Pages

Monday, April 27, 2020

EXTRACTION 2020

சபாபதி என்னும் படத்தில் டி.ஆர்.ராமசந்திரன் அவர்களது புகழ்பெற்ற நகைச்சுவை ஒன்றுள்ளது பரீட்சை தாளில் ரயில் எப்படி ஓடும் என்பதை "விலாவாரியாக" எழுதி இருப்பார். எப்பொழுது பார்த்தாலும் வாய் விட்டு சிரித்து விடுவேன்.

அதே போல் இந்த படத்தின் கதையை எழுதும் போது டுமீல் , டிச்சூகுல் என மட்டும் வார்த்தைகளுக்கு பதிலாக போட்டு எழுதி விட்டார் போலும்.

சண்டை படம். பார்க்கலாம்.

வழக்கமாய் சண்டை காட்சியில் நடிகர்களு எவ்வளவு அடி, எத்தனை தையல் போட்டு இருப்பார்கள் என யோசிப்போம். ஆனால் இந்த படத்தில் ஒளிப்பதிவாளருக்கு எத்தனை அடி தையல் என கேட்குமளவிற்கு மிரட்டி இருக்கிறார் ஒளிப்பதிவில். 

கடைசி காட்சி ஐந்து நொடிகள் கூடுதலாய் வைத்திருக்கலாம்.

நம்ம தோர் தான் நாயகன். எங்க சுத்தியல காணோமேன்னு தேடினா, மனுஷன் அதைய காண்ட்ராக்டர் நேசமணி தலை ல போட்டுட்டு துப்பாக்கியோட வந்து இங்கன டமால் டுமீல் பண்ணிட்டுருக்காரு.

முக்கியமா ஏரியாவுல பெரிய கைன்னு வில்லன காட்டிட்டு, கொசுவுக்கு ஹிட் அடிக்குற லவங்கத்துல டீல் பண்ணிருப்பது ரொம்ப வருத்தங்களா இருக்கீ.

ஒரு தடவை பார்க்கலாம்.

Sunday, April 26, 2020

DEJA VU (2006) - Time Travel Thriller

நிகழ் காலமும் எதிர்காலமும் ஒரே நேரத்தில் அதனதன் போக்கில் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டு இருப்பவை தான். இப்படத்தை புரிந்துகொள்ள அறிந்திருக்க வேண்டிய அடிப்படை விதி. 

மேலும் தேஜா வூ என்றால் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பவை எல்லாம் நமக்கு ஏற்கனவே நடந்து இருப்பது போல் தோன்றுவது. அது உண்மையில் நடந்திருக்கலாம் அல்லது அவையெல்லாம் வெறும் எண்ண அலைகளாக கூட இருக்கலாம். இதனை படத்தில் அழகாக கையாண்டு இருப்பார் இயக்குநர். 

மேலும் இப்படத்தை காண்கையில் வரிசைபடி வரும் எல்லா காட்சிகளும் உற்று கவனிக்க வேண்டும். ஆரம்பத்தில் வரும் ஒரு காட்சியில் கதாநாயகனது நண்பன் கொலை நடந்த இடத்தில் துப்பறிகையில் கைபேசியில் நாயகனை அழைத்து .... "விசாரணை பண்ணுறப்ப பார்த்து பண்ண கூடாதா ... பாரு உன் கைரேகை நிறைய இடத்துல விட்டுட்டு போயிருக்க..." என சொல்வான். பார்த்து கொண்டு இருக்கும் பொழுது இந்த வசனம் வருகையில் சந்தேகம் வர தான் செய்யும் ஏனென்றால் அதற்கு முன்பு வரும் காட்சியில் நாயகன் கையுறை அணிந்து கொண்டு தான் அங்கு வந்திருப்பான் (நினைவில் அவ்வாறு தான் படிந்திருக்கிறது). இந்த சந்தேகத்தோடு இருக்க வேண்டும் என இயக்குநர் திட்டமிட்டு இருக்கிறார் என்பது அதற்கான பதிலாக வரும் காட்சியை பார்க்கும் பொழுது தான் தெரிகிறது.

அதே போல் படத்தின் முடிவு புரியவில்லை என சொல்வோருக்கு அதற்கான பதிலை நாயகனுக்கு சக ஊழியர் தொழில்நுட்பத்தை விளக்கும் காட்சியில் வைத்திருக்கிறார்.

படத்தின் பலமென பார்த்தால் இறந்த காலத்தில் போகும் கொலைகாரனை நிகழ்காலத்தில் நாயகன் துரத்துகிற காட்சி தான். இதனை கால பயணத்தின் அடிப்படை விதியை கொண்டு புரிந்து கொள்ளலாம் (நிகழ் காலமும் எதிர்காலமும் ஒரே நேரத்தில் அதனதன் போக்கில் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டு இருப்பவை தான்).

