Pages

Showing posts with label மலரும் நினைவுகள். Show all posts
Showing posts with label மலரும் நினைவுகள். Show all posts

Wednesday, September 27, 2017

ஏதுமற்ற காலத்தில் சினிமா

ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள் முத ஷோ போய் ஏறக்குறைய பத்து வருஷமாகி இருக்கும்.

அது ஒரு பித்து நிலை. இத்தனைக்கும் இப்ப புக் பண்ணி இருக்குற மாதிரி ஆன்லைன் ல எல்லாம் புக் பண்ண மாட்டேன். அப்படி பண்ணவும் வசதி இல்லங்குறது வேற விஷயம்.

அப்ப தங்கிட்டு இருந்த பெருங்களத்தூர் ரூம் ல இருந்து கிளம்பி நேர தியேட்டர் போயிடுவேன். அங்க போய் அடிச்சுபிடிச்சு டிக்கெட் வாங்கி எல்லாம் படம் பார்ப்பேன். முக்காவாசி தாம்பரத்துல இருக்குற நேஷனல், வித்யா தியேட்டர் ல பாப்பேன். இதுல நேஷனல் தியேட்டர் ல அப்ப படம் பாக்குறதுங்குறது இட்லி குண்டா ல இருந்துட்டு வர மாதிரி இருக்கும். எதாச்சு பாட்டு வந்தா வெளில போய் காத்து வாங்கிட்டு வருவேன்.

இப்ப தான் எம்ஆர் தியேட்டர் ல ஏசி எல்லாம் போட்டு டக்கரா இருக்கு. அப்ப எல்லாம் அங்கன படம் பாக்குறதுங்குறது கக்கத்துல கொள்ளி கட்டைய வைச்சுகிட்டு ஒம குண்டத்துல உட்கார்ந்து படம் பாக்குற மாதிரி தான்.

குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் அப்பவே சூப்பரா தான் இருக்கும். ஆனா அங்க போற அளவுக்கு பஸ் டிக்கெட் வாங்க அப்ப எல்லாம் காசு இருக்காது.

இதுல இன்னொரு கூத்து என்னன்ன தாம்பாரத்துல படம் பாத்துட்டு, திரும்பி பஸ் ல வர காசு இருக்காது ... அதனால ரயில் தண்டவாளம் வழியா நடந்து வருவேன். டைம் வீணாகுமேங்குற கவலை எல்லாம் இல்ல. ஏன்ன அவ்வளவு வெட்டியா இருந்தேன். சிம்பிளா வெட்டி ஆபீஸர்.

இப்புடி தான் லீந்னு ஒரு படம்... அந்த படத்துல நடிச்சவங்களே படத்த முழுசா பாத்து இருப்பாங்களானு தெரியாது. அப்புடி ஒரு மச மொக்கையான படம். படம் தான் அப்புடின்ன தியேட்டர் ஸ்கிரீனும் செம மொக்கையா இருக்கும். எதோ புட்பால வைச்சு படமுன்னு போயிட்டேன். படத்தோட ஹீரோ சிபிராஜ்ன்னு படம் முடிஞ்சு வெளில வந்து போஸ்டர பாத்து தான் தெரிஞ்சு கிட்டேன்.

இதவிட காவிய சோகம் என்னன்ன படத்த பத்தி பேசுறதுக்கு ஒரு ஆள் கிடைக்க மாட்டாங்க. அப்புடியே கிடைச்சாலும் படம் நல்லா இருக்கான்னு கேட்டுட்டு ...சரி மச்சான் ஞாயித்து கிழம என் ஃபிகரோட போறேன்னு சொல்லி கடுப்படிப்பாங்க.

வேலை கிடைக்கலையேன்னு சோகம் இருந்தாலும் ஃபிகர் கூட இல்லையேன்னு அழுகாச்சி + கடுப்புஸ் + சோகமா இருக்கும். அப்ப எல்லாம் ஜிலேபி, லட்டு வகையறா ஃபிகர்ஸ் எல்லாம் கனவுல கூட பாக்க முடியாத அளவுக்கு பஞ்சத்துல இருந்தேன். இண்டர்வியூன்ன மட்டும் தான் சிட்டிக்குள்ள போவேன். அதுவும் காசு மிச்சம் பண்ண ஒரே நாள் ல மூணு நாலு இண்டர்வியூ போவேன். தனி தனியா போனா காசு அதிகமாகுமே என்குற கவலை தான்.

அதனால இந்த மாதிரி ஜிலேபி, லட்டு ஃபிகர்ஸ எல்லாம் சினிமாவுல மட்டும் தான் பாக்க முடியும். அந்த மாதிரி லட்டு ஜிலேபிய எல்லாம் இந்த மாதிரி மட்டமான ஸ்கிரீன் ல பாக்குறப்ப தும்ப பூவுல தூக்கு மாட்டிட்டு தொங்கிறலாம் போல இருக்கும்.

ம்ம்ம்ம்ம்

அது எல்லாம் ஒரு காலம்.

Sunday, November 22, 2015

சினிமா டிக்கெட்


எதாவது திரைப்படத்தை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் கூடவே அந்த படத்திற்கு தியேட்டரில் நின்று டிக்கெட் வாங்கியதும் நினைவிற்கு வருகிறது.

இன்று சேரனின் ஆட்டோகிராப் படத்தை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது அந்த படம் வெளி வந்த அன்று முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டுமென்று திருச்சி ஜங்ஷனில் இருக்கும் சோனா மீனா திரையரங்குக்கு காலை பதினொரு மணிக்கே போய், கவுண்டரில் பட பெயரை சொல்லி டிக்கெட் வாங்க காசு தந்த ; கவுண்டரில் இருந்தவர் "அது மதியானம் தான் ...இப்ப darkness falls ..." என்று சொன்னார்.

அது வரையில் நான் எந்த படத்திற்கும் காத்திருந்து டிக்கெட் வாங்கி படம் பார்த்ததில்லை. அப்பொழுதெல்லாம் பொறுமை என்ற விஷயத்திற்கும் எனக்கும் ரொம்ப தூரம். ஆனால் திருச்சி ராஜா தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஹோலிக்ராஸ் பஸ் ஸ்டாப் வரையிலும் ஒட்ட பட்டு இருந்த வித விதமான போஸ்டர்களை பார்த்து மயங்கியதால் படத்தை பார்த்த ஆக வேண்டும் கவுண்டரிலேயே நின்று கொண்டு இருந்தேன். நல்ல வெயில் அடித்து கொண்டு இருந்தது. சுமார் மதியம் மணி ஒன்றை இருக்கும் பசி எடுக்கவே தியேட்டர் எதிரிலிருந்த டீ கடையில் டீயும் வெங்காய போண்டாவும் சாப்பிட்டு விட்டு மீண்டும் கவுண்டர் வரிசைக்கு வந்த பொழுது பத்து பேர் நின்று கொண்டு இருந்தார்கள்.

ஏன்னோ துக்கம் தொண்டையை அடைக்க, வெறுப்பில் நின்று கொண்டே டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே போனேன்.

கொஞ்ச நேரம் கழித்து நண்பர்கள் வந்தார்கள். வந்த உடன் டிக்கெட் கிடைத்ததை பற்றி அவர்கள் சொன்னதும், நான் மூன்று மணி நேரம் காத்து இருந்து டிக்கெட் வாங்கிய தியாக கதையை சொல்லவில்லை.

அதே போல் இரண்டு வாரம் கழித்து சரத்குமார் நடித்த கம்பீரம் படம் மெகா ஸ்டார் தியேட்டரில் வந்த பொழுது, குடி பழக்கம் இல்லாத என்னையும் செந்தில் என்ற இன்னொரு நண்பனையும் (இவன் இப்பொழுது பிரபல தனியார் மருத்துவமனையில் ஆலோசகராய் இருக்கிறான்) டிக்கெட் வாங்க நிற்க வைத்துவிட்டு மற்றவர்கள் எல்லோரும் திரையரங்கத்தின் எதிரில் கரூர் பைபாஸில் இருந்த அண்ணாமலை வையின் ஷாப்பில் தீர்த்த தாகத்தை தீர்த்துக்கொள்ள போய் விட்டார்கள்.

அப்பொழுது எல்லாம் மெகா ஸ்டார் தியேட்டரில் டிக்கெட் வாங்க போகும் வழி சுரங்கப்பாதைக்கு போகும் குகை போல் இருக்கும். பிற்பாடு மாற்றி அமைத்துவிட்டார்கள் என்று கேள்வி பட்டேன். அந்த குகை போன்ற வழியில் நின்று கொண்டு நானும் அவனும் "மச்சி .. நம்பளைய ஊறுகா ஆக்கிட்டாய்ங்கடா" என்று பேசி கொண்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. இருந்தாலும் அந்த தியேட்டரில் இடைவேளையின் பொழுது விற்க படும் பிரட் பஜ்ஜிக்காக பொறுத்துகொண்டேன்.

இதே போல் கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஸ் சோனா மீனா தியேட்டரில் வந்த பொழுது, படம் பார்க்க துணை வேண்டுமே என்று நண்பனை அழைத்து கொண்டு வந்து வெளியே நிற்க வைத்து விட்டு, முதல் நாள் மதிய காட்சிக்காக அவனுக்கும் சேர்த்து என் காசை போட்டு டிக்கெட் வாங்க போனேன்.

சோனா மீனா தியேட்டரில் சோனா அரங்கிற்கான முதல் வகுப்பு டிக்கெட் தியேட்டரின் இடது பக்கம் இருந்த கம்பி கூண்டு வழியாக போய் டிக்கெட் வாங்க வேண்டும். வரிசையில் பத்தாவது ஆளாக நான் நின்று கொண்டு இருந்தேன். பின்னாடி இருந்து கூட்டம் தள்ள ஒரு அளவிற்கு மேல் சாய முடியாமல், இரண்டு கைகளையும் நீட்டி கம்பிகளை பிடித்து கொண்டு சாயாமல் இருக்க முயற்சி செய்தேன். ஒரு இரண்டு நிமிஷம் நிற்க்கவே கை எல்லாம் பழுத்துவிட்டது. ரொம்ப சோதிக்காமல் சீக்கிரமாக டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

கஷ்ட பட்டு டிக்கெட் வாங்கி நண்பனை கூட்டி கொண்டு படம் பார்க்க போனால், இரண்டாவது காட்சி வருவதற்குள் அவன் தூக்கி விட்டான். படம் முடியும் நேரத்தில் சீனா தானா பாட்டு வரும் பொழுது தான் கண் முழித்தான். இடையில் போட்ட காசு வீணாக போகிறதே என்று அவனை எழுப்ப கெட்ட வார்த்தைகளை சொல்லி முயற்சித்து கொண்டு இருந்தேன்.



அப்பொழுதெல்லாம் சோனா மீனா தியேட்டர் டிக்கெட்டில் சோனா மீனா என்ற பெயரில் இருந்த "னா"வை பழைய மாதிரி கீழ கால் இழுத்து போட்டு இருப்பார்கள் .... பார்க்க நல்லா இருக்கும். 
Related Posts with Thumbnails