Pages

Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

Sunday, September 13, 2020

இரு புத்தகம்

படித்து முடித்தது - குபேரவன காவல், இதிகாசத்தை மைய படுத்திய கதையில் பரபரப்பான சம்பவங்கள் எதிர்பார்த்தேன். அதுவும் மகாபாரத புருஷாமிருகம், யட்சிணி, குபேரவனம் எல்லாவற்றையும் வைத்து வாசகனை மிரட்டி எடுத்திருக்கலாம்.

ஆனால் ஆசிரியர் வேறொரு கோணத்தில் எழுத்திருக்கிறார். 

ஒரு வேளை அதே கதை போக்கில் அவர் இந்த நாவலை எழுதிருந்தால் வாசகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கும்.

படிக்க ஆரம்பித்திருப்பது - முகம்மது யூனுஸ் எழுதிய "Banker To The Poor" என்னும் புத்தகம். 
முகம்மது யூனுஸ் என்பவர் பங்களாதேஷ் நாட்டின் முக்கியமான பொருளாதார நிபுணர். பங்களாதேஷ்  நாட்டில் கிராமீன் வங்கி தொடங்கியதற்கும், சிறிய அளவிலான கடன்கள் மற்றும் நுண்ணிய பொருளாதார கொள்கை ஆகியவற்றுக்காக நோபல் விருது வாங்கி இருக்கிறார்.

ஏழைகள் இல்லா உலகம் உருவாக்க போராடி கொண்டு இருப்பவர்.

சமீபத்தில் ராகுல் காந்தி உடனான இணைய வழி உரையாடலின் ( https://youtu.be/f4J7hK_1n1E ) பொழுது இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பு தவறானதாக இருக்கிறது, அது மாற்ற பட வேண்டும் என சொல்லி இருக்கிறார். 

அவசியம் படிக்க வேண்டிய புத்தக பட்டியலில் இவரது புத்தகங்கள் வைத்திருக்கிறேன்.

Sunday, April 19, 2020

தொலைக்காட்சியில் புத்தகங்கள்

புத்தகங்களை வீட்டு தொலைகாட்சியில் எப்படி வாசிப்பது.

உங்கள் தொலைக்காட்சியில் இருக்கும் HDMI பகுதியில் கூகிள் காஸ்ட் கருவியை இணைக்கவும்.

அதன் பின்னர்

உங்களது ஆண்டிராய்டு மொபைலில் கூகிள் ஹோம் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்ட பின் அதற்கு தேவையான அனுமதிகளை Settingsல் ஏற்படுத்தி கொள்ளவும்.


பின் கூகிள் ஹோம் உங்கள் தொலைகாட்சியை ஒரு பெயர் வைத்து சேமித்து கொண்டு செயலில் போய் CAST MY SCREENயை தேர்ந்தெடுக்கவும்.


அதன் பின் AMAZON KINDLE அல்லது சேகரிப்பில் இருக்கும் மின்னூல்களை தேர்ந்தெடுத்து படிக்கவும். 

முக்கியமாக ROTATE SCREEN கொடுத்து அகல வாக்கில் வைத்து படிக்கவும். நேர் வாக்கில் வைத்திருந்தால் படிக்க கடினமாக இருக்கும். 

தொலைக்காட்சியும் மொபைலும் ஒரே இண்டர்நெட் இணைப்பில் இணைந்திருக்க வேண்டும்.

இந்த வசதியின் மூலம் யூ டியூப், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் ஆகியவையும் படிக்கலாம்.

கடந்த இரண்டு வருடங்களாக சில புத்தகங்களை இப்படி தான் படிக்கிறேன். இப்படி படிப்பதின் மூலம் கண்களுக்கு அதிக சிரமம் இருக்காது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரு குழுவாக உட்கார்ந்து கொண்டு விவாதித்த படியே புத்தகங்களை படிக்கலாம்.

மொபைலில் தரவிறக்கம் செய்து  வைத்திருக்கும் திரைப்படங்களை இதன் மூலம் பார்க்க வேண்டாம். ஒளி ஒலி அமைப்பு சரியாய் வராது.

நன்றி - சிவதீபம், விஸ்வா, கே.ஆர்.டீ. சார், அமேசான் கிண்டில், சாம்சங் நிறுவனம்

Tuesday, April 14, 2020

கமர்கட் - இலக்கிய உவமை

சி.சரவணகார்த்திகேயன் எழுதின பிரியத்தின் துன்பியல் புத்தகத்தை வாசித்து கொண்டு இருக்கிறேன்.

அதில்.

எழுத்தாளர் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எழுதிருக்கிறார் போல அல்லது இரவு உணவகத்தில் எதுவுமில்லாத பொழுது உப்புமா தயாரித்து தருவது போல கமர்கட் நாவில் உருட்டி என எழுதிருக்கிறார்.

கமர்கட் மிட்டாயை வாயில் ஒரு ஓரமாக வைத்துக்கொண்டு இருந்தாலே போதும். அதனை வாயிலின் வைத்து உருட்டி உருட்டி யாரேனும் ருசிப்பார்களாக என தெரியவில்லை. 

இது இன்னொரு எழுத்தாளரின் புத்தகத்திற்கு எழுதப்பட்ட முன்னுரை என சொல்கிறார்.(பா. ராகவனின் 14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்)

இம்மாதிரி உருட்டி உருட்சி ருசிப்பது எல்லாம் சிறு பிள்ளைகள் செய்வார்கள் என்றால், அந்த எழுத்தாளர் எழுதுவது எல்லாம் சிறு பிள்ளைதனமானது என சொல்கிறாரா .... தெரியவில்லை.

தமிழ் இலக்கியத்தில் உவமைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டது போல.

இது இப்படியே போனால் தீவிர அரசியல் கட்டுரை தொகுப்பிற்கு இலந்தை வடை போல காரசாரமாக உள்ளது என யாராவது எழுதினால் ஆச்சரியம் இல்லை.

Sunday, August 6, 2017

பஞ்ச நாராயண கோட்டம் & எஸ்.ராமகிருஷணன்

நேற்று நடு இரவாகி விட்டது நரசிம்மா எழுதிய பஞ்ச நாராயண கோட்டம் நாவலை படித்து முடிக்க.அருமையான எழுத்துநடை. பக்கங்கள் போவதே தெரியவில்லை.

ஹோய்சாலப் கால கோயில்களை பார்க்க ஆர்வம் வந்துவிட்டது. பெல்லூர், ஹலிபேடு மற்றும் பல கோயில்களை 2004ஆம் ஆண்டு வாக்கில் விவரமெதுவும் தெரியாமல் சுற்றி பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போது இணையத்தில் தேடி தேடி படித்து கொண்டு இருக்கிறேன்.

எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று.

இதனை அடுத்து நரசிம்மா அவர்களின் மிகவும் புகழ்பெற்ற நாவலான காலச் சக்கரம் வாசிக்க எடுத்திருக்கிறேன்.

கடந்த வியாழன் அன்று வானதி பதிப்பகம் சென்று நரசிம்மா எழுதிய அனைத்து நாவல்களையும் வாங்கி வந்து விட்டேன்.

ஹோய்சாலப் பேரரசு பற்றி வேறு நாவல்கள் இருக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

- - -

ஷ்ருதி சேனலில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் நான் படித்த நாவல்கள் என்ற தலைப்பில் அவராற்றிய மேடை உரை அல்லது மேடை பேச்சின் காணொளியை கண்டேன். அதில் அவர் நிறைய விஷயங்களை பற்றி இன்னும் நாவல்கள் எழுத படவே இல்லை என்று சொல்கிறார்.

உண்மை தானே. ஏன் சென்னையிலேயே பேச படாதவைகள் நிறைய உள்ளனவே.

தாம்பாரம் வேளச்சேரி பிரதான சாலையில் வேங்கை வாசல் என்று ஒரு பகுதி இருக்கிறது. எனக்கு தெரிந்தது புதுக்கோட்டையின் திருகோகர்ணம் புகழ் வேங்கை வாசல் தான்.

இங்கு வேங்கை வாசல் ஏன் எதற்கு வந்தது என்று அந்த பகுதியை கடக்கும் பொழுதெல்லாம் யோசிப்பேன்.

