Pages

Thursday, April 16, 2020

இசையமைப்பாளர் - ஜி.வி. பிரகாஷ் குமார். {1}

2006.

வாரயிறுதியில் செய்வதறியாது சத்யம் தியேட்டரில் வெயில் படத்தை பார்த்துவிட்ட பின் கதையை விட அப்படத்தின் பாடல்கள் மனத்தில் ஒலித்து கொண்டே இருந்தது.

எல்லோரும் வானொலியில் வெயிலோடு விளையாடி பாடலையும் உருகுதே மருகுதே பாடலையும் கொண்டாடி கொண்டு இருக்க எனக்கோ காதல் நெருப்பின் பாடல் தான் அதிகம் பிடித்து இருந்தது.

இசையமைப்பாளர் யாரென்று கவனிக்கவில்லை.

அதே வருடத்தில் ஓரம்போ மற்றும் கிரிடமும் வந்தது. முறையே இது என்ன மாயம் மற்றும் அக்கம் பக்கம் யாருமில்லா ஆகியவை பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. 

அப்பொழுது தான் தொடங்கி இருந்த ஹாலோ எஃப்.எம்., பிக் எஃப்.எம்., மிர்ச்சி எஃப்.எம் மற்றும் ஆஹா எஃப்.எம். ஆகியவை மாறி மாறி இந்த மூன்று பட பாடல்களை அலறவிட்டு வண்ணம் இருந்தன. அதுவும் காலை நடை பயிற்சியின் பொழுது இது என்ன மாயம் பாடல் மாறி மாறி ஒலிபரப்பாகும், அதனை கேட்டும் பொழுது எதோ மனதில் சந்தோஷம் துளிர் விடும்.

இதில் என்ன வேடிக்கை என்றால் அத்தனை வாட்டி கேட்டும் இசையமைப்பாளர் யாரென்று தெரியாது.

2007.

இந்த வருடம் தான் அந்த அதிசயம் நடந்தது. வெற்றிமாறன் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி நிகழ்ந்தது. தனுஷ் அப்பொழுது பெரிய ஹீரோ எல்லாம் இல்லை. நன்றாக நடிக்க கூடியவர் என மட்டும் பெயர் எடுத்திருந்தார். 

சிம்பு தான் முன்னணியில் இருந்தார். 2004ல் வந்த மன்மதன் மற்றும் 2006ல் வந்த வல்லவன் ஆகிய படத்தின் பாடல்கள் மிக பெரிய வெற்றி பெற்று இருந்தன. இதில் வல்லவன் மன்மதன் அளவிற்கு வெற்றி இல்லை.

சரவணா, தொட்டி ஜெயா, வல்லவன் என தொடர்ந்த பாக்ஸ் ஆபீஸ் சொதப்பலுக்கு பிறகு சிம்புவுக்கு நிச்சயம் ல் ஒரு வெற்றி வேண்டும் என்ற நிலையில் சிம்பு - தருண் கோபி கூட்டணி நிகழ்ந்தது. இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்.

2006ல் தருண் கோபி விஷாலை வைத்து திமிரு என்கிற வெற்றி படத்தை கொடுத்தார். இந்த யுவன் சங்கர் ராஜா இசையில் வந்த படத்தின் பாடல்கள் பெரும்பாலானோரின் விருப்ப பட்டியலில் இடம்பெறவில்லை. 

2007ல் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வந்தது மொத்தம் 3 படங்கள். 

சிம்பு படமான காளையில் எப்ப நீ என்னை பார்ப்ப பாடலும், காளை காளை பாடல் மட்டுமே வெற்றி பெற்றன.

ஆனால் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வந்த பொல்லாதவன் பட பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் மாஸ் ஹிட். பின்னணி இசை வேற லெவலில் இருந்தது. இளசுகளின் பார்டி லிஸ்ட்டில் படிச்சு பார்த்தேன் ஏறவில்ல, எங்கேயும் எப்போதும் ஆகிய இரண்டு பாடல்கள் இடம் பெற்றது.

இளமை ஊஞ்சலாடும் காதல் பாடல்களாக பொல்லாதவன் படத்தில் வந்த மின்னல்கள் கூத்தாடும் பாடலும் ; கிளாசிக் படமான வெள்ளிதிரை படத்தில் வந்த உயிரிலேயே (விழியிலேயே) பாடலும் இடம்பெற்றது.

வழக்கம் போல் ரேடியோ மிர்ச்சியில் Back To Back பாடல்களாக இவை இரண்டும் ஒலிபரப்பப்பட்ட பொழுது ஆர்.ஜே. ..... "ஜி.வி. பிரகாஷின் மயக்கும் இசையில் ...." என சொன்னார்.

அது தான் அவரது பெயரை முதலில் கேட்டது.

அப்பொழுது யாருக்கும் தெரியாது.... இரண்டு வருடங்களுக்கு  இவரது இசையில் வரும் பாடல்களுக்கு மொத்த இசை ரசிகர்களும் மயங்கி இருக்க போகிறார்களென்று.

தொடரும்.

#GVPRAKASHKUMAR

No comments:

Related Posts with Thumbnails