Pages

Sunday, September 29, 2024

வரி ஏய்ப்பு - கருப்பு பணம் - அத்தியாயம் 1

இந்த 78வது சுதந்திர தினத்தில் இந்தியாவின் மிக பெரிய பிரச்சனை லஞ்சம் தான் என இந்தியன் தாத்தா தனமாய் பேசி கொண்டு இருந்தால் அவர்களை போல் அறிவார்ந்த கிணற்றுத் தவளை யாரும் இல்லை.

லஞ்சம் ஒரு பிரச்சனையாக இருந்ததென்னவோ உண்மை தான் அது உலகமயமாக்கலுக்கு முன்பும் பிந்தைய சிறு வருடங்களில் தான்.

ஏனென்றால் லஞ்சமாய் கொடுத்து வாங்க படும் பணம் வரி கணக்கில் வராமல் போய் விடும், அப்பொழுது லஞ்சம் யார் வாங்குவார்களென பார்த்தால் அரசு இயந்திரத்தில் இருப்போரும் இயந்திரத்தை இயக்கும் அதிகாரத்தில் இருந்தவர்களும் தான்.

உலகமயமாக்கலுக்கு பின்னர் என்ன நடந்ததென்றால் இந்தியாவின் வணிக சந்தையின் கதவுகள் உலக வணிகத்திற்கு திறந்துவிட பட்டன. 

அப்படி திறந்துவிட பட்ட பொழுது வணிகம் வளர்ந்தது. வணிகம் வளர்ந்த பொழுது அரசுக்கு செலுத்த வேண்டிய வரி தொகையும் வளர்ந்தது.

லாபமொன்றே குறிக்கோளாக இருக்கும் வணிக இயந்திரம் வரியை தவிர்க்க வழி இருந்தால் அதனை பயன் படுத்திக்கவே செய்யும். 

வணிகத்தின் இயல்பு அது இல்லை, வணிகத்தில் இருக்கும் ஒரு வாய்ப்பு. அதனை பயன்படுத்தி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளாமல் இருப்பதும் அந்த வணிக இயந்திரத்தை செலுத்தி கொண்டு இருப்பவர்களின் கையில் இருக்கிறது.

அந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு வணிக இயந்திரத்தில் அதிகாரத்தில் இருப்பவர் வரி ஏய்ப்பு செய்து விடுகிறார்.

வணிகத்தை அல்லது கிடைக்க பெற்ற லாபத்தை குறைவாக காட்டி குறைவான வரி தொகையை செலுத்தில் விடுகிறார். நடப்பில் இருக்கும் வரி முறையை ஏய்த்து விடுகிறார். வரி ஏய்ப்பு நடந்து விடுகிறது.

கணக்கில் வராத பணம் கருப்பு பணமாக மாறி விடுகிறது.

இந்த கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற மூன்று அடுக்குகளை கொண்ட வழி முறையை கையாள்வார்கள்.

அவை

1. Placement - நிலை அமர்த்தல் 
2. Layering - அடுக்குகளை உருவாகுதல்
3. Integration - ஒருங்கிணைத்தல்

கருப்பை பணத்தை உருவான உடன் அதனை கையில் வைத்திருக்க முடியாது, அப்படி வைத்திருந்தால் அது சட்டத்திற்கு எதிரானது. 

அதனால் அதனை வெள்ளையாக மாற்றுவார்கள். அப்படி மாற்றிவிடுதலில் முதல் நிலை தான் நிலை அமர்த்தல்.

அப்படி நிலை அமர்த்திய உடன் பல்வேறு அடுக்குகளை உருவாக்கி அந்த கருப்பு பணம் வந்த மூலத்தை அழித்துவிடுவது தான் இரண்டாம் நிலை அடுக்குகளை உருவாக்குதல்.

அப்படி பல்வேறு அடுக்குகளை உருவாக்கி பல்வேறு பண பரிவர்த்தனைகள் செய்து பணத்தின் மூலத்தை கண்டுபிடிக்க முடியாமல் செய்து விட்டு, அதனை எல்லா அடுக்குகளிலும் இருந்தும் ஒரு வணிக இயந்திரத்திடம் கொண்டு வருவது தான் கடைசி நிலை தான் ஒருங்கிணைத்தல்.

வணிக அறிமுகம் இல்லாதோருக்கு இதுவரையில் புரியாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் எல்லோருக்கும் தெரிந்த துறையை கொண்டு உதாரணம் சொல்கிறேன். உடனே அப்படியா செய்தி அந்த துறையில் இப்படி தான் நடக்கிறதா என முடிவுக்கு வர வேண்டாம். வெறும் உதாரணம் தான்.

