Pages

Sunday, September 18, 2011

**என் பெயர் ராமசேஷன் - நாடோடி பிம்பங்கள்**

"ஆமாம், ராமசேஷன். கர்நாடகமான ஒரு பெயர்." என்று முதல் வரியில் ஆரம்பித்து "பல்லை உடைத்துக் கையில் கொடுப்பேன், ஜாக்கிரதை" என்று கடைசி வரியில் கதை முடிவதற்குள், நான் ராமசேஷனாகவே வாழ்ந்துவிட்டேன். மற்ற நாவல்களில் எல்லாம் கதைமாந்தர்களுடன் கொஞ்ச நாள் வாழ்வேன், ஆனால் ஆதவன் அவர்கள் என்னை அவரது எழுத்தின் மூலம் என்னை நூற்றி எண்பத்தெட்டு பக்கங்களுக்கு ராமசேஷனாக மாற்றிவிட்டார். புத்தகம் முடித்து மாதங்களான பின்னும், வாசிப்பனுபவ சுவடுகள் என்னை விட்டு போகவில்லை.

கதாவிலாசத்தில் ஆதவனை பற்றி படித்த போது கூட, எஸ்ராவின் எழுத்துநடையில் மயங்கிருந்தேனே தவிர, ஆதவனை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. பிறகு புத்தக கடையில் சுற்றி வரும் பொழுதெல்லாம் இந்த புத்தகத்தின் அட்டைபடம் என்னை ரொம்ப வசீகரித்திருந்தது, அதற்காகவே வாங்கினேன். கதைக்கும் அட்டை படத்திற்கும் என்ன தொடர்பிருக்க முடியும் என்று அடிக்கடி யோசிப்பேன். வாசித்து முடித்த பின், இந்த படத்தை விட வேறெந்த படமும் இதற்க்கு பொருத்தமாக இருக்க முடியாது என்பதை தெரிந்துக் கொண்டேன்.

நாடோடி பிம்பங்கள் - இந்த பதிவுக்கு ஏற்ற தலைப்பா இது என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை, ஆனால் எனக்கு பொருத்தமானது. நான் அடையாளங்களை எப்பொழுதும் வெறுப்பவன். வெறும் அப்பாவி மேவியாக இருந்த வரைக்கும் சந்தோஷமா இருந்தேன். ஆனால் பொருளாதார அடிமை வேடமிட்ட பிறகு, தினந்தோறும் புது புது அடையாளங்களை விரும்பமில்லாமல் அணிந்து கொள்கிறேன் . அதிகாரத்தை காட்ட, பணிவை காட்ட........ இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ அதற்கெல்லாம். நான் நல்லவனா என்று தெரியாது ;கெட்டவன் இல்லை. ஆனால் கிளையன்ட்களுக்கு முன்னால் தூய்மையான நெய்யில் செய்த நல்லவன் என்று நடிக்க, அடையாளமற்ற எனக்கு இந்த தற்காலிய பிம்பங்கள் பெரிதும் பயன் படுகின்றன. ஆனால் கூத்து ஆடுபவர், அலங்காரத்தை கலைத்த பின், அந்த பவுடரில் உள்ள நச்சு தன்மையால் அவனது முகத்திற்கு பாதிப்பு வருவது போல், எல்லா பிம்பங்களையும் கலைத்துவிட்டு
வீட்டிற்கு வந்த பிறகும் எனக்கு அன்று அணிந்த பிம்பங்களின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது.

எந்தவித அடையாளமோ, பிம்பமோ இன்றி, தோழமை உணர்வுக்காக சிலரை நாடி செல்வேன், நான் போகும் சமயம் அவர்கள் ஏதோ பிம்பத்தோடு இருப்பதை கண்டு, நொந்து போய் திரும்ப வருவேன். எனது இயல்புகளுடன் யாரிடமும் இயல்பாய் இருக்க முடிவதில்லை. பிறர் அணிந்து கொள்ளும் பிம்பங்கள் குறித்து குழப்பங்கள் / கோவங்கள் எல்லாம் என்னை சூழ்ந்து கொள்ளும். அதை பற்றிய யோசனையாகவே இருப்பேன். ராமசேஷனும் அப்படியே. ராமசேஷனை சுற்றி உள்ளவர்களை பற்றிய அவனது பார்வையில் பேசுகிறது இந்த நாவல்.