கால பயணத்தின் விதியின்படி கொலைகாரனது நிகழ் காலத்தின் எதிர்காலத்தில் நாயகன் அவனை துரத்துகிறான். அதற்கு உதவி செய்வது ஒரு விஞ்ஞான கருவி. 

அந்த விஞ்ஞான கருவியை கொண்டு நிகழ்ந்தவையை நாயகன் புரிந்துகொண்ட பின், அவன் கால பிரயாண கருவியின் மூலம் கடந்த காலத்திற்கு போகிறான். 

கதை.

அப்படி போன நாயகன் இறந்துவிட பின் எப்படி உயிருடன் வருகிறான் ???

இதனை கால பயண விதியை கொண்டு புரிந்து கொள்ளலாம். 

போய் கொண்டு இருக்கும் கோட்டில் (முதன்மை கோடு) இருந்து ஒரு கிளை கோடு பிரிந்தால், இரண்டும் வெவ்வேறு கோடுகளாகி விடும். ஒரு கட்டத்தில் கிளை கோடு அழிந்தாலும் போனாலும் முதன்மை கோடு அதன் போக்கில் போய் கொண்டு இருக்கும். 

படம் ஏற்கனவே பெரிதும் அறிமுகமானது என்பதால், அந்த அறிமுக படுத்தும் வேலையை செய்யவில்லை.

படம் ஒரு அட்டகாசமான த்ரில்லர்.

Friday, April 24, 2020

நாளைய மனிதன் (1989) & அதிசய மனிதன் (1990) : தமிழின் முதல் ஸோம்பி படம்

அப்பொழுது எங்கள் ஏரியா கேபிள் கடை வந்திருந்த பன்னீர்செல்வம் அண்ணன் விடுமுறை தினமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு படங்களாக கேபிள் டிவியில் போடுவார்.அப்படி இரண்டு மூன்று நாட்கள் இடைவேளையில் தான் இந்த  இரண்டு படங்களை ஒளிபரப்பினார். 

பெரும் வெற்றி பெற்ற இந்த இரு திரைபடங்களையும் இயக்கியவர் வேலு பிரபாகரன். ஆம் வேலு பிரபாகரனே தான். இந்த படத்தில் அப்பொழுது நட்சத்திர நாயகனாக இருந்த (மைக்) மோகன் கௌரவ வேடத்தில் வந்து போவார். 

தமிழின் முதல் ஸோம்பி படமான இதில் அஜய் ரத்னம் இரு பாகங்களிலும் ஸோம்பியாக நடித்திருப்பார்.

முதல் பாகம் :

கதை 2008ல் நடப்பதாக காட்டி இருப்பார்கள். எய்ட்ஸ் நோயிற்கு (1980களின் இறுதியில் வந்த படம், அந்த காலம் வரைக்குமே தமிழக திரைப்பட கதாபாத்திரங்கள் கேன்சர் என்கிற கொடிய நோய்க்கு பலியாகி கொண்டு இருந்தனர்) மருந்து கண்டுபிடித்த மருத்துவர் தனது அடுத்த ரகசிய ஆராய்ச்சியான இறந்த மனிதனை மீண்டும் உயிர்பிக்க மேற்கொள்ளும் முயற்சியில் பரிசோதனை முறையில் இறந்த ஒருவனுக்கு மீண்டும் உயிர் அளிக்கிறார்.

அந்த மர்ம மனிதன் எல்லோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கிறான் (ஏன் என்ற விளக்கம் வசனங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும்). அந்த நிலையில் காவல் அதிகாரியும் அவனது காதலியும் மாட்டி கொள்கிறார்கள். 

நடக்கும் பூனை எலி போராட்டத்தில் அந்த மர்ம மனிதனை துப்பாக்கியால் சுட்டு கொல்கிறான்.

 இரண்டாம் பாகம் :


சில வருடங்கள் பிறகு நண்பர்கள் குழு விடுமுறையை கழிக்க் விடுதிக்கு வருகிறார்கள். விடுதிக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றில் விழுந்திருக்கும் மர்ம மனிதனுக்கு நினைவு வருகிறது. அவன் இறக்கவில்லை.

வந்து அந்த விடுதியில் இருக்கும் எல்லோரையும் கொலை செய்கிறான், அந்த குழுவில் இருக்கும் ஒரு பெண் தப்பித்து அவனை கொலை செய்கிறாள்.

ஆனால் அதிலும் அவன் இறக்கவில்லை, மூன்றாம் பாகத்தில் வருவான் என படம் முடியும். ஆனால் பெரும் நஷ்டம் காரணமாக மூன்றாம் பாகம் எடுக்கப்படவில்லை. 

