பெரும் செல்வாக்கு உடன் ராஜ்ஜியம் அமைத்து ராஜாங்கம் நடத்திய
முகலாயப் பேரரசின் கடைசி காலத்தை அல்லது அழிவு காலத்தை அருமையாக வார்த்தைகள் மூலம்
படம் பிடித்து காத்திருப்பார் மதன், அவரது "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தின் கடைசி
பாகமான "மிஞ்சியது வெறும் நினைவு ..!"ல்.
கேட்பாரற்று, தனது குடும்பத்துடன் அவருக்கென்றிருந்த ஒரு மாளிகையில், செலவுக்கு காசு இல்லாமல் பிரிட்டிஷ் அரசின் அடிமையாய் காலத்தை
கழித்த கடைசி முகலாய அரசரான பகதூர் ஷா பற்றி எழுதி முடித்து இருப்பார் அந்த புத்தகத்தை மதன்.
இது வரைக்கும் இரண்டு மூன்று முறை "வந்தார்கள்
வென்றார்கள்" புத்தகத்தை படித்து இருப்பேன், ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும் அந்த புத்தகத்திற்கான
முழுமையான தலைப்பு அது இல்லை என்றே தோன்றும். ஒரு வேளை வியாபார நோக்கங்களிற்காக
அப்படி வைத்து இருந்தாலும் ..... என் மனதில் ஒவ்வொரு முறையும் அந்த புத்தகத்தை
படித்து முடிக்கும் பொழுதும் தோன்றும் தலைப்பு இதுவே "வந்தார்கள் ..வென்றார்கள்
..அழிந்தார்கள் ..!".
அப்படி தோன்ற காரணம் பகதூர் ஷாவை பற்றிய குறிப்புகள் தான். கதை
போல் உரைநடையில் எழுதப்பட்ட இந்த அபுனைவு புத்தகத்தை பற்றி சுஜாதா இரண்டு
பக்கத்திற்கு புகழ்ந்து எழுதிருப்பார், அந்த புகழுரையில் உச்சம் "இந்த மாதிரி பாட புஸ்தகங்களின்
சரித்திரம் எழுத பட்டிருந்தால், நான் சரித்திரம் நன்றாக படித்திருப்பேன்" (வார்த்தைகள்
சரியாக நினைவில்லை).
கொலை, சூழ்ச்சி, வஞ்சகம், அரசியல் போர் ... என்று பல நினைவுகள் மத்தியில் ... நிகழ்வுகள்
வழியாக புத்தக வரிகளை மதன் அவர்கள் கொண்டு சென்றிருந்தாலும், என்னால் இந்த புத்தகத்தை மறக்க முடியாமல் செய்தது பகதூர் ஷா
பற்றிய பகுதி தான்.
கைதியாக பர்மா செல்லும் முன் ஆங்கிலயர்கள் நிகழ்வின் வெற்றியை
கொண்டாடி கொண்டிருக்கும் பொழுது, அந்த நிகழ்வின் அனாதையாக ஒரு ஓரம் கால்களை மடக்கி ஒடுங்கி
அமர்ந்திருப்பார் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் பகதூர் ஷா. அந்த நிலையில்
அவரை பற்றி படிக்கும் பொழுதே கண்கள் கலங்கி விடும் நமக்கு. அவரது அந்த நிலையை ஒரு
கவிதையின் மூலம் சொல்லிருப்பார் மதன், அந்த கவிதை
"நான் நேசித்த எல்லாமே
எங்கோ போனது !
இது இலையுதிர் காலம் ...
இழந்தது பூந்தோட்டம்
தன் அழகையெல்லாம் !
நான் இன்று ...
மின்னிய
பழம்பெருமையின்
மிஞ்சிய
வெறும் நினைவு!"
எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம். சரித்திரத்தை இவ்வளவு சுவையாக
சொல்ல முடியுமா என்ற ஆச்சரியமே எனக்கு ஒவ்வொரு தடவையும். இந்த கட்டுரையை
எழுதுவதற்காக குறிப்புகள் எடுக்க இந்த புத்தகத்தை புரட்டிய சமயம் மீண்டும் இதை
இன்னொரு முறை படித்து விடலாமே என்று தோன்றிய பொழுது சரித்திர வாசிப்பு பிரிவில் ஏற்கனவே
முகில் எழுதிய "அகம், புறம், அந்தபுரம்" போய் கொண்டிருப்பதால் பிறகு
பார்த்துக்கொள்ளலாமென்று விட்டுவிட்டேன்.
இதனுடைய சிறப்புகள் என்று பார்த்தால் ஓவியர் அரஸ் அவர்களின்
ஓவியங்கள் தான். நிகழ்வுகளை கண் முன் நிறுத்தி விடுகிறது. பிறவு குறிப்புகள், பழங்கால ஓவியங்கள், இடங்களின் புகைப்படங்கள்.... வாசிப்பை சுவாரசியமாக்கி
விடுகிறது.
செங்கிஸ்கான் ரௌத்திரம், ஹேமுயின் தொங்கும் உடல் பாகங்கள், இனாயத்கான் மரணம், பைராம்கான் நிலை, ஆதாம்கானின் கொலை, ஷாஜஹானின் காதல், முகலாய எதிரி கோவிந்த்சிங், புலிநக கொலைகள் ...என்று பல நிகழ்வின் ஒரு பகுதியாக நம்மை
ஆக்கிவிடுவதில் தெரிவது மதனின் வெற்றி.
வாசித்தவர்களால் பல முறை பாராட்டு கிரீடம் சூட்டபட்டது
என்றாலும் நானெழுதும் இந்த கட்டுரை அந்த கிரீடம் மேல் வீசும் இளந்தென்றல்
போலாகட்டும்.
1 comment:
அழிந்தார்கள்... எனக்கும் அப்படி தோன்றுவது உண்டு...
ஆனால்.... உண்மையும் அதுதானே...!
கவி வரிகள் அருமை...
Post a Comment