மனிதர்கள் எப்பொழுதுமே ஒரே மாதிரி தான். எந்த நிலையிலும் தனது விருப்பங்களை நிலைநாட்ட, இருப்பை தக்க வைத்துக் கொள்ள, பிறர் மத்தியில் முக்கியத்துவம் பெற ; மற்றவர்களை குப்பை தொட்டியாக்கி தங்களது விருப்பங்களை திணிப்பதையே முக்கிய வேலையாக செய்வார்கள். ராமசேஷனை சுற்றியும் அப்படிபட்ட மனிதர்கள் தான். அவனது அம்மா,அத்தை, நண்பர்கள், உறவினர்கள், காதலிகள் என்று எல்லோரும் அவனிடத்தில் ஏதொரு பிம்பத்தோடு பழகுகிறார்கள். அவனது எண்ண ஓட்டத்தில் அதையெல்லாம் கிண்டலும் கேலியுமாய் எதிர் கொள்கிறான். அவனும் சில சமயம் பிம்பங்களை அணிந்து கொள்கிறான், வெற்றியும் தோல்வியும் அடைகிறான்.


பிம்பங்கள் சார்ந்த குழப்பங்களும் அவனுக்கு வருகிறது. எனக்கும் அந்த மாதிர்யான குழப்பங்கள் அடிக்கடி வரும் : யாரிடம் எந்த பிம்பத்தோடு பழகினேன் என்று.

நிறைய பேர் சொல்கிற மாதிரி, இந்த நாவலில் ஏதொரு இடத்தில நம்மை பொருத்தி பார்த்து கொள்ளலாம். அதிலும் கதைக்கு முன்னுரையாக லா.ச. ராமாமிருதம் அவர்கள் "அபிதா"வில் எழுதிருந்ததை போட்டிருக்கிறார்கள் .... அவ்வளவு பொருத்தும்.

"நான் ஏதோ ஒரு விளையாட்டுக்காக நாய் வேஷம் போட்டேனென்று என்னை அந்த வேஷத்திலேயே நிரந்தரப்படுத்தப் பார்க்கிறாள்"... இந்த வரிகள் எனது மன காயங்களை பிரதிபலிப்பு செய்கிறது. அலுவலக நேரத்திற்கு பிறகான நேரங்களில், அல்லது வாரயிறுதி நாட்களில் அலுவலக நட்புகளை சந்திக்கும் பொழுதெல்லாம், அவர்கள் என்னை, நான் போட்டுக்கொள்ளும் அலுவலகதிற்கான பிம்பத்தோடு தான் சந்திக்க விரும்புகிறார்கள். பிம்பங்கள் என்ற குப்பை தொட்டியை நான் எப்பொழுதும் சுமப்பதில்லை என்று அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதனால் இப்பொழுதெல்லாம் யாருக்கும் விளக்குரை தருவதில்லை... இன்ஸ்டன்ட் பிம்பம் அணிந்து கொள்கிறேன்.

மொத்தத்தில் - எல்லோரும் படிக்க வேண்டிய நூலிது

"ஒரு நகர்ப்புற மத்திய தர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும்
வேட்கைகளும் சித்தரிக்கப்படும் என் பெயர் ராமசேஷன் ஆதவனின் புகழ் பெற்ற நாவல். சுய நிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத்
தேடலும் கொண்ட இளமையின் வண்ணம் மிகுந்த சித்திரம் இந்தநாவல்." புத்தக பின் அட்டையிலிருந்து.

இந்த நாவலை படிக்கும் பொழுது ஆதவன் நமது ஆழ்மனதில் இருக்கும் சில காயங்களுக்கு தனது எழுத்துக்களின் மூலம் மயிலிறகில் மருந்து தடவிகிறார். வண்ணங்கள் ஆயிரம் அழகாய் இருந்தாலும், அவைகளை பார்த்து ரசிக்க முடியுமே தவிர, அதிலோன்றாக முடியாது, ஆனால் ஆதவன் நம் கையை பிடித்து ஒரு அற்புதமான வாசிப்பனுவ பயணத்திற்கு கொண்டு செல்கிறார். அதில் நம்மை போலவே ஏமாற்றங்களையும், எரிச்சல்களையும் ராமசேஷன் சந்திக்கிறான்.