இரண்டாம் பாகத்தில் ஒரு பின்னணி இசை ஒன்று வரும் அதற்கு பயந்தது எல்லாம் நினைவில் இருக்கிறது. 

அதிக செலவு செய்து இன்னும் நன்றாக முயன்று இருந்தால் தமிழில் இந்த இரு படங்களும் Cult Classicகளாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்பொழுது கூட இவற்றை ரீமேக் செய்யலாம். 

படத்தின் தரமான பிரதி காண கிடைப்பதில்லை. இணையத்தில் சுமாரன பிரதி தான் கிடைக்கிறது.

இன்றைய சூழலில் அதி பயங்கரமான படங்கள் வந்துவிட்ட நிலையில் இந்த படம் எதோ குழந்தைகள் படம் போல தான் தெரியும். ஆனால் எடுக்கப்பட்ட காலத்தில் இது ஒரு முற்றிலும் புதுமையான முயற்சி தான்.

Thursday, April 23, 2020

BIRBAL TRILOGY : CASE 1 FINDING VAJRAMUNI {KANNADA :: 2019}


சமீப காலத்தில் கன்னடத்தில் வெளிவந்த சிறந்த INVESTIGATE THRILLER எனபிதனை தைரியமாக சொல்லலாம். கடைசி வரைக்கும் யார் உண்மையான கொலையாளி என தீர்மானிக்க முடியாமல் யோசிக்க வைத்து கொண்டு இருப்பதிலேயே இயக்குநர் வெற்றி பெறுகிறார்.

ஒரு கொலை நடக்கிறது, அதனை பற்றி சொன்னவன் தான் குற்றவாளி என காவல்துறையினர் கைது : நீதிமன்றத்தில் தீர்ப்பாகி எட்டு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளி வருகிறான். 

இதனிடையில் ஒரு சட்ட நிறுவனம் சமுதாயத்தில் நற்பெயர் எடுக்க வேண்டி ஏழை மக்களது  வழக்குகளை இலவசமாக நடத்த முடிவெடுக்கிறது. அப்பொழுது அங்கு வேலைக்கு சேரும் மகேஷ் தாஸ் என்பவன் இந்த வழக்கை எடுக்கிறான். 

ஏன் இந்த வழக்கு??? 

எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த குற்றம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமான சாட்சிகள் எதுவும் கிடைக்காத நிலையில் மகேஷ் தாஸ் பூஜ்ஜியத்தில் இருந்து வழக்கை தொடங்குகிறான்.

யார் இந்த மகேஷ் தாஸ் ???

படம் பார்த்து கொண்டு இருப்போரை கதையோடு ஒன்ற செய்து, தான் நினைக்கும் விதத்தில் பார்வையாளர்களை யோசிக்க வைப்பதில் தான் ஒரு இயக்குநரில் திறமை இருக்கிறது. 

முக்கியமாக கொலை இப்படி நடந்திருக்கும் என சொல்கிற காட்சியில் வரும் கிராபிக்ஸ் வேலைபாடு எல்லாம் .... வேற லெவல்.

நிறைய துப்பறியும் படங்களில் கதாநாயகனை அறிமுக காட்சியில் சோம்பலாக, ஒழுங்கற்ற அறையில் இருப்பது போல் காட்டி இருப்பார்கள் (அறிவாளியாம்). ஆனால் இந்த படத்தில் கதாநாயகனது அறிமுக காட்சியிலேயே இந்த வழக்கை நாயகன் எப்படி கொண்டு செல்வான் என பார்வையாளனை தயார் படுத்தி விடுகிறது படத்தின் திரைகதை. 

அதுவும்  வழக்கை புரிந்துகொள்ளும் காட்சி, கடைசியில் வரும் சுய விளக்க காட்சி எல்லாம் மிகவும் ரசித்த ஒன்று. 

ஆரம்ப பெயர் சான்றுகள் (Title card), பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம் படத்தின் பார்வையாளனை கதையோடு ஒன்றி போக செய்கிறது.

* எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் - படத்தின் இயக்குநரும் கதாநாயகனும் இவர் தான். குறும்பட அலையில் இருந்து கன்னட திரையுலகில் வந்திருக்கும் முத்து. திரைப்பட இயக்குநராகுவதற்கு முன்பே தனது திறமைகளை நிரூபித்தவர். ஆழ்ந்த இலக்கிய வாசிப்பாளர். இவரது முதல் படமான ஸ்ரீனிவாஸா கல்யாண பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுவும் பார்க்க வேண்டிய ஒன்று. 

