Pages

Tuesday, June 4, 2024

மங்கள் & மங்கள் - டாட்டூஸ்


எங்கூர்ல மங்கள் & மங்கள்ன்னு ஒரு கடை இருக்கு. இப்பம் தான் அண்ணாச்சி கடையாட்டம் பலது வைச்சு விக்குறாங்க.

ஆனா முன்னம் அது பாத்திர கடையா தான் இருந்துச்சு.

அதுல என்ன சிறப்புன்ன பாத்திரம் வாங்கிட்டு கடைக்கு முன்னாடி பெயர் கொத்தி கொடுக்க இருக்குற ஆள் கிட்ட பெயர் கொத்த கொடுப்பாங்க.

கடகல்லா பக்கமா வாசலண்ட அந்த ஆள் உட்காந்திருப்பாரு. அவர சுத்தி வெள்ளிகிழம அம்மன் கோயில் ல சர்க்கரை பொங்கல் வாங்க நிக்குற கூட்டம் மாதிரி எல்லோரும் நிப்பாங்க.

பாத்திரத்துல பெயர் கொத்தி கைல வாங்கினதும் லேடீஸ் முகத்துல அப்புடி ஒரு சிரிப்பு வரும். அது அவங்க பாத்திரமுன்னு சமூகத்குக்கு சொல்லாம சொல்லுற வழக்கமா அது இருந்துச்சு.

இப்பம் மெட்ராஸ் ல லவ்ஸ் ல விழுந்தா கல்யாணம் கட்டிகிட்டா குழந்தை பொறந்தான்னு பச்சை (டாட்டூ) குத்திக்குறாங்க. பெயரு, அச்சுன்னு பலது இருக்கும்.

லேடீஸ் ஆம்பளைஸ்ன்னு எல்லோரும் குத்திக்குறாங்க. அதைய எல்லாம் பாக்குறப்ப மங்கள் & மங்கள் பாத்திர கடை ல பெயர் கொத்துறது தான் ஞாபகத்துக்கு வருது.

முன்னாடி ஆம்பளைஸ்ன்ன கை ல பொண்டாட்டி பெயர் பச்சை குத்திப்பாங்க, லேடீஸ்ன்ன கை இல்லாங்காட்டி மார் தோள்பட்டை ல குத்திப்பாங்க.

இப்பம் எல்லாம் அவங்களே பாக்க முடியாத இடத்துல எல்லான் குத்திக்குறாங்க. கேட்டா மத்தவங்க பாப்பாங்க லன்னு ரூட்ட கொடுக்குறாங்க.

மத்தவன் பாக்குறதுன்னு ஏண்டா நீங்க செலவு பண்ணுறீங்கன்னு அக்கறை ல கேட்டா...

"Bro It's A Statement..."நு சொல்லுறாங்க.

இம்புட்டி வருஷமா பேங்க் ல வேல பாத்துட்டு நமக்கு ஸ்டேட்மெண்ட்ன்ன பாஸ்புக் ஸ்டேட்மெண்ட் தான் ஞாபகத்துக்கு வருது.

இதைய எல்லாம் பாக்குறப்ப வரவர  பூமர் ஆகிட்டு வருமோன்னு சந்தேகமா இருக்கீ.

சிறந்த தலைமை - காவ்யா மாறன்


தலைமை பொறுப்பில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டுமென்பதை காவ்யா மாறன் உலகிற்கு தனது செயலின் மூலம் சொல்லி இருக்கிறார்.

ஒரு விளையாட்டு வீரரோ அல்லது பயிற்சியாளரோ அப்படி செய்திருந்தால் பெரிய விஷயமாக இருந்திருக்காது.

ஆனால் விளையாட்டை வணிகமாக பார்க்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு வெற்றி வாய்ப்பை இழந்து தோல்வியடைந்த தனது குழுவினர்களை பார்த்து கவலை பட வேண்டாம் என சொல்லி நன்றாக விளையாடியதற்கு குழு வீரர்களை பாராட்டி இருக்கிறார்.

எதிர் விமர்சனங்கள் வருமென தெரிந்தும் காணொளியை வெளியிட்டு இருப்பதற்கு துணிச்சல் வேண்டும். 

விளையாட்டு அணியின் நிர்வாகம் என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. விளம்பரதாரர்கள், முதலீட்டாளர்கள், நிறுவன நிர்வாகம் என தோல்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். இப்படி நாளைய தினத்திற்கான சிக்கல்கள் எதிரில் நிற்க... இந்த செயல் பாராட்ட பட வேண்டிய ஒன்று. 