ஆதவனை பற்றி ..... அவரது படைப்புகளில் இதை மட்டும் வாசித்திருக்கிறேன் :::: இப்பொழுது ஆதவன் சிறுகதை தொகுப்பை வாசித்து கொண்டிருக்கிறேன். அதனால் ஆதவனை பற்றி அசோகமித்திரன் "1960 , 70 களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதைக் கழித்த, படித்த, மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியோக ஆசை - அபிலாஷைகளையும் சோகங்களையும் நிராசைகளையும் ஆதவனைப் போல யாரும் தமிழில் பிரதிபலித்ததில்லை." என்கிறார்.

ஆதவனை பற்றி இந்திரா பார்த்தசாரதி " நான் அவனை பாதித்திருப்பது போல, ஆதவனும் என்னை மிகவும் பாதித்திருக்கிறான். இதை நான் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும்" என்கிறார்.

ஆதவனின் மற்ற படைப்புகள் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் "என் பெயர் ராமசேஷன்" கொண்டாடப்பட வேண்டிய ஓன்று. எனது கல்லூரி காலத்திலையே இந்த நாவல் எனக்கு கிடைத்திருந்தால், வாழ்க்கையின் வெறுமையான சில பக்கங்களை தவிர்த்திருக்கலாம். கல்லூரி படிப்பவர்கள் எல்லோரும் படிக்க வேண்டிய ஓன்று, ஏனென்றால் ராமசேஷனும் கல்லூரியில் படிக்கிறான். ஆனால் எனக்கென்னவோ இன்றும் எல்லா கல்லூரிகளிலும் ராமசேஷன் உலவி வருவதாகவே தோன்றுகிறது.

நாவலை படிக்கும் பொழுது , பிடித்த ஜன்னலோர ரயில் பயணம் போல் இருந்தது. கடைசி பக்கம் வந்த பொழுது, அய்யோ நாவல் முடிய போகிறதே, ராமசேஷனுடன் இனிமேல் பயணிக்க முடியாதா ?? என்றெல்லாம் மனதிற்கு வேதனை பட்டேன்.

வேறென்ன சொல்ல .... நாவலை படித்து முடித்த பிறகு I was completely swept off my feet .

வெளியீடு - உயிர்மை பதிப்பகம்
விலை - ரூ.120

Sunday, September 11, 2011

The Lover (L'Amant) (1992) - படிக்க வேண்டியது ::: பார்க்க கூடாதது.

"எங்களது புணர்வின் அங்கமாய், தெருவில் நடந்து போகிறவர்களும், சத்தங்களும் ஆகி போயின. முடிய அறைக்குள் இருந்தாலும், ஏதோ அந்த சத்தங்கள் மத்தியில் நான் நிர்வாணமாய், வெட்கம் இல்லாத ஸ்தீரியாய் உணர்ந்தேன். அவனது முத்தங்களுக்கிடைய தெருவில் ஓர் வியாபாரி விற்று கொண்டு போன கருவாடு வாசனையையும் உணர்ந்தேன்."

இந்த படத்தின் காட்சிகள் மூலமாக யாரவது கதையை புரிந்து கொள்ளலாம் என்று முயற்சி செய்தால், கண்டிப்பாக அவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். ஏனென்றால் கதையென்று எதுவுமில்லை ; நான் பார்த்த வரைக்கும். இருந்தாலும் இந்த படத்தை பார்க்க ஏதொரு காரணம் உண்டென்றால், அது வசனங்கள் தான். சிற்சில இடங்களில் அழகாய். மேல நான் மொழிபெயர்த்திருக்கும் வசனம் அப்படியொன்றும் சிறப்பான காட்சியில் வரவதில்லை, இருந்தாலும் அதில் ஏதொன்று எனக்கு பிடித்திருந்தது.