முதல் படம் வாழ்வியல் தத்துவத்தை எடுத்தவர், துப்பறியும் கதையை இரண்டாம் படமாக எடுத்திருக்கிறாபடம்.

விரைவில் வெளிவர இருக்கும் இவரது அடுத்த படமான OLD MONK (பழைய சந்நியாசி) புராணத்தில் வரும் நாரதர் நவீன காலத்தில் இருந்தால் எப்படி இருக்கும் ... அது தான் கதை. *

அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.

Tuesday, April 21, 2020

பொன்னியின் செல்வன் :: Ponniyin Selvan / ஒலி புத்தகம் :: Audio Book

பொன்னியின் செல்வனை நாவலை முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

புத்தகம் + ஒலி புத்தகம் என இரண்டையும் ஒன்றன வாசித்தபடியே கேட்டும், கேட்டபடியே வாசித்தும் நாவலை நுகர்ந்து கொண்டு இருக்கிறேன்.

பம்பாய் கண்ணனின் பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் நாடக வடிவில் இருப்பதினால் ; செந்தில் குமார் மற்றும் ஆர்.ஜே.ஜனா ஆகியோரது குரலிலிருக்கும் இந்த ஒலி புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன்.வரிவரிக்கும் வார்த்தைகள் அவ்வாறே துல்லியமான உச்சரிப்பு தேனூட்டுகிறது. 

ஆனால் பொன்னியின் செல்வனை வாசிக்கும் பொழுது எல்லோருக்கும் மனதில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் தனி குரல் கொடுத்திருப்போம், அம்மாதிரி உருவக படுத்தியோருக்கு இவ்வடிவம் அந்நியமாக இருக்கலாம்.

எப்படியோ இப்படி வாசிப்பதும் தனி சுவையாக தான் இருக்கிறது. 

ஒலி புத்தகம் - Storytel
புத்தகம் - பெரியம்மா கொடுத்தது.

Sunday, April 19, 2020

கூகிள் வாய்ஸ் டைப்பிங் / Google Voice Typing

நான் வீட்டிலிருந்து போடுற போஸ்ட் எல்லாம் கூகுள் வாய்ஸ் டைப்பிங் ல தான் போடுவேன். என்ன வெளியில இருக்கும்போது  சும்மா பேசிக்கிட்டே டைப் பண்ண பார்க்கிறவங்க ஒரு மாதிரி பாப்பாங்க.

பெரிய போஸ்ட் எழுதணுமுன்ன கூகுள் வாய்ஸ் டைப்பிங் ல தான் பண்ணுவேன். அப்புறம் பிற்பாடு வரிக்கு ஏத்தமாதிரி எடிட்டிங் பண்ணிடுவேன். அப்படி எடிட்டிங் பண்ணும்போது செல்லினம் யூஸ் பண்ணுவேன்.

இது நான் காலங்காலமா பயன்படுத்தற விஷயம்தான். கூகுள் வாய்ஸ் டைப்பிங்ங்குறது இன்னைக்கு நேத்து இல்ல ரொம்ப நாளாவே இருக்கு.

கூகுள் வாய்ஸ் டைப்பிங் ல குரல வெச்சு மட்டுமில்ல நம்ம எழுதி கூட போஸ்ட் போடலாம் அதுக்கு கூட ஆப்ஷன் இருக்கு. 

கூகுள் வாய்ஸ் டைப்பிங்கில் ஒரு பெரிய கட்டுரை எழுத போறீங்கன்ன முக்கியமான விஷயம், நடுவில் யாரும் வந்து பேசாத மாதிரி பார்த்துக் கொள்ளவும். என்ன பேச போறீங்க இல்ல என்ன டைப் பண்ண போறீங்க என்றது முன்னாடியே யோசனை பண்ணி வச்சிக்கோங்க. என்ன நீங்க சொல்றத அப்படியே அங்க டைப் ஆயிடும். நடுல யாராச்சும் வந்து இந்தாங்க காபி அப்படின்னு சொன்னா கூட அதுவும் டைப் ஆயிடும். 

முக்கியமான விஷயம் வார்த்தைகள சொல்லுறப்ப சரியா சொல்லணும். பேசுறப்ப ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்டு பிறவு கூகிள குத்தம் சொல்ல கூடாது. 

தமிழ் மொழில இருக்குற வட்டார வழக்க கூட டைப் பண்ண முடியும்.

இந்த ஜி போர்டு ஆப் கூகுளில் இருந்து வர ஆபீஷியல் அப். இதைய ப்ளே ஸ்டோரில் போய் நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம்.