அப்பாவின் காசு யார் கேட்க போறாங்க என விஷயம் தெரியாதவர்கள் சொல்லி விடலாம், ஆனால் வணிக நிர்வாகமென்பது எல்லாவற்றையும் சரியாக ஆவண படுத்த பட வேண்டும், அது தோல்வியாக இருந்தாலும் சரி வெற்றியாக இருந்தாலும் சரி. 

மேலும் வெற்றி கொண்டாட்டங்களை விட தோல்வியடைந்த சமயங்களில் தான் தலைவன் என்பவன் குழுவினரோடு இருக்க வேண்டும். வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு சுற்றுபவர்களுக்கு இதன் அடர்த்தி புரியாது.

வருங்காலத்தில் உங்களது விளையாட்டு அணி பல வெற்றிகளடைய வாழ்த்துகள் காவ்யா மாறன்.

#kavyamaaran #sunrisershyderabad #KalanithiMaran

ரியான் பராக் - தேவை இல்லாத சர்ச்சை


தமிழ் பத்திரிக்கையாளர்களிடமிருந்து சர்ச்சை, அதிர்ச்சி, உல்லாசம், அழகி போன்ற வார்த்தைகளை அவர்களிடமிருந்து பிடுங்கி விட்டால் அவர்களால் பல செய்திகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியாது.

அதுவும் சில இடங்களில் அவர்கள் சொல்வது தான் நிஜம் என்பது போல் எழுதுவார்கள்.

ஏனென்றால் நன்றாக எழுதுகிறவன் நன்றாக யோசிப்பான் என்று மக்கள் நினைப்பதால் வரும் பிரச்சனை.

இப்பொழுது அவர்களிடம் சிக்கி இருப்பது துடுப்பாட்ட வீரர் ரியான் பராக்.

இன்ஸ்டாகிராம் செயலியில் அவ்வப்போது பரபரப்பான அலை வரும் பின்னர் கடந்து போகும். அப்படியாக சில நாட்களுக்கு முன்னர் ஒரு அலை ஆரம்பித்தது...

அதென்ன அலை..

யூடியூப் செயலியில் (உன்குழாய் என மகுடேஸ்வரன் மொழிபெயர்ப்பாரென நினைக்கிறேன்) ஒருவரது தேடுதல் சரித்திரத்தை (Search History) திரைச்சொட்டெடுத்து (Screenshot) பகிர்வது. அப்படி பலர் பகிர்ந்திருக்கிறார்கள்.

ரியான் பராக்கும் அப்படியே செய்திருந்தார். 

அதில் அவர் நடிகைகளின் கவர்ச்சியாக திரைப்படத்தில் வரும் காட்சிகளை தேடி உள்ளார் என்பது தெரிந்திருக்கிறது. 

இதனை பரபரப்பான செய்தியாக பல புரட்சி பத்திரிக்கையாளர்கள் செய்தியாக எழுதிருக்கிறார்கள். 

இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது

யூடியூப் - இந்திய அரசின் தொழில்நுட்ப பிரிவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலி.

ரியான் பராக் தேடுதலில் வர போவது  இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறையின் கீழ் இயங்கும் தணிக்கை குழுவினாரால் தணிக்கை செய்யப்பட்டு வெளியான இந்திய திரைப்பட பாடல்கள் மற்றும் காட்சிகள் தான் வர போகிறது. 

மேலும் சட்டபூர்வமாக பொதுதளத்தில் பார்க்க கிடைக்கும் காட்சிகள் பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. 

அது எப்பொழுது பிரச்சனையாகுமென்றால் அதனை தேவையில்லாமல் ஒரு பெண்ணிற்கு அனுப்பி தொல்லை தரும் பொழுது தான்.

ரியான் பராக் அவர்களுக்கு 22 வயது தான் ஆகுகிறது. இளம் வயது தான். அந்த வயதில் தேடி பார்ப்பது தவறு இல்லை. இள வயது கிளர்ச்சி என்பது சாதாரணமான ஒன்று தான்.

இதையெல்லாம் பிரச்சனையாக கேள்வி கேட்க கூடிய உரிமை ஒருவருக்கு இருக்கிறதென்றால் அது ரியான் பராக்கின் மனைவிக்கு உண்டு.

ஒன்றுமில்லாத பிரச்சனையை எதோ தேசிய குற்றம் போல் எழுதுவது என்ன மாதிரியான மனநிலையென தெரியவில்லை. 

இது ஒரு பக்கம் இருக்க...

இணைய பத்திரிக்கையாளர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்களென பார்த்தால் மக்களது வக்கிர புத்திக்கு தீனி போட்டு அவர்களை தங்களது செய்தி பத்திரிக்கை இணையதளத்திற்கு வர வைக்க தான்.

ஏன் அப்படி ...

