Pages

Sunday, July 10, 2022

பொன்னியின் செல்வனும் நானும் - 1


பொன்னியின் செல்வன் பற்றி பேசுவதற்கு முன்னால் ஒன்றை சொல்லி ஆக வேண்டும், வார்த்தைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கதையை அப்படியே திரையில் கொண்டு வர முடியாது. ஏனென்றால் வார்த்தைகளின் மூலம் உருவாக்க படும் கற்பனைகளுக்கு எல்லை என்பது இல்லை. ஆனால் ஒரு படமாக எடுக்கப்பட்டு விட்டால் அந்த கற்பனைக்கு ஒரு உருவம் வந்துவிடும். எல்லை உருவாகி விடும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதும்  "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது..." என்று பேசியபடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவிற்கு வரும். உண்மையில் வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படி தான் பேசி இருப்பாரா என தெரியாது. ஆனால் சில பல சரித்திர குறிப்புகளை படித்தால் முற்றிலும் வேறுபட்ட உருவமே நமக்கு கிடைக்கும்.

பலருக்கு பொன்னியின் செல்வன் வழியாக இராஜராஜ சோழனும் அவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் தெரிந்திருக்கும். சிலருக்கு கோயில் வழியாக இராஜராஜனையும் பின்னர் நாவலையும் அறிந்திருப்பார்கள்.

ஆனால் .....

2001ல் அழகம் பெருமாள் இயக்கத்தில் டும் டும் டும் என்ற திரைப்படம் வந்தது. அதில் தேசிங்கு ராஜா என்னும் பாடல் தஞ்சை பெருவுடையார் கோயிலில் எடுக்க பட்டு இருந்தது. அக்கோயில் நாங்கள் குடியிருந்த பகுதியில் இருந்து 50 நிமிட பயணத்தில் இருக்கிறதென்று தெரிந்த பின், ஒரு நாளில் ஜோதிகா நடனம் ஆடிய கோயிலை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் சொந்தகார அண்ணனுடன் சென்று பார்த்தேன். 

இவ்வளவு பெரிய கோயிலை யார் கட்டினாங்க என கேட்ட பொழுது இராஜராஜ சோழன் என சொன்னார்.

எங்கள் பகுதியில் நூலகத்தில் இருந்து தினந்தோறும் வார பத்திரிக்கைகள் வரும். அதில் கல்கியும் அடங்கும். அதில் எதோ ஒரு ராஜா காலத்து கதை ஒன்று வரும் (அது பொன்னியின் செல்வன் என்று அப்பொழுது தெரியாது), அதனை அம்மா ஆர்வமுடன் வாசிப்பார். என் பெரியம்மாவும் அந்த கதையை பற்றி மிகவும் சிலாகித்து சொல்வார். 

அதில் வரும் படங்கள் பார்ப்பத்தோடு மட்டும் நிறுத்தி கொள்வேன், அது ரொம்ப தமிழாக இருக்கவும் படிப்பதற்கெல்லாம் முயற்சி செய்ததில்லை. 

இப்படி பொன்னியின் செல்வன் பலர் பாராட்டி சொல்லியும் வாசிக்க சொல்லியும் .... "நீ என்ன சொல்லுறது நான் என்ன கேக்குறது" என்று அந்த வயதிற்குள்ள மனப்பான்மையுடன் இருந்ததினால் வாசிக்கவில்லை.

நண்பர்கள், சினிமா, பாட்டு என வாழ்க்கை சுழன்று கொண்டே இருந்தது.

மேற்படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு படித்து / முயன்று  கொண்டு இருந்த ஒரு வருடத்தில் முக்கால்வாசி நேரமும் வீட்டிலேயே தான் இருப்பேன். அப்படியான நேரத்தில் பெங்களூருவில் இருந்த பெரியப்பா வீட்டிற்கு போயிருந்தேன். பெரியம்மாவிடம் வீட்டிலேயே இருக்க ரொம்ப போர் அடிக்குது என சொல்லவும் ... சும்மா இருக்குற நேரத்துல் இதைய படி என பத்மவாசனின் ஓவியங்கள் கொண்டு   தொடராக வந்த பத்திரிக்கை பக்கங்களை பிணைத்த பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்கள் (ஆறு புத்தகங்கள்) கொடுத்தார்.

வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்த பிறகு முதல் சில பக்கங்களை வாசித்து முடிக்க 10 நாட்களானது.

அதன் பிறகு கதையோடு ஒன்றி பைத்தியம் பிடித்தது போல் வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டு வாரத்தில் மொத்த நாவலையும் படித்து முடித்தேன். 

கல்கியின் வார்த்தைகள் ஏற்படுத்திய மாயாஜாலம் ஒரு பக்கம் என்றால் அதனை வேறொரு தளத்தில் கொண்டு போனது பத்மவாசனின் ஓவியங்கள். 

துப்பறியும் கதைகள், காதல் கதைகள் ஆகியவற்றை வாசித்து கொண்டு இருந்தவனுக்கு பொன்னியின் செல்வன் வாசித்தது எப்படி இருந்ததென்றால் தெரு பசங்களுடன் பொழுதுபோக்கிற்காக குடியிருப்பு தெருவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவனை 20-20 கிரிக்கெட் போட்டியில் விளையாட விட்டது போல் இருந்தது.

பிறவு பெரியம்மாவிடம் பத்மவாசன் ஓவியங்கள் கொண்ட தொகுப்பை கொடுத்துவிட்டு மணியம் ஓவியங்கள் இருந்த தொகுப்பை வாங்கி மீண்டும் மணியம் ஓவியங்கள் வழியாக வாசித்தேன்.

அதகளத்தின் உச்சம் அந்த அனுபவம்.

பின்னர் வேதா ஓவியங்களோடு கல்கியில் தொடராக பொன்னியின் செல்வன் வர ஆரம்பித்தது. முதல் இரண்டு வாரங்கள் தான் வாசித்தேன், ஆனால் வேதாவின் ஓவியங்கள் மூலம் கதையோடு ஒன்ற முடியவில்லை.

பின்னர் பாம்பே கண்ணன் மற்றும் குழுவினர் கொண்டு வந்த பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் / ஒலி நாடகம் வடிவத்தை கிட்டத்தட்ட 64 மணி நேரம் செலவளித்து கேட்டு முடித்தேன். அதுவுமே மறக்க முடியாத மற்றொரு அனுபவம்.

அதே போல இன்னொரு புதிய அனுபவமாக இருக்க போகிறது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம்.

தொடரும்....

No comments:

Related Posts with Thumbnails