கொஞ்சம் நாள் முன்பு, நானொரு வடநாட்டு கதையை படித்தேன் (வங்காள நாட்டு கதை என்று நினைக்கிறேன் : சரியாய் தெரியவில்லை), நாட்டு விடுதலைக்கு பிறகான காலகட்டத்தில், கலவரங்களுக்கு மத்தில் : தனது காதலியை முத்தமிட ஒரு மறைவான இடத்தை தேடி அலைகிறான் ஒரு காதலன் தனது காதலி உடன். தெருவில் எங்கும் கலவரக்காரர்கள் கோஷமிட்டபடி சென்று கொண்டிருப்பதால், தனிமையான இடமில்லாமல் தவிக்கிறான். ஒரு சிக்கலான சூழ்நிலையில், அவனுக்கு இடம் கிடைக்கிறது. அங்கு அவனது காதலியை அணைத்து கொள்கிறான், அவள் வைத்திருக்கும் பூக்களை மோகர்ந்து பார்க்கிறான், லேசாக முத்தமும் தருகிறான். அப்பொழுது அங்கு கலவரக்காரர்கள் சத்தம் போட்டு கொண்டு வருவதால். இருவரும் பிரிந்து போய்விடுகிறார்கள். அன்று இரவு அவன் கண் முடி, அந்த நிகழ்வை நினைத்து சந்தோஷப்பட நினைத்து, கண்களை முடி கனவு காண்கிறான், கனவில் முத்த நினைவுகளோடு கலவரக்காரர்களின் கோஷமும் அவனுக்கு கேட்கிறது. :::: இந்த கதையில் வருமிந்த நிகழ்வு தான் படத்தில் அந்த வசனங்கள் வரும் பொழுது ஞாபம் வந்தன.

கன்னடத்திலும், ஒரு கதையில், இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வாழும் அந்த கால கூட்டு குடும்பத்தில் வாழும் ஒரு கணவன் மனைவி இடைய நடக்கும் புணர்வை கூட இதே மாதிரியான எழுத்துநடையில் ஆசிரியர் சொல்லிருப்பார்.

கதை என்றோன்னுமில்லை. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் நாயகன் பெயரோ, நாயகி பெயரோ சொல்ல படுவதில்லை. படம் முழுக்க நாயகி கதை சொல்லுவதாய் வருகிறது. கப்பில் அவளை அவன் சந்திக்கிறான். மோகம் கொள்கிறான். அவளும் அதை ஏற்றுக்கொள்கிறாள். புணர்கிறார்கள். அவளது கஷ்டப்படும் குடும்பத்துக்கு அவன் உதவி செய்கிறான். பிறகு சில பிரச்சனைகள். சண்டை வருகிறது. அவள் கன்னித்தன்மை இல்லாததால் கல்யாணம் செய்ய மறுக்கிறான். சண்டை வருகிறது. அவனுக்கு வேறொரு இடத்தில திருமணம் நிச்சயம் ஆகுகிறது. அவள் பாரிஸ் கிளம்ப தயாராகிறாள். பிறகு என்னானது ????

மோசமாக எடுக்க பட்ட படமிதுவாக தான் இருக்கும். எந்த கதாபாத்திரத்திலும் அழுத்தமில்லை. இருந்தும் படம் பார்க்க நமக்கு கிடைக்கும் ஒரே காரணம் வசனங்களும், சிற்பல காட்சிகளும் தான்.

நாவலை எழுதியவர் Marguerite Duras.
இந்த நாவல் முழுக்க அவரது சிறு வயது நினைவுகள் தானென்று ஒரு பேச்சும் இருக்கிறது. படத்தின் கடைசி காட்சிகளும் அதை உணர்த்துவது போல் தான் இருக்கிறது. நாவலாசிரியர் தனது கடைசி காலத்தில் எழுதிய நாவலிது.

நாணயத்தின் இரண்டு பக்கம் போல : இந்த படத்தை கொண்டாடுவோர் ஒரு கோஷ்டியாகவும், வெறுப்பவர்கள் ஒரு கோஷ்டியாகவும் பிரிந்து இருக்கிறார்கள். நானிந்த படத்தை வெறுப்பவர்களின் பக்கம் இருக்கிறேன். படத்தை பாருங்கள். நான் பார்த்த பிறகு தான் இந்த கோஷ்டியில் சேர்ந்தேன்.