அப்படி அதிகமான மக்கள் அந்த தளத்திற்கு வந்தால் தான் பார்வையாளர்கள் வரவு அதிகம் இருக்கிறது என காட்டி விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் மூலம் லாபம் பார்க்க முடியும்.

இதனை ஆங்கிலத்தின் Market Space என சொல்வார்கள். இந்தியாவில் எல்லோரும் திறன்பேசி (Smart phone) வைத்திருப்பதால் இப்படியாக செய்தி வர காரணம். 

மக்கள் எப்பொழுதும் ஆக்கபூர்வமான விஷயங்களை விட ஆக்கமே இல்லாத பொழுதுபோக்கு பக்கம் தேடி போவதால் தான்... அவர்களெல்லாம் ஒரு வகையில் இணைய ஈசல்களே.

இந்த இணைய ஈசல்களை உண்டு தின்று உயிர் பிழைக்கிறார்கள் சில புரட்சியாக எழுதும் பத்திரிக்கையாளர்கள். 

இதிலென்ன வேடிக்கை என்றால் எதோ இவர்களே புலனாய்வு செய்து கண்டுபிடித்தது போல் எழுதுவது தான்.

#நடந்ததுநடந்தபடியே 

#RiyanParag

Monday, June 3, 2024

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் - சைதாபேட்டை


சென்னையில் படிக்க தொடங்கிய நாள் முதல் பல கிராமங்களின் தொகுப்பான இந்த மாநகரின் வரலாற்றை தேடி தேடி வாசித்து வருகிறேன்.

அப்படியான தேடலில் கிடைத்தவை பல... மக்கள் பூங்கா (People's Park) போன்றவை அடங்கும். அதனை பற்றி 2013ஆம் ஆண்டு ஒரு சிறு கட்டுரை கூட எழுதிருந்தேன். (https://mayvee.blogspot.com/2013/02/1859.html?m=0)

இன்று மற்றொரு விஷயம் பற்றி கேள்வி பட்டேன். 

சைதாபேட்டை திருவிழாக்கள். 

காரணீஸ்வரர் கோவில் மற்றும் அதனை சார்ந்த பண்டிகை திருவிழாக்கள் பற்றி முன்பே கேள்வி பட்டு இருக்கிறேன். 

ஆனால் இன்று 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் பற்றி அலுவலகத்தில் ஒருவர் சொல்ல ஆச்சரியமடைந்தேன்.

ஆனால் சில கல்வெட்டுகள் படி இக்கோயில் 1000 வருட பழமையானது என சொல்கிறார்கள்.

ஆயிர வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவில் சமய சண்டைகள் வலுப்பெற்று இருந்தன. அதன்படி எங்கெல்லாம் சைவ சமய கோயில்கள் (சிவன் கோயில்கள்) கட்டபட்டனவோ அதன் அருகிலேயே வைணவ கோயில்கள்(பெருமாள் கோயில்கள்) கட்டபட்டன. 

உதாரணமாக ஸ்ரீரங்கம் - திருவானைக்கா.

நூற்று வருடங்கள் முன்பு இராமானுஜர் விஜய விலாஸ் சபை ஒன்று கட்ட பட்டு இருக்கிறது. மேலும் கோயிலை சுற்றி பல ஆழ்வார்களின் பெயரில் சபைகள் கோயில்கள் இருக்கிறது. அதனை பற்றிய வரலாறு எல்லாம் தெரியவில்லை.

திருவிழாக்கள், கோயில்கள் எல்லாம் வைத்து பார்த்தால் பழங்காலத்தில் சைதாபேட்டை முக்கிய கலாச்சார மையமாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.

அடையாறு ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது, அதனால் வணிக மையமாகவும் ராஜாக்கள் காலத்தில் இருந்திருக்க வேண்டும். 

மைலாப்பூர் என்னும் பண்டைய கடல் சார் வணிக மையம் இருந்தபடியால் சிறு மையமாக சைதாபேட்டை இருந்திருக்க வேண்டும்.

சைதாபேட்டை 1980களில் முக்கிய அரசியல் களமாக இருந்ததென கேள்விபட்டு இருக்கிறேன், ஆனால் கோயில்கள் பற்றி இப்பொழுது கேள்வி படுகிறேன். 

இந்தகோயிலை கட்டியவர்கள் பலிஜா செட்டி சமூகத்தை சேர்ந்த வணிகர்கள் தான்.

வணிகர்கள் ஒன்றுமில்லாத இடத்தில் கோயில் கட்டி இருக்க வாய்ப்பு இல்லை.

சைதாபேட்டை வரலாறு தெரிந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிரவும்.

/ / /

பழங்காலத்தில் கோயில்கள் வணிக மையமாக இருந்திருக்குமா ?

உப்புக்கு சப்பாணி - பதிவு விரைவில்
Related Posts with Thumbnails