Pages

Sunday, January 2, 2022

1990கள் II பிலிப்ஸ் டூ இன் ஒன் II மலரும் நினைவுகள்


1990களின் மத்தியில் அப்பா Philips Two in One Tape recorder வாங்கி கொடுத்தார். அத்தோடு இருந்த இரண்டு ஒலிபெருக்கி உடன் ஏற்கனவே வீட்டில் இருந்த பெரிய ஒலிபெருக்கிகளை இணைத்து அண்ணன் அவரது மாடி அறையில் அதிக சத்தத்துடன் ஒலி சேவை செய்து கொண்டு இருப்பார். 

அவர் பொறியியல் படிப்புக்காக கல்லூரி விடுதியில் தங்க ஆரம்பித்த உடன் பிலிப்ஸ் என் வசமானது.

அது வரையில் மேற்கத்திய இசை மற்றும் ஹிந்தி சினிமா பாடல்களை மட்டும் கத்தி கொண்டு இருந்த பிலிப்ஸ் என் வசமான பின்பு தேனிசை தென்றல் தேவாவின் கானா பாடல்களை கதற ஆரம்பித்தான். 

அண்ணனாவது மாடி அறையில் தான் பிலிப்ஸை வைத்திருந்தார் ஆனால் நானோ வீட்டின் வரவேற்பு அறையை அடுத்து இருந்த என் அறையில் பிலிப்ஸை கதற விட்டு கொண்டு இருந்தேன்.

அதுவும் ஞாயிறு என்றால் ஒரே பாடலை Rewind பண்ணி திரும்ப திரும்ப போட்டு (அப்போதைய Loop) கேட்டு கொண்டு இருப்பேன். 

அப்பா தொழிற்சாலையில் அதிக சத்தங்களுக்கிடையே வேலை செய்பவர் என்பதால் வீடு அமைதியாக இருக்க வேண்டும் என சொல்வார். ஆனால் அந்த வயசுக்கே இருந்த வேகத்தில் இதென்று இல்லை அப்பாவின் எந்த பேச்சையும் கேட்டதில்லை. (ஆனால் இப்பொழுது எல்லாம் அவரது பேச்சை கேட்டு இருந்திருக்கலாம் என தோன்றும்)

அப்பா இரண்டு காதுகளையும் கைகளால் மூடி கொண்டு அமர்ந்திருப்பார். அவருக்கு கோபம் வரும் வரைக்கும் பிலிப்ஸை கதற விடுவேன்.

சில சமயம் நானே வெறுத்து போய் பிலிப்ஸை கதற விடாமல் இருந்தால் அப்பா "என்னணா டீ கடைய இன்னும் திறக்கலையா ....உடம்பு சரியில்லையா.." என கேட்பார். 

நான் கல்லூரி சேர்ந்த பொழுது ஒலிப்பேழை மற்றும் ஒளிப்பேழை எல்லாம் (Audio & Video Cassette) எல்லாம் முதியோர் ஊக்கத்தொகை (Pension) வாங்க ஆரம்பித்திருந்தனர்.

CD, MP3 என பரிணாம வளர்ச்சி கண்டு இருந்தது.

கடைசியாய் பத்ரி மற்றும் லகான் திரைப்பட கேசட் வாங்கி இருக்கிறேன் போல. மற்றது எல்லாம் அண்ணனது சேகரிப்பு.

# மலரும் நினைவுகள்

No comments:

Related Posts with Thumbnails