நாவலை படித்த ஒருவரிடம் கேட்டு பார்த்தேன். 1929 இல் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தை பற்றியும் , ஒரு பெண்ணின் உணர்வுகளை பற்றியும் அழகாக சொல்லிருப்பதாய் சொன்னார். நான் நாவலை இன்னும் படிக்கவில்லை, படத்தை மட்டும் தான் பார்த்தேன்.
படத்தை
"சின்ன பசு" என்கிற பெயரில் தமிழில் டப் செய்து, நகரங்களுக்கு வெளியே உள்ள திரையரங்குகளில் காலை காட்சியாக
நமது ஆட்கள் போட்டாலும் போடுவார்கள்.

சில வசனங்களுக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் (அதுவும் வெட்டியாக இருந்தால் மட்டுமே)

#டிஸ்கி - ஒரு வேளை நீங்க நாவலை முதலில் படித்து விட்டால், தயவு செய்து படத்தை மட்டும் பார்க்காதீங்க.
#டிஸ்கி - புணர்வு காட்சிகள் அளவுக்கு அதிகமாகவே படதிலிருக்கிறது.

Sunday, September 4, 2011

**கலவை - மங்காத்தா ::: வலசை ::: ஸ்திரீபிரியன் அனுமன்**


மங்காத்தான்ன உள்ள-வெளியன்னு சொல்லி விளையாடுவாங்க. இதுக்கும் படத்துக்கும் என்ன சமந்தம்ன்னு நமக்கு தியேட்டர் உள்ள போகும் போது தெரியாது, ஆனா வெளிய வரும் போது தெரிஞ்சு இருக்கும். அப்படி தெரிஞ்சுக்குற நேரத்துல படத்தையும் நமக்கு பிடிச்சு இருக்கும், ஏன்ன 500 கோடி ரூபாய் யாருக்கு கிடைச்சுதுன்னு வெளிய வரும் யாரு கிட்டையும் சொல்லாம, ஒரு சஸ்பென்ஸோட படம் நல்ல இருக்கு போய் பாருங்கன்னு சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்குதுல :))).

வாலி படத்துல, ஊமை அஜித் மழைல கார் உள்ள உட்கார்ந்துகிட்டு தன்னோட இயலாமைய நினைச்சு அழுவாரு, தேவி தியட்டர் ல அந்த சீன் பார்த்ததுல இருந்து நானும் அஜித் ரசிகன். அதுக்கு அப்பரும் அஜித் படம்ன்னாலே கண்டிப்பா முத நாள் முத ஷோ தான். அப்படி கடசிய பார்த்த படம் ஜி, அதுக்கு பிறவு அந்த மாதிரி பார்க்க முடியல. லீவ் நாள்ல இந்த படம் வருதுன்னு தெரிஞ்ச பிறவு தான், எப்படியாச்சு முத ஷோ பார்த்துடுணும் வெறி வந்துருச்சு. வழக்கம் போல டிக்கெட் பயம், அதை போக்கினான் ஆபீஸ் நண்பன் சிவா.

வழக்கமா அஜித் படம்ன்ன டிக்கெட் புக் பண்ணி படம் பார்க்க எல்லாம் எனக்கு பிடிக்காது, அப்படி பார்த்தாலும் படம் பார்த்த மாதிரி இருக்காது.இந்த படத்துக்கு தான் புக் பண்ண டிக்கெட் ல போய் பார்த்தேன் ஐநாக்ஸ்ல, முத நாள் முத ஷோ.

படம் முழுக்க அந்த வில்லத்தனத்தை அருமையா body - language ல காட்டி இருக்கார் தல. அதுவும் அந்த சிரிப்பு - ஐயா அசிது இத எல்லாம் என்கையா இத்தன நாள் ஒளிச்சு வைச்சு இருந்தீரு. முத வாட்டி பார்க்கும் பசியோட இருந்ததால முத பாதியா ரசிக்க முடிய, இண்டர்வல் கொஞ்சம் நொறுக்குதீனிய நொறுக்குன பிறவு இரண்டாவது பாதிய நல்ல ரசிச்சேன். இப்ப யோசிச்சு பார்த்த, பட்டாசான இரண்டாவது பாதிக்கு முத பாதி இப்படி தான் இருக்கணும்ன்னு நினைக்கிறேன்.

