Pages

Monday, March 3, 2014

ஞெகிழி / நெகிழி - நுகர்வு அரசியல் :: அ

இந்திய நுகர்வு அரசியலை பற்றி பேசும் பொழுது நாம் நெகிழியின் (பிளாஸ்டிக்) பயன்பாடு பற்றியும் விளம்பரங்கள் பற்றியும் அவசியம் பேச வேண்டும். 

இந்திய நுகர்வு சந்தையின் மாற்றத்திற்கு காரணமான நுகர்வோர்கள் 1995 - 2005 கால இளைஞர்களே. உலகமயமாக்கல், அதிகபடியான வருவாய், பெரும் விற்பனை கடைகளில் நெகிழி பையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தர ஆரம்பித்தது என்று பல காரணிகள் இருந்தது இந்திய இளைஞர்களின் நுகர்வு வழக்கத்தை மாற்ற.

அதற்கு முன்பு வரை கடையில் பொருட்களை வாங்க வேண்டுமானால் வீட்டிலிருந்தே பை கொண்டு போக வேண்டும் என்று இருந்தது. இதனால் கிடைக்க வேண்டிய விற்பனை குறைகிறது என்று உணர்ந்த கடைகாரர்கள் மெல்ல மெல்ல நெகிழி  பயன்பாட்டை பொது மக்களிடம் திணித்தார்கள். இந்திய வீடுகளில் அதுவரையில் ஆட்சியில் இருந்த மஞ்சள் பையின் இடத்தை இந்த நெகிழி  பைகள் பிடித்தன. 

நெகிழி  பைகள் மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருந்தது. மஞ்சள் பை போல் பராமரிக்க வேண்டிய அவசியம் எல்லாம் இந்த நெகிழி  பைகளுக்கு இல்லை. பயன்பாடு முடிந்த உடன் குப்பையில் போட்டு விடலாம்.

நெகிழி  பைகள் குறைவான விலையில் இருந்தபடியால் சிறு கடைகளும் இந்த பையை பயன்படுத்தி பொருட்களை மக்களுக்கு தர ஆரம்பித்தனர். புது நெகிழி பை பார்க்க புத்தம் புதியதாக கண்ணை கவரும் படி இருந்ததால் அதில் மக்கள் வாங்க ஆர்வம் காட்டினர். அது மட்டும் இல்லாமல் அந்த நெகிழி  பைகளின் விளம்பரம் செய்ய ஒரு வாய்ப்பு இருந்ததால் பெரும் துணி கடைகளும் நெகிழி பை பக்கம் வந்தனர். இதன் மூலம் வாடிக்கையாளர் அந்த பையை கொண்டு போகும் பொழுது தெருவில் வருவோர் போவோர்களையும் கவர வசதியாக இருந்தது. அதாவது வாடிக்கையாளரையே சம்பளம் இல்லாமல் தங்களது கடைக்கான விளம்பரத்துக்காக வேலை செய்ய வைத்தனர்.

இந்த நெகிழி பையின் பயன்பாடு எதில் போய் முடிந்தது என்றால், எந்த முடிவும் இல்லாமல் கடைக்கு போய் மனதிற்கு பிடித்த பொருளை தேவையோ தேவை இல்லையோ வாங்கி கொண்டு வருமளவிற்கு நுகர்வோரை மாற்றியது. இதன் தாக்கம் கால் கிலோ தக்காளி வாங்கினால் கூட அதை நெகிழி பையில் போட்டு தருமளவிற்கு போனது. 

நெகிழி பைகளை திணித்ததின் நோக்கமே சில்லறை வர்த்தகத்தை பிடிப்பது தான். இதை சுலபமாக புரிந்துக்கொள்ள வேண்டுமானால், பத்து ரூபாய்க்கு பொருட்கள் வாங்குவோர் கால் மணி நேரத்திற்கு இருபது பேர் வருகிறார்கள் என்றால், நூறு ரூபாய்க்கு பொருட்கள் வாங்குவோர் ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் தான் வருவார். இதில் இருபது பேர்களும் பொருட்களை வாங்கினால் கொண்டு போக பை இல்லையே என்று பொருட்கள் வாங்காமல் போனவர்கள். நெகிழி பையின் பயன்பாட்டின் நோக்கம் அந்த இருபது பேர்களை கவர்வது தான். இன்னொரு நோக்கம் என்னவென்றால் குறைவாய் வாங்குபவனை அதிகம் வாங்க வைப்பது தான். நெகிழி  பைகள் ஒரு கிலோ ஆனாலும் கடையில் வாங்கி வெறும் கையில் பிடித்தபடி வீட்டிற்கு கொண்டு போகும் வசதியை தந்தது. அதற்கு முன்பெல்லாம் ஒரு கிலோ மளிகை பொருளை பொட்டலத்தில் கட்டி தருவார்கள் அதை வாங்கி கொண்டு வர வீட்டிலிருந்தே துணி பை கொண்டு போக வேண்டும்.

இந்த எளிமையான விற்பனை வைத்து தான் தங்களுக்கான சந்தையை பெரும் விற்பனை கூடங்கள் பிடிக்க திட்டமிட்டனர். ஆனால் நெகிழி  பைகள் இயற்கைக்கு ஏற்படுத்தும் பாதிப்பை அறியாமல் பொது மக்களும் அதில் பொருள் வாங்கி சென்றனர். அந்த பையை அழுக்கான பின், பயன் இல்லை என்று தோன்றியதும் வீட்டு பக்கம் இருக்கிற குப்பை தோட்டியிலோ சாக்கடையிலோ போட்டனர்.

வேறெந்த வடிவ நெகிழியை விட நுகர்வோருக்கான நெகிழியின் பயன்பாட்டில் தான் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து அதிகம். ஒரு சாதாரண சின்ன நெகிழி பை மண்ணோடு மக்கி இயற்கையோடு ஒன்றாக கலக்கபத்து லட்சம் வருடங்கள ஆகுமாம். 

ஆதிக்க வர்த்தகம் இந்த நெகிழி பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரே காரணம் இதற்கான தயாரிப்பு செலவு மிகவும் குறைவு என்பதே. பிறகு பொருட்களை இதனுள்ளடக்கி கிடங்கில் சேமித்து வைப்பதும் சுலபம். 

கொஞ்ச நாள் முன்பு இம்மாதிரியான நெகிழி பைகள் சேமித்து வைத்திருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. மொத்தமாய் நாற்பது லட்சம் வீண் என்று சொல்ல பட்டது. ஆனால் நாற்பது லட்சம் ரூபாய் என்றால் எவ்வளவு பைகள் இருந்திருக்கும். அத்தனை நெகிழி பைகள் எரிந்த அப்பைகளால் சுற்றி இருக்கும் மக்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அரசு ஆராய்ந்த மாதிரி தெரியவில்லை. 

நெகிழியை எரித்த தீயால் வரும் புகையை சுவாசித்தால் நுரையீரல் புற்று நோய் எல்லாம் வரும். என்ன தான் வீடுகளிலிருந்து பெற படும் குப்பைகளை நெகிழி , நெகிழி அல்லாதது என்று பிரித்து வாங்க பட்டாலும், அவை பல நேரங்களில் சேர்ந்தே எரிக்க படுகிறது. 

கொஞ்ச நாள் முன்பு எனது அலுவலகம் பக்கத்தில் ஒரு நாய் தலையில் கருப்பு நெகிழி  பை இறுக்கமாக சுற்றி கொண்டு இருந்ததால் எதை பார்க்க முடியாமல் ஒரு லாரியில் அடிபட்டு இறந்து போனது. சுற்றி தெருவில் இருந்த யாருக்கும் அச்சு சம்பவம் ஒரு சிறு சலனத்தை கூட ஏற்படுத்தவில்லை. வழக்கமாய் அங்கிருக்கும் ஒரு பிரியாணி கடையில் கருப்பு நிற நெகிழி பையில் தான் பிரியாணி பொட்டலத்தை போட்டு தருவார்கள். ஒரு வேளை அந்த மதிய நேரத்தில் மிச்ச பிரியாணிக்கு ஆசைபட்டு அந்த நாய் தலையை விட்டு இருக்குமோ என்று யோசனையாய் இருந்தது எனக்கு. 