பக்கத்தில் நன்மங்கலம் காடு... ஒரு வேளை அங்கு இருந்து வேங்கை ஏதேனும் வந்திருக்குமோ.... தெரியவில்லை.

நிறைய விஷயங்கள் பரவி இருக்கிறது கதைகள் உருவாக்க

Saturday, January 16, 2016

சுஜாதா : மூன்று புத்தகங்கள் போதும்

மூன்று புத்தகங்கள் போதும் சுஜாதாவின் ஆளுமையை புரிந்து கொள்ள .....

அவை கணையாழியின் கடைசி பக்கங்கள், ஏன்? எதற்கு? எப்படி?, ஸ்ரீரங்கத்து கதைகள் (தேவதைகள்). 

ஸ்ரீரங்கத்து கதைகள் ..... 2002-2003 வாக்கில் விகடனில் வாராவாரம் ஒரு சிறுகதை வந்துகொண்டு இருந்தது. மெயின்கார்ட்கேட், ஸ்ரீரங்கம் என்று அப்பொழுது நான் பெரிதும் சுற்றி கொண்டு இருந்த பகுதிகளை சார்ந்து கதைகள் இருந்ததால் தொடர்ந்து வாசித்து வந்தேன். அந்த கதைகளில் சொல்லபட்டு இருந்த எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறேன் என்பதால் ஒரு கட்டத்தில் அந்த கதைகள் மூலம் 1940-1950களின் திருச்சியில் வாழ ஆரம்பித்தேன். 

ஒவ்வொரு கதையை படிக்கும் பொழுதும் மனதிற்குள் அத்தனை கோடி பரவசம். எதோ எனக்கு ஏற்பட்டதை எல்லாம் எப்படியோ தெரிந்து கொண்டு சுஜாதா எழுதுகிறார் என்று நினைத்து கொள்வேன். 

பிறகு வேலைக்கு சேர்ந்து வாங்கிய முதல் சம்பளத்தில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. 

சில வருடங்களுக்கு முன்பு விடுமுறைக்கு வந்த அண்ணன் கேட்கவே தந்துவிட்டேன். நேற்று எதோ ஞாபகம் வந்து இந்த புத்தகத்தை தேடினேன்... கிடைக்காமல் போகவே நான் பெரிதும் கலவரமடைந்ததை கண்டு அப்பா அண்ணனது வீட்டில் அதே பெயரில் புத்தகத்தை பார்த்தாக சொன்னார், அண்ணனுக்கு தந்தது ஞாபகம் வந்தது உடனே யார் மூலமாவது அதை கொடுத்து அனுப்ப சொல்லி அண்ணனுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன். 

2011
ஆம் ஆண்டு புத்தக கண்காட்சியில் எல்லோரும் பாராட்டி பேசுகிறார்களே என்று கணையாழியின் கடைசி பக்கங்கள் புத்தகத்தை வாங்கினேன். இதில் ஒவ்வொரு கட்டுரையும் படித்து, பிறகு அதில் சொல்லபட்டு இருக்கும் விஷயங்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கூகிளில் தேடி தேடி படித்தேன். புத்தகத்தை முடித்த பிறகு ஒரே ஒரு கேள்வி தான் மனதிற்குள் எழுந்தது.. எப்படி இத்தனை விஷயங்களை பற்றி தெரிந்து வைத்து இருந்திருக்கார் ???

ஏன்? எதற்கு? எப்படி? .... முதல் பதிப்பு 1992ல் வந்த பொழுதே அப்பா எங்களுக்காக வாங்கி கொடுத்தார். எனக்கும் என் அண்ணனுக்கும் சண்டையே நடக்கும், யார் படிப்பது என்று. அந்த வயதில் அந்த புத்தகத்தை படிக்கும் பொழுது பிரம்மிப்பாக இருக்கும். பள்ளியை விட எனக்கு அறிவியலை சுலபமாக அதிகம் கற்று தந்தது. கால ஓட்டத்தில் அந்த முதல் பதிப்பு எங்கோ தொலைந்து போய் விடவே, கொஞ்ச நாள் முன்பு விகடன் பதிப்பக அலுவலகத்திற்கே போய் வாங்கி வந்தேன். 
Related Posts with Thumbnails