர்களுக்கு கூட இந்த காணொளிகளின் மூலம் தெரிய படுத்திவிட்டார்கள்.
மன சோர்வின் பொழுது எல்லோரும் ஒரு நல்ல பழைய படத்தை பார்ப்போம் என பாக்யராஜ் அவரது படத்தை பார்த்திருப்போம்.
கோபி சுதாகர் ஆகியோரின் புது காணொளி வந்திருக்கிறது என அறிவிப்பு வந்தாலே உடனே சென்று பார்க்கும் கூட்டம் ஒன்றுள்ளது. சிரிப்புக்கு நாங்க உத்தரவாதம் என களம் இறங்கும் கோஷ்டி அவர்கள்.
முன் சொன்ன இரண்டு முயற்சிகளுக்கு மகுடமாய் அமைந்திருக்கிறது சுரேஷ் குமார் அவர்களை வைத்து வந்திருக்கும் இந்த காணொளி. டாப் டென் சுரேஷ் குமார் அவர்களை பார்த்ததும் மலரும் நினைவுகள் நெகிழ்ச்சியில் இது வரையில் பார்க்காத தொடர்களை புதியவர்களுக்கு அறிமுக படுத்தி பார்க்க வைத்து விடுவார்கள்.
சந்தைப்படுத்தலின் அடிப்படை புரிதல்களான ஈர்த்து விடுதல் (பாக்யராஜ் காணொளி), கவனம் பெறுதல் (கோபி சுதாகர் காணொளி), விற்று விடுதல் ( டாப் டென் சுரேஷ் குமார் காணொளி) ஆகியவற்றை வைத்து தமிழர்களுக்கிடைய தங்களது தொடர்களை அறிமுக படுத்திவிட்டார்கள்.
ஆனால் இதில் எதுவும் செய்யாத நிறுவனங்களுக்கு நெட்ஃபிக்ஸ் கடுமையான போட்டி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment