Pages

Friday, April 24, 2015

வாசிப்பு என்ற நிகழ்வு

நேற்றைய புதிய தலைமுறை மக்கள் மேடையில் தமிழக நூலகங்கள் பற்றி பேச்சு வந்த பொழுது, அரசு நூலகங்களில் ஏன் இன்னும் இணைய புத்தகங்கள் வைக்க படவில்லை என்று விவாதிக்கபடவில்லை. 

ஆனால் இன்றைய நாளில் சமூக தளங்கள் பெருகி விட்ட நாளில் அதிலிருந்து ஒருவனது கவனத்தை புத்தகங்கள் மீது திருப்பி விடுகிற அளவிற்கு தமிழில் புத்தகம் வரவில்லை என்று தான் தோன்றுகிறது.

ஏன் ஒருவன் வாசிக்க வேண்டும் என்று ஒரு கேள்வி வந்தால் எழுத்தாளர்கள் அவர்களது பார்வையிலிருந்து தான் பதிலை தருகிறார்களே தவிர, பொது மக்களுக்கு ஏற்றது போல் விளக்கம் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

வாசிப்பு என்ற ஒரு நிகழ்வை பொதுவானின் வாழ்க்கைக்கு தொடர் படுத்தி யாரும் விளக்கவில்லை. வாசிப்பு ஒருவனுக்கு மன அமைதியை தரும், கவனம் சிதறாது, மன அமைதியை தருவதால் நன்றாக தூக்கம் வரும், நன்றாக ஒருவன் தூங்கினால் அவன் ஆரோக்கியமாக இருப்பான், மன கவலைகள் இல்லாததால் அவனால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.ஒரு வீட்டு உபயோக பொருளை வாங்குவதை விட, நகை வாங்குவதை விட ஒருவன் புத்தகம் படித்தால் குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சிகரமான இருக்கும். 

மக்களிடம் இருந்து புத்தகம் வாசிப்போரை நோக்கி எக்காலத்திலும் ஒரு கேள்வி முன்வைக்க படுகிறது. வாழ்க்கைக்கு தேவையானதை அவர்கள் படிப்பதில்லை என்று. 

வாழ்க்கைக்கு எது தேவை ..... மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுந்ததோ இல்லை அசோகர் மரம் நட்டதோ இல்லை. வாழ்க்கைக்கு மிக முக்கியமானது யோசித்தல் தான். ஆதி மனிதன் காலத்தில் இருந்து ஒரு கலாச்சார மாற்றத்திலும் கலாச்சார சுழற்ச்சியிலும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் சமுதாய புரட்சிகளிலும் பெரும் பங்கு வகித்தது யோசித்தல் என்ற ஒரு விஷயம் தான். 

யோசித்தலென்றந்த விஷயத்தை தருவது புத்தகங்கள் தான். 

வாசிப்பு ஒரு மனிதனுக்கு கோபம் வராமல் செய்யும், கோபம் வரவில்லையென்றால் ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் குறைவு. 

இது வரையில் மருத்துவ ரீதியிலான வாசிப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள பட்டனவா என்று தெரியவில்லை. 

ஒரு புத்தகத்தை அணுகும் பொழுது திறந்த மனத்துடன் அணுக வேண்டும், ஆனால் பலர் அவர்கள் கொண்ட நம்பிக்கைகள் பிடிவாதங்களோடு அணுகுவதால் அப்புத்தகம் அவர்களுக்குள் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. புத்தகத்தின் உள்ளடக்கத்தை தெரிந்து கொள்கிறார்களே தவிர அந்த புத்தகம் எழுத்த பட்ட நோக்கத்தை புரிந்து கொள்வதில்லை.

நான் பார்த்த வரைக்கும் அரசு நூலகங்களை தேடி வருபவர்கள் யாரும் புத்தகத்தின் பக்கம் போவதில்லை, தினசரி நாளிதழ்கள் பக்கம் தான் போகிறார்கள். 

நான் வாசிக்கும் பகுதியில் ஒரு அரிமா சங்க நூலகம் இருக்கிறது, அங்கு வாழ்க்கைக்கு தேவையான காந்தியடிகள் எழுதிய தொகுப்பு, பெரியார் நூல்கள் எல்லாம் தூசி படிந்திருக்கிறது. செய்தித்தாள்கள் தான் அதிகம் வாசிக்க படுகிறது. ஒரு வேளை புத்தகங்கள் தரும் விஷயத்தை விட செய்தித்தாள்கள் அதிக விஷய ஞானத்தை தருகிறது போலும். ஊறிய குழு மனப்பான்மைக்கு தண்ணீர் ஊற்ற தான் எல்லோரும் செய்தித்தாள்களை வாசிக்கிறார்கள், நாட்டு நலனில் இல்லை. இந்த குழு மனப்பான்மையில் இருந்து வெளியே வந்தால் தான் வாசிப்பு என்ற நிகழ்வு நிகழும். 

Tuesday, April 7, 2015

உலகம் இப்படி தான்

ஒரு பள்ளி செல்லும் சிறுவனையோ சிறுமியையோ  பார்த்தால் நம்மில் பெரும்பாலனோர் "என்ன படிக்குற... ஃபஸ்ட் ரேங்கா என்ன மார்க்கு  ... உனக்கு எந்த நடிகர பிடிக்கும்... பெருசாயிட்டு பிறவு என்னவா ஆக போற ..." போன்ற கேள்விகளை தான் கேட்கிறோம்.

அதில் தான் அவர்களது உலக இருப்பதாய் நினைக்கிறோம்.

நகர்ந்து செல்லும் வானம் எந்த ஊருக்கு போகிறது, பசுவுக்கு எல்லாம் யார் சாப்பாடு போடுவாங்க, கடலுக்கு அந்த பக்கம் எவ்வளவு பெரிய விசிறி இருந்தா இவ்வளவு காத்து அடிக்கும் போன்ற விஷயங்களை பற்றி தான் அதிகம் யோசித்து கொண்டு இருப்பார்கள் குழந்தைகள்.

ஆனால் பெரியவர்கள் யாரும் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவதில்லை. ஏனென்றால் அவர்கள் பெரியவர்களுக்கான உலகத்தில் இருந்து கொண்டு சிறுவர்களை பார்க்கிறார்கள். பெரியவர்களுக்கான உலகத்தில் வானம் எந்த ஊருக்கு போகிறது போன்ற ஆச்சரியங்களுக்கு இடம் இல்லை. சொல்ல போனால் பெரியவர்களில் உலகத்தில் இதற்கெல்லாம் மதிப்பே இல்லை

வளரும் வயதில் சக நண்பர்களிடம் நட்பு கொள்ள, தங்களது குழந்தை உலகத்தை கொன்றுவிட்டு அல்லது அழித்து விட்டு அதில் பெரியவர்களுக்கான உலகத்தை உருவாக்கி கொள்கிறார்கள். இதை தான் இக்கா
த்தில் பெற்றோர்களும் பள்ளிகளும் வெற்றிகாரமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

புத்தக கண்காட்சியில் ஒரு பத்து வயது சிறுவனுக்கு அவனது அப்பா அம்பானி, பில் கேட்ஸ் ஆகியோரது வாழ்க்கை வரலாறு புத்தகமும் தன்னம்பிக்கை புத்தகமும் வாங்கி தந்து கொண்டு இருந்தார். பத்து வயது சிறுவனுக்கு எதற்கு இந்த 
புத்தகம் எல்லாம் என்று புரியவில்லை. பத்து வயது என்பது கற்பனை காற்றாற்று வெள்ளம் போல் மனதில் வந்து கொண்டு இருக்கும் வயது, அந்த வயதில் வரலாறு புத்தகமும் தன்னம்பிக்கை புத்தகமும் ஏன் தேவை பட போகிறது.

தப்பி தவறி யாராவது குழந்தை மனதோடு வளர்ந்து ஆளாகி விட்டால் இந்த உலகம் அவர்களுக்கென்று ஒரு பெயர் வைத்திருக்கிறது "பொழைக்க தெரியாதவ"னென்று.

நான் பள்ளி படிக்கும் காலத்தில் பரீட்சையில் பெயிலாகி விட்டால் எல்லார் முன்னாடியும் நிற்க வைத்து எவ்வளவு மதிப்பெண் குறைவாக இருக்கிறதோ அத்தனை அடி விழும் கைகளில் பிரம்பால். இப்படி அடி திட்டு வாங்கி தான் முதுநிலை வரை படித்தேன். அப்படி படித்தது ஏதுவும் இப்பொழுது ஞாபகம் இல்லை. அவ்வளவு கஷ்ட பட்டு மதிப்பெண் வாங்கியதை பற்றி யாரும் இப்பொழுது கேட்பதில்லை. ஆனால் குடும்ப நிகழ்வுகளில் நான் எதிர் கொள்ளும் கேள்விகள் வேறு விதமாக இருக்கிறது. "எங்க வேல பாக்குற.. எவ்வளவு சம்பளம் ..". அங்கு நான் கஷ்ட பட்டு வேலை பார்பது பற்றியும் என் மேலாளரிடம் நல்ல பெயர் எடுத்து இருப்பதை பற்றியும் யாருமிடமும் சொல்ல முடிவதில்லை. அதை பற்றி எல்லாம் யாரும் கேட்பதில்லை.பெரியவர்களின் உலகத்தில் அதற்கெல்லாம் இடமில்லை போலும்
Related Posts with Thumbnails