Pages

Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Saturday, January 16, 2016

சுஜாதா : மூன்று புத்தகங்கள் போதும்

மூன்று புத்தகங்கள் போதும் சுஜாதாவின் ஆளுமையை புரிந்து கொள்ள .....

அவை கணையாழியின் கடைசி பக்கங்கள், ஏன்? எதற்கு? எப்படி?, ஸ்ரீரங்கத்து கதைகள் (தேவதைகள்). 

ஸ்ரீரங்கத்து கதைகள் ..... 2002-2003 வாக்கில் விகடனில் வாராவாரம் ஒரு சிறுகதை வந்துகொண்டு இருந்தது. மெயின்கார்ட்கேட், ஸ்ரீரங்கம் என்று அப்பொழுது நான் பெரிதும் சுற்றி கொண்டு இருந்த பகுதிகளை சார்ந்து கதைகள் இருந்ததால் தொடர்ந்து வாசித்து வந்தேன். அந்த கதைகளில் சொல்லபட்டு இருந்த எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறேன் என்பதால் ஒரு கட்டத்தில் அந்த கதைகள் மூலம் 1940-1950களின் திருச்சியில் வாழ ஆரம்பித்தேன். 

ஒவ்வொரு கதையை படிக்கும் பொழுதும் மனதிற்குள் அத்தனை கோடி பரவசம். எதோ எனக்கு ஏற்பட்டதை எல்லாம் எப்படியோ தெரிந்து கொண்டு சுஜாதா எழுதுகிறார் என்று நினைத்து கொள்வேன். 

பிறகு வேலைக்கு சேர்ந்து வாங்கிய முதல் சம்பளத்தில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. 

சில வருடங்களுக்கு முன்பு விடுமுறைக்கு வந்த அண்ணன் கேட்கவே தந்துவிட்டேன். நேற்று எதோ ஞாபகம் வந்து இந்த புத்தகத்தை தேடினேன்... கிடைக்காமல் போகவே நான் பெரிதும் கலவரமடைந்ததை கண்டு அப்பா அண்ணனது வீட்டில் அதே பெயரில் புத்தகத்தை பார்த்தாக சொன்னார், அண்ணனுக்கு தந்தது ஞாபகம் வந்தது உடனே யார் மூலமாவது அதை கொடுத்து அனுப்ப சொல்லி அண்ணனுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன். 

2011
ஆம் ஆண்டு புத்தக கண்காட்சியில் எல்லோரும் பாராட்டி பேசுகிறார்களே என்று கணையாழியின் கடைசி பக்கங்கள் புத்தகத்தை வாங்கினேன். இதில் ஒவ்வொரு கட்டுரையும் படித்து, பிறகு அதில் சொல்லபட்டு இருக்கும் விஷயங்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கூகிளில் தேடி தேடி படித்தேன். புத்தகத்தை முடித்த பிறகு ஒரே ஒரு கேள்வி தான் மனதிற்குள் எழுந்தது.. எப்படி இத்தனை விஷயங்களை பற்றி தெரிந்து வைத்து இருந்திருக்கார் ???

ஏன்? எதற்கு? எப்படி? .... முதல் பதிப்பு 1992ல் வந்த பொழுதே அப்பா எங்களுக்காக வாங்கி கொடுத்தார். எனக்கும் என் அண்ணனுக்கும் சண்டையே நடக்கும், யார் படிப்பது என்று. அந்த வயதில் அந்த புத்தகத்தை படிக்கும் பொழுது பிரம்மிப்பாக இருக்கும். பள்ளியை விட எனக்கு அறிவியலை சுலபமாக அதிகம் கற்று தந்தது. கால ஓட்டத்தில் அந்த முதல் பதிப்பு எங்கோ தொலைந்து போய் விடவே, கொஞ்ச நாள் முன்பு விகடன் பதிப்பக அலுவலகத்திற்கே போய் வாங்கி வந்தேன். 

Saturday, May 2, 2015

சுஜாதா :: ஜீனோ

ஒரு வாரம் முழுக்க நான் சுஜாதாவின் எழுதுக்களின் மூலம் நான் ஜீனோவோடு வாழ்ந்தேனென்றால் அது மிகையாகாது.  விஞ்ஞான புனைவுகளின் தன்மையாக கூட நான் வாழ்ந்தது இருக்கலாம். நாம் ஆசை படுவதை, சாத்தியமே இல்லாத ஒன்றை எழுதுக்களின் மூலம் காட்சி படுத்தி, அக்காட்சியின் ஒரு பகுதியாக நம்மையும் வாழ வைப்பதில் வாத்தியார் சுஜாதா வெற்றி பெறுகிறார்

ஒரு இக்கட்டான நிலையில் ஜீனோ இருக்கும் பொழுது இண்டெக்ஸ் கணிப்பான் அருகே தீப்பிழம்புகள் இன்னும் எட்டவில்லை என்று உதவி சொல்லுகிற சமயத்தில் நிம்மதியடைவது ரா, நிலா மட்டும் இல்லை நாமும் தான். ஆனால் நிம்மதிகளுக்கு அதிக ஆயுள் இல்லை என்ற வாழ்வியல் தத்துவத்தின் படி பெரிய சிவப்பு துண்டு கட்டி கொண்டு அதிகபடியாக பானம் அருந்திவிட்டு வந்த இளைஞர் கும்பல் உதவியின் கையிலிருந்த லேசர் தட்டை பிடுங்கி கொழுந்து விட்டெரியும் நெருப்பில் போட்டுவிட்டு ஆரவாரமாக புறப்பட்டு போகிற பொழுது நம் தலையில் இடியே விழுந்தது போலுணர்வோம்.

இதே போலொரு இடியை தான் ஜீனோவை ரவி மனோ ஆகிய சதிகார கும்பல் சாவடிக்கும் பொழுது நம் தலையின் மூலம் சந்தித்து இருப்போம்.

ஜீனோவிற்கு இறப்பா.... அது ஒரு இயந்திரம். நிலாவின் என் இனிய இயந்திரம் ; மற்றொரு சமயத்தில் குட்டி ஜீனோ. ஜீனோ ஒரு இயந்திரமும் அல்ல, அது ஒரு மடநாயும் அல்ல .... ஜீனோ ஒரு அறிவுள்ள நாய். நாய் என்று சொல்வதை விட நிலாவின் நண்பன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஜீனோ ரஸ்ஸல், நீட்ஷே பற்றி எல்லாம் பேசும். முக்கியமாக ரவி மற்றும் மனோ ஆகியோரின் சதி திட்டத்திலிருந்து நிலாவை தப்பிக்க வைக்கும். இங்கு நான் வைக்கிறது என்ற சொல் பதத்தை தான் பயன் படுத்தி இருக்க வேண்டும் ஜீனோ இறந்த காலத்தின் ஒரு பகுதியாக இருந்திருந்தால். ஆனால் படித்தவர்களின் நினைவிலும் படித்து கொண்டு இருப்பவர்களின் நினைவிலும் படிக்க போகிறவர்களின் நினைவிலும் ஜீனோ வாழ்ந்து கொண்டே இருக்கும் அல்லது சுஜாதாவின் "என் இனிய இயந்திர" நாவலும் "மீண்டும் ஜீனோ" நாவலும் பதிக்க படும் வரைக்கும் ஜீனோ என்ற பொதுபார்வையிலான மடநாயும் நிலாவின் இனிய இயந்திரமுமான ஜீனோ வாழ்ந்து கொண்டே இருக்கும்

இறப்பென்பதென்ன ????

இக்கேள்வி நான் ஏழு வயதில் சிவாஜி நடித்த முதல் தேதி படம் பார்த்ததில் இருந்து என்னுள் தேவை இல்லாமல் வந்து கொண்டே இருக்கும். அதன் பிறகு வாழ்க்கையில் வெறுப்படைந்து சுற்றி பிறப்பு இறப்பு குறித்து படித்த பின்னும் இக்கேள்வி வடிவம் பெற்றதே தவிர அழகிய வடிவம் பெற்றதென்னவோ ஜீனோவால் தான். ஒரு வேளை அழகிய வடிவம் தர கூடிய புத்தகங்களை நான் படிக்கவில்லை போலும்.

ஜீனோ நிலாவிடம் இக்கேள்வியை முன் வைக்கிறது ... இறப்பு என்பது உடலின் அழிவா அல்லது நாம் வாழ்க்கை முழுவதும் சேமித்து வைத்திருக்கும் எண்ணங்களின் அழிவா ?

என் வரையில் இறப்பு என்பது மனித உடல் செயலிழக்கும் ஒரு சம்பவம். அச்சம்பவம் நான் வாழ்க்கை என்று நாம் சொல்லி கொண்டு இருக்கும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடை பட்ட காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம். இந்த இடை பட்ட காலத்தை சுவாரசியமாக்கி கொள்ள தான் நாம் வாழ்வியல் அடிமைகளாக மாறுகிறோம்.

ஏன் இந்த சுவாரசியத்தை தேடி போகிறோமென்றால் மிருகங்கள் போல் இல்லாமல் மனிதனுக்கு தேவை இல்லாத ஒன்றான யோசிக்கும் திறமை இருக்கிறது.  சுவாரசியத்தை தேடி ஓடவில்லையென்றால் அந்த திறமை மனிதனை கொன்று விடும். அந்த மாதிரியான சுவாரசியத்தை உங்களது ஓட்டத்தில் ஜீனோ ஒரு பகுதியாக இருந்தால் நலம்

படித்து முடிந்த பின் மேன்மை பொருந்திய ஜீனோ இறப்புக்கு முன் சொல்லிய ஒரு கவிதை தான் மனதில் ஓலித்து கொண்டு இருக்கிறது. அது

"
அழகை பார் அழுக்கைப் பார்
பழகி பார் படுத்துப் பார்
விலகிப் பார் நெருங்கிப் பார்
உலகைப் பார் உள்ளே பார்
முத்தம் பார் ரத்தம் பார்
கத்தி பார் நெத்திப் பார்
வித்துப் பார் வாங்கிப் பார்
பத்துப் பேரை குத்திப் பார்
தேடிப் பார் தேடிப் பார்
திறமை இருந்தால் 
செத்துப் பார்.."

அதிகாலை நான்கு மணிக்கு ஜீனோவோடு முதன் முறையாக வாழ்ந்து முடித்த பின் வீட்டிற்கு வெளியே வந்து நின்றேன். தெருவில் நாய் ஒன்று கடந்து போனது ... அதை ஜீனோ என்று நினைத்து " ஒரு கவிதை சொல்வாயா.."  என கேட்டேன். அதற்குள் கடந்து போய் விட்டது. பின் அதனுடைய வடிவத்தை பார்த்து அது ஜீனோ இல்லை தெரு மடநாய் என்று தெரிந்தது. 
Related Posts with Thumbnails