ஒரு 15 - 20 வருஷத்துக்கு முன்னாடி ல இருந்து இத பத்தியும் இத்தோட சாத்தியங்களை பத்தியும் பல பேர் ஆராய்ச்சி கட்டுரை எல்லாம் எழுதி வந்துட்டு இருக்காங்க. அது எல்லாம் சயின்ஸ்ங்குறதால நம்ம இலக்கியவாதிகள் லைட் ரீட்டிங் ல விட்டுருப்பாங்க.

ஆனா இதைய அமெரிக்காவை கண்டுபிடிச்சா கொலம்பஸ் கணக்கா நம்ம ஊரு இலக்கியவாதிகள் பேசுறது தான் சிரிப்பு சிரிப்பா இருக்கு. ஏன்ன  சரித்திரத்த கொஞ்சம் புரட்டி பார்த்தா கொலம்பஸுக்கு முன்னாடி வைக்கிங் இன மக்கள் அமெரிக்காவுக்கு பஸ் (கப்பல்) விட்டு இருக்காங்க. 

பின் குறிப்பு - இது முழுவதும் தூய்மையான நெய்யினால் செய்யப்பட்ட பலகாரங்கள் மாதிரி ... இது முழுக்க கூகிளின் ஜி போர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் எழுதப்பட்ட பதிவு.

தொலைக்காட்சியில் புத்தகங்கள்

புத்தகங்களை வீட்டு தொலைகாட்சியில் எப்படி வாசிப்பது.

உங்கள் தொலைக்காட்சியில் இருக்கும் HDMI பகுதியில் கூகிள் காஸ்ட் கருவியை இணைக்கவும்.

அதன் பின்னர்

உங்களது ஆண்டிராய்டு மொபைலில் கூகிள் ஹோம் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்ட பின் அதற்கு தேவையான அனுமதிகளை Settingsல் ஏற்படுத்தி கொள்ளவும்.


பின் கூகிள் ஹோம் உங்கள் தொலைகாட்சியை ஒரு பெயர் வைத்து சேமித்து கொண்டு செயலில் போய் CAST MY SCREENயை தேர்ந்தெடுக்கவும்.


அதன் பின் AMAZON KINDLE அல்லது சேகரிப்பில் இருக்கும் மின்னூல்களை தேர்ந்தெடுத்து படிக்கவும். 

முக்கியமாக ROTATE SCREEN கொடுத்து அகல வாக்கில் வைத்து படிக்கவும். நேர் வாக்கில் வைத்திருந்தால் படிக்க கடினமாக இருக்கும். 

தொலைக்காட்சியும் மொபைலும் ஒரே இண்டர்நெட் இணைப்பில் இணைந்திருக்க வேண்டும்.

இந்த வசதியின் மூலம் யூ டியூப், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் ஆகியவையும் படிக்கலாம்.

கடந்த இரண்டு வருடங்களாக சில புத்தகங்களை இப்படி தான் படிக்கிறேன். இப்படி படிப்பதின் மூலம் கண்களுக்கு அதிக சிரமம் இருக்காது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரு குழுவாக உட்கார்ந்து கொண்டு விவாதித்த படியே புத்தகங்களை படிக்கலாம்.

மொபைலில் தரவிறக்கம் செய்து  வைத்திருக்கும் திரைப்படங்களை இதன் மூலம் பார்க்க வேண்டாம். ஒளி ஒலி அமைப்பு சரியாய் வராது.

நன்றி - சிவதீபம், விஸ்வா, கே.ஆர்.டீ. சார், அமேசான் கிண்டில், சாம்சங் நிறுவனம்

ANJAAN - SPECIAL CRIMES UNIT # PARANORMAL INVESTIGATION

 ஆவிகள் பேய்கள் கதைகளென்றாலே மிகவும் பிடித்தொன்று. அதிலும் அந்த பின்னணி இசை அகோரமான பேய் முகம், திடுதிடுப்பு படபடப்பு மனதிற்குள் எழும் பயம் என எல்லாம் பிடித்தவைகளொன்று. 

வழக்கமாக பேய் கதைகள் என்றால் பேய் பழிக்கு பழி வாங்கும், அதிலிருந்து தப்பித்து வரும் நாயக குழு என்று தான் இருக்கும். 

ஆனால் ஏ.சி.பி. விக்ராந்த் போய் மாட்டிகொள்பவரல்ல. அப்படி மாட்டி கொண்டவர்களை காப்பாற்றும் போலீஸ் அதிகாரி. பேய்களின் பின்னணி கதையறிந்து பிரச்சனைகளை தீர்ப்பவர்.

இவருக்கு பேய் 👻களின் மேல் நம்பிக்கையோ பயமோ இல்லை. உலகத்தில் பேய்களே இல்லை என்று சொல்பவர். ஆனால் தனக்கு கொடுக்கபடும் கொலை வழக்குகளை முடிக்க வேண்டுமென உறுதியாக இருப்பவர். 

முதலில் ஒரு வழக்கை விசாரணை செய்ய போய் அதுவும் வெற்றிகரமாக முடிய தொடர்ந்து அதே போல் வழக்குகளாய் இவருக்கு கொடுக்கப்படும்.

இவருக்கு துணையாய் இரு பெண் காவல் அதிகாரிகள் (ஒருவர் இறந்து போக மற்றொருவர்) நியமிக்கப்பட்டாலும் பல வழக்குகளில் இவர் மட்டுமே களமாடுவார். 

பல்ப் ஃபிக்ஷன் நாவல்களின் பெரும் ரசிகனென்பதால் மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. 

இந்திய தரத்தில் பேய் துப்பறியும் கதைகளை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததிலேயே... பெரிய ஆச்சரியம் தான்.

முக்கியமாக ஏ.சி.பி. விக்ராந்த்க்கு தனிப்பட்ட கதை என ஒன்றுமில்லை. அங்கிங்கு ஒன்று இரண்டு வசனங்கள் மட்டுமே வரும் அவரை பற்றி. 

நகரம், காடு, கிராமம் என்று பல கதைகள் வரும். ஒவ்வொன்றும் ஒரு கதை.

Thursday, April 16, 2020

இசையமைப்பாளர் - ஜி.வி. பிரகாஷ் குமார். {1}

2006.

வாரயிறுதியில் செய்வதறியாது சத்யம் தியேட்டரில் வெயில் படத்தை பார்த்துவிட்ட பின் கதையை விட அப்படத்தின் பாடல்கள் மனத்தில் ஒலித்து கொண்டே இருந்தது.

எல்லோரும் வானொலியில் வெயிலோடு விளையாடி பாடலையும் உருகுதே மருகுதே பாடலையும் கொண்டாடி கொண்டு இருக்க எனக்கோ காதல் நெருப்பின் பாடல் தான் அதிகம் பிடித்து இருந்தது.

இசையமைப்பாளர் யாரென்று கவனிக்கவில்லை.

அதே வருடத்தில் ஓரம்போ மற்றும் கிரிடமும் வந்தது. முறையே இது என்ன மாயம் மற்றும் அக்கம் பக்கம் யாருமில்லா ஆகியவை பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. 

அப்பொழுது தான் தொடங்கி இருந்த ஹாலோ எஃப்.எம்., பிக் எஃப்.எம்., மிர்ச்சி எஃப்.எம் மற்றும் ஆஹா எஃப்.எம். ஆகியவை மாறி மாறி இந்த மூன்று பட பாடல்களை அலறவிட்டு வண்ணம் இருந்தன. அதுவும் காலை நடை பயிற்சியின் பொழுது இது என்ன மாயம் பாடல் மாறி மாறி ஒலிபரப்பாகும், அதனை கேட்டும் பொழுது எதோ மனதில் சந்தோஷம் துளிர் விடும்.

இதில் என்ன வேடிக்கை என்றால் அத்தனை வாட்டி கேட்டும் இசையமைப்பாளர் யாரென்று தெரியாது.

2007.

இந்த வருடம் தான் அந்த அதிசயம் நடந்தது. வெற்றிமாறன் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி நிகழ்ந்தது. தனுஷ் அப்பொழுது பெரிய ஹீரோ எல்லாம் இல்லை. நன்றாக நடிக்க கூடியவர் என மட்டும் பெயர் எடுத்திருந்தார். 

சிம்பு தான் முன்னணியில் இருந்தார். 2004ல் வந்த மன்மதன் மற்றும் 2006ல் வந்த வல்லவன் ஆகிய படத்தின் பாடல்கள் மிக பெரிய வெற்றி பெற்று இருந்தன. இதில் வல்லவன் மன்மதன் அளவிற்கு வெற்றி இல்லை.

சரவணா, தொட்டி ஜெயா, வல்லவன் என தொடர்ந்த பாக்ஸ் ஆபீஸ் சொதப்பலுக்கு பிறகு சிம்புவுக்கு நிச்சயம் ல் ஒரு வெற்றி வேண்டும் என்ற நிலையில் சிம்பு - தருண் கோபி கூட்டணி நிகழ்ந்தது. இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்.

2006ல் தருண் கோபி விஷாலை வைத்து திமிரு என்கிற வெற்றி படத்தை கொடுத்தார். இந்த யுவன் சங்கர் ராஜா இசையில் வந்த படத்தின் பாடல்கள் பெரும்பாலானோரின் விருப்ப பட்டியலில் இடம்பெறவில்லை. 

2007ல் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வந்தது மொத்தம் 3 படங்கள். 

சிம்பு படமான காளையில் எப்ப நீ என்னை பார்ப்ப பாடலும், காளை காளை பாடல் மட்டுமே வெற்றி பெற்றன.

ஆனால் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வந்த பொல்லாதவன் பட பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் மாஸ் ஹிட். பின்னணி இசை வேற லெவலில் இருந்தது. இளசுகளின் பார்டி லிஸ்ட்டில் படிச்சு பார்த்தேன் ஏறவில்ல, எங்கேயும் எப்போதும் ஆகிய இரண்டு பாடல்கள் இடம் பெற்றது.

இளமை ஊஞ்சலாடும் காதல் பாடல்களாக பொல்லாதவன் படத்தில் வந்த மின்னல்கள் கூத்தாடும் பாடலும் ; கிளாசிக் படமான வெள்ளிதிரை படத்தில் வந்த உயிரிலேயே (விழியிலேயே) பாடலும் இடம்பெற்றது.

வழக்கம் போல் ரேடியோ மிர்ச்சியில் Back To Back பாடல்களாக இவை இரண்டும் ஒலிபரப்பப்பட்ட பொழுது ஆர்.ஜே. ..... "ஜி.வி. பிரகாஷின் மயக்கும் இசையில் ...." என சொன்னார்.

அது தான் அவரது பெயரை முதலில் கேட்டது.

அப்பொழுது யாருக்கும் தெரியாது.... இரண்டு வருடங்களுக்கு  இவரது இசையில் வரும் பாடல்களுக்கு மொத்த இசை ரசிகர்களும் மயங்கி இருக்க போகிறார்களென்று.

தொடரும்.

#GVPRAKASHKUMAR

Tuesday, April 14, 2020

கமர்கட் - இலக்கிய உவமை

சி.சரவணகார்த்திகேயன் எழுதின பிரியத்தின் துன்பியல் புத்தகத்தை வாசித்து கொண்டு இருக்கிறேன்.

அதில்.

எழுத்தாளர் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எழுதிருக்கிறார் போல அல்லது இரவு உணவகத்தில் எதுவுமில்லாத பொழுது உப்புமா தயாரித்து தருவது போல கமர்கட் நாவில் உருட்டி என எழுதிருக்கிறார்.

கமர்கட் மிட்டாயை வாயில் ஒரு ஓரமாக வைத்துக்கொண்டு இருந்தாலே போதும். அதனை வாயிலின் வைத்து உருட்டி உருட்டி யாரேனும் ருசிப்பார்களாக என தெரியவில்லை. 

இது இன்னொரு எழுத்தாளரின் புத்தகத்திற்கு எழுதப்பட்ட முன்னுரை என சொல்கிறார்.(பா. ராகவனின் 14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்)

இம்மாதிரி உருட்டி உருட்சி ருசிப்பது எல்லாம் சிறு பிள்ளைகள் செய்வார்கள் என்றால், அந்த எழுத்தாளர் எழுதுவது எல்லாம் சிறு பிள்ளைதனமானது என சொல்கிறாரா .... தெரியவில்லை.

தமிழ் இலக்கியத்தில் உவமைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டது போல.

இது இப்படியே போனால் தீவிர அரசியல் கட்டுரை தொகுப்பிற்கு இலந்தை வடை போல காரசாரமாக உள்ளது என யாராவது எழுதினால் ஆச்சரியம் இல்லை.

Sunday, April 12, 2020

Confession Of Murder { Korean / 2012}

confession Of Murder {Korean - 2012} - Thriller 

படத்தை பற்றி சொல்வதற்கு முன்னால் தென் கொரியா நாட்டு சட்டம் ஒன்றை தெரிந்து கொள்வது நல்லது. 

Statue Of Limitation - ஒரு குற்றம் நடந்து 15 வருடங்களுக்குள் அதனை நிரூபிக்க முடியவில்லை என்றால், அதன் பிறவு அந்த வழக்கிற்காக அந்த குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாது.

பலர் சொல்வது போல தென் கொரியா நாட்டிற்கு மட்டுமானது இல்லை இந்த சட்டம். ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இந்தியா மற்றும் பல நாடுகளில் இந்த சட்டம் பின்பற்ற படுகிறது. 

மேலும் இந்த சட்ட பிரிவு பற்பல நாடுகளில் சில திருத்தங்களுடன் கடுமையாக பின்பற்றப்படுகிறது. எப்படிபட்ட திருத்தங்கள் என்றால் ஒவ்வொரு குற்றத்திற்கும் வெவ்வேறு கால அளவு.

தென் கொரியாவில் முன்பு 15 வருடங்களாக இருந்தது இப்பொழுது 25 வருடங்களாக மாற்றபட்டுள்ளது.