நான் வழக்கமாய் ஞாயிறு அதிகாலையில் என் வீடு பக்கத்தில் இருக்கும் மலைக்கு போவேன், அப்படி போகும் பொழுது, வீடுகளே இல்லாத அந்த மலை அடிவாரத்தில் குவியல் குவியலாக நெகிழி  பைகள், பொத்தல்கள் இருக்கும். மனது கொஞ்சம் வலிக்கும். 

நெகிழியின் பயன்பாட்டு சரித்திரம் என்று பார்த்தோமானால் அது உலக போரில் இருந்து ஆரம்பிக்கிறது. அது தான் முக்கிய முக்கிய காலகட்டம். உலகப்போர் உலகின் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கொண்டு வந்தது என்று சொல்வார்கள், அது நெகிழி விஷயத்திலும் நடந்தது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது ; தேவையே எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் மூலம் என்று. போரின் போது இரும்பு  கனிமத்தின் தேவை அதிகம் இருந்தபடியால், பொது பயன்பாட்டில் இருந்த இரும்புக்கு மாற்றாக குறைந்த விலையில் ஒரு பொருள் தேவை பட்டது. அப்பொழுது நெகிழி  பயன்பாடு முன் வைக்கப்பட்டது. அதற்கு முன்னால் பிலியட்ஸ் விளையாட்டில் யானை தந்ததை வைத்து உருவாக்க பட்ட பந்துகளுக்கு பதிலாக நெகிழி பந்துகள் உபயோகிக்க பட்டது. பிறகு பியானோ விசைப்பலகையில் உபயோகிக்கபட்ட மர விசைப்பலகைக்கு பதிலாக நெகிழி  விசைப்பலகை பயன்படுத்தபட்டது.

போரின் போது இரண்டு விதமான நெகிழி  உற்பத்தி நடந்தது. 

முதல் தரத்திலான நெகிழி  உற்பத்தி பொருட்கள் போர்க்கள தேவைக்காகவும், இரண்டாம் தரத்திலானது சமூக விற்பனைக்காகவும் தயாரிக்கப்பட்டது. இது செலவை கட்டுபடுத்தும் ஒரு முயற்சியாகவும் கையாள பட்டது. இரண்டாம் தரம் என்பது குறைவான தரம் என்றும் பொருள் கொள்ளலாம். பொது மக்கள் அதனை வாங்கி வெறுத்து போயிருந்தனர். இந்த வெறுப்பே, போர் முடிந்த பிறகு நெகிழிக்கான சந்தையை உற்பத்தியாளர்கள் உருவாக்க நினைத்த பொழுது பெரும் பிரச்சனையாக மாறியது.

அதற்கு முன்பாகவே, 1930களில் அமெரிக்காவின் பெரும் பொருளாதார வீழ்ச்சியின் பொழுது நெகிழி  தயாரிப்பு ஒரு லாபகரமான தொழிலாக சிறு உற்பத்தியாளர்களிடம் முன்வைக்கப்பட்டது. 

போருக்கு பிந்தைய காலத்தில் முதலாம் தர நெகிழி  பொருட்களை தயாரித்து வந்த தொழிற்சாலைகளின் லாபத்தை உறுதிபடுத்த நெகிழி  பயன்பாட்டை ஒரு கொண்டாட்டமாக மாற்றினார்கள் திட்டமிட்டு. 

அவர்கள் முன்வைத்த முக்கிய வாசகம் "வீட்டில் நெகிழி யை பயன்படுத்துங்கள், வீட்டை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள்" என்பது தான். 

அதை தவிர்த்து நெகிழிக்கான சந்தையாக உற்பத்தியாளர்கள் பார்த்தது குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை. அது வரை மரத்திலான மரபாச்சி பொம்மைகளும் துணியால் செய்யப்பட்ட பொம்மைகள் தான் குழந்தைகளின் ஆதர்ஷமாக இருந்தது. அது குழந்தைகளுக்கு எந்த கெடும் விளைவிக்காது.

ஆனால் துணி மற்றும் மர பொம்மைகளுக்கு மாற்றாக உற்பத்தியாளர்கள் முன்வைத்த நெகிழி பொம்மைகள் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். 

திட்டமிட்ட நெகிழியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தான் இன்றளவும் உலகில் பிரபலமாக விளங்கும் பார்பி பொம்மை 1959ல் கொண்டு வரப்பட்டது.


தொடரும்.... 

No comments:

Related Posts with Thumbnails