குறைகள் ஆயிரம் இருந்தாலும் - அஜித்துக்காக நிச்சயம் இரண்டு முறை பார்க்கலாம்.
= = = = =
கோஷிஷ் (koshish - 1972 ) பார்க்க வேண்டிய படம். அதிலும் "காதல் கதைன்னு இதுக்கு மேல சினிமாவுல காட்ட என்ன இருக்கு, அதான் எல்லாத்தையும் காட்டியாச்சே"ன்னு சொல்லுற சில திரைத்துறை அப்பாடக்கர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். இதுல எண்ணன் விசேஷம்ன்ன கதைல நாயகன் - நாயகி இரண்டு பேருக்கும் காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. இருந்தும் இரண்டும் பேர் உள்ளையும் காதல் வருது, இரண்டு பெரும் ரோமன்ஸ் பண்ணுறாங்க. அதிலும் கதாநாயகன் தன்னோட திறமைகளை கதாநாயகிக்கு காட்டி கவர் பண்ணுற சீன் எல்லாம் செமையா இருக்கும். அதிலும் குறிப்பாக யார் யாருக்கோ இரண்டு பேரும் போன் பண்ணி கலாய்குற சீன் :))
= = = = =
சமீபத்துல தாய்லாந்து ராமாயணமான ராமகியனை பத்தி கொஞ்சம் வாசிச்சேன். அப்படி வாசிக்கும் போது என்னுடைய favorite character ஆனா அனுமனை பத்தி என்ன சொல்லிருக்காங்கன்னு ஒரு ஆவல்ல பார்த்தேன் : பார்த்து படிச்சதும் அதிர்ச்சி தான். ஏன்ன அனுமனை ஒரு ஸ்திரீபிரியன்னு போட்டிருந்தாங்க. சின்ன வயசுல நான் பயப்படும் பொழுதெல்லாம், எங்கம்மா எனக்கு அனுமார் கதை சொல்லி தைரியம் தருவாங்க. அப்படிப்பட்ட வால்மீகி ராமாயண அனுமன், இந்த ராமகியனுல இராவணன் பொண்டாட்டி, பொண்ணு, இந்திரஜித் பொண்டாட்டின்னு பல பெண்களுடன் உறவு வைச்சுகிறார், அதிலும் ஒரு முறை மண்டோதிரியை இராவணன் கண் முன்னாடியே கற்பழிகிறாராம். இதெல்லாம் படிச்ச பிறவு ஒன்னு மட்டும் நல்ல தெரியுது, புராணங்கள் ஊர் விட்டு ஊர் போகும் போது, அந்த இடத்துக்கு தேவையான அலங்காரங்கள் செய்து கொள்ளும்.

ஆதாரம் - ஆனந்த் ராகவ் எழுதின "ராமகியன் - தாய்லாந்து ராமாயணம்"
= = = = =
வாசிப்பின் போது புத்தகத்தின் ஏதொரு பக்கத்தையும், உறவின் போது பெண் உடலின் ஏதொரு பாகத்தையும் விட்டுவிட்டு அந்த நிகழ்வுக்கான முழு இன்பத்தையும் அனுபவித்து விடலாம். ஆனால் இசை என்பது அப்படி இல்லை, மழையை போல அதனுடைய ஒவ்வொரு துளியும் நம்மை பரவச படுத்தும். இத்தாலிய நாட்டு இசை அமைப்பாளர் என்னியோ மோர்ரீகோணி (Ennio Morricone) சினிமா பாரடிஸோ (Cinema Paradiso )வுக்கு அமைத்த இசை நமக்கு பரவசத்திலும் ஒரு பரவசத்தை குடுக்கும். நான் படம் பார்த்த பிறவு தான் இந்த இசை கோர்வையை கேட்டேன், படத்தை அனுபவித்த பிறவு முதல் முறை கேட்ட போது : நெகிழ்ந்து விட்டேன் : லேசாக அழுதேன். நீங்களும் கேட்டு பாருங்க.
= = = = =
படித்ததில் பிடித்தது -

"நான் ஏதோ ஒரு விளையாட்டுக்காக நாய் வேஷம் போட்டேனென்று என்னை அந்த வேஷத்திலேயே நிரந்தரப்படுத்தப் பார்க்கிறாள்". - என் பெயர் ராமசேஷன் - எழுதியவர் ஆதவன். எல்லோரும் படிக்க வேண்டிய நூலிது.

= = = = =
கூகிள் பஸ் ஸ்பெஷல் :-

இன்று செட்டிநாடு அலுவலக நோட்டீஸ் போர்டு ல பார்த்தேன். 1936 , 1937 , 1962 களில் வெளிவந்த இந்திய சட்டதிட்டங்களில் FORM க்கு தமிழில் நமூனா என்று இருக்கிறது. ஆனால் இதே 2001 ல வந்த சட்டதிட்டங்களில் FORM க்கு தமிழில் படிவம் என்று பயன்படுத்தி இருக்காங்க.

நமூனா (FORM ) என்று சொல் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறதா ??? விளக்கம் ப்ளீஸ்

= = = = =
டிவிட்டரில் சொன்னது :-

பெண் என்பவள் புகுந்த வீட்டில் இடதுசாரியாகவும், பிறந்த வீட்டில் வலதுசாரியாகவும் இருக்கிறாள்.
கடவுள் நமபிக்கை இல்லாதவனுக்கு கூட, மூட நம்பிக்கைகள் மீது கோவபட கடவுள் தேவை படுகிறார்.
திருவிழா முடிந்த கிராமம் போல் காண படுகிறது செய்தித்தாள் கடை இரவு நேரத்தில்.
நகரங்களில் மழை அனாதையாக பெய்ந்து கொண்டிருக்கிறது. நகர மக்களுக்கு மழை தேவை இல்லாத அழையா விருந்தாளி.
= = = = =
காலச்சுவடு
கூட
ஆரம்பத்தில் காலாண்டிதழ் ஆகா வந்ததென்று கேள்வி பட்டிருக்கிறேன். நண்பர் கார்த்திகை பாண்டியன் நேசமித்ரன் உடன் சேர்ந்துக்கொண்டு வலசை என்ற பெயரில் காலாண்டு சிற்றிதழ் வெளியீட்டு உள்ளார். உலக இலக்கிய அளவில் வாசிப்பனுவத்தை பெற விரும்பும் எல்லோரும் வாங்க வேண்டியதொன்று. நூறு ரூபாயில் ருஷ்யா, சீனா, ஈராக், இலங்கை இங்கிலாந்து, ஆஸ்திரியா மற்றும் பல நாடுகளென்று வாசிப்பனுபவ இன்ப சுற்றுல்லா.

ழ கபே வலசை நாளுக்கு பிறகு வாந்த ஞாயிற்று கிழமை டிஸ்கவரி புக் பேலஸில்
காமராஜ், ராஜ சுந்தரராஜன், பத்மஜா கிருஷ்ணமூர்த்தி, விதூஷ் ஆகியவர்களை சந்தித்து பேசியதில் ரொம்ப சந்தோஷம்.
இதற்கிடையில் டிஸ்கவரி புக் பேலஸ் பற்றி சொல்லிய ஆகணும், சென்னையில் பெரும்பாலும் பல பிரபல புத்தக கடைகளில் கிடைக்காத தமிழ் புத்தகங்களெல்லாம் இங்கன்ன கிடைக்குது. புத்தக கடை வைத்திருப்பவர்கள் நல்ல வாசிப்பாளனாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் கடையை சிறப்பான முறையில் நடத்த முடியும் : இதற்க்கு டிஸ்கவரி புக் பேலஸ் நல்ல உதாரணம்.

வலசை - கார்த்திகை பாண்டியனுக்காக நேற்று தான் வாங்கினேன். வலசையில் சில திசைகளில் குறை இருப்பதாய் உணர்கிறேன். முழுமையாக படித்த பின் ஒரு வேளை அதெல்லாம் தேவையான குறைகளாக தோன்றலாமென்று நினைக்கிறேன். பார்போம்.
= = = = =

Keep Smiling

Enjoy Living
Related Posts with Thumbnails