உதாரணமாக ...

சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் அவர் நடித்தால் படம் வெற்றி பெற்று விடுமென்கிற நிலையில் வெள்ளையாகவும் கருப்பாகவும் இவ்வளவு சம்பளம் வேண்டுமென தயாரிப்பாளரிடம் கேட்கிறார் என வைத்து கொள்வோம் .

இவ்வளவு தொகை தருகிறேன் மீதிக்கு ஒரு பகுதிக்கான விநியோக உரிமையை தந்துவிடுகிறேனென தயாரிப்பாளர் சொல்கிறார். இதெல்லாம் வெள்ளை சம்பள பகுதியில் வந்துவிடும் ஏனென்றால் இதெல்லாம் சட்ட ரீதியிலான ஒப்பந்தத்தில் எழுதப்படும்.

படம் எடுத்து முடிக்கபட்டது. வெளி வந்துவிட்டது.

இப்பொழுது நடிகரிடம் பல படங்களின் மூலம் கிடைக்க பெற்ற கருப்பு பணத்தை தான் விநியோக உரிமை எடுத்த பகுதி திரையரங்குகள் மூலம் வெள்ளை பணமாக மாற்றுவார். அங்கு ரசிகர்கள் கொண்டு பெரும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வார். படம் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிறது என காட்சி படுத்துவார்.

என்ன தான் பெரிய படமாக இருந்தால் இன்றைய காலகட்டத்தில் நிலவும் விலைவாசியில் அரங்கு நிறைந்த காட்சிகள் என்பது ஒரு மூன்று நாட்களுக்கு மேல் இருக்காது ஏனென்றால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமானதும் ஒரு காரணம்.

பிற்பாடு காலியான திரையரங்குகளில் இருபது பேர் மட்டுமே வந்தாலும் படம் ஓடி கொண்டு இருக்கும் அல்லது ஓட்டி கொண்டு இருப்பார்கள்.

ஒரு திரைப்படத்தை ஒரு காட்சிக்கு திரையிட்டால் ஆகும் செலவிற்கு பக்கத்தில் கூட இருபது பேர் மூலம் கிடைக்கும் வணிக லாபம் வராது.

இருந்தும் படத்தை ஓட்டுவார்கள்.

போலியாக இந்த பட காட்சிக்கு இத்தனை வந்தார்கள் அதில் வந்த பணம் இத்தனை என விநியோக உரிமை எடுத்த நடிகர் சொல்வார். திரையரங்கு உரிமையாளருக்கும் ஒரு பங்கு போய்விடும் அதனால் அவரும் அமைதியாக இருப்பார்.

திரையரங்கு வசூல் குறித்து இன்னும் வெளிப்படை தன்மையோடு இல்லாததற்கு இதுவுமொரு காரணம் . ஏனென்றால் ரொக்க பணத்தில் கையாள படும் வணிகத்தில் எதுவும் சாத்தியமே.

தின்பண்டங்கள் விற்ற பணம் என கணக்கு சொல்வார்கள், உண்மையில் தின்பண்ட்ம் அவ்வளவு விற்றதா என கணக்காளர் கண்டுபிடிப்பது கஷ்டமே.

தின்பண்டம் தயாரிக்க தேவையான பொருட்கள், தயாரிக்க தர படும் கூலி, அரங்கிற்கு கொண்டு செல்ல படும் கூலி, விற்பனை பிரதிநிதிகளின் கூலி எல்லாம் ரொக்க பணத்தில் நடைபெறுவதால் வணிகத்தின் தொகை அளவுகளை கண்டுபிடிப்பது கஷ்டம்.

இப்படி தான் நடக்கிறதா திரையுலகில் என்றால் எல்லோரும் அப்படி இல்லை பிழைக்க தெரியாதவர்கள் என பெயர் எடுத்த பல நடிகர்கள் இருக்கிறார்கள்.

அப்படியானல் எல்லா நடிகர்களும் இப்படி தான் செய்வார்களா என கேட்டால் இல்லை. கோயில் கட்டுவார்கள், தொண்டு நிறுவனம் ஆரம்பித்து தொண்டு செய்வார்கள்...

அவற்றின் வணிக தன்மைகளில் எல்லாவற்றிலும் வரி ஏய்ப்பு நடக்க வாய்ப்பு இருக்கிறது.

வணிக நிறுவனங்களின் வரி ஏய்ப்பு எப்படி நடக்கும், தொண்டு நிறுவனங்கள் என்ன செய்யும்... முடிந்தால் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

தொடரும்...

#வரி #வரிஏய்ப்பு

No comments:

Related Posts with Thumbnails