Pages

Wednesday, January 20, 2016

A.V.M. - அன்பே வா {Anbe vaa} - 50years - M.G.R. {எம்.ஜி.ஆர்.}

எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா படம் வெளிவந்து இந்த பொங்கலோடு ஐம்பது வருடங்கள் ஆகிறது. இந்த படத்திற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. திரையரங்கில் நான் பார்த்த முதலும் கடைசியுமான தலைவர் படம். 

எங்கள் பகுதியில் இருந்த மத்திய அரசு தொழிற்சாலையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர ஊழியர்களுக்கான மனமகிழ் மன்றத்தின் திறந்த வெளி திரையரங்கில் அதிகம் ஞாபகம் இல்லாத ஒரு சனிகிழமை அன்று பார்த்தேன். 

ஜெ.பி.யாக தலைவர் திரையில் தோன்றும் முதல் காட்சியில் ரசிக்க ஆரம்பித்து, ஆனந்தத்தின் உச்சியில் அவர் பாடும் புதிய வானம் புதிய பூமி பாடலில் அவரின் ரசிகனாகிவிட்டேன். 

என்னதான் புதிய வானம் புதிய பூமி பாடல் எனக்கு பிடித்து இருந்தாலும் நான் அதிகம் முணுமுணுப்பது கல்லூரி மாணவர்கள் பாடும் ஒன்ஸா பாப்பா மெத்தமாமா என்னடி அம்மா எங்கள் லிட்டில் டூரிஸ்ட் என்ற பாடல் தான். 

அதுவரை நாயக பிம்பத்திலேயே நடித்து வந்த தலைவர் முதல்முறையாக நகைச்சுவை வேடம் ஏற்றிருப்பார். சின்ன பாப்பூ, ராமைய்யா, புண்ணியகோடி ஆகியோரது நகைச்சுவை மறக்க முடியாத ஒன்று. 

திரையில் படம் பார்த்து கொண்டு இருந்த பொழுது, இடைவேளையில் ஒரு பெரியவர் இந்த படம் வெளி வந்த பொழுது படத்திற்கு இரண்டு இடைவேளை இருந்தாக சொன்னார். உண்மை தான். அன்று பெரும்பாலும் டூரிங் டாக்கீஸில் இரண்டாம் வெளியீடாக அன்பே வா போட்டபட்ட பொழுது படத்தின் நீளம் காரணமாக சூடான ப்ராஜெக்ட்டரை இரண்டு தடவை நிறுத்தி ரீல் சுற்றி, மாற்றி வைத்து படதை ஓட்டினார்கள். 


இடைவேளை போடுவதில் இந்த படத்தில் புதுமை செய்து 
இருந்தார்கள். அது கல்லூரி மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். 
சவால் விடுவதற்கு கையை நீட்டி காட்டுவார், அப்பொழுது அவரது 
கையிலிருந்து ஒன்றின் கீழ் ஒன்றாக இயக்குநர் பற்றிய குறிப்பும் 
மற்றும் இடைவேளை பற்றிய குறிப்பும் வரும். 
இது டிவிடியில் காண கிடைக்காத ஒன்று

படத்தில் சேகர் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது, என் முதல் மனைவி விமானம் என்று சொல்வார்.... அவரது விமானத்தின் மீதான காதலை பின்னாட்களில் சாண்டில்யன் எழுதிய கடல் புறா நாவலில் அகூதா மற்றும் அமீர் ஆகியோரின் கடல் மீதான காதலில் கண்டேன். அந்த நாவலில் ஒரு வரி வரும் (சரியாக ஞாபகம் இல்லை) ஒருவன் கடலில் பயணித்து விட்டால், கடல் அவனை விடாது.. அவனை கடல் அழைத்து கொண்டே இருக்கும். அந்த வரியை போல அன்பே வா படத்தை ஒருதரம் பார்த்துவிட்டதால் அந்த படத்தை மீண்டும் மீண்டும் இந்நாள் வரையில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். 

அதிகாலை பனியின் பொழுது புதிய வானம் புதிய பூமி பாடல், குளித்து விட்டு வரும் பொழுது லவ் பேர்ட்ஸ் பாடல், நண்பர்களுடன் இருக்கும் பொழுது ஒன்ஸா பாப்பா மெத்தமாமா பாடல் என்று இந்த படத்தை ஞாபகபடுத்தும் விஷயங்கள் தினசரி வாழ்க்கையில் கிடைத்து கொண்டே இருக்கிறது. 

எல்லாவற்றுக்கும் மேலே தான் யார் என்று தெரியாமல் கலாட்டா பண்ணும் கல்லூரி மாணவர்களை பார்த்து தலைவர் சிரிக்கும் அந்த சிரிப்புக்காகவே படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். 

No comments:

Related Posts with Thumbnails