வினோதய சித்தம் :
*
1955ல் சிவாஜி கணேசன் நடித்து முதல் தேதி என்று ஒரு படம் வந்தது. அப்படத்தில் நாயகன் தான் வேலை செய்யும் வங்கி திவால் ஆகிவிட்டதால் வேறு வேலை கிடைக்காத பயத்தில் காப்பீடு பணம் வருமே என தற்கொலை செய்து கொள்கிறான். எமன் தற்கொலை செய்வது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என அதனை ஏற்காமல் நாயகனை ஆவி ரூபமாக பூமி அனுப்புகிறார். ஆவி ரூபமாக தனது குடும்பம் படும் கஷ்டங்கள் அடமானங்கள் எல்லாவற்றையும் பார்த்து மனம் திருந்துகிறார். எமனும் மன்னித்து நாயகனுக்கு மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு தருகிறார். சுபம்.
இந்த சாதா மசாலா தோசையை மைசூர் மசாலா ஸ்பெஷல் தோசையாக மாற்றி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
*
காலங்காலமாக எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒரு பேராசை .... இன்னொரு தடவை வாய்ப்பு கிடைத்தால் நான் செய்த தவறுகளை எல்லாம் திருத்தி கொண்டு எல்லோருக்கும் பிடித்தமான பிரதியாக வாழ்வேன். ஆனால் உண்மையில் அப்படிபட்ட வாய்ப்புகள் யாருக்கும் கிடைப்பதில்லை.
இரண்டாம் வாய்ப்பு கிடைத்தாலும் அது தவறுகள் செய்திருக்கிறான் என்கிற கவனத்துடனே வழங்க படுகிறது.
ஆனால் நான் திருந்தி கொள்கிறேன் என்று ஒருவன் வருகிறான் என்றால் அவனுக்கு வழங்கபட்ட வாய்ப்பை சர்வ நாசம் பண்ணிவிட்டான் என்று அர்த்தம்.
உலகம் என்பது எல்லோரிடமும் இருந்து தொடங்குகிறது. இதனை புரிந்து கொண்டாலே பாதி
பிரச்சனைகள் குறைந்து விடும். ஆனால் இதனை ஏற்க முடியாமல் தடுப்பது நாம் நம் மனதிற்குள் வளர்த்து வைத்திருக்கும் ஆசை & பிடிவாதம். இவை இரண்டும் ஒருவனை ஆட்டி படைக்கும் மாபெரும் சக்தி.
அப்படி சிலரை புரிந்துகொண்டு விட்டோம் என நாம் நம்புவது எப்பொழுதென்றால் அவர்கள் நாம் கொண்டு இருக்கும் பிடிவாத நோய்க்கு அவர்கள் சாமரம் வீசும் பொழுது தான்.
மேற்சொன்ன சித்தார்ந்த விளக்கங்கள் இப்படம் பார்ப்பதினால் வருமா என கேட்டால், அப்படி எதுவும் வராது. இப்படத்தை பார்க்காமல் ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து யோசித்தாலே போதுமானது.
படத்தில் காலன் நேரில் வருவதால் பரசுராமன் வாழ்க்கை ஏதாவது மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதா ? இல்லை. நடக்கின்றவற்றை பரசுராமன் ஏற்று கொள்ளாமல் இருப்பதே முக்கிய காரணம். மேலும் காலன் பரசுராமனுக்கு எதையும் புரிய வைக்கவில்லை, எல்லாவற்றையும் தெரியப்படுத்துகிறார்.
அதனால் நேரம் இருந்தால் படத்தை பாருங்கள். ஆனால் இப்படத்தை வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் என ஜிலேபி சுற்றுகிறவர்களை நம்பி பார்க்க வேண்டாம்.
அப்பா, அம்மா, உடன்பிறப்பு, பொண்டாட்டி என குடும்பத்தில் இருக்கிறவர்களெல்லாம் சொல்லி நீங்கள் திருந்தவில்லை என்றால், சத்தியமாக இந்த படம் பார்த்து திருந்த போவது இல்லை.
No comments:
Post a Comment