Pages

Friday, April 24, 2020

நாளைய மனிதன் (1989) & அதிசய மனிதன் (1990) : தமிழின் முதல் ஸோம்பி படம்

அப்பொழுது எங்கள் ஏரியா கேபிள் கடை வந்திருந்த பன்னீர்செல்வம் அண்ணன் விடுமுறை தினமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு படங்களாக கேபிள் டிவியில் போடுவார்.அப்படி இரண்டு மூன்று நாட்கள் இடைவேளையில் தான் இந்த  இரண்டு படங்களை ஒளிபரப்பினார். 

பெரும் வெற்றி பெற்ற இந்த இரு திரைபடங்களையும் இயக்கியவர் வேலு பிரபாகரன். ஆம் வேலு பிரபாகரனே தான். இந்த படத்தில் அப்பொழுது நட்சத்திர நாயகனாக இருந்த (மைக்) மோகன் கௌரவ வேடத்தில் வந்து போவார். 

தமிழின் முதல் ஸோம்பி படமான இதில் அஜய் ரத்னம் இரு பாகங்களிலும் ஸோம்பியாக நடித்திருப்பார்.

முதல் பாகம் :

கதை 2008ல் நடப்பதாக காட்டி இருப்பார்கள். எய்ட்ஸ் நோயிற்கு (1980களின் இறுதியில் வந்த படம், அந்த காலம் வரைக்குமே தமிழக திரைப்பட கதாபாத்திரங்கள் கேன்சர் என்கிற கொடிய நோய்க்கு பலியாகி கொண்டு இருந்தனர்) மருந்து கண்டுபிடித்த மருத்துவர் தனது அடுத்த ரகசிய ஆராய்ச்சியான இறந்த மனிதனை மீண்டும் உயிர்பிக்க மேற்கொள்ளும் முயற்சியில் பரிசோதனை முறையில் இறந்த ஒருவனுக்கு மீண்டும் உயிர் அளிக்கிறார்.

அந்த மர்ம மனிதன் எல்லோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கிறான் (ஏன் என்ற விளக்கம் வசனங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும்). அந்த நிலையில் காவல் அதிகாரியும் அவனது காதலியும் மாட்டி கொள்கிறார்கள். 

நடக்கும் பூனை எலி போராட்டத்தில் அந்த மர்ம மனிதனை துப்பாக்கியால் சுட்டு கொல்கிறான்.

 இரண்டாம் பாகம் :


சில வருடங்கள் பிறகு நண்பர்கள் குழு விடுமுறையை கழிக்க் விடுதிக்கு வருகிறார்கள். விடுதிக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றில் விழுந்திருக்கும் மர்ம மனிதனுக்கு நினைவு வருகிறது. அவன் இறக்கவில்லை.

வந்து அந்த விடுதியில் இருக்கும் எல்லோரையும் கொலை செய்கிறான், அந்த குழுவில் இருக்கும் ஒரு பெண் தப்பித்து அவனை கொலை செய்கிறாள்.

ஆனால் அதிலும் அவன் இறக்கவில்லை, மூன்றாம் பாகத்தில் வருவான் என படம் முடியும். ஆனால் பெரும் நஷ்டம் காரணமாக மூன்றாம் பாகம் எடுக்கப்படவில்லை. 

இரண்டாம் பாகத்தில் ஒரு பின்னணி இசை ஒன்று வரும் அதற்கு பயந்தது எல்லாம் நினைவில் இருக்கிறது. 

அதிக செலவு செய்து இன்னும் நன்றாக முயன்று இருந்தால் தமிழில் இந்த இரு படங்களும் Cult Classicகளாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்பொழுது கூட இவற்றை ரீமேக் செய்யலாம். 

படத்தின் தரமான பிரதி காண கிடைப்பதில்லை. இணையத்தில் சுமாரன பிரதி தான் கிடைக்கிறது.

இன்றைய சூழலில் அதி பயங்கரமான படங்கள் வந்துவிட்ட நிலையில் இந்த படம் எதோ குழந்தைகள் படம் போல தான் தெரியும். ஆனால் எடுக்கப்பட்ட காலத்தில் இது ஒரு முற்றிலும் புதுமையான முயற்சி தான்.

No comments:

Related Posts with Thumbnails