இப்பொழுது படத்தை பற்றி :

அரசு துப்பறிவாளர் சொய் 1986 - 1990 ஆகிய ஆண்டுகளில் ஆள்கடத்தல் மற்றும் தொடர் கொலைகளை செய்யும் குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். அப்த கொலைகாரனை கிட்டத்தட்ட பிடிக்கும் அளவிற்கு வந்து, கொலைகாரன் தப்பி விடுகிறான் அவரை தாக்கிவிட்டு.

2005 ஆம் ஆண்டு. குற்றம் நடந்து 15 வருடங்களாகிவிட்ட நிலையில் அந்த தொடர் கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை. சொய் தோல்வியால் மனமுடைந்து மதுவிற்கு அடிமையாகி விடுகிறார். கொலையான நபரின் குடும்பத்தில் நடக்குமொரு தற்கொலை சொய்யை அசைத்து விடுகிறது மனதளவில். 

இரண்டு வருடங்கள் கடக்கிறது.

2007.

சலிப்பான தினசரி வாழ்வின் அங்கமாக இயங்கி கொண்டு இருக்கும் சொயிற்கு லீ என்படும் நபர் 17 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைகளை தான் தான் செய்தது என சொல்லி ஒரு புத்தகம் எழுதி இருப்பதாய் செய்தி கிடைக்கிறது. 

Book Name : "I AM THE MURDERER".

அந்த புத்தகம் நாடளாவிய அதிர்வலைகளை ஏற்படுகிறது. புத்தகம் மிக பெரிய வெற்றியடைந்து, லீக்கு நிறைய ரசிகர்கள் கிடைக்கிறார்கள். 

தன்னால் கொலையான நபர்களின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்கிறார் லீ. 

இதனை பார்த்த பாதிப்படைந்த நபர்கள் சேர்ந்து தங்களது அன்பிற்குரியவர்களை கொலை செய்ததற்காக லீயை பழிவாங்க திட்டம் போடுகிறார்கள். 

என்ன செய்தார்கள் ???

சொய் லீ உண்மையான கொலைகாரன் இல்லை, வெறும் புகழ்ச்சிக்காக பொய் சொல்கிறான் என குற்றம் சாடுகிறார்.

இருவரையும் தொலைக்காட்சி நிறுவனம் நேரலை விவாதத்திற்கு அழைகிறது. நிகழ்ச்சியில் சொய்க்கு ஒருவர் தொலைபேசியின் மூலம் தான் தான் உண்மையான கொலைகாரன் (ஜெ) என்று அடையாள படுத்தி கொள்கிறான். ஆனால் லீ அந்த நபர் போலியான ஒருவர் என்கிறார்.

அடுத்து நடந்தது என்ன ???

- - - 

படத்தை பார்த்து கொண்டு இருக்கும் பொழுதே தமிழில் இப்படம் வந்தால் எப்படி இருக்குமென ஒரு எண்ணம் ஒடி கொண்டு இருந்தது. 

சொய் - கார்த்தி சிவகுமார்
லீ - அருண் விஜய் 
ஜெ - விக்ரம் 

திரைகதை & இயக்கம் - மகிழ் திருமேனி.

இந்த குழு மட்டும் அமைந்தால் தமிழில் வரலாறு காணாத வெற்றி கிடைக்கும். 

ஒவ்வொரு காட்சியும் அப்படியொரு கொண்டாட்டம் தான். அதிலும் ஒரு கார் துரத்துதல் காட்சி .... ஒரு மூன்று முறை திரும்ப பார்த்திருப்பேன். 

இம்மாதிரியான கொரியன் படங்கள் மட்டும் இங்குள்ள திரையரங்குகளில் துணை உரை (Subtitle) உடன் வந்தால் முதல் ஆளாக போய் பார்த்து விடுவேன். கணினி வழி பார்த்த பொழுதே இப்படி பரபரப்பாக இருக்கிறதே ... திரையில் பார்த்தால் தெறிக்க விட்டுவிடும் போல.

Memories Of Murder (2003) தொடர்ச்சியாக கதை அமைக்க பட்டு இருப்பது ஒரு சிறப்பு. அந்த தொடர்ச்சியை கூட நுலளவு தான் காட்சி படுத்தி இருக்கிறார்கள். முதல் பிணம் கண்டெடுக்கப்படும் காட்சி. 

அவசியன் பார்க்க வேண்டிய ஒரு படம். முக்கியமாக சில காட்சிகள் எல்லாம் மணி மணியாக இருக்கிறது. 

#ConfessionofMurder #Koreanmovies #Quarantine #Kollywood
Related Posts